தைப் பொங்கலும், ஜீன்ஸ் பெண்களும்

  

காலண்டர்கள்
சிவப்பு
மைல் கல்லில்
பொங்கல்  என்கின்றன.
 
கிளிக்கினால்
பூச்சிந்தும் இணைப்புகளுடன்
மின்னஞ்சல்கள்
வாழ்த்துச் சொல்கின்றன
 
ஃபேஸ்புக் வாசிகளின்
வால்களில்
வாழ்த்துச் சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருக்கின்றன.

அவசரக் விரல்களுக்காய்
டுவிட்டர் கிளிகள்
வாழ்த்துத் தானியங்களை
கொத்தி விதைக்கின்றன.

கைக்கெட்டும் தூரத்து
நண்பனுக்கும்
ஆர்குட்டு தான் வசதிப்படுகிறது
வாழ்த்துச் சொல்ல.

இணையம் இல்லா
அப்பாவிகளுக்காய்
எஸ்.எம்.எஸ் கள்
நட்சத்திரப் புள்ளிகளுடன்
டிஜிடல் கரும்புகளை
ஏற்றுமதி செய்கின்றன.

செல்போனும் இல்லாதவர்கள்
சபிக்கப்பட்டவர்கள்
அவர்களுக்கு
விழாக்கால வாழ்த்துகள்
தடைவிதிக்கப்பட்டிருக்கின்றன.

பொங்கலுக்குக்
கொம்பு கழுவ
மாடுகிடைக்காத அவஸ்தையில்
டிஷ் கிராமங்களும்
திகைக்கின்றன.

“வாட்ஸ் பொங்கல் மாம் ?”
எனும்
மெட்ரிகுலேஷனின் கேள்விக்கு
இட்ஸ் சம் டமிலர் ஃபெஸ்டிவல் டியர்
என்கின்றனர்
கழுத்தில் டேக் மாட்டிய ஜீன்ஸ் மம்மிகள்.
 

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்… : நூல் குறித்து….

 

சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

காதலில்லாமல் எப்படி

ஒரு நொடி நகர்த்துவது ?

என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

வேகமாய் ஓடிக் கிடந்தவன்

நிதானமாய் நடக்கிறான்,

மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்

கனிந்து குழைகிறான்

என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

“நேரம் போவதெங்கே தெரிகிறது ?

உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

 

எனைக் கேட்டுப் போனேன்

மரணம் வந்து சேர்ந்தது.

எதைக் கேட்டுப் போனால்

நீ வந்து சேர்வாய் ?

நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன.  உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

பிடித்திருந்தால்…வாக்களியுங்கள்

எனக்கு வந்த மின்னஞ்சல்…

அந்த மின்னஞ்சல் என்னைப் புரட்டிப் போட்டது. அண்ணா என்று அழைத்த அந்தக் கடிதம் “திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் கணவரை விபத்தில் பறி கொடுத்து விட்டேன். அவர் நினைவில் வாழும் எனக்கு, எனக்கே எனக்காய் ஒரு கவிதை எழுதித் தருவீர்களா ?” என்று வலியுடனும் உரிமையுடனும் அந்தக் கடிதம் விண்ணப்பம் வைத்திருந்தது. ஏதோ ஒரு முகம் தெரியாத சகோதரியின் மனக் குரலின் வார்த்தை வடிவமாய் அது என்னை அறைந்தது.

எத்தனையோ விதமான கடிதங்களின் மத்தியில் எனது அன்றைய தினத்தைப் கசக்கிப் போட்ட கடிதமாய் அது அமைந்து விட்டது. வாழ்க்கையில் துயரங்களின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த சகோதரியின் நிலை மனதுக்குள் இனம் புரியாத ஒரு இருளை உருவாக்கியது. தனது சோகத்தைச் சொல்லி நம்மிடம் ஒரு கவிதை கேட்கிறார்களே என்றபோது மனம் கனத்தது.

அன்றே ஒரு நீண்ட கவிதையை எழுதி அனுப்பினேன். துயரத்தின் வலிகளைச் சொல்லி பின்னர் வாழ்வின் இனிமையைச் சொல்லி கடைசியில் வாழ்வதற்கான நம்பிக்கையைச் சொல்லி அந்தக் கவிதையை முடித்திருந்தேன். எந்த வரிகளும் அவருடைய தன்னம்பிக்கையின் முனையை இம்மியளவும் சிதைக்காமல், அவருக்கு வாழ வேண்டும் எனும் உந்துதலைத் தரவேண்டுமென கவனமாய் எழுதினேன். எனக்கு அதில் முழு திருப்தி வந்தபின்பு அதை அனுப்பினேன்.

அந்தக் கவிதை அவருடைய மனதில் எத்தகைய மாற்றங்களை விளைவித்ததென்று தெரியவில்லை. கண்ணீரும், ஆனந்தமும், ஆயிரம் நன்றிகளுமாய் அவருடைய பதில் மடல் அடுத்த நாளே என்னை வந்து சேர்ந்தது. “கவிதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். எப்போதெல்லாம் மனசு கனக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் கவிதைச்சாலை தளத்துக்கு வருவேன். மனம் இலகுவாகும். கவிதைகளின் மீது எனக்கு அவ்வளவு பிரியம். இப்போது இந்தக் கவிதை எனக்கு வாழ்வின் மீதான ஒரு நம்பிக்கையையும், பிடிமானத்தையும் தந்திருக்கிறது” என்று சொன்னார்கள்.

கவிதைகளால் ஆய பயன் என்ன” என்று வாழ்க்கையைப் புரியாதவர்கள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்

தமிழிஷில் வாக்களிக்க…