வயிறை வணங்காதீர் : Christian Article

“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான‌ உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.

தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.

உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !

இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வ‌ச‌ன‌த்தின் வ‌ழியாக‌ விரும்புவ‌தைச் சாப்பிட‌லாம் எனும் அங்கீகார‌த்தை அவ‌ர் ந‌ம‌க்குக் கொடுத்திருக்கிறார்.

நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.

எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.

இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உண‌வு ஒருவ‌னை ஏழையாக்கும் என்ப‌தை பைபிள் தான் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

உண‌வின் மீது அதீத‌ நாட்ட‌ம் ஏற்ப‌டும் போது அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கிற‌து. அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கும் போது சிந்த‌னை முழுதும் அதுவே நிர‌ம்புகிற‌து. சிந்த‌னை முழுதும் அது நிர‌ம்பும் போது அவ‌னுக்கு அது க‌ட‌வுளாகிப் போகிற‌து.

“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என ப‌வுல் அவ‌ர்க‌ளைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !

க‌ட‌வுளைத் த‌விர‌ எதை முத‌ன்மைப் ப‌டுத்தினாலும் அது ‘சிலை வ‌ழிபாடாகிற‌து’. சில‌ருக்கு ப‌ண‌ம். சில‌ருக்கு புக‌ழ். சில‌ருக்கு உண‌வு ! என‌ சிலை வ‌ழிபாடு வேறுப‌டுகிற‌து. க‌ற்சிலையை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ள் நாம். ஆனால் வேறு எந்தெந்த‌ சிலைக‌ளை வ‌ழிப‌டுகிறோம் என்ப‌தை உண‌ர வேண்டும்.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்ப‌தே உண‌வைக் குறித்த‌ ந‌ம‌து பார்வையாய் இருக்க‌ வேண்டும் என‌ ப‌வுல் அறிவுறுத்துகிறார்.

ம‌னித‌ன் அப்ப‌த்தினால் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌வுளின் வாயினின்று வ‌ரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு உண‌வாக‌ வேண்டும். அதுவே மிக‌வும் முக்கிய‌மான‌து ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.

உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.

அர‌ச‌ன் உண்கின்ற‌ அட்ட‌காச‌மான‌ உண‌வை வேண்டாம் என‌ ம‌றுத்து எளிமையான‌ உண‌வை தேர்ந்தெடுத்த‌ தானியேலை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்தார். க‌டைசிவ‌ரை அவ‌ரோடு இருந்தார்.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை  மட்டுமே உண்ணவும் வேண்டும்.

சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !

இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (ச‌ங் 34 : 8) என்கிறது சங்கீதம். ந‌ம‌து சுவை ந‌ர‌ம்புக‌ள் நாவில் அல்ல‌, வாழ்க்கையில் இருக்க‌ வேண்டும். அத‌ற்கு நாம் இறைம‌க‌னைச் சுவைக்க‌ வேண்டும்.”

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு பாலைப் போல‌ இருக்க‌ வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வ‌ச‌ன‌த்துக்கு ஏற்ப‌ நாம் இறைவார்த்தையைப் ப‌ருகுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆன்மீக‌ உண‌வையும், பான‌த்தையும் ப‌ருகும் போது உட‌லின் தேவைக‌ள் இர‌ண்டாம் ப‌ட்சாமாகிவிடும் என்ப‌தையே இயேசு வ‌லியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் க‌வ‌லை வேண்டாம்” என‌ இயேசு சொன்ன‌த‌ன் பொருள் இது தான்.

உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?

எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.

  1. சுவையான‌ உண‌வுக்காக‌த் தேடி ஓடும் ம‌ன‌நிலையை விட்டு வெளியே வ‌ருவோம். அது நோயையும், சோர்வையும் தான் த‌ரும். வார்த்தையாகிய‌ இறைவ‌னைத் தேடி ஓடும் ம‌ன‌நிலையை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.
  1. “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுள‌த்தை நிறைவேற்றுவ‌தே நம‌து உண‌வு எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொள்வோம்.
  1. உண‌வு என்ப‌து க‌ள‌ஞ்சிய‌த்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்ப‌த‌ற்கான‌த‌ல்ல‌. வ‌றிய‌வ‌ர்க‌ளோடும், ஏழைக‌ளோடும் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌து. ஏழை இலாச‌ரை உதாசீன‌ம் செய்யாம‌ல் ச‌மூக‌த்தின் ப‌சிக்கு உண‌வ‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளாக வாழவேண்டும் எனும் ம‌னித‌ நேய‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

ப‌டைத்த‌வ‌ர் கொடுத்த‌தே உண‌வு, அதை ப‌டைத்த‌வ‌ருக்கு மேலாக‌ உய‌ர்த்தாதிருப்போம் !

 

 

சேவிய‌ர்

ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special

ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.

வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.

உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.

நோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.

தொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.

இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ! ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.

இயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.

இயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.

ஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.

இரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.

ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.

ஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.

“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.

மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு  வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம்? என்ன வழி ? ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா ?

கோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.

“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.

அலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.

“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.

நமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.

ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எபே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.

இந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.

” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.

ஒளி மீட்பின் அடையாளம்.

ஒளி தீர்ப்பின் அடையாளம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

*

பைபிள் மாந்தர்கள் 79 (தினத்தந்தி) யூதித்து

சர்வாதிகாரி நெபுகத்நேசரின் படைத்தளபதி ஒலோபெரின். இலட்சக்கணக்கான வீரர்களையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் தேர்கள் போன்றவற்றையும் அவர்களுடைய படை கொண்டிருந்தது.  எனவே செல்லுமிடமெல்லாம் வெற்றி அவனுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.

அடுத்ததாக யூதேயாவின் மீது ஒலோபெரின் தனது பார்வையைச் செலுத்தினான். அதைக் கேள்விப்பட்ட யூதேயாவிலுள்ள இஸ்ரயேலர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து கடவுளை நோக்கி கதறி மன்றாடினார்கள்.

யூதேயாவுக்கு உள்ளே நுழையும் மலைப்பாதைகள் எல்லாம் குறுகலானவை. அந்த மலைப்பாதைகளை எல்லாம் இஸ்ரயேலர்கள் வீரர்களைக் கொண்டு காவல் புரிந்தனர். எதிரிகள் வந்தால் மறைந்திருந்து தாக்க வசதியாக வியூகம் வகுத்தனர்.

த‌ன்னை எதிர்த்து நிற்க‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் திட்ட‌மிடுகிறார்க‌ள் என்ப‌தைக் கேள்விப்ப‌ட்ட‌ ஒலோப‌ரின் எக‌த்தாள‌மாய்ச் சிரித்தான். அப்போது அக்கியோர் என்ப‌வ‌ர் அவ‌ரிட‌ம், இஸ்ர‌யேல‌ர்க‌ள் க‌ட‌வுளின் ம‌க்க‌ள். அவ‌ர்க‌ளை அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றார். ஒலோபெரின் கோப‌ம‌டைந்தார். அக்கியோரை இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் விர‌ட்டி விட்டார்.

அக்கியோர் த‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வாய்ப் பேசிய‌தால் அவ‌ரை இஸ்ர‌யேல‌ர்க‌ள் மிக‌வும் அன்பு செய்தார்க‌ள். ஒலோபெரின் ப‌டைக‌ளைத் திர‌ட்டினான். நாட்டில் நுழைந்து எல்லோரையும் வெட்டி வீழ்த்த‌வேண்டும் எனும் க‌ற்கால‌ சிந்த‌னையோடு க‌ள‌மிற‌ங்கினான்.

ஆனால் அவ‌னுடைய‌ ப‌டைத்த‌லைவ‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து, “இது ச‌ரிவ‌ராது. நாம் ஒரு புதிய‌ திட்ட‌ம் போடுவோம். இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் செல்லும் எல்லா நீர்நிலைக‌ளையும் கைப்ப‌ற்றுவோம். ந‌க‌ரில் த‌ண்ணீர் இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் நம‌க்குப் ப‌ணிந்து தானே ஆக‌வேண்டும் ?

ஒலோபெரினுக்கு அந்த‌த் திட்ட‌ம் பிடித்துப் போன‌து. அப்ப‌டியே செய்தான். இஸ்ர‌யேல‌ர்க‌ள் இப்ப‌டி ஒரு விஷ‌ய‌த்தை யோசிக்க‌வில்லை. என‌வே அதிர்ச்சிய‌டைந்தார்க‌ள். ச‌ர‌ண‌டைவ‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை. க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம். ஐந்து நாட்க‌ள் பார்ப்போம். நில‌மை ச‌ரியாக‌வில்லையேல் ச‌ர‌ண‌டைவோம். என‌ முடிவெடுத்த‌ன‌ர்.

அப்போது யூதித்து த‌லைவ‌ர்க‌ள் முன்னால் வ‌ந்து நின்றாள். அறிவும், ஞான‌மும், அழ‌கும் க‌ல‌ந்த கைம்பெண் அவ‌ள். “க‌ட‌வுளுக்கே நாள் குறித்து பாவ‌ம் செய்யாதீர்க‌ள். நாம் தொட‌ர்ந்து க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம்” என்றாள்.

அன்று இர‌வு யூதித்து அழ‌கிய‌ ஆடைக‌ளை உடுத்தி, ந‌றும‌ண‌ம் பூசி த‌ன‌து ப‌ணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிக‌ளின் கூடார‌ம் நோக்கிப் போனாள். இஸ்ர‌யேல‌ர்க‌ள் குழ‌ம்பினார்க‌ள்.

த‌ங்க‌ள் கூடார‌த்தை நோக்கி இர‌ண்டு பெண்க‌ள் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ எதிரிக‌ள் அவ‌ர்க‌ளை வ‌ழிம‌றித்த‌ன‌ர்.

“நீங்க‌ள் யார் ?”

“நாங்க‌ள் இஸ்ர‌யேல‌ர்க‌ள், அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பி ஓடுகிறோம்”

“த‌ப்பி ஓடுகிறீர்க‌ளா ? உள‌வு பார்க்க‌ வ‌ந்திருக்கிறீர்க‌ளா ?”

“எந்த‌ நாட்டில் பெண்க‌ள் உள‌வு பார்க்கிறார்க‌ள் ? எங்க‌ளை உங்க‌ள் ப‌டைத்த‌ள‌ப‌தியிட‌ம் கூட்டிச் செல்லுங்க‌ள். அவ‌ரிட‌ம் பேசுகிறோம்” யூதித்து சொன்னாள்.

அவர்களை ஒலோபரினிடம் அழைத்துச் சென்றார்கள். ஒலோபெரின் அவளுடைய‌ அழகில் மயங்கினான்.

“ம்ம்… சொல்”

“இஸரயேல் மக்கள் பாவம் செய்கிறார்கள். எனவே கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள். அழிவது உறுதி” யூதித்து சொல்ல ஒலோபெரின் மகிழ்ந்தான்.

“ஓ.. அப்ப‌டியானால் போரைத் துவ‌ங்க‌லாமா ?”

“வேண்டாம். நான் தின‌மும் அதிகாலையில் க‌ட‌வுளிட‌ம் வேண்டும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள். க‌ட‌வுளிட‌ம் கேட்டு ச‌ரியான‌ நேர‌த்தைச் சொல்கிறேன்”.

யூதித்தின் அழ‌கில் ம‌ய‌ங்கிய‌ ஓலோபெரின் அவ‌ளை எப்ப‌டியாவ‌து அடைய‌வேண்டும் என‌ க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொண்டான். அத‌ற்காக‌ ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதில் யூதித்தையும் அழைத்தான்.

ஓலோபெரினுக்கு மோக‌த்தின் சிணுங்க‌ல்க‌ளையும், ம‌துவையும் ஊற்றிக் கொண்டே இருந்தாள் யூதித்து. விருந்து முடிந்து எல்லோரும் போய்விட்ட‌ன‌ர். ஓலோபெரினுக்கு ம‌து வார்ப்ப‌தை யூதித்து நிறுத்த‌வில்லை. ஓலோபெரின் த‌ன்னிலை ம‌றந்தான். யூதித்தை இழுத்துக்கொண்டு ம‌ஞ்ச‌த்தில் ச‌ரிந்தான்.

இந்த‌ ச‌ம‌ய‌த்துக்காக‌க் காத்திருந்த‌ யூதித்து, தூணில் தொங்கிய அவ‌னுடைய‌ வாளை எடுத்தாள். இர‌ண்டு கைக‌ளாலும் அதைத் தூக்கி ஓலோபெரினின் க‌ழுத்தில் வேக‌மாக‌ இற‌க்கினாள். ஓலோபெரின் எனும் வீர‌னின் த‌லை உருண்டோடிய‌து. அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அதிகாலையிலேயே இட‌த்தைக் காலி செய்த‌ன‌ர்.

யூதித்து திரும்பி வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் ம‌கிழ்ந்த‌ன‌ர். ஓடிச்சென்று அவ‌ளிட‌ம் விஷ‌ய‌த்தைக் கேட்ட‌ன‌ர்.

“நாம் வெற்றி பெறுவ‌து உறுதி.”

“ஏன் ? ஒலோபெரின் ஊரை விட்டு ஓடிவிட்டானா ?”

“அவ‌ன் த‌லையை விட்டு விட்டே ஓடிவிட்டான்” சொன்ன‌ யூதித்து பைக்குள் இருந்த‌ ஒலோபெரினின் த‌லையை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் விய‌ந்து போனார்க‌ள்.

“த‌லைவ‌ன் இல்லாத‌ ப‌டை வெல்லாது. என‌வே நாம் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் போரிட்டுச் செல்வோம். அவ‌ர்க‌ளுடைய‌ கூடார‌த்துக்கு தொலைவில் நிற்போம். ந‌ம்மைக் காணும் அவ‌ர்க‌ள் போருக்கு ஆய‌த்த‌மாவார்க‌ள். ஓலோபெரினின் உத்த‌ர‌வு கேட்டு அவ‌ன் கூடார‌த்துக்குச் செல்ப‌வ‌ர்க‌ள் அவ‌ன் இற‌ந்து கிட‌ப்ப‌தைக் க‌ண்டு சித‌றிப் போவார்க‌ள். சித‌றும் அவ‌ர்க‌ளை நாம் வெல்வோம்”

யூதித்தின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரயேலர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.

இஸ்ரயேலர்களை காப்பாற்றிய கடவுளை யூதித்தும், மக்களும் தொழுதனர். புகழ்ப் பாக்களைப் பாடினர்.

பைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து

இஸ்ரயேலரான தோபித்து அசீரியர்களின் காலத்தில் நாடுகடத்தப்பட்டு நினிவேயில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன்னுடைய செல்வத்தை 400 வெள்ளிக்காசாய் மாற்றி தூர தேசமான மேதியாவிலுள்ள கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

தோபித்துவுக்கு ஒரு மகன். பெயர் தோபியா. அந்தக் காலகட்டத்தில் மன்னன் இஸ்ரயேலர்களைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே எறிவதை பெருமையாய் செய்து கொண்டிருந்தான். அந்த இஸ்ரயேலரின் பிணங்களை எடுத்து நல்லடக்கம் செய்வது தோபித்தின் வழக்கமாய் இருந்தது.

ஒருநாள் தான் கொன்ற இஸ்ரயேலரின் பிணங்களைப் பார்க்க வந்தான் மன்னன். ஆனால் எந்த பிணத்தையும் காணாமல் கடும் கோபமடைந்தான். மக்கள் தோபித்து செய்யும் காரியங்களைப் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

கோபமடைந்த மன்னன் தோபித்தின் மகனையும், மனைவியையும் சிறைப்பிடிக்க, தோபித்து தப்பி ஓடினார். அந்த மன்னனின் ஆட்சி முடிந்தபின் தோபித்தின் குடும்பம் விடுதலையானது.

அதே நேரத்தில் மேதியா நாட்டில் சாரா என்றொரு எழில் மங்கை இருந்தாள். பேரழகியான அவளை சாத்தானான அசுமதேயு பிடித்திருந்தான். அவளை மணக்கும் ஆண்களை முதலிரவிலேயே அவன் கொன்று விடுவான். இப்படி ஏழு பேர் அவளை மணந்து ஏழுபேரும் முதலிரவிலேயே இறந்து விட்டனர். இவர்கள் தோபித்துவின் உறவினர்கள். சாராவும் தந்தையும் கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினர்.

தோபித்துவின் கஷ்டகாலம் அதிகரித்தது. ஒரு பறவை அவரது கண்ணில் எச்சமிட கண்ணின் பார்வை முழுமையாய் போய்விட்டது. வீட்டில் வறுமை வந்தது. திடீரென அவருக்கு மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நானூறு கிலோ வெள்ளி நினைவுக்கு வந்தது. தோபியாவை அனுப்பி அதை கொண்டு வர முடிவு செய்தார்.

கடவுள் தோபியாவின் மன்றாட்டையும், சாராவின் மன்றாட்டையும் கேட்டார். இருவரின் சிக்கலையும் தீர்க்க தனது தூதரான இரபேலை அனுப்பினார்.

“தோபியா, நான் பணத்தை கபேலிடம் கொடுத்தபோது ஒரு ஆவணம் தயாரித்து அதை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவரும், இன்னொரு பாதியை நானும் எடுத்துக் கொண்டோம். அது தான் அடையாளம்” என்று சொல்லி ஒரு ஆவணத்தின் பாகத்தைக் கொடுத்தார் தோபித்து.

தெரியாத ஊருக்கு மிகப்பெரிய வேலைக்காகப் புறப்பட்ட தோபியா, வழித்துணைக்காக அவர் ஒருவரை அழைத்துக் கொண்டார். அவர் இரபேல் !

தோபியாவும், இரபேலும் பயணம் செய்தனர். தீக்ரிசு எனும் ஆற்றங்கரையில் வந்தபோது காலைக் கழுவுவதற்காக தோபியா ஆற்றில் கால் வைத்தார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவருடைய காலைக் கவ்வியது.

“அந்த‌ மீனை பிடி. அத‌ன் இத‌ய‌ம், ஈர‌ல், பித்த‌ப்பை மூன்றையும் த‌னியே பாதுகாப்பாய் வை. ப‌ய‌ன்ப‌டும்” என்றார் இர‌பேல். தோபியா அப்ப‌டியே செய்தார்.

இர‌பேல் தோபியாவை இர‌குவேலின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அவ‌ருடைய‌ ம‌க‌ள் தான் சாரா.

“நாம் இன்று இங்கே த‌ங்குவோம். இது இர‌குவேலின் வீடு. அவ‌ருக்கு ஒரு அழ‌கிய‌ ம‌க‌ள் உண்டு. அவ‌ள் பெய‌ர் சாரா. உன‌து முறைப்பெண்.” இர‌பேல் சொன்னார்.

“ஓ.. சாராவை என‌க்குத் தெரியும். அவ‌ளை ஏழுபேர் ம‌ண‌த்து ஏழுபேரும் இற‌ந்து போனார்க‌ளே” தோபியா ப‌த‌ட்ட‌மாய்ச் சொன்னார்.

“க‌வ‌லைப்ப‌டாதே.. உன‌க்கு ஒன்றும் ஆகாது” இர‌பேல் சொன்னார்.

இர‌குவேல் அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்றார். தோபியாவைப் பார்த்த‌தும் அவ‌ர் முக‌த்தில் ஒரு குழ‌ப்ப‌ம்.

“உன்னை மாதிரி ஒரு சொந்த‌க்கார‌ர் என‌க்கு உண்டு… அவ‌ரோட‌ பேர் தோபித்து”

“ஓ… நான் அவ‌ரோட‌ பைய‌ன் தான் நான்” தோபியா சிரித்தார். இர‌குவேல் வியந்து போய் அவ‌ர்க‌ளை ஆன‌ந்த‌மாய் வீட்டுக்குள் அழைத்தார்.

சாராவைப் பார்த்த‌தும் தோபியாவுக்கு ரொம்ப‌ பிடித்துப் போய்விட்ட‌து. அன்று இர‌வே அவ‌ளை அவ‌ர் ம‌ண‌முடித்தார்.

“இரவு நீ சாராவை நெருங்கும்போது அந்த மீனின் ஈரலின் ஒரு பகுதியையும், இதயத்தின் ஒரு பகுதியையும் தீயில் போடு. பேய் ஓடிவிடும்” இரபேல் சொன்னார்.

தோபியா அப்படியே செய்ய, பேய் ஓடியது.

மறுநாள் தோபியாவின் மரணச் செய்தியை எதிர்பார்த்து, அடக்கத்துக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரகுவேல் தோபியா உயிருடன் இருப்பதைப் பார்த்து பரவசமடைந்தார். அவருடைய மனபாரம் முழுமையாய் நீங்கியது.பின்னர் தோபியா கபேலைச் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு, மனைவியுடனும், இரபேலுடனும் தன் வீடு திரும்பினார்.

மகன் திரும்பியதை அறிந்து மகிழ்ந்த தோபித்து, நடந்த கதைகளைக் கேட்டு வியந்தார்.

“உன் கையிலிருக்கும் மீனின் பித்தப்பையை அவருடைய கண்ணில் தேய்” இரபேல் சொல்ல அப்படியே செய்தார் தோபியா. என்ன ஆச்சரியம், தோபித்து பார்வை பெற்றார்.

தோபித்து இர‌பேலைப் பார்த்து” உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என ஆனந்தமாய்ச் சொன்னார்.

“கொடுப்பதே என் வழக்கம். நான் க‌ட‌வுளின் தூத‌ன்”. இரபேல் புன்னகையுடன் சொல்லி விட்டு மறைந்தார்.

க‌ட‌வுளின் விய‌த்த‌கு செய‌லை அனைவ‌ரும் போற்றின‌ர்.

பைபிள் மாந்தர்கள் 75 (தினத்தந்தி) ஆகாய்

கி.மு 520ல் இறைவாக்கு உரைத்த ஒரு இறைவாக்கினர் தான் ஆகாய். ஆகாய் என்னும் பெயருக்கு “விழாக் கொண்டாட்டம்” அல்லது ” புனிதப் பயணம் செய்பவர்” என்பது பொருள்.

இந்த இறைவாக்கினரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் பைபிளில் இல்லை. இவர் சொன்ன இறை வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. இறைவாக்கினர்களை முதன்மைப் படுத்தாமல் அவர்கள் சொன்ன இறை வார்த்தைகளை மட்டும் முதன்மைப்படுத்தும் முறை விவிலியத்தில் வெகு சகஜமாகக் காணப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே வழியாக‌ மீட்டுக் கொண்டு வரப்பட்டபின் பல இறைவாக்கினர்கள் அவர்களுக்குத் தோன்றி கடவுளின் செய்திகளை அளித்து வந்தனர். ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் அந்த செய்திகள் இருந்தது.

மக்கள் அடிமைகளாக்கப் பட்டது அவர்கள் செய்த பாவத்துக்குக் கடவுள் அளித்த தண்டனை என்பதை சில இறைவாக்கினர்கள் பறை சாற்றினார்கள். அடிமைத்தனத்தில் சிக்கி உழன்ற போது சில இறைவாக்கினர்கள் வந்து ஆறுதலின் செய்தியை அளித்தார்கள். அந்த அடிமைத்தனம் மாறிய பிறகு வந்த இறைவாக்கினர்கள் “மறுவாழ்வின்” செய்தியை அளித்தார்கள். அதற்குப் பிறகு தோன்றிய ஆகாய் இறைவாக்கினர் புதிய ஒரு செய்தியை அளித்தார்.

இஸ்ரேல் மக்கள் பாபிலோனியர்களின் அடிமைத்தனத்தில் கிமு 587 முதல் கிமு 538 வரை சிக்கிக் கிடந்தனர். அதன் பிந்தைய காலம் தான் ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்குக் காலம்.

நெபுகத்நேசரின் படைகள் கிமு 587ல் எருசலேமின் மீது போர்தொடுத்து எருசலேம் கோயிலைத் தரைமட்டமாக்கின. யூதர்கள் அடிமைகளாயினர். அரசர் சைரசின் கட்டளைப்படி கிமு 538ம் ஆண்டில் அவர்கள்  விடுவிக்கப்பட்டனர். கூடவே நெபுகத்நேசர் அபகரித்து வைத்திருந்த அவர்களின் செல்வங்களையும் மன்னர் அவர்களிடமே அளித்தார்.

அடிமைத்தன மக்கள் மகிழ்ச்சியோடு யூதா, இஸ்ரேல் தேசங்களுக்குத் திரும்பினர். உடனே கடவுளுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டுமென வேலை ஆரம்பித்தார்கள். ஆனால் அது தொடரவில்லை. சுமார் 18 ஆண்டு காலம் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அப்போது தான் ஆகாய் வந்தார்.

“கடவுளுக்குக் கோயில் கட்டுங்கள்” என்பது தான் ஆகாய் இறைவாக்கினர் உரைத்த இறைவாக்கின் மையம்.

கோயில் இறைவ‌னின் வீடு. அது ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் ஒரு த‌ள‌மாக‌வும் விள‌ங்குகிற‌து. என‌வே தான் ஆகாய் இறைவாக்கின‌ர், சோர்வுற்றுக் கிட‌ந்த‌ ம‌க்க‌ளை உசுப்பி க‌ட‌வுளுக்குக் கோயில் க‌ட்டும் ப‌ணியை துரித‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கிறார்.

நாட்டில் நிக‌ழும் வ‌றுமைக்குக் கார‌ண‌ம் ஆல‌ய‌ம் இல்லாத‌து தான்

“நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள். ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” என‌ அவ‌ர்க‌ளுடைய‌ தோல்விக‌ளுக்குக் கார‌ண‌ம் கோயில் இல்லாத‌து தான் என‌ ஆகாய் குறிப்பிட்டார்.

அந்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள் நீங்க வேண்டுமானால் செய்ய வேண்டியது ஒன்றே. “எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள். கடவுளின் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.”

ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஆகாய் இறைவாக்கின‌ரின் வார்த்தைக்குக் கீழ்ப்ப‌டிந்த‌ன‌ர். க‌ட‌வுளுக்கான‌ ஆல‌ய‌த்தைக் க‌ட்டுவ‌தென‌ முடிவெடுத்த‌ன‌ர்.

ஆகாய் ம‌கிழ்ந்தார். கடவுள் பேசினார். “இதுவ‌ரை உங்க‌ளுடைய‌ நில‌மை எப்ப‌டி இருந்த‌து தெரியுமா ? நீங்கள் இருபது மரக்காலுக்கு மதிப்புப் போட்டு வந்து பார்க்கையில் பத்து தான் இருந்தது. பழம் பிழியும் ஆலைக்குள் வரும் போது ஐம்பது குடம் இரசத்துக்கு மதிப்புப் போட்ட போது, இருபது தான் இருந்தது. உங்களையும், உங்கள் உழைப்பின் பலன்களையும் வெப்பக் காற்றாலும் நச்சுப் பனியாலும் கல் மழையாலும் நாம் அழித்தோம்”

ஆனால் இனிமேல் அப்ப‌டியிருக்காது.

“விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்” என்றார் க‌ட‌வுள்.

ப‌ழைய‌ ஏற்பாட்டில் க‌ட‌வுள் வாழ்வ‌த‌ற்காக‌ ஆல‌ய‌ங்க‌ள் க‌ட்டுவ‌து வ‌ழ‌க்க‌மாய் இருந்த‌து. புதிய‌ ஏற்பாட்டில் நாமே க‌ட‌வுள் வாழும் ஆல‌ய‌மாக‌ மாறிவிட்டோம். “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில்” என்கிற‌து பைபிள்.

அந்த‌ ஆல‌ய‌த்தை தூய‌ ஆவியினால் க‌ட்டியெழுப்பும் ப‌ணியை நாம் செய்ய‌ வேண்டும். ஆகாயின் காலத்தில் அடித்த‌ள‌ம் போட்ட‌பின்பு 18 ஆண்டுக‌ள் க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌டாம‌லேயே இருந்த‌து. அதே போல, கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைக்குள் நுழைந்தும் ப‌ல‌ நீண்ட‌ நெடிய‌ ஆண்டுக‌ள் க‌ட‌வுளின் ஆல‌ய‌மாக‌ ந‌ம்மை மாற்றாம‌ல் இருக்கிறோம். ந‌ம‌து பாவ‌த்தை வெளியேற்றி, இறைவ‌னை உள்ளே இருத்தி ந‌ம‌து உட‌லை இறைவ‌னின் ஆல‌ய‌மாய் மாற்றும் ப‌ணியை செய்ய‌ வேண்டும் என்ப‌தே நாம் க‌ற்றுக் கொள்ளும் பாட‌மாகும்.

பைபிள் மாந்தர்கள் 74 (தினத்தந்தி) செப்பனியா

பழைய ஏற்பாட்டில் வருகின்ற சின்ன தீர்க்கத்தரிசிகள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் செப்பனியா. பெரும்பாலான இறைவாக்கினர் மூலமாகக் கடவுள் பேசிய விஷயம் ஒன்று தான். “தீமை செய்யும் வழியை விட்டு விலகி என் பக்கம் வாருங்கள்” என்பதே அது. இறை வார்த்தைகள் எழுத்து வடிவில் இல்லாத அந்த காலகட்டத்தில் இறைவாக்கினர்களின் மூலமாக இறைவன் பேசிய‌வை அவை.

செப்பனியா இறைவாக்கினரின் வாழ்க்கையும், தீர்க்கத்தரிசனமும் கூட அதை அடியொற்றியே இருக்கிறது. கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர் இறைவாக்கு உரைத்தார். எசேக்கியாவின் கொள்ளுப்பேரன், அமரியாவின் பேரன், கெதலியாவின் மகன் என இவரைப் பற்றிய வம்ச வரலாறு குறிப்பிடப்படுகிறது.

“கடவுளின் பிரியத்துக்குரிய யூதா நாடு வேற்று தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அழிவு நிச்சயம். ஆனாலும் யூதாவின் தலைநகரான எருசலேம் மீண்டும் தனது பழைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும். இறையச்சம் கொண்ட மக்கள் அங்கே மீண்டும் வாழ்வார்கள்” என்பது செப்பனியாவின் இறைவாக்கு நூலின் சாரம்சமாகும்.

“க‌ட‌வுள் கோப‌ம் கொள்ளும் நாளில் ஒரே வினாடியில் அவ‌ர் உல‌கை அழித்து விடுவார். க‌ட‌வுள் ந‌ல்ல‌தும் செய்ய‌ மாட்டார், தீமையும் செய்ய‌ மாட்டார் என‌ நினைத்து ப‌ஞ்ச‌ணையில் ப‌டுத்திருப்ப‌வ‌ர்க‌ள் அழிவார்க‌ள். வேற்று தெய்வங்களைத் தொழுபவர்கள் வெட்டி வீழ்த்தப்படுவார்கள். ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல், வில‌ங்குக‌ள், ப‌ற‌வைக‌ள் கூட அழிக்கப்படும். அந்த‌ நாளில் மீன் கூட கூக்குர‌லிட்டு அழும். அந்த நாள் தான் ஆண்ட‌வரின் நாள். சின‌த்தின் நாள்” என்றார் செப்ப‌னியா.

க‌ட‌வுளின் கோப‌த்தைப் ப‌ற்றிப் பேசி அத‌ன் மூல‌ம் ம‌க்கள் த‌ங்க‌ள் பாவ‌த்தை உண‌ர‌ச் செய்யும் ப‌ணியை செப்ப‌னியா செய்தார். கட‌வுளின் சின‌த்தில் சிக்கிக் கொண்டால் எரிம‌லை மூடிய‌ எறும்பைப் போல‌ அழிவ‌து உறுதி. என‌வே தான் அந்த‌ கோப‌ம் வ‌ந்து ச‌ந்திக்கும் முன்பே ம‌ன‌ம் திரும்ப‌ அவ‌ர் அழைப்பு விடுக்கிறார்.

“ப‌த‌ரைப் போல‌ நீங்க‌ள் தூற்ற‌ப்ப‌டும் முன் ம‌ன‌ம் திரும்புங்கள்” என மக்களைப் பார்த்து இறைவாக்கு உரைக்கிறார்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ளை க‌ட‌வுள் எகிப்திய‌ரின் அடிமைத்த‌ன‌த்திலிருந்து மோசே மூல‌மாக‌ மீட்டுக் கொண்டு வ‌ந்தார். எகிப்திய‌ர்க‌ளின் ப‌டைக‌ளை அழித்து ம‌க்க‌ளைக் காத்தார். நாற்ப‌து ஆண்டுக‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ய‌ண‌த்திலும்  கூட‌வே இருந்து பாதுகாத்தார். ஆனாலும் ம‌க்க‌ள் அவ‌ரை விட்டு வில‌கினார்க‌ள்.

க‌ல‌க‌ம் செய்து, தீட்டுக்குள்ளாகி, ம‌க்க‌ளை ஒடுக்கிய அந்த ந‌க‌ரை செப்ப‌னியா எச்ச‌ரித்தார். க‌ர்ஜ‌னை செய்யும் சிங்க‌ங்க‌ளைப் போல‌ ந‌க‌ர‌த்தின் த‌லைவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். மாலையில் கிடைப்ப‌தை காலை வ‌ரை வைத்திராத‌ ஓநாய்க‌ளாய் அந்த‌ நாட்டின் நீதிப‌திகள் இருக்கிறார்கள். வீண்பெருமை பேசும் வ‌ஞ்ச‌க‌ம் மிக்க‌ ம‌னித‌ர்களே அந்த‌ நாட்டின் இறைவாக்கின‌ர்க‌ள். புனித‌மான‌தைக் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்தி திருச்ச‌ட்ட‌த்தை உத‌றித் த‌ள்ளும் ம‌னித‌ர்களே  அந்த‌ நாட்டின் குருக்க‌ள்.

என‌ யூதாவின் நிலையை செப்ப‌னியா கடிந்துரைத்தார். த‌லைவ‌ர் முத‌ல் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ள் வ‌ரை இறைவ‌னை விட்டு வெகுதூர‌ம் வில‌கிச் சென்று விட்டார்க‌ள் என்ப‌தையே அவ‌ருடைய‌ இறைவாக்கு வெளிப்ப‌டுத்திய‌து.

ஆண்ட‌வ‌ரோ நீதியுள்ள‌வ‌ர், கொடுமை செய்யாத‌வ‌ர், காலை தோறும் அவ‌ர் தீர்ப்பை வ‌ழ‌ங்குப‌வ‌ர் என‌ இறைவ‌னைக் குறித்து செப்ப‌னியா உரைக்கிறார்.

க‌ட‌வுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவ‌ருடைய‌ பாதையில் ந‌ட‌க்கும் போது அவ‌ர் த‌ண்ட‌னை ம‌ன‌தை மாற்றி விடுகிறார். பின்ன‌ர் துய‌ர‌ம் ஆன‌ந்த‌மாய் மாறிவிடும்.

“சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” என‌ செப்ப‌னியா இஸ்ர‌யேல‌ரை ஊக்க‌ப்ப‌டுத்தும் ம‌கிழ்ச்சிப் பாட‌லைக் க‌டைசியாக‌ப் பாடுகிறார்.

“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்” என்கிற‌து அந்த‌ ம‌கிழ்வின் பாட‌ல்.

செப்ப‌னியா யூதா தேச‌த்தில் இறைவாக்கு உரைத்தாலும் ம‌ற்ற‌ இறைவாக்கின‌ர்க‌ளைப் போல‌வே இவ‌ர‌து வார்த்தைகள் கால‌ம் க‌ட‌ந்து ந‌ம‌க்கு இறைவ‌னின் எண்ண‌த்தைப் போதிக்கின்ற‌ன‌.

1.ம‌ன‌த்தாழ்மையோடு க‌ட‌வுளின் வ‌ழியைப் பின்ப‌ற்றுவ‌து மிக‌வும் அவ‌சிய‌ம்.

2.க‌ட‌வுள் தீமையை வெறுப்ப‌வ‌ர், ஆனால் ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பும் போது த‌ன‌து க‌டும் கோப‌த்தைக் கூட‌ ச‌ட்டென‌ மாற்றி அக‌ம் ம‌கிழ்ப‌வ‌ர்.

3.க‌ட‌வுள் த‌ன‌து ம‌க்க‌ள் வேறு தெய்வ‌ங்க‌ளை வ‌ழிப‌டுவ‌தை ஒரு போதும் அனும‌திப்ப‌தில்லை.

இந்த‌ மூன்று சிந்த‌னைக‌ளையும் ம‌ன‌தில் இருத்துவோம். செப்ப‌னியாவின் இறை வார்த்தைக‌ள் ந‌ம‌து வாழ்க்கையைச் செப்ப‌னிட‌ட்டும்.

பைபிள் மாந்தர்கள் 73 (தினத்தந்தி) அபக்கூக்கு

“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,

திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,

ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,

வயல்களில் தானியம் விளையாவிடினும்,

கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,

தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,

நான் ஆண்டவரில் களிகூர்வேன்;

என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.”

எனும் மிகப் பிரபலமான‌ நம்பிக்கையின் பாடலைப் பாடியவர் அபக்கூக்கு.

அபக்கூக்கு என்றும் ஆபகூக் என்றும் அழைக்கப்படும் இந்த இறைவாக்கினர்,  கிமு ஏழாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வாழ்ந்தவர்.

நாட்டில் பாபிலோனியர்களின் படையெடுப்பு ! கடவுளின் மக்களுக்கு சவால் விடுக்கும் பாபிலோனிய அச்சுறுத்தல். அவர்களுடைய கொள்ளையினால் நாட்டின் வளங்களெல்லாம் மறைந்து போகின்றன. அவர்களுடைய கொடுமையினால் நிம்மதியெல்லாம் கரைந்து போகின்றன.

“க‌ட‌வுளே, பொல்லாத‌வ‌ர்க‌ளெல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை அழிக்கிறார்க‌ளே. ஏன் பேசாம‌ல் மௌன‌மாய் இருக்கிறீர் ?” என‌ கேட்கிறார் இறைவாக்கின‌ர். அத‌ற்கு க‌ட‌வுள் “நேர்மையுடையோர் ந‌ம்பிக்கையில் நிலைத்திருக்க‌ட்டும், த‌ண்ட‌னை குறித்த‌ கால‌த்தில் நிக‌ழும்” என‌ ப‌தில் கொடுக்கிறார்.

இறைவ‌னின் பிர‌ம்மாண்டத்தையும், அவ‌ர‌து விய‌த்த‌கு ஆற்ற‌லையும் பேசும் அபக்கூக்கு, நேர்மையாள‌ன் ஏன் துன்புறுகிறான் எனும் வினாவையும் கடவுளிடம் தைரியமாய் வைக்கிறார்.

“ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன், உமது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; உமது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது. உமது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது. நீர்  நின்றால், நிலம் அதிர்கின்றது, நீர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன”  என‌ க‌ட‌வுளின் இருப்பையும், அவ‌ர‌து ம‌கிமையையும் விள‌க்குகின்றார் அப‌கூக்கு.

அவ‌ருக்கு நேர்மையாள‌ர்க‌ள் துன்புறுவ‌து வ‌ருத்த‌த்தைக் கொடுக்கிற‌து. அவ‌ர் த‌ன‌து துய‌ர‌த்தை

“ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.” என‌ க‌ண்ணீரோடு ப‌திவு செய்கிறார்.

அவ‌ர‌து குர‌லைக் கேட்கும் க‌ட‌வுள் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ப் ப‌தில் கொடுக்கிறார்.

“நான் க‌ல்தேய‌ரை அனுப்புவேன். அவ‌ர்க‌ள் கொடுமையான‌வ‌ர்க‌ள். அச்ச‌த்தையும் திகிலையும் உருவாக்குப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுடைய‌ குதிரைக‌ள் வேங்கையை விட‌ வேக‌மாய்ப் பாய்ப‌வை. மாலை நேர‌ ஓநாய்க‌ளை விட‌க் கொடிய‌வை. இரைமேல் பாயும் க‌ழுகென‌ அவ‌ர்க‌ள் ப‌டைக‌ள் வ‌ருகின்ற‌ன‌.” என்றார்.

அப‌கூக்கு ம‌றுமொழியாக‌, ” ஆண்ட‌வ‌ரே, தொன்று தொட்டே இருப்பவர் நீர். தீமையைக் காண‌ நாணுகின்ற‌ க‌ண்க‌ள் உம்முடைய‌வை. கொடுமையைப் பார்க்க‌த் தாங்காத‌வ‌ர் நீர். பொல்லாத‌வ‌ர்க‌ள் நேர்மையாள‌ரை விழுங்குகையில் பார்த்துக் கொண்டிருக்க‌ வேண்டுமோ?” என்றார்.

க‌ட‌வுள் அவ‌ரிட‌ம், ” காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த‌ கால‌த்தில் நிறைவேறுவ‌த‌ற்கான‌ காட்சி உண்டு. அது தாம‌த‌மாய் வ‌ருவ‌து போல‌ தோன்றும். ஆனால் ந‌ட‌ந்தே தீரும். ந‌ம்பாத‌வ‌ர்க‌ள் உள்ள‌த்தில் நேர்மைய‌ற்ற‌வ‌ர்க‌ள்.  நேர்மையுடைய‌வ‌ரோ, ந‌ம்பிக்கையினால் வாழ்வ‌டைவார்க‌ள்” என்றார்.

அப‌கூக் மூல‌மாக‌ இறைவ‌ன் பேசிய‌ வார்த்தைக‌ள் கால‌ங்க‌ள் க‌ட‌ந்து வாழ்ப‌வை. நேர்மையின் மீதான‌ க‌ட‌வுளின் தாக‌மும், ம‌க்க‌ள் எளிமையாக‌ அன்பாக‌ வாழ‌வேண்டும் எனும் அவ‌ருடைய‌ ஆத‌ங்க‌மும் அவ‌ருடைய‌ குர‌லில் எதிரொலிக்கிற‌து.

“செல்வ‌ம் ஏமாற்றிவிடும். பேராசை பாதாள‌த்தைப் போல‌ ப‌ர‌ந்து விரிந்த‌து. சாவைப் போல அவைகளும் நிறைவ‌டைவ‌தில்லை. பிற‌ருடைய‌ பொருட்க‌ளைக் க‌வ‌ர்ந்து கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு அழிவு நிச்ச‌ய‌ம். த‌ன் குடும்ப‌த்துக்கு தீய‌ வ‌ழியில் ப‌ண‌ம் சேர்ப்ப‌வ‌னுக்கு அழிவு நிச்சயம். குடும்ப‌த்துக்கே அழிவைக் கொண்டுவ‌ருகிறான் அவ‌ன். வ‌ன்முறையால் ந‌க‌ரைக் க‌ட்டியெழுப்புப‌வ‌ர்க‌ள் அழிவார்க‌ள்”

என‌ க‌ட‌வுள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக‌ளும் த‌ன்ன‌ல‌ம் வெறுத்து ச‌க‌ம‌னித‌ க‌ரிச‌னை கொண்டிருக்க‌ வேண்டும் என்ப‌தைப் போதிக்கிற‌து.

“சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே!பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!” என‌ சிலை வ‌ழிபாட்டையும் க‌ட‌வுள் அப‌கூக்கு மூல‌ம் எதிர்க்கிறார்.

சிறிய‌ இறைவாக்கின‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லில் இட‌ம்பெற்றிருந்தாலும் அப‌கூக்கின் வார்த்தைக‌ள் மிக‌ப்பெரிய‌ போத‌னையை ம‌னுக்குல‌த்துக்கு எடுத்துச் சொல்கின்ற‌ன‌.

  1. பேராசை கொள்வ‌து க‌ட‌வுளுக்கு எதிரான‌ செய‌ல்
  2. ஆண‌வ‌ம் கொள்பவ‌ர்க‌ளை க‌ட‌வுள் எதிர்க்கிறார்.
  3. ப‌டைத்த‌வ‌ரை விட்டு விட்டு ப‌டைப்புக‌ளை வ‌ழிப‌டுவ‌து த‌வ‌றான‌து.
  4. தீயோருக்கான‌ அழிவு தாம‌த‌மானாலும், வ‌ந்தே தீரும்.
  5. குடும்ப‌த்துக்காக‌ செய்கிறேன் என தீமை செய்ப‌வ‌ர்க‌ள் குடும்ப‌த்தையே அழிக்கிறார்க‌ள்.

எனும் சில‌ முக்கிய‌ பாட‌ங்க‌ளை இவ‌ருடைய‌ நூலில் இருந்து க‌ற்றுக் கொள்வோம்.

தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும் எனும் இறை வார்த்தையில் ந‌ம்பிக்கை வைப்போம்.

பைபிள் மாந்தர்கள் 70 (தினத்தந்தி) யோனா

யோனா ஒரு இறைவாக்கினர். யோனா என்றால் புறா என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களையும், புதிய ஏற்பாட்டில் தூய ஆவியானவரையும் புறா எனும் குறியீடு குறிப்பிடுகிறது.

யோனாவுக்கு கடவுளின் வாக்கு அருளப்பட்டது. “நீ போய் நினிவே நகர மக்களை எச்சரி. அவர்களுடைய பாவம் அதிகமாகிவிட்டது” கடவுள் சொன்னார்.

யோனாவோ, க‌ட‌வுளின் அழைப்பை உதாசீன‌ப் ப‌டுத்தி விட்டு த‌ர்கீசு எனும் இட‌த்துக்குப் போகும் க‌ப்ப‌லில் ஏறிக் கொண்டார். அசீரியாவின் மிக முக்கியமான நகரமான நினிவே கிழ‌க்கில் இருந்த‌து. த‌ர்கீசு மேற்கில் இருந்த‌து. க‌ட‌வுள் அழைத்த‌ இட‌த்துக்கு நேர் எதிரே ஓடினார் யோனா.

திடீரென‌ க‌ட‌லில் பெரும் காற்று வீசிய‌து. கட‌ல் கொந்த‌ளித்த‌து. க‌ப்ப‌ல் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போய்விட‌லாம் எனும் சூழ‌ல். க‌ப்ப‌லில் இருந்த‌வ‌ர்க‌ளெல்லாம் திகைத்துப் போய் அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுளை நோக்கி க‌த‌றி வேண்ட‌த் துவ‌ங்கினார்க‌ள்.

க‌ப்ப‌லில் இருந்த‌ ச‌ர‌க்குக‌ளையெல்லாம் க‌ட‌லில் எறிந்து க‌ப்ப‌லின் எடையைக் குறைக்கும் முய‌ற்சியிலும் அவ‌ர்க‌ள் ஈடுப‌ட்ட‌ன‌ர். யோனாவோ எதையும் க‌ண்டு கொள்ளாம‌ல் க‌ப்ப‌லின் அடித்த‌ள‌த்தில் போய் தூங்கிக் கொண்டிருந்தார். மாலுமி அவரை எழுப்பி செபிக்கச் சொன்னார்.

பின்னர், க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்க‌ளெல்லாம் ஒன்று கூடினார்க‌ள். “வாருங்க‌ள், இந்த‌ தீங்கு யாரால் வ‌ந்த‌து என்ப‌தை அறிய‌ சீட்டுக் குலுக்குவோம்” என்று சொல்லிக் கொண்டே சீட்டில் எல்லார் பெய‌ரையும் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்தார்க‌ள்.

“யோனா” ‍ பெயர் வந்தது.

எல்லோரும் யோனாவைப் பார்த்தார்கள்.

“யார் நீ ? எங்கிருந்து வ‌ருகிறாய் ?”

“நான் ஒரு எபிரேய‌ன். விண்ணையும் ம‌ண்ணையும் ப‌டைத்த‌ க‌ட‌வுளை வ‌ண‌ங்குப‌வ‌ன். அந்த‌ க‌ட‌வுள் என‌க்கு ஒரு வேலை கொடுத்தார். நான் அவ‌ரிட‌மிருந்து த‌ப்பி ஓடிவ‌ந்தேன்” என்றார் யோனா.

க‌ட‌ல் சீற்ற‌ம் அதிக‌மாகிக் கொண்டே இருந்த‌து. கொந்த‌ளிப்பு அட‌ங்க‌வில்லை.

“யோனா… நீ ஏன் இப்ப‌டிச் செய்தாய் ? இந்த‌ கொந்த‌ளிப்பு அட‌ங்க‌ என்ன‌ செய்ய‌வேண்டும் ? ”

“இந்த‌ கொந்த‌ளிப்புக்குக் கார‌ண‌ம் நான் தான். என்னைக் க‌ட‌லில் எறிந்து விடுங்கள். அது தான் ஒரே வழி” யோனா சொன்னார்.

அவ‌ர்க‌ள் த‌ய‌ங்கின‌ர். ஆனால் க‌ட‌ல் சீற்ற‌ம் அதிக‌ரித்துக் கொண்டே வ‌ந்த‌து. என‌வே வேறு வ‌ழியின்றி யோனாவைத் தூக்கிக் க‌ட‌லில் எறிந்த‌ன‌ர்.

ம‌ந்திர‌த்துக்குக் க‌ட்டுப்ப‌ட்ட‌து போல‌ க‌ட‌ல் ச‌ட்டென‌ அமைதியான‌து. க‌ட‌லில் விழுந்த‌ யோனா மூழ்கினார். மூழ்கிக் கொண்டிருந்த‌ அவ‌ரை ஒரு மீன் வ‌ந்து முழுதாய் விழுங்கிய‌து !

யோனா மூன்று நாட்க‌ள் மீனின் வ‌யிற்றில் இருந்தார். பாதுகாப்பாக‌ !

மீனின் வ‌யிற்றிலிருந்து யோனா க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாடினார். க‌ட‌வுள் மீனுக்குக் க‌ட்ட‌ளையிட‌ யோனாவை அது க‌ரையில் க‌க்கிய‌து,

க‌ட‌வுளின் வாக்கு மீண்டும் யோனாவுக்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது யோனா த‌ய‌ங்க‌வில்லை. நினிவே ந‌க‌ருக்குள் நுழைந்தார். இன்னும் நாற்ப‌து நாட்க‌ளில் நினிவே ந‌க‌ர் அழிக்க‌ப்ப‌டும் எனும் க‌ட‌வுளின் வார்த்தையை உரைத்தார்.

ம‌க்க‌ள் அதிர்ந்த‌ன‌ர். எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டு நோன்பிருக்க‌த் துவ‌ங்கின‌ர். விஷய‌ம் ம‌ன்ன‌னின் காதுக‌ளுக்கும் சென்ற‌து. அவ‌னும் உட‌னே அர‌ச‌வை விட்டிற‌ங்கி சாக்கு உடுத்தி சாம்ப‌லில் உட்கார்ந்தார். மக்கள் யாவரும் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர கட்டளையும் இட்டார்.

ம‌க்க‌ள் ச‌ட்டென‌ ம‌ன‌ம் மாறிய‌தைக் க‌ண்ட‌ இர‌க்க‌த்தின் க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். அந்த‌ நாட்டுக்குச் செய்ய‌ இருந்த‌ த‌ண்ட‌னையை வில‌க்கினார்.

யோனாவோ க‌டும் கோப‌ம‌டைந்தார். ‘கடவுளே, நீர் இப்ப‌டிச் செய்வ‌து ச‌ரிய‌ல்ல‌, இனி நான் வாழ்வ‌தை விட‌ சாவ‌தே மேல்’ என்றார்.

‘யோனாவே நீ கோப‌ப்ப‌டுவ‌து நியாய‌மா ?” என்று கேட்டார் க‌ட‌வுள்.

யோனா கோப‌த்தோடு நாட்டை விட்டு வெளியேறி ந‌க‌ருக்கு வெளியே ஒரு ப‌ந்த‌ல் அமைத்து ந‌க‌ருக்கு என்ன‌ நேரும் என்ப‌தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ‌ருக்கு அருகே ஒரு சின்ன‌ ஆம‌ண‌க்கு விதை முளைத்து ஒரே இரவில் வேக‌மாய் வ‌ள‌ர்ந்து அவ‌ருக்கு நிழ‌ல் கொடுக்கும் செடியான‌து. யோனா அந்த‌ நிழ‌லில் இருந்தார். ம‌று நாள் ஒரு புழு வ‌ந்து அந்த‌ச் செடியை அரிக்க‌ செடி அழிந்த‌து.

யோனா க‌ல‌ங்கினார். ‘க‌ட‌வுளே என‌க்கு சாவு வ‌ர‌ட்டும் என‌ வேண்டினார்’

‘ஒரு ஆம‌ண‌க்குச் செடிக்காக‌ நீ இவ்வ‌ள‌வு க‌ல‌ங்குவ‌து முறையா ?” க‌ட‌வுள் கேட்டார்.

‘ஆம். முறைதான்.’

‘தானாகவே ஒரு இர‌வில் முளைத்து ம‌று இர‌வில் அழிந்த‌ செடிக்காக‌ இவ்வ‌ள‌வு வ‌ருந்துகிறாயே. இந்த‌ நினிவே ந‌க‌ரில் இருக்கும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ நான் ம‌ன‌மிர‌ங்காம‌ல் இருப்பேனா ?” க‌ட‌வுள் கேட்க‌ யோனா ம‌ன‌ம் தெளிந்தார்.

க‌ட‌வுளின் அள‌வ‌ற்ற‌ அன்பையும், இரக்கத்தையும் உல‌கிற்கு விய‌ப்புட‌ன் சொல்கிற‌து யோனாவின் வாழ்க்கை.

பைபிள் மாந்தர்கள் 69 (தினத்தந்தி) ஒபதியா

கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் கடவுள் பல இறைவாக்கினர்களை தமது மக்களிடம் இறைவாக்கு உரைக்க அனுப்பி வைத்தார். அவர்களில்  ஓசியா,  யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகிய பன்னிரண்டு பேர் சின்ன இறைவாக்கினர்கள் எனப்படுகின்றனர்.

பழைய ஏற்பாட்டிலேயே மிகவும் சிறிய நூல் ஒபதியா இறைவாக்கினரின் இறைவாக்கு நூல் தான். ஒபதியா எனும் எபிரேய வார்த்தைக்கு கடவுளின் ஊழியர் என்று பொருள்.

ஒபதியா மூலமாக கடவுள் கொடுக்கும் இறைவாக்கு ஏதோமியர்களுக்கு எதிரான இறைவாக்கு. கி.மு 586ல் எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்தது. அதைக் கண்டு ஏதோமியர்கள் அக்களித்தார்கள். வீழ்ந்த நாட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அங்குள்ள செல்வங்களையெல்லாம் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள். பிற நாடுகள் யூதாவுக்குள் நுழைவதற்கும் ஏதோமியர்கள் காரணமாய் இருந்தார்கள்.

தனது மக்களுக்கு எதிராக ஏதோமியர்கள் இருந்ததைக் கண்டு கடவுள் கோபமடைந்தார். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் மகன் ஈசாக். அவருக்கு இரண்டு பிள்ளைகள் யாக்கோபு மற்றும் ஏசா. ஏசாவின் வழிவந்தவர்களே ஏதோமியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு யாக்கோபின் பரம்பரையினருக்கும் எப்போதுமே ச‌ண்டை ந‌ட‌ப்ப‌து இய‌ல்பு.

அதே போல ஆபிரகாமின் உறவினரான லோத்து, மயங்கிக் கிடக்கையில் அவருடைய இளைய மகள் உறவு கொண்டதன் மூலம் பிறந்த பரம்பரையினர் அம்மோனியர்கள். மூத்த மகள் கொண்ட உறவின் மூலம் பிறந்தவர்கள் மோவாபியர்கள். இவர்களும் எப்போதும் இஸ்ரயேலருக்கு எதிராகவே செயல்பட்டனர்.

அரேபியாவுக்குச் செல்லும் வ‌ழியில் இருக்கும் ஏதோம் நாடு அந்த‌ வ‌ழியாக‌ச் செல்ப‌வ‌ர்க‌ளிட‌ம் வ‌ரி வ‌சூலித்துச் செல்வ‌ச் செழிப்பைப் பெருக்கிக் கொண்ட‌து. தாவீது ம‌ன்ன‌னின் கால‌த்திலும், சால‌மோன் ம‌ன்ன‌னின் கால‌த்திலும் இஸ்ர‌வேல் த‌லைமையின் கீழ் ஏதோம் வ‌ந்த‌து. இருப்பினும் இஸ்ரவேலுக்கு எதிராய் செயல்படும் மனநிலையே எப்போதும் அவர்களிடம் இருந்தது.

க‌ட‌வுள் இஸ்ர‌யேல் ம‌க்க‌ளின் துய‌ர‌ங்க‌ளையும், வ‌லிக‌ளையும் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்தினார். ஒப‌தியா இறைவாக்கின‌ர் க‌ட‌வுளின் வார்த்தையை ம‌க்க‌ளுக்குத் தெரிவித்தார். உயர்ந்த செங்குத்தான பாறை மீது கட்டப்பட்டிருந்தது ஏதோமியரின் தலைநகரான சலா. எனவே “உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே!” என ஒபதியா ஆரம்பித்தார்.

“என்னைத் தரை மட்டும் தாழ்த்தக் கூடியவன் யார்? என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது. நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்” ஒப‌தியாவின் வார்த்தைக‌ள் ஏதோமிய‌ர்க‌ளின் க‌ர்வ‌த்துக்கு எதிராக‌ வீரிய‌த்துட‌ன் வெளிவ‌ந்த‌ன‌.

ஏதோமில் இருக்கும் ஞானிக‌ளையும், ஏசாவின் ம‌லைமேல் இருக்கும் அறிவாளிக‌ளையும் அழிக்காம‌ல் விட‌மாட்டேன். வ‌லிமை மிக்க‌ வீர‌ர்க‌ளெல்லாம் திகில‌டைந்து ஓடுவார்க‌ள். என‌ க‌ட‌வுளின் வார்த்தைக‌ள் ஏதோமுக்கு எதிராக‌ எழுந்த‌ன‌.

யூதாவுக்கும், இஸ்ர‌வேலுக்கும் எதிராக‌ எதிரி நாடுக‌ள் வ‌ந்த‌போது ஏதோம் எதிரிநாடுக‌ளோடு சேர்ந்து கொண்ட‌து க‌ட‌வுளின் கோப‌த்தை அதிக‌ப்ப‌டுத்திய‌து.

ஏதோமின் மீது த‌ன‌து கோப‌ம் ஏன் என்ப‌தையும் க‌ட‌வுள் ஒப‌தியா மூல‌ம் வெளிப்ப‌டுத்தினார்.

” நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்.  அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.” என‌ அழிவுக்கான‌ கார‌ண‌ங்க‌ளை ஒப‌தியா ப‌ட்டிய‌லிட்டார்.

எதிரிக‌ளை அழிப்ப‌து ம‌ட்டும‌ல்லாது, த‌ன‌து ம‌க்க‌ள் மீண்டும் வெற்றியடைவார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ நாட்டையும், பெருமையையும் மீண்டெடுப்பார்க‌ள் என்றும் ஒப‌தியா இறைவாக்குரைத்தார்.

“யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர். யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர். யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர். ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர். அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள். ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார். ஆண்டவரே இதைக் கூறினார்.” என‌ ஒப‌தியா த‌ன‌து இறைவாக்கில் எடுத்துரைத்தார்.

ஒரு தாய் வ‌யிற்றுப் பிள்ளைக‌ளான‌ ஏசாவும், யாக்கோபும் இர‌ண்டு வேறு திசைக‌ளில் ப‌ய‌ணித்தார்க‌ள். யாக்கோபின் வீழ்ச்சியில் ஏசா உத‌வ‌ முன்வ‌ர‌வில்லை. த‌ன் ச‌கோத‌ர‌னுடைய‌ தேவையில் உத‌வாத‌வ‌னைக் க‌ட‌வுள் அழிப்பார் எனும் மிக‌ப்பெரிய‌ பாட‌த்தை ஒப‌தியா க‌ற்றுத் த‌ருகிற‌து.

இறைவ‌னுக்கு ஏற்புடைய‌வ‌ர்க‌ளாக‌ நாம் வாழும்போது க‌ட‌வுள் ந‌ம்மைத் தொட‌ர்ந்து பாதுகாக்கிறார். ந‌ம‌து அழிவிலும் அவ‌ர் ந‌ம்மைக் கைவிடுவ‌தில்லை. க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் அழிவுக்குள்ளாகும் போது அதை எட்ட‌ நின்று வேடிக்கை பார்ப்ப‌தும், அவ‌ர்க‌ளுடைய‌ அழிவில் அக்க‌ளிப்ப‌து மிக‌ப்பெரிய‌ பாவ‌ம் என்ப‌தையும் ஒப‌தியா நூல் ந‌ம‌க்கு விள‌க்குகிற‌து.

பைபிள் மாந்தர்கள் 68 (தினத்தந்தி) ஆமோஸ்

ஆமோஸ் இறைவாக்கினர் கி.மு எண்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவனின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஒரு தீர்க்கத்தரிசி. யூதா நாட்டில் பிறந்து வளர்ந்தவர். எருசலேமிற்குத் தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது இவர் வாழ்ந்த தெக்கோவா எனும் ஊர். ஆட்டுமந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்தி மரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார்.

ஆமோஸ் மிகுந்த செல்வம் உடையவர். ஆமோஸ் என்பதற்கு ‘சுமை  சுமப்பவர்’என்று அர்த்தம். வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு இறைவனின் வார்த்தை காட்சியாய் வந்தது. இஸ்ரயேல் நாட்டைப்பற்றி கடவுள் தனக்குச் சொன்னவற்றை ஆமோஸ் இறைவாக்கினர் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். நீதியும் நேர்மையும் குறித்து இவர் அதிகம் பேசியதால், நீதியின் இறைவாக்கினர் என அழைக்கப்படுகிறார்.

தமஸ்கு, பெலிஸ்தியா, தீர், ஏதோம், அம்மோனியர், மோவாபு என பிற நாடுகளின் மீது எச்சரிக்கையும், இறைவனின் கோபத்தையும் பற்றி ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார். அப்போது கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் கூட்டமான யூதாவும், இஸ்ரயேலும் உற்சாகமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் கடவுளின் வார்த்தைகள் அவர்களுக்கு எதிராகவே வந்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“யூதா க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை விட்டு வில‌கி ந‌ட‌க்கிற‌து. நான் அவ‌ர்க‌ள் மீதான‌ என் த‌ண்ட‌னையை மாற்ற‌ மாட்டேன். பொய் தெய்வ‌ங்க‌ளை வ‌ழிப‌டும் அவ‌ர்க‌ளை நெருப்பால் சுட்டெரிப்பேன்” என‌ யூதாவுக்கு எதிராய் அவ‌ருடைய‌ குர‌ல் ஒலித்த‌து.

இஸ்ர‌யேலின் மீதான‌ க‌ட‌வுளின் கோப‌ம் ம‌க்க‌ளுடைய‌ ம‌னிதாப‌மின்மையின் மீது ஆவேச‌மாய்ப் பாய்ந்த‌து. ஏழைக‌ளையும், வ‌றிய‌வ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் ஒரு பொருட்டாக‌வே ம‌திக்க‌வில்லை. க‌ட‌வுள் இத‌னால் க‌டும் கோப‌ம‌டைந்தார்.

‘ஏழைக‌ளை இர‌ண்டு கால‌ணிக‌ளுக்காக‌ விற்கிறீர்க‌ள், வ‌றிய‌வ‌ரின் த‌லைக‌ளை த‌ரையில் போட்டு மிதிக்கிறீர்க‌ள்’ என எச்சரித்தார்.  ம‌க்க‌ளுடைய‌ வாழ்க்கையின் த‌ர‌ம் அழிந்து விட்ட‌து. த‌காத‌ உற‌வுக‌ளும், ம‌து வெறியும் நாட்டில் நிர‌ம்பிவிட்ட‌து. இனிமேல் உங்க‌ளை அழிக்காம‌ல் இருக்க‌ முடியாது.

“வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுத்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது. வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான். வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது” எல்லோரையும் அழிப்பேன் என‌ க‌ட‌வுளின் கோப‌ம் வெளிப்ப‌ட்ட‌து.

ஆமோஸ் இறைவாக்கின‌ரின் வாயிலிருந்து உவ‌மைக‌ள் மிக‌ அழ‌காக‌ வெளிப்ப‌ட்டதை ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அழ‌காக‌ எடுத்துக் காட்டுகின்ற‌ன‌. “இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழ‌க்கம் செய்யுமோ?  வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ” என்பது ஒரு சின்ன‌ உதார‌ண‌ம்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பினால் க‌ட‌வுளின் ம‌ன்னிப்பு அவ‌ர்க‌ளுக்குக் கிடைக்கும் என மனம் திரும்புதலை ஆமோஸ் ஊக்குவித்தார். “நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்”

ஆண்ட‌வ‌ரை விட்டு வில‌கினால் அது மிக‌வும் கொடுமையான‌து. ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்பாதீர்கள். அது ஒளிமிக்க நாளன்று. இருள் சூழந்த நாள். அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்” என‌ ஆமோஸ் இறைவாக்கின‌ர் அழ‌காக‌த் தெரிவிக்கிறார்.

ஆமோஸ் இறைவாக்கின‌ர் வ‌ழியாக‌ க‌ட‌வுள் பேசிய‌வை எல்லாமே இஸ்ர‌யேல் ம‌க்க‌ளின் க‌டின‌ ம‌ன‌த்தைப் ப‌ற்றிய‌தாக‌வே இருந்த‌து. ஏழைக‌ளை வாட்டி வ‌தைத்து, அடிமைக‌ளைக் கொடுமைப்ப‌டுத்தி, நீதியைப் புதைத்து வாழ்ந்து வ‌ந்தார்கள் இஸ்ரயேலர்கள். ஆனால் ச‌ட‌ங்குக‌ள், விழாக்க‌ளை ம‌ட்டும் போலித்த‌ன‌மாய் கொண்டாடி வ‌ந்தார்க‌ள். க‌ட‌வுள் “உங்க‌ள் விழாக்க‌ளை வெறுக்கிறேன்” என்றார்.

விழாக்களைப் போலவே கில்கால், பெத்தேல் எனும் இடங்களில் பலி செலுத்தும் சடங்கையும் மக்கள் ஒரு அடையாளமாகச் செய்து வந்தனர். ‘மனம் மாறாமல் வெறும் பலி செலுத்த வருவது உங்கள் பாவங்களை அதிகப்படுத்தும்’என கடவுள் எச்சரிக்கிறார்.

நாற்ப‌து ஆண்டுக‌ள் பாலை நில‌த்தில் வ‌ழிந‌ட‌த்தி, எதிரிக‌ளை ஒழித்து இஸ்ர‌யேல‌ரைக் க‌ட‌வுள் பாதுகாத்து வ‌ந்தார். ஆனால் அவ‌ர்க‌ளோ, இறைவாக்கின‌ர்க‌ளுக்குச் செவி கொடுக்காத‌ ம‌க்க‌ளாக‌ இருந்து வ‌ந்த‌ன‌ர். இதையும் க‌ட‌வுள் க‌ண்டித்தார்.

நாங்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளைக‌ள். எங்க‌ளைக் க‌ட‌வுள் க‌ண்டிக்க‌மாட்டார் என்ப‌து இஸ்ர‌யேல‌ர்க‌ளின் ம‌ன‌நிலையாய் இருந்த‌து. ஆனால் க‌ட‌வுளோ, “உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.” என‌ மிக‌த் தெளிவாக‌ அவ‌ர்க‌ளைக் க‌ண்டித்தார்.

நீதி வெள்ள‌மென‌ப் பொங்கி வ‌ர‌ட்டும். நேர்மை வ‌ற்றாத‌ ஆறாக‌ பாய்ந்து வ‌ர‌ட்டும். இதுவே இறைப‌ணி என்கிறார் இறைவ‌ன்.

ஆமோஸ் இறைவாக்கின‌ரின் மூல‌மாக‌ நீதியும், நேர்மையும், ஏழைக‌ளுக்கு இர‌ங்கும் உள்ள‌மும் ஆன்மீக‌ வாழ்வின் அவ‌சிய‌த் தேவைக‌ள் என்கிறார் க‌ட‌வுள்.