ஆன்மீகம் : கிறிஸ்மஸ் – வார்த்தை மனிதனானார்.

christmas

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன் ?” என ஏளனமாய் விரட்டி விட்டனர்.

பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந் தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள்.

அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே “இந்தக் குளிரையெல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயாம்மா” என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே !

கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “அன்பு” எனலாம். மனுக்குலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு !

“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ( மத் 4.4  ) என்கிறது விவிலியம். அத்தகைய வார்த்தை மனிதனாக அவதாரம் எடுத்த நாளைத் தான் கிறிஸ்தவம் கிறிஸ்து பிறப்பு என்கிறது !

கிறிஸ்மஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் ? வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், குடில், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாடை, நல்ல சாப்பாடு, அலங்காரம், அப்புறம் ஆலய திருப்பலி, இயேசுவின் பிறப்பு ! அவ்வளவு தானே ?

விழாக்கள் எல்லாமே இப்போது ஒரு வியாபார தளங்களாகி விட்டன. எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சரி, எப்படிடா ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றே புதுப் புது விஷயங்களுடன் கடை விரிக்கும். தீபாவளி போன்ற விழாக்களுக்கு எரிந்து தீரும் பட்டாசுகள் பல கோடி ரூபாய்களை அழித்து முடிக்கும். கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் சாக்லேட், ஆடைகள், அலங்காரங்கள் என பல விஷயங்களைக் காட்டி பொருளாதாரத்தின் பல்லைப் பிடுங்கும்.

உஷாராகிக் கொள்வது ரொம்ப நல்லது, ரொம்ப முக்கியமானது !

அலங்காரங்களே தேவையில்லையா ? மகிழ்ச்சியாய் எல்லோரும் இருக்க வேண்டாமா என மனசு குரல் கொடுக்கிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மகிழ்ச்சிக்கும், நீங்கள் தேவையில்லாமல் செலவிடும் பல்வேறு விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது !

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல் என்றால் நான் இதைத் தான் சொல்வேன். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், “இயேசு என் இடத்தில் இருந்தால் என்ன செய்வார் ?” எனும் கேள்வியைக் கொண்டே தீர்மானியுங்கள். வாழ்க்கை ரொம்பவே அர்த்தமுள்ளதாகி விடும்.

சரி, இயேசுவின் பிறப்பையே கொஞ்சம் பார்க்கலாமே ! இந்த பிரபஞ்சத்திலேயே ‘தான் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்’ என தீர்மானித்துப் பிறந்த ஒரே ஒரு நபர் இயேசு மட்டுமே ! அப்படிப்பட்ட இயேசு எப்படி அவதரித்தார் ? அவருடைய வம்சாவழிப் பட்டியலில் பாவிகளுக்கு இடம். அவர் நினைத்திருந்தால் குற்றமே இல்லாத ஒரு பரம்பரையில் வந்திருக்க முடியாதா ?

அவருடைய பிறப்பு விலங்குகளுடைய கொட்டிலில். ஏன், அவர் நினைத்திருந்தால் மாளிகையில் அரசனின் மகனாய் அவதரித்திருக்க முடியாதா ?

அவர் பிறப்பு அறிவிக்கப் பட்டது சமூக அமைப்பின் கடைநிலையில் இருக்கும் இடையர்களுக்கு ! ஏன் மாளிகையில் பட்டாடைவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க முடியாதா ?
அவர் பிறந்த இடத்தில் அலங்காரம் இருந்ததா ? அலங்கோலம் தானே இருந்தது ! அவரைச் சுற்றிப் புத்தாடை இருந்ததா கந்தல் இருந்ததா ? அவருக்கு சாக்லேட் பந்தி நடந்ததா ?

இப்படி இயேசுவின் உண்மையான பிறப்பு நிகழ்வு எப்படி நடந்தது என்பதையும், ஏன் நடந்தது என்பதையும் மனதில் அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

1.        கிறிஸ்மஸ் ஒரு பகிர்வின் நாளாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டாரத்தில், உறவு வட்டாரத்தில் நீங்கள் வெறுக்கும் நபர் இருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நபருடன் நிச்சயமாகப் பேசுங்கள். தொலைபேசுங்கள், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள். முடிந்தால் அவருடைய வீட்டுக்கே சென்று பேசுங்கள். ‘நான் ஏன் அவன் கிட்டே பேசணும் ?” எனும் ஈகோவைக் கழற்றாமல் இயேசுவை அணியவே முடியாது ! ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, உங்களையே விடுதலையாக்கும்.

2.        மகிழ்ச்சியை இறைவனை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளால் உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து பாடல்கள் பாடுவது, உரையாடுவது என எந்த நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீடெனில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் விழாவையும், அதன் அர்த்தத்தையும் விளக்குங்கள். அவர்களுக்குக் கதைகள் சொல்லி கிறிஸ்மஸைச் சிறப்பானதாக்குங்கள்.

3.        உங்களுக்குச் சொந்தமல்லாத, பக்கத்து வீட்டு நபர் யாரோ ஒருவரை இந்த விழாநாள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குங்கள். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தி வையுங்கள். அந்த நபருக்கு ஏதேனும் முக்கியமான தேவைகள் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை அர்த்தப் படுத்துங்கள்.

4.        ஏதோ ஒரு நல்ல விஷயத்தை இந்த நாளில் நிச்சயம் செய்யுங்கள். ஒரு முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் கிறிஸ்துப் பிறப்பு மகிழ்ச்சியைப் பகிர்வதாகவோ, ஒரு மருத்துவமனை சென்று நோயாளியை சந்திப்பதாகவோ, ஒரு அனாதை இல்லத்துக்கு உணவு கொடுப்பதாகவோ, உங்கள் மனதில் எழும் இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வை நிச்சயம் செய்யுங்கள். உங்கள் பெயரை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல் இயேசுவை முன்னிலைப்படுத்தியே அவற்றைச் செய்யுங்கள்.

5.         குடும்ப உறவை வலுவாக்கும் ஒரு நாளாக இதைக் கொண்டாடுங்கள். பார்க், சினிமா, பூங்கா, இத்யாதிகளைத் தவிர்த்து வீட்டில் அனைவரும் ஒன்றாய் இருந்து கொண்டாடுவதே சிறந்தது. தேவையற்ற பார்ட்டி அழைப்புகள், கொண்டாட்ட அழைப்புகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குடும்ப உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே வாழ்த்துக் கடிதங்கள் எழுதிப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

6.         பரிசுகள் கொடுக்கிறீர்களெனில் அது ஆத்மார்த்தமானதாய் இருக்கட்டும். அதிக விலையுள்ள பொருட்கள் தான் நல்லது என்பதெல்லாம் மாயை. உங்கள் கைப்பட எழுதப்படும் ஒரு வாழ்த்து மடலை விட உயர்ந்த வாழ்த்து அட்டைகள் கிடையாது. ஒரு நபரைச் சென்று பார்த்து ஒரு அன்பான புன்னகையைக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்த பரிசு என்பதை உணர்கிறோமா ? விதவையின் காணிக்கை இரண்டு காசு தான், ஆனால் கொடுத்த மனநிலை தானே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது !

7.          கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழிகிறவர். தீர்ப்பும், முடிவும் அவர் கையில். எல்லோரிலும் இறைவனின் பிம்பத்தைக் காண்பதே ஆன்மீக வளர் நிலை. விழா நாட்கள் மதச் சண்டைகள், சச்சரவுகள், சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் கிறிஸ்மஸ் கொண்டாடுவது மாபெரும் பரிசேயத் தனம் ஆகிவிடும்.

8.         உங்களை அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்வதில் பயன் இல்லை. உங்களை அன்பு செய்யாதவர்கள், உங்களை அறியாதவர்கள், உங்கள் விரோதிகள் என எல்லோருக்காகவும் ஜெபியுங்கள்.

9.        அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு எனும் நல்ல விஷயங்களே கிறிஸ்மஸ் விழாவில் நிரம்பியிருக்க வேண்டியவை. அவற்றை மனதில் நிரப்புங்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றை அழித்து விட இந்த ஆண்டு தூய ஆவியின் துணையை நாடுங்கள்.

10.  “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” எனும் வாசகங்களை உள்வாங்கி கிறிஸ்மஸ் தினத்தை வீணடிக்காதிருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கிறிஸ்மஸ் விழா பொழிவிழக்க அது ஒன்றே போதும், எனவே அதை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஆன்மீகம் : புதிய தினம், புதிய மனம்

hny

கிறிஸ்மஸ் என்றவுடன் ஸ்டார், குடில், கிறிஸ்மஸ் தாத்தா எல்லாம் ஞாபகத்துக்கு வருவது போல, புத்தாண்டு என்றதும் ஒரு விஷயம் எல்லோருக்கும் சட்டென ஞாபகத்துக்கு வரும். அது புத்தாண்டு உறுதிமொழி ! அப்படி என்ன தான் விசேஷமோ, “இன்னில இருந்து நான் இந்த விஷயத்தைப் பண்ணப் போறதில்லை” என சூளுரைக்கும் மக்கள் எக்கச் சக்கம். அந்த வீராப்பு ஒரு சில நாட்கள் முதல், ஒரு சில வாரங்கள் வரை நீடிக்கும். அப்புறம் மனசில் மையம் கொண்ட வீராப்புப் புயல் ஆந்திரா பக்கமோ, கர்நாடகா பக்கமோ கரையேறும். நாமும் “பழைய குருடி கதவைத் தெறடி” பழமொழியைப் போல பழைய வாழ்க்கைக்குள் நுழைந்து விடுவோம்.

இந்த உறுதி மொழி உலகெங்கும் பிரசித்தம். இன்னில இருந்து குடிக்கவே மாட்டேன், ஒழுங்கா எக்ஸர்சைஸ் செய்வேன், தம் அடிக்கிறவங்க சகவாசம் கூட வெச்சுக்க மாட்டேன், புதுசா எதையாச்சும் கத்துப்பேன் இத்யாதி, இத்யாதி என சகட்டு மேனிக்கு எடுத்துத் தள்ளும் உறுதி மொழிகளில் காற்றில் கரைபவை தான் அதிகம். இதையும் ஒரு ஆராய்ச்சியா எடுத்துச் செஞ்சாங்க. அதில் கண்டுபிடிச்ச விஷயம் என்னன்னா, உறுதி மொழி எடுக்கிறவங்களில 52% பேர் “என்ன தான் வந்தாலும் இதை நான் கடைபிடிப்பேன்” என்று அடித்துச் சொல்கிறார்கள். இறுதி வரை உறுதி மொழியைக் கெட்டியா பின்பற்றுபவர்கள் வெறும் 12% தானாம் !

எதுக்காக இந்த உறுதி மொழிகள் ? எப்படியாவது நமது நிலமையைக் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் எனும் ஆசை தான் இல்லையா ? செய்யப்படுகின்ற உறுதி மொழிகளில் பெரும்பான்மையானவை மூன்று வகைகளில் அடங்கிவிடுமாம். ஒன்று, பொருளாதாரம் சார்ந்த உறுதி மொழிகள். இரண்டு, உடல் நலம் சார்ந்த உறுதி மொழிகள். மூன்று குடும்ப உறவுகள் சார்ந்த உறுதி மொழிகள். எது எப்படியோ, நம்முடைய நிலமை கொஞ்சம் பெட்டராகணும் எனும் எண்ணமும், ஏக்கமுமே உறுதி மொழிகள் தோன்றக் காரணமாகின்றன.

இந்த புத்தாண்டில் நாம் உடைகளை எடுக்கக் காட்டும் அவசரத்தை உறுதி மொழிகள் எடுப்பதில் காட்டவேண்டாம். கொஞ்சம் நிதானிப்போம். உண்மையிலேயே நாம் எடுக்கின்ற உறுதி மொழிகள் நமது கிறிஸ்தவ வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றனவா ? “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்து விட்டால் அதனால் பயனில்லை” எனும் பைபிள் வாசகத்தை நினைவில் கொள்வோம். நமது உறுதி மொழிகள் எதை நோக்கி இருக்கின்றன ?

நமது செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்கே தான் நமது உள்ளமும் இருக்கும். விண்ணுலக விஷயங்களின் மீதான ஆர்வம் அதிகமாக இருந்தால் நமது உறுதி மொழிகளும் விண்ணக வாசனையுடன் இருக்கும். சிந்தை உலகம் சார்ந்த விஷயங்களெனில் நமது உறுதி மொழிகளும் உலகு சார்ந்தே இருக்கும். நமது செல்வம் உண்மையில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஒரு குட்டி டெஸ்ட் என்று கூட இதைச் சொல்லலாம்.

சரி, இந்த ஆண்டைய புத்தாண்டு உறுதி மொழிகளை ஆன்மீக வளத்துக்கானதாய் ஒதுக்கலாமே ? அப்படி என்ன தான் முடிவெடுக்கலாம் ?

1. “அடுத்தவர்களைக் காயப்படுத்தும் எதையும் நான் இந்த ஆண்டு சொல்ல மாட்டேன்” என்று ஒரு முடிவை எடுத்துப் பாருங்கள். எத்தனையோ பிரச்சினைகள் அழிந்து ஒழிந்து போய்விடும் என்கிறார் எ.டபிள்யூ. டோஸர். ஒரு விஷயத்தைச் சொல்லும் முன், “இந்த விஷயம் அந்த நபரைக் காயப்படுத்துமா ?” என்று யோசித்துச் செய்தால் உறவுகள் செழித்து வளரும். “போனமாசம் நீ என்ன சொன்னே ?”, “நீ மட்டும் யோக்கியனோ..”, ” உன்னோட குடும்பம்….” என்றெல்லாம் குறிபார்த்து வீசப்படும் வார்த்தை ஈட்டிகள் தினம் தோறும் இலட்சக்கணக்கான இதயங்களைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய வார்த்தைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒரு உறுதி மொழி எடுக்கலாமே !

2. என்னுடைய புகழுக்காக எதையும் செய்ய மாட்டேன், இறைவனின் புகழுக்காகவே எதையும் செய்வேன். எந்தப் புகழ் வந்தாலும் அதை இறைவனுக்கே செலுத்துவேன் எனும் உறுதி மொழி எடுக்கலாம். மனித இயல்புக்கு மிகவும் சவால் விடக்கூடிய உறுதி மொழி இது. எந்தச் செயலைச் செய்தாலும் ஒரு பாராட்டு, ஒரு அங்கீகாரம், ஒரு புகழ்ச்சி அனைத்தையும் எதிர்பார்க்கும் மனசு நமது மனசு. கல்யாணப் பத்திரிகையைக் கூட “முறைப்படி வைக்கலே” என முறைத்துக் கொள்ளும் பழக்கமே நமது இயல்பு. அத்தகைய சூழலில், எந்த ஒரு நல்ல செயலைச் செய்தாலும் அதில் வருகின்ற புகழை இறைவனின் மகிமைக்காய் திருப்பி விட முயலலாமே. சரியான இடத்தில் திருப்பி விடாத வாய்க்கால் தண்ணீர், விளைச்சலுக்குப் பயன்படுவதில்லை, வருகின்ற புகழை இறைவனுக்குத் தராவிடில் நமது ஆன்மீக வயல் ஆரோக்கியமாய் விளைவதில்லை.

3. “பாவம் குறித்த புரிதலோடு இருப்பேன்” எனும் உறுதி மொழியை எடுக்கலாம். பாவம் என்றதும் சட்டென கொலை செய்யாதே, களவு செய்யாதே எனும் வாசகங்கள் தான் மனதில் நிழலாடும். இன்னும் சற்று ஆழமாய் பயணிப்போம். ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், ஒவ்வொரு பார்வையிலும் புனிதம் நிரம்பியிருக்கிறதா, பாவம் பல்லிளிக்கிறதா என்பதைக் கண்டறிவோம். நமது பார்வை சரியாய் இருக்கிறதா ? நமது கரங்கள் சரியான செயல்கள் செய்கின்றனவா என்பதைக் கவனிப்போம். “இரண்டு கண்களுடன் எரி நரகத்தில் நுழைவதை விட ஒற்றைக் கண்ணனாய் பரலோகம் போவது நல்லது !”. நமது பேச்சு அடுத்தவர்களைக் காயப்படுத்துகிறதா, சகோதரனுக்கு எதிராய் கோபம் கொள்கிறேனா, யாரையேனும் இச்சையுடன் பார்க்கிறேனா, யார் மீதாவது எரிச்சல் கொள்கிறேனா, விசுவாசம் இல்லாமல் இருக்கிறேனா, இறை நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேனா, அச்சம் கொள்கிறேனா, சுயநல சிந்தை இருக்கிறதா, சிந்தனையில் கபடு இருக்கிறதா என ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் அலசி அதில் பாவம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவோம். பாவம் குறித்த முழு புரிதலோடு இருத்தலே பாவம் நீங்கிய வாழ்வுக்கான முதல் தேவை !

4. நமது திறமைகளை இறைவனுக்காய் பயன்படுத்த முடிவெடுக்கலாம். நம்மிடம் இருப்பது பேச்சுத் திறமையாய் இருக்கலாம், நோய் தீர்க்கும் திறமையாய் இருக்கலாம், அல்லது நமது பணி சார்ந்த திறமையாய் இருக்கலாம். எதுவாய் இருந்தாலும், அதை இறைவனின் புகழுக்காகவும், ஆன்மீக வளத்துக்காகவும் செயல்படுத்த முடிவெடுக்கலாம். அதற்கான வழிகளுக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் இறைவனை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளலாம்.

5. உறவுகளோடு இணைந்தே இருக்க முடிவெடுக்கலாம். சகோதரனோடு சண்டையிட்டுக் கொண்டு வந்தால் உனது காணிக்கை ஏற்றுக் கொள்ளப் படப் போவதில்லை. இயேசுவே சொல்லும் எச்சரிக்கை இது. நமது உறவினர்கள், நண்பர்கள் அயலார் என யாருடனும் சண்டையற்ற, ஆரோக்கியமான ஒரு உறவை உருவாக்க முயலலாம். பெரும்பாலான உறவு முறிவுகள் ஒரு இரண்டு படி நாம் கீழே இறங்கத் தயங்குவதால் வருபவையே. ஈகோ, பெயர், பந்தா, வறட்டு கவுரவம் இவற்றையெல்லாம் பார்க்காத மனிதர்களிடம் இத்தகைய சிக்கல்கள் இருக்காது.

6. நம்மால் மன்னிக்கப்படாத ஒரு நபரும் இல்லை எனும் நிலை உருவாக்க உறுதி மொழி எடுக்கலாம். நமக்கு பலருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம், பலருக்கு நம்முடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அத்தகைய வேறுபாடுகள் மனக் கசப்புகளையும் கொண்டு வந்திருக்கலாம். “எல்லாரையும் மன்னிப்பேன்” எனும் உறுதி மொழியை எடுக்கலாமே ! அடுத்தவர் நம்மை மன்னிக்க மறுத்து விட்டால் கூட பரவாயில்லை. நாம் மனதார மன்னிப்போம், அவர்களிடம் மன்னிப்பைக் கேட்கவும் தயங்காதிருப்போம்.

7. சுய நல சிந்தனையைக் கொஞ்சம் ஒதுக்குவோம். குறிப்பாக ஆன்மீக விஷயங்களைச் செய்யும் போது அதன் மூலம் தனிப்பட்ட லாபங்களைச் சம்பாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தை முழுமையாய் விட்டு விடுவோம். அந்த லாபம் பணமாகவோ, புகழாகவோ, அங்கீகாரமாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதற முடிவெடுப்போம்.

8. பைபிள் வாசித்து, செபிப்பதில் நிலைத்திருப்போம். இந்த உறுதி மொழியில் ஒரு சின்ன சிக்கல் உண்டு. தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற மனப் பயிற்சி இது. ஆனால் ஆழமான விருப்பமும் ஈடுபாடும் இல்லாமல் பைபிள் வாசிப்பதிலோ, செபிப்பதிலோ பயன் ஏதும் இல்லை. எனவே அத்தகைய மனநிலையோடு வாசிக்க உறுதி மொழி எடுப்போம். இறையோடு உரையாடாத வாழ்க்கை அர்த்தம் இழக்கும். வார்த்தையே நமது வாழ்க்கை, உணவு, பானம் எல்லாம் எனும் நிலை உருவாகும் போது நமது ஆன்மீகம் அர்த்தப்படும். கடவுளுடைய குரல் ரேடியோ அலைகள் போல எங்கும் நிரம்பியிருக்கிறது, சரியான அலைவரிசையில் நமது வாழ்க்கையை நிறுத்தும் போது அது நமக்குக் கேட்கும் என்கிறார் சகோதரர் ஸேக் பூனன். அதாவது நமது இதயத்தைத் தூய்மைப்படுத்தி செபிக்கும் போது இறைவனின் குரல் நமக்குக் கேட்கும் என்கிறார்.

9. எல்லாம் இறைவனுக்குச் சொந்தமானது எனும் சிந்தனையை வளர்த்துவோம். அனைத்தையும் விற்றுவிட்டுச் சன்னியாசி ஆகவேண்டுமென்பதல்ல அதன் பொருள். நம்மிடம் இருக்கும் பொருள் அனைத்தையுமே கடவுளுக்காய் அர்ப்பணம் செய்து விடல். அதன் பின் அதைச் செலவு செய்யும் போதோ, பயன்படுத்தும் போதோ, இறைவனின் பொருள் எனும் எண்ணம் நம்மிடம் இருக்கும், இருக்க வேண்டும். அதனால் என்ன பயன் ? யாரேனும் அவசர உதவி 500 ரூபாய் வேண்டும் என கேட்டால், கடவுளின் பணம் தான் இது, கேட்பவரிடம் பொய் சொல்லாமல் கடவுளிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு கொடுப்போம், எனும் சிந்தனை உருவாகும் ! உங்கள் பொருளை ஒருவர் இரவல் கேட்டாலும் கொடுக்கும் மனம் அப்போது தான் உருவாகும். அந்த புகழும் இறைவனையே சென்றடையும்.

10. இறைவனில் மகிழ்ந்திருப்போம். இயேசுவில் சரணடைவோருக்கு மனநிம்மதியும், அமைதியும் தானாகவே வந்து விடுகிறது. அத்தகைய அமைதி அளவிட இயலா மகிழ்வையும், ஆனந்தத்தையும் தருகிறது. இந்த புத்தாண்டில் இறைவனின் அமைதியில் இணையும் உறுதி மொழியை எடுப்போம். அதற்கு பாவத்தை விட்டு விலகி, இயேசுவின் வாழ்க்கையின் ஒளியில் நமது பயணத்தைத் தொடர வேண்டியது மிக அவசியம்.

ஒரு முறை, 24 வயதான இளைஞன் ஒருவன் தனது பெற்றோருடன் இரயில் பயணித்துக் கொண்டிருந்தான். திடீரென, அப்பா அப்பா அங்கே பாருங்கள் மரங்களெல்லாம் பின்னால் போகின்றன என்றான். ஹை… அப்பா…இதென்ன மழையா… மழை மழை.. மழை ரொம்ப அழகா இருக்கு ! என்றான். வாவ்.. எல்லாமே சூப்பரா இருக்கே என குதித்தான். எதிரே இருந்த வயதான தம்பதியருக்கு பொறுக்கவில்லை. மெதுவாக பையனின் பெற்றோரிடம், “பாவம், பையனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டலாமே” என்றனர். அந்தத் தந்தை புன்னகைத்தார். “தப்பா நினைக்காதீங்க, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. என் பையன் பிறவியிலேயே பார்வை இல்லாதவன். ஒரு ஆபரேஷன் முடிஞ்சு இப்ப தான் அவனுக்குப் பார்வை கிடைச்சிருக்கு. அதனால தான் எல்லாமே அவனுக்குப் புதுசா தெரியுது. ரசிக்கிறான்” என்றார். கேள்வி கேட்டவர்கள் நெகிழ்ந்தனர்.

நமது வாழ்க்கையிலும் அத்தகைய ஒரு பார்வை கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். வெளிப்பார்வை அல்ல ! ஆன்மீகப் பார்வை. ஆஹா, ஆன்மீக வாழ்க்கை எத்தனை அழகானது. இறைவனோடு இணைந்திருப்பது எத்துணை ஆனந்தமானது ! கம்பீரித்துப் பாடும் மனசு எத்துணை அலாதியானது என துள்ளிக் குதிப்போம் இல்லையா ? இருட்டில் இருக்கும் வரை வெளிச்சத்தின் வீரியம் புரிவதில்லை. கூண்டுக்குள் இருக்கும் சிங்கம் கூண்டு தான் காடு என நம்புவதைப் போல, பாவத்தில் புதையும் வரை பாவமே ஆனந்தம் என சிலாகிப்போம். பார்வை பெறும்போது தான், நாம் இதுவரை இழந்தது எத்துணை மிகப்பெரிய இன்பம் என்பதே புரியும். இந்தப் புத்தாண்டில் அத்தகைய பார்வை பெறவேண்டும் என முடிவெடுப்போம், இறைவனை வேண்டுவோம்.

புத்தாண்டு என்பது காலண்டரின் புதிய நாள் தான். டிசம்பர் 31 தியதி நள்ளிரவில் மாயாஜாலம் ஏதும் நிகழ்வதில்லை, மந்திரங்கள் ஏதும் அரங்கேறுவதில்லை. ஒரு புதிய நாள் மடிந்து, அடுத்த நாள் உதயமாகும். அது ஒரு மைல் கல். மைல் கற்கள் நமது பயணத்தின் திசையையும், நாம் கடந்து வந்த தூரத்தையும் காட்டுபவை. அவையே பயணமல்ல. அவை நமது பயணத்தை நிர்ணயிப்பதுமில்லை. எனவே புத்தாண்டுகளின் மயக்கக் கொண்டாட்டங்களை விடுத்து, அதை அர்த்தமுள்ள ஒரு துவக்கமாக மாற்றுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சேவியர்

 

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

பனிப் பூக்கள், குளிர் காற்றில்…

< இசையில் இணைப்பது உங்கள் கையில் >

பனிப்பூக்கள் குளிர்காற்றில்
பறக்கின்ற வேளை
இடையர்களும் இமைசாய்த்து
துயில்கின்ற மாலை

விண்ணிலே மீனொன்று
வால் நீட்டக் கண்டு
மென்மனசு இடையர்கள்
போனார்கள் மிரண்டு

இது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி
வானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.

0

மன்னர் குல மெத்தைகள் பலநூறு உண்டு
தூதர் சேதி சொன்னதுவோ ஆயர்களைக் கண்டு.
ஆவின் குடில் ஆலயமாய் மாறியதை வியந்து
அரசர் குல ஆணிவேரும் ஆடியது பயந்து.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
மீனொன்று கடல்குடிக்க ஆசைப்பட்ட கற்பனை

0

சாந்தமுகம் சாய்ந்து கொள்ள சிரித்தது பசுக்கொட்டில்
காந்தமுகம் பாய்ந்து வந்து அமர்ந்தது மனக் கட்டில்.
ஞானியரின் கைகளிலே மூன்று வகைப் பரிசு
மூவொரு தேவனவர் பிறப்பே மிகப் பெரிசு.

வென்று விட வந்தவரைக் கொன்றுவிடக் கட்டளை – அது
கதிரவனைத் தின்றுவிட குயில் கொண்ட கற்பனை

0

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…