ஆண்பாவம் பொசொல்லாதது ! (ஆண்கள் ஸ்பெஷல்)

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.

பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.

ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.

கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்.அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா ?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும் !!!.

மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.

வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன ?

தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.

“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா ? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.

“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி !! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.

என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை..நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா ?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா ?

வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன ?

“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம் !

இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.

ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.

ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான்,  தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.

ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.

பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம்

ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம் ‍

ஆனால் இதயத்தில்

அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

 

வாழ்த்துகள்.

நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள். –

ஹக் சிட்னி

முக்கியமற்றது எனும் நினைப்பில் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கூடிய விஷயம் இந்த நகைச்சுவை உணர்வு. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கக் கூட நாம் தயங்குவதில்லை. “எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லை” என சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுபவர்களும் ஏராளம்.

ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒரு விஷயம் கவனிச்சுக்கோங்க. நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல ! ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும் !

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய பார்முலா ! அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை !

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது ! இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

அதனால் தான் மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார், “ எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்”. ரொம்பவே உண்மையான வார்த்தை !! இன்றைக்கு தற்கொலைப் பட்டியல்களை புரட்டிப் பார்த்தால் வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகாமையும் ஒரு முக்கியமான காரணமாய் நம் கண்ணுக்கு முன்னால் விரிகிறதா இல்லையா ?

மனித மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் சிரிப்பு ரொம்பவே முக்கியம். லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “நல்ல சிரித்து வாழும் மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாகவும், கற்றுக் கொள்ளும் தன்மையிலும் இருக்கும்.” என்று தெரியவந்தது ! அது நகைச்சுவை கேட்பதோ, படிப்பதோ, பார்ப்பதோ என எந்த ஒரு வகையிலும் இருக்கலாம். அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள் “நல்ல ஜோக் படமா போட்டு அரை மணி நேரம் சிரிங்க” என்றெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுகிறார்கள்.

உங்களுடைய கோபத்தையோ, உங்கள் மீது வேறொரு நபருக்கு இருக்கும் கோபத்தையோ அழிக்க நகைச்சுவை உணர்வைப் போல சிறந்த ஒரு ஆயுதம் இருக்கவே முடியாது ! அது உங்களுடைய நட்பு வட்டாரத்தை இதன் மூலம் ரொம்ப உற்சாகமாய் இயங்கவும் வைக்கும் இல்லையா ?

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவதில்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவதில்லை. வாழ்க்கை கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்.

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். வாழ்க்கை அழுவதற்கானதல்ல. அழுதாலும், சிரித்தாலும் கடிகாரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நாட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் அழுவதும் சிரிப்பதும் உங்களுடைய தீர்மானத்தில் !

உடலை நேசிப்போம்

நமது உடல் ஆன்மாவை விட ஆழமான ரகசியங்களை உள்ளடக்கியது ! அதை முழுமையாய் புரிந்து கொள்வது இயலாத காரியம் –

இ.எம்.ஃபாஸ்டர்.

உடல் ஒரு அதிசயங்களின் சுரங்கம். அறிவு தேடும் வேட்டையில் பெரும்பாலும் நாம் கவனிக்க மறந்து போகும் விஷயமும் நமது உடல் தான். உடலுக்கும் மனசுக்கும் நேரடித் தொடர்பு உண்டு !

“ஐயோ நான் ரொம்ப கறுப்பா இருக்கேன்” என நினைத்து கவலைப்பட்டுக் கவலைப்பட்டு மன அழுத்தத்தில் மாண்டு போனவர்களும் உண்டு. தனது உடலைப் பற்றி அவமானப்பட்டுப் பட்டு ஒதுங்கியே இருந்து உருப்படாமல் போனவர்களும் உண்டு. என் கண்ணு சரியில்லை, மூக்கு சரியில்லை, நாடி சரியில்லை என அறுவை சிகிச்சை செய்து ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், வெற்றியாளர்கள் தங்கள் உடலை நேசிப்பவர்கள். தங்கள் உடல் எப்படியிருந்தாலும் தரப்பட்ட உடலை நேசிப்பவர்களே வெற்றியின் கனியையும், மகிழ்ச்சியின் இனிமையையும் ரசிக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தங்களுடைய உடலை நேசிப்பவர்களே தன்னம்பிக்கையாய் நடை போட முடியும்.

நீங்கள் கண்ணாடியில் உங்களையே பார்க்கும் போது என்ன தெரிகிறது ? இறைவன் கொடுத்த அழகான உடல். கைகள், முகம், தலை, புன்னகை இவை தெரிகிறதா ? இல்லை கன்னத்தில் இருக்கும் ஒரு பரு, வரிசை பிசகியிருக்கும் ஒரு பல், உதிர்ந்து போயிருக்கும் கொஞ்சம் தலைமுடி இப்படி இருக்கும் சின்னச் சின்ன குறைகள் கண்ணுக்குத் தெரிகிறதா ? இந்தக் கேள்விக்கான விடையில் இருக்கிறது நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா ? இல்லையா என்பதன் பதில் !

ஒரு பெண் இருந்தார். அவருக்கு நடிகை ஆக வேண்டும் எனும் அதீத ஆர்வம். அதற்குரிய தகுதியும், அழகும் தன்னிடம் இருப்பதாக நம்பினாள். ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார்.

அந்தப் பெண் கவலைப்படவில்லை. தன் மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார். ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் தான் மர்லின் மன்றோ.

உங்களைக் குறித்தும், உங்களுடைய உடல் அமைப்பைக் குறித்தும் முழுமையான ஏற்றுக் கொள்தல் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் உடலை நீங்களே நிராகரித்தால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறருடைய விமர்சனங்களை வைத்து உங்களை நீங்களே எடைபோட்டீர்கள் எனில் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது !

தன் மீதும், தன் உடல் மீதும் மரியாதை வைப்பவர்கள் தான் கெட்ட பழக்கங்களான மது , மாது, புகை, போதை எனும் தீய பழக்கங்களை விட்டு தள்ளியிருப்பார்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாய் இருந்தால், “இறைவன் வாழும் கோயில் எனது உடல்” என அதற்கு அதிக பட்ச மரியாதையையும் தருவார்கள்.

உடல் ஒரு அதிசயம். நமது உடலிலுள்ள இரத்தக் குழாய்களை அப்படியே நீட்டினால் எவ்வளவு தூரம் வரும் தெரியுமா ? 75,000 மைல்கள். சென்னையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரை செல்லும் தூரம் எவ்வளவு தெரியுமா ? 8500 மைல்கள் தான். இரண்டு இடங்களுக்கும் இடையே ஒன்பது தடவை பயணம் செய்யுமளவுக்கு தூரம் நமது இரத்தக் குழாய்களின் நீளம் என்பது வியப்பாய் இல்லையா !

இதயத்தோட எடை சுமார் 300 கிராம் தான். அது தினமும் பம்ப் பண்ணும் இரத்தத்தைக் கொண்டு பல டேங்க்கர் லாரிகளை நிரப்பலாம் !

நமது உடலிலுள்ள எலும்புகள் வியப்பின் குறியீடு. எலும்பு அதன் தன்மையின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையிலும் பார்த்தால், காங்கிரீட்டை விட, இரும்பை விட வலிமையானது. விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் நமது கட்டை விரலைப் போல ஒரு ரோபோ விரலை உருவாக்க முடியவில்லை. அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? “கட்டை விரலுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றம் தான் அதன் மிக நளினமான, இலகுவான அசைவுக்கு வழிசெய்கிறது. அதை அறிவியல் இன்னும் அறிந்து கொள்ளவில்லை ! “ வியப்பாக இருக்கிறது இல்லையா ?

இப்போது டச் ஸ்கிரீன் பற்றியும், டேல்லெட் பற்றியும் பேசுகிறோம். நமது தோலுக்கு அடியில் இருக்கும் ஒரு சின்னப் புள்ளியில் நூற்றுக் கணக்கான நரம்புகளின் முனைகள் தொடுதலை உணரவும், அந்தத் தகவலை மூளைக்கு அனுப்பவும் செய்கின்றன.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் நமது மொத்த உடலுக்குமான ஜெனடிக் தகவல்கள் உண்டு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் கோடான கோடித் தகவல்கள் உண்டு. அதை விரித்துப் படித்தால் ஒரு போர்வை போல நீளும். ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் ஒரு புள்ளிக்குள் சைலன்டாக ஒளிந்திருக்கின்றன.

வெறும் மூன்று பவுண்ட் எடையுள்ள மூளை நூறு பில்லியன் நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது. உடம்பின் ஒவ்வோர் செயலையும், கட்டளையையும் அது வகைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உடலின் தன்மைக்குத் தக்கவாறும், சுற்றியிருக்கும் குளிர், சூடு போன்ற கால்லநிலைக்குத் தக்கதாகவும் அது உடலின் வெப்பத்தையும், உறுப்புகளின் செயலையும் மாற்றியமைக்கிறது. கடந்த பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் அது பதிவு செய்து கொண்டே இருக்கிறது !

உடலின் இருக்கும் இத்தனை அற்புதமான விஷயங்களைத் தாண்டி இனிமேல் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு உங்களைக் கவலைக்குள்ளாக்கும் எனில் நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது தான் பொருள்.

நாம் ஒரு வானுயர்ந்த மலையையோ, ஒரு அழகிய கட்டிடத்தையோ, ஆடையையோ, ஒரு படைப்பையோ ரசிக்கவோ பாராட்டவோ தயங்குவதில்லை. ஆனால் நமது உடலை நேசிக்கவும் பாராட்டவும் மட்டும் தயங்குவது ஏன் ? என கேள்வி விடுக்கிறார் டாக்டர் கிளென் ஷிரால்டி.

ஒருவகையில் நமது மீடியாக்கள் உருவாக்கும் பிம்பத்தையே நமது மனம் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறது. கருப்பு நிறம் மோசம், முகப்பரு மோசம், முடி உதிர்ந்தால் மோசம், கை கால்கள் வழவழவென இல்லாதிருந்தால் மோசம், என நம்மை தேவையற்ற மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுவதில் முக்கியப் பங்கு ஆற்றுபவை நமது மீடியாக்களே ! அந்த வலைகளை நிராகரியுங்கள். நீங்கள் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்று எப்படி அவர்கள் நிர்ணயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்புங்கள். !

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்தவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய விஷயங்களல்ல !

உங்களை நீங்கள் நேசியுங்கள். உடல் எப்படி இருந்தாலும், உங்கள் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் அது நிச்சயம் போதுமானது !

மன்னிப்பு மகத்துவமானது.

இருட்டு இருட்டைத் துரத்த முடியாது ! வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும் –

மார்டின் லூதர் கிங். ஜூனியர்.

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு. இந்த மன்னிப்பு எனும் விஷயம் மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய்விடும் என்பது சர்வ நிச்சயம் ! எனவே எனக்கு தமிழ்லயே புடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். அது மனுக்குலத்தின் அடித்தளத்தில் விஷம் ஊற்றும் போதனை.

மன்னிப்பு என்பது என்ன ? ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது ! இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது ! தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் எனும் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்தால் நமக்கு நாமே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம்.

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல விஷயத்தைச் செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதாவது ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன. அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனசு சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கிவிடுகிறது.

ஆனால் மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே வார்த்தைகளில் மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் மன்னிப்பு அல்ல. ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அந்தச் சிக்கலில் இருந்து விலகியிருக்கும் மனநிலை.

உண்மையான மன்னிப்பெனில் எப்படி இருக்க வேண்டும் ? “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் ! யாரேனும் மன்னிப்பை தயக்கமில்லாமல் வழங்கிறார்களெனில் அவர்கள் தைரியசாலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மன்னிப்பு வழங்குவது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, போனாப் போகுது என்றோ, நான் பெரியவன் தியாக மனப்பான்மை உடையவன் போன்ற கர்வ சிந்தனைகளிலோ வரக் கூடாது., அப்படி வரும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பு அல்ல. உண்மையான மன்னிப்பின் இலக்கணம் அடுத்த நபர் கேட்பதற்கு முன்பாகவே அந்த நபரை உள்ளத்தில் உண்மையாகவே மன்னித்து விடுவது தான்.

மன்னிக்க மறுக்காதது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனம் இருத்தல் அவசியம். மன்னிப்புக் கேட்பதைப் போல கடினமான விஷயம் இல்லை. காரணம் உங்களுடைய பலவீனத்தையோ, உங்களுடைய குறையையோ , உங்களுடைய தவறையோ நீங்கள் அந்த இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். உங்களுடைய பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதில் உண்டு. ஆனால் எதைக் குறித்தும் கவலையில்லாமல் நீங்கள் தைரியமாக மன்னிப்புக் கேட்கிறீர்களெனில், நீங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாய் அன்பைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருள் !
மன்னிக்கத் தயங்காத மனிதர்கள் தான் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. காரணம் அது மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கிறது, உறவுகளைக் கட்டி எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு போன்கால். உயிரை உலுக்கும் போன்கால். “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான கரடு முரடு உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு சொன்னாள்.

“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என சந்தேகித்தார்கள். சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதி நிரம்பி வழிந்தது.

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது ! மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

உங்களால் முடியும் அசாதாரண வெற்றி !

 girl-755857_960_720

அசாதாரண வெற்றிக்கான சூழல்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அந்த வெற்றி கிடைக்காது. கிடைக்கும் சூழல்களை சரிவரப் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றி சாத்தியமாகும் –

ஜீன் பால்

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ரொம்பவே சாதாரண மனிதர்கள் பலர் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

“அவனுக்குப் பேசவே தெரியாதுடா.. அவனைப் பாரு டிவில புரோக்ராம் பண்றானாம்” என்று வியப்போம் ! “ஒழுங்கா தமிழே எழுதத் தெரியாது, சினிமால பாட்டு எழுதுறான் பாரு. நல்ல திறமை இருக்கிற நாம இங்கே கெடக்கிறோம்” என புலம்புவோம். ஒன்றும் இல்லாவிட்டால் ‘அட அங்கே பாருடா.. அந்த நோஞ்சான் பயலுக்கு சூப்பரா ஒரு லவ்டா..” என பெருமூச்சாவது விடுவோம் !

அந்த சலிப்புக்கோ, எரிச்சலுக்கோ, புகைக்கோ காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள். சொல்லப் போனால் நம்மை விடத் திறமைகள் குறைவாகவே இருக்கும் வெகு சாதாரண மனிதர்கள் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பது தான்.

அவர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அவர்களிடம் சில குணாதிசயங்கள் இருக்கும். ஒன்று மற்றவர்கள் செய்யத் தயங்குகிற, அல்லது செய்ய முடியாது என நினைக்கின்ற சில விஷயங்களைத் துணிந்து செய்திருப்பார்கள். உதாரணமாக ஒரு அழகான பெண்ணிடம் போய் காதலைச் சொல்ல பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். ஆனால் ஒருவன் போய் சட்டென சொல்லுவான். அவன் அவள் பார்வையை இழுக்க என்னென்ன வலை விரிக்க வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான்.

அதன் காரணம் என்ன ? அதில் இருக்கிறது இரண்டாவது பாயின்ட். தோற்றுவிடுவோமோ எனும் பயத்தைக் களைதல். காதலைச் சொல்லி நிராகரிக்கப்படுவோமோ எனும் பயத்தினால் காதலைச் சொல்லாதவர்கள் எக்கச்சக்கம். தோல்வி அடைந்தால் பரவாயில்லை என தைரியமாக ஒரு செயலை முன் வைப்பவர்களே வெற்றிக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

அலுவலை எடுத்துக் கொண்டால் ஒரு சின்ன மாற்றம் வருகிறது என்றாலே நடுங்கி, பயந்து போய் விடுபவர்கள் உண்டு. அந்த மாற்றத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டு தங்களுடைய வேலையைச் சரிவர செய்து பெயரை நிலைநாட்டுபவர்களும் உண்டு. அப்படி தங்கள் பணியைச் செய்பவர்கள் கவனிக்கப்படுவார்கள். வெற்றியடைவார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சே… எல்லாமே வேஸ்டாகிப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க நமக்கு உதவுகிறது”

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

வெற்றியடைந்தபின் பிரமிப்பூட்டும் வகையில் நம் முன்னால் தெரிபவர்களெல்லாம் வெறும் சாமான்யர்களே ! ஆனால் நம்மிடம் இல்லாத சில குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்கின்றன என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த எக்ஸ்ட்ரா விஷயங்கள் நம்மிடம் இருந்தால் நாமும் அதே போன்ற சாதனையாளர்களாய் மாற முடியும்.

“இதுக்கு மேல என்னால முடியாதுப்பா…” என பின்வாங்குபவர்கள் சாதனை வெற்றிகளைச் செய்ய முடியாது. பல வேளைகளில் அவர்கள் சாதாரண வெற்றிகளைக் கூட பெற முடியாது !

“வாய்ப்பு கிடையாது” என நூறு முறை விரட்டப்பட்டவர்கள் தான் பிற்காலத்தில் நடிகர்களாக உலகை உலுக்கியிருக்கிறார்கள். “உன் மூஞ்சி சதுரமா இருக்கு… நீயெல்லாம் ஏன்பா நடிக்கணும்ன்னு கிளம்பறே’ என கிண்டலடிக்கப் பட்டவர் தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஜான் ட்ரவால்டோ. பிற்காலத்தில் அவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கூட்டம் கணக்கில்லாதது ! பின் வாங்காத மனசு அவரிடம் இருந்தது தான் அவரை வெற்றியாளராய் மாற்றியிருக்கிறது.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லை” என்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட்.

துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி தான் உண்டு. அதே போல வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் இடையே இருப்பதும் ஒரு குட்டி இடைவெளிதான். அந்த இடைவெளியை நிரப்பினால் உங்களால் சாதிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் முதலில் வருபவருக்கும் கடைசியில் வருகிறவருக்கும் இடையே இருப்பது சில வினாடிகள் தான். ஆனால் முதலில் வருபவரே சாதனையாளராகிறார் இல்லையா ?

உங்கள் மீதான நம்பிக்கை. தொடர்ந்த முயற்சி. தோல்வியடைதல் குறித்த பயமின்மை. புதியவற்றை பாசிடிவ் மனநிலையில் ஏற்றும் கொள்தல் போன்ற சில விஷயங்களை மனதில் கொண்டாலே போதும். சாதாரண மனிதர்கள் சாதனை மாமனிதர்களாய் மாற முடியும் !

தொடர்ச்சியான வளர்ச்சி

 mainimg_grow

தொடர்ச்சியான வளர்ச்சியும் முன்னேற்றமும் நம்மிடம் இல்லையென்றால், வளர்ச்சி, சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளால் எந்த பயனும் இல்லை –

பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு குழந்தை பிறக்கும் போது அழுகையுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது. பிறகு குப்புறப் படுக்கிறது, தவழ்கிறது, எழும்புகிறது, தத்தக்க பித்தக்க என நடக்கிறது, ஓடுகிறது என அதன் வளர்ச்சி படிப்படியாய் இருக்கிறது. எல்கேஜியில் ஆரம்பித்து கல்வியும் படிப்படியாய் அடுத்தடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியான வளர்ச்சி இல்லாத குழந்தை ஊனமுற்ற குழந்தையாக, பரிதாபத்துக்குரிய பார்வைகளை சம்பாதிக்கும். தொடர்ச்சியான முன்னேற்றம் இல்லாத கல்வி, தோல்விகளையும், அறிவுக் குறைவையும் கற்றுக் கொள்ளும்.

தொடர்ந்த வளர்ச்சி என்பது ஒவ்வொரு விஷயத்திலும் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தக்க இடத்தில் அதைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் நிர்வாகத்தில் தங்களுடைய முன்னேற்றத்தை கணக்கிடுகிறார்கள். சிலர் பிஸினஸில் முன்னேற்றம் நாடுகிறார்கள். சிலர் அன்பிலும், உறவு வளர்ச்சியிலும் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தாவுகின்றனர். இன்னும் சிலர் ஆன்மீகத்தில் வளர்ந்து கடவுளை நெருங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

எது எப்படியோ, சீரான வளர்ச்சி என்பது மனிதனுடைய அடிப்படைத் தேவை. அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அந்த வளர்ச்சியை எப்படி அடைகிறோம், என்னென்ன முயற்சிகள் எடுக்கிறோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவோம் !

இரண்டும் இரண்டும் நான்கு என்பதை ஒரு எல்கேஜி குழந்தை சொல்லும்போது ரசிப்போம். பாராட்டுவோம். அதையே ஒரு பத்து வயதுப் பையன் மழலை மாறாமல் “ரெண்டும் ரெண்டும் நாலு” என்று சொன்னால் ரசிப்போமா ? அடடா வளர்ச்சி இல்லையே என்ன பரிதாபப்படத் தானே செய்வோம்.

முன்னேற்றம் என்பது சீரானதாக இருக்க வேண்டும். அலுவலகங்களில், குடும்ப உறவுகளில் இவை நிச்சயம் படிப்படியாய் முன்னோக்கிச் செல்ல வேண்டும். வெறுமனே இயக்கம் மட்டும் இருப்பது வெற்றிக்கான அறிகுறி அல்ல. பின்னோக்கிச் செல்லும் வாகனம் கூட “இயக்கத்தில்” தான் இருக்கும். ஆனால் முன்னேற்றத்தில் அல்ல.

முன்னேற வேண்டுமெனில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் ஆர்வம். “முன்னேற வேண்டும்” எனும் ஆர்வம். முக்கியமாக, நியாயமான வழியில் முன்னேற வேண்டும் எனும் ஆர்வமே முக்கியம். நேர்மையற்ற வழியில் வருவதாகத் தோன்றும் முன்னேற்றங்கள் உண்மையில் முன்னேற்றங்கள் அல்ல.

கூர் தீட்டப்பட்டுக் கொண்டே இருந்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்ன ? அடுத்த நிலைக்குச் செல்ல என்னென்ன திறமைகள் தேவை என்பதை உணர்ந்து அதைக் கூர்தீட்டும் முயற்சியில் படிப்படியாய் இறங்க வேண்டும்.

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள். ஒரு நாள் காலை முதல் மாலை வரை  மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப் படுவார்கள்.

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதட்டமடையவில்லை. மரங்களை வெட்டினார். ஓய்வெடுத்தார். மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் இவரே வெற்றியும் பெற்றார்.

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். “நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தான். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத் தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய் ?” வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார். “நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால் தான் வென்றேன்”

கூர் தீட்டப்படும் புத்தி மாற்றத்துக்கான முக்கியமான தேவை. அதுவே அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நம்மை நடத்தும்.

உறவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக முன்னேறுவதே ஆனந்தமான வாழ்க்கையின் அடிப்படை. நாம் தவறுகின்ற முக்கியமான இடமும் அது தான். திருமண காலத்தில் தம்பதியர் செம்புலப் பெயல் நீராய் இருப்பார்கள். தேனிலாக் காலங்கள் முடிந்து வாழ்வின் யதார்த்தங்களுக்குள் வரும்போது அவர்களுக்கு இடையே அன்பானது வறண்டு போன வைகையைப் போல துயரமாய் வடியும். தினம் தோறும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் இங்கே குறைகிறது.

சில குடும்பங்கள் அப்படியல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அன்பில் வளர்ச்சியடைகிறார்கள். புரிதலில் முதிர்ச்சியடைகிறார்கள். ஈகோ இறக்கும் இடத்தில் குடும்ப வாழ்க்கையின் ஆனந்த முளை நிச்சயம் முளைக்கும் ! தைரியம் என்பது வீரம் அல்ல ! மன உறுதி ! அதை உண்மை சொல்வதன் மூலமாகவும் வெளிப்படுத்தி விட முடியும் ! அத்தகைய தம்பதியர் தான் முதுமையில் கூட ஆதரவுக் கரம் கொடுத்து ஆனந்த நடை பயில்கிறார்கள். இந்த வளர்ச்சி தான் தொடர்ச்சியான வளர்ச்சி. இது தான் ஆனந்தத்தை குடும்பங்களில் இறக்குமதி செய்யும்.

தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு நான்கு படிகளை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முதலாவது, முன்னேற்றத்துக்கான விஷயங்களைக் கண்டுபிடிப்பது.

இரண்டாவது, அதை அடைவதற்காக சின்னச் சின்ன இலக்குகளை நிர்ணயிப்பது.

மூன்றாவது, அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க ஒரு திட்டம் வகுத்துச் செயல்படுவது

நான்காவது, அது சரியான பாதையில் செல்கிறதா என்பதைப் பரிசீலிப்பது !

இந்த நான்கு விஷயங்களையும் மிக கவனமாகக் கைக்கொண்டால் தொடர்ச்சியான வளர்ச்சி என்பது நிச்சயம் சாத்தியமாகும்.

நினைவில் கொள்ளுங்கள். அலுவலில் மட்டும் வளர்வது வளர்ச்சியல்ல, அன்பிலும் சேர்ந்தே வளர்வதே வளர்ச்சி.

தோளில் கை போடலாமா ?

romantic-couple-2

ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஆணாதிக்கத்தின் கூறுகள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். சமூக அந்தஸ்து, கருத்து மரியாதை, பணியிட நிராகரிப்புகள், தலைமை மறுப்புகள், சமநிலையற்ற ஊதியம் என பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் பல இடங்களில் இன்றும் தொடர்கின்றன.

பெண்களுக்கு சமூகத்தில் சமமான அந்தஸ்து வேண்டும் என்று கேட்பது கூட ஒருவகையில் ஆணாதிக்கம் தான். காரணம், பெண்கள் ஆண்களை விட அதிக அந்தஸ்து பெறுவதிலும் எந்தத் தவறும் இல்லையே ? ஏன் சமமான அந்தஸ்துடன் நின்று விட வேண்டும் ? தொடர்ந்து மேலே செல்லலாமே !

அதே நேரத்தில் அன்பின் வெளிப்பாடுகளாய் செய்கின்ற செயல்களைக் கூட ஆணாதிக்கம் எனும் கூட்டில் இட்டு அடைப்பது நேசத்துக்கு எதிராக எறியப்படும் ஆயுதம் என்றே நான் நினைக்கிறேன். பெண்களின் தோளில் கைபோட்டு நடக்கும் தம்பதியரில் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் இப்படி ஒரு கோணத்தின் யோசித்திருக்கவே மாட்டார்கள். இனிமேல் அத்தகைய அன்னியோன்யத் தம்பதியரின் மனதில் இப்படி ஒரு விஷ எண்ணம் முளைக்கும். ஒருவகையில் சமூக அன்னியோன்யத்தின் வேர்களில் ஒரு சந்தேகக் கோடரியை வைத்திருக்கிறார் ஹெலன்.

ஆண்கள் சாதாரணமாகவே சற்று உயரமானவர்கள், பெண்களின் தோளில் கை போடுவது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது. பெண்கள் ஆண்களின் இடையில் கை போட்டு நடப்பதோ, கை கோர்த்து நடப்பதோ இயல்பாக வருகிறது. ‘இடையில் கை போடுவது, இடையிடையே சண்டை போடுவேன் என்பதன் அறிகுறி’ என யாரும் சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது.

கணவன் மனைவி அன்பு, அல்லது ஆண் பெண் அன்பு என்பது சில வரையறைகளுக்குள் அடக்கி விட முடியாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். தனது காதலன் தோளில் கைபோட்டு நடக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் உண்டு. தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என விரும்பும் காதலர்கள் உண்டு. மனம் என்ன விரும்புகிறதோ, அதையே செயல்கள் செயல்படுத்துகின்றன.

ஹெலனுடைய ஆழ் மனதில் ஆணாதிக்கத்தின் ஏதோ ஒரு பாதிப்பு தன்னையறியாமல் உறைந்திருக்கலாம். அத்தகைய எண்ணங்கள் வலுவடைந்து இத்தகைய சிந்தனைகளாய் வெளிவரலாம். உளவியல் இதைத் தான் சொல்கிறது.

திருமண உறவு வலுவடைய தீண்டல் மிகவும் அவசியம். கைகோர்த்து நடப்பதோ, அரவணைத்துக் கொள்வதோ, தோளில் கைபோடுவதோ அத்தகைய அன்னியோன்யத்தை பாச நீர் ஊற்றி வளர்க்கின்றன. உரையாடல்கள் எனும் காற்றில் அவை பச்சையம் தயாரிக்கின்றன. புரிதல் எனும் பின்னணியில் அவை கனிகளை விளைவிக்கின்றன. பேசுதல், செவிமடுத்தல், தொடுதல், பகிர்தல், புரிதல் இவையெல்லாமே திருமண உறவை உறுதிப்படுத்தும் அன்பின் கிளைகளே.

குறிப்பாக தொடுதல் என்பது உறவுகளில் மிக முக்கியமானது. அதனால் தான் எத்தனை தான் நெருக்கமாய் நினைத்துக் கொண்டாலும் டிஜிடல் உறவுகள் நிலைப்பதில்லை. அம்மாவின் வியர்வை விழுந்த இன்லன்ட் லெட்டரைப் போல எந்த மின்னஞ்சலும் நமது உயிரின் கதவைத் திறப்பதில்லை.

குழந்தை வளர்ப்பில் இந்த தொடுதலை மிகவும் முக்கியப்படுத்துகிறார்கள். கமலஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் சொன்ன‌ ‘கட்டிப்புடி வைத்தியம்’ அறிவியல் பூர்வமானது. ஒரு குழந்தையை பெற்றோர் பன்னிரண்டு முறை கட்டியணைப்பது அவர்களுடைய உடல், உளவியல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள்.

கணவனின் கைகள் தொடவே இல்லை என்று கவலைப்படும் பெண்கள் இருப்பார்களே தவிர, கணவன் தீண்டுகிறான் என பதறும் பெண்கள் இருக்க மாட்டார்கள். காரணம், தொடுதல் என்பது காதல் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சம். தொடுதல் என்பது பிரியாத பிரியத்தின் வெளிப்பாடு. முதிர் தம்பதியர் பூங்காக்களில் கைகளைக் கோர்த்தபடி மணிக்கணக்கில் அமைதியாய் அமர்ந்திருப்பார்கள். அது அவர்களுடைய அதிகபட்ச அன்பின் பரிமாற்ற நிமிடங்கள் என்பதில் சந்தேகமில்லை.

அன்பு என்பது இதயத்தில் வேர்விட்டுக் கிளைவிடும் விஷயம். அருகருகே அமைதியாய் இருக்கும் தம்பதியர் இதயத்தால் ஆயிரம் மைல் தொலைவில் இருக்கலாம். அல்லது ஆயிரம் மைல் இடைவெளியில் இருக்கும் தம்பதியர் இதயத்தால் இணைந்தும் இருக்கலாம். இரண்டு இதயங்கள் ஒன்றாய் இருப்பதில் தான் காதல் வாழ்க்கை அர்த்தப்படுகிறது. எனவே இதயத்தால் ஒன்று படுங்கள் என்பதே முதலாவது தேவை.

“இவர் என் கணவன்”, “இவர் என் மனைவி” என்று சொல்வது ஒருவரை அடிமைப்படுத்தும் செயலல்ல. இவர் எனது ஆதிக்கத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளமுமல்ல. நாங்கள் இணைந்து பயணிப்பவர்கள். எங்களுக்கு இடையே இடையூறு விளைவிக்க யாரேனும் வந்தால் இணைந்தே சந்திப்போம் என சொல்லும் ஒரு உத்தரவாதம்.

ஆணும் பெண்ணும் சமமெனச் சொல்லவே ஆண்டவர் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தார் என்கிறது கிறிஸ்தவம். சிவனில் பாதியை சக்திக்குக் கொடுத்து, இருவரும் ஒருவர் என விளக்குகிறது இந்துமதம். அதற்காக இருவரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டுமென்பதில்லை. மிருதங்கமும், புல்லாங்குழலும் ஒரே இசையைத் தருவதில்லை. தாழம்பூவும், தாமரைப் பூவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதைப் புரிவதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் அழகும், அர்த்தமும்.

தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் ஹெலன் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.  ஹெலனின் சிந்தனையுள்ள சகோதரிகளுக்கு எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். கணவனிடம் சற்றே குனிந்து நடக்கச் சொல்லுங்கள். அவர்கள் தோளில் கைபோட்டு நடங்கள். இது பெண்ணாதிக்கம் அல்ல, பாசத்தின் பகிர்ந்தல் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

*

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி

பைபிள் மாந்தர்கள் 4 (தினத்தந்தி) : நோவா !

illustration-of-noahs_ark

சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும் தண்ணீர் வரவே வாய்ப்பு இல்லாத ஒரு கட்டாந்தரையில் படகு உண்டாக்கத் துவங்கினால் ? அப்படித் தான் இருந்திருக்கும் நோவா படகு செய்ய ஆரம்பித்த போது !

அந்த காலகட்டத்தில் தான் அவருக்கு சேம், காம், எபேத்து எனும் மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.  பூமியில் மக்கள் பலுகிப் பெருகத் துவங்கியிருந்தார்கள். பாவமும் மக்களிடையே பெருகத் துவங்கியிருந்தது. கோபமான கடவுள் பூமியை அழிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

நோவா மட்டும் ஒரு நல்ல மனிதராக இருந்தார். கடவுள் அவரிடம் “ நீ ஒரு பேழை செய்ய வேண்டும்” என்றார். பூமியை தண்ணீரால் அழிக்க வேண்டும், நோவாவின் குடும்பத்தினரையும், உயிரின வகைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்.

பேழை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுளே சொல்கிறார். நீளம் 300 முழம், அகலம் 50 முழம், கோபர் மரத்தில் செய்ய வேண்டும், உள்பக்கம் என்ன பூசவேண்டும் என முழு கட்டுமான விவரங்களையும் கொடுக்கிறார்.

நோவா பேழை செய்ய ஆரம்பித்தார்.  சுமார் நூறு ஆண்டுகள் அவர் பேழை செய்தார். குறிப்பிட்ட நாள் வந்தது. நோவாவும் குடும்பமும் கடவுள் சொன்னதும் பேழைக்குள் செல்கின்றனர். விலங்கினங்களை கடவுளே பேழைக்குள் வரவைக்கிறார். பேழையின் கதவையும் கடவுளே மூடிவிடுகிறார். ஏழு நாட்களில், மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு தொடங்கியது. பெருமழை பொழிந்தது.

நாற்பது இரவும், நாற்பது பகலும் அடைமழை. மலைகளுக்கும் மேலே பல முழம் உயரத்தில் தண்ணீர். நூற்றைம்பது நாட்கள் தண்ணீர் பெருக்கு. பூமி ஒட்டு மொத்தமாகக் கழுவப்பட்டது. எல்லா உயிரினங்களும் மாண்டு போயின ! தண்ணீர் வற்றுவதற்கு மீண்டும் ஒரு நூற்றைம்பது நாட்கள். கடவுள் அவர்களை வெளியே வரச் சொன்ன போது அவர்கள் வெளியே வந்தார்கள்.

உலகில் அதுவரை வாழ்ந்த எல்லா உயிரினங்களும், மனிதர்களும் அழிக்கப்பட நோவானின் சந்ததி மட்டுமே மிஞ்சியது ! வெளியே வந்ததும் முதல் வேலையாக, நோவா கடவுளுக்குப் பலி செலுத்தி நன்றியை வெளிப்படுத்தினார்.

கிறிஸ்தவம் நோவாவை மிக முக்கியமான ஆன்மீகத் தலைவராகப் பார்க்கிறது.

“நீ ஒரு பேழையைச் செய்” என கடவுள் சொன்னபோது, எதற்காக பேழை செய்ய வேண்டும் ? ஏன் கோபர் மரம் ? ஏன்  இந்த குறிப்பிட்ட அளவு ? என எந்த  ஒரு கேள்வியையும் நோவா கேட்கவில்லை.

தனது வேலைக்கு என்ன கூலி கிடைக்கும் ? யார் தனக்கு மரங்கள் கொண்டு தருவார்கள் ? யார் கீல் பூசி உதவுவார்கள் என்றெல்லாம் நோவா கணக்குப் போடவில்லை.

பேழை செய்யச் சொன்னதும், கர்வம் கொண்டு தானே ஒரு கட்டுமானப் பணியாளன் ஆகிவிடவில்லை. கடவுள் சொன்ன அளவுகளை அப்படியே பின்பற்றுகிறார். அகலத்தைப் போல ஆறு மடங்கு அளவு நீளம் கொண்டது அந்தப் பேழை. இன்றைய கப்பல் தயாரிப்புகளின் அடிப்படை இந்த அளவு தான் என்கிறது “லைஃப் அப்ளிகேஷன் பைபிள் ஸ்டடி” நூல்.

‘லாஜிக்’ பார்த்தோ, சுய அறிவை வைத்தோ நோவா எதையும் செய்யவில்லை. கடவுளையே சார்ந்திருந்தார். மழை தொடங்குவதற்கும் 7 நாட்களுக்கு முன்னே பேழையில் சென்றவர், மழை நின்றபின்பும் கடவுள் சொல்லும் வரை பேழையை விட்டு வெளியே வரவில்லை !

நிகழாத ஒரு செயல் நிகழலாம் என்பதை நோவா நம்பினார்.. உலகில் அன்று வரை மழை பெய்ததில்லை. பூமியின் பனி மட்டுமே பூமியைச் செழிப்பாக்கிக் கொண்டிருந்தது.

வரலாற்று அறிஞர்கள் நோவா 480வது வயதில் பேழை செய்ய ஆரம்பித்ததாய் சொல்கிறார்கள். அப்படியெனில் 120 ஆண்டுகளின் உழைப்பு அதில் உண்டு. முதல் இருபது வருடங்கள் வேலை செய்கையில் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

வேலை சட்டென முடியவில்லையே எனும் எரிச்சலும், கோபமும் அவரிடம் இல்லை. கடவுள் பேழை செய்யச் சொன்னார். ஆனால் அதன் பின் சுமார் நூறு ஆண்டுகள் கடவுள் பேசியதாய் வரலாறு இல்லை. இருந்தாலும் நோவா தனது பணியிலிருந்து பின் வாங்கவில்லை.

நோவா பேழை செய்தபோது உயிரினங்கள் எப்படி உள்ளே வரப் போகின்றன என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதை கடவுளிடமே விட்டு விட்டார். எல்லாம் கடவுளின் திட்டப்படி நடந்தன.

பேழையிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக கடவுளுக்குப் பலி செலுத்துகிறார் நோவா.. கடவுளே எல்லாவற்றிலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பதிலிருந்து அவர் பின் வாங்கவில்லை.

நோவாவின் வாழ்விலிருந்து இந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம் !

செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

தலைமைப் பணி ! ( A Christian Article )

Old

‍‍‍‍

‘எல‌க்ஷ‌ன்ல‌ ந‌ம்ம‌ ஆளு ஜெயிச்சுட‌ணும்’ எனும் பேச்சு இப்போது சகஜமாகி விட்டது. த‌ன் சாதியைச் சேர்ந்த, தன் இனத்தைச் சேர்ந்த, த‌ன் இட‌த்தைச் சேர்ந்த‌, த‌ன் விருப்ப‌த்தையொத்த‌ ஒருவ‌ரைத் த‌லைவ‌ராக்கிப் பார்க்க‌ வேண்டும் என மக்கள் துடிக்கின்றனர்.

என்சினீய‌ரிங் போறியா, எம்.பி.பி.எஸ் போறியா என்ப‌தைப் போன்ற‌ ஒரு தொனியிலேயே ‘பாஸ்டர் ஆகப் போறியா ?’ என்று கேட்கும் கால‌ம் உருவாகிவிட்ட‌து. உண்மையில் த‌லைமைப்ப‌ணி என்ப‌து வேலையா ? நாம் செய்யும் அர்ப்பணமா ? நாம் உருவாக்கிக் கொள்ளும் அதிகார வளையமா ?

எதுவுமே இல்லை. உண்மையில் த‌லைமைப் ப‌ண்பு என்ப‌து க‌ட‌வுளின் அழைத்த‌லுக்குச் செவிம‌டுப்ப‌து ம‌ட்டுமே. ஒருவேளை அந்த‌ அழைத்த‌ல் இல்லையென்றால் நாமாக‌ அந்த‌ ப‌ணிக்குள் நுழையாம‌ல் இருப்ப‌தே ந‌ல‌ம். தலைமைப்பணி குறித்த சகோதரர் சகரியா பூனனின் “ஒரு ஆன்மீக தலைமை” நூல் சிறப்பானது. தலைமைப் பண்பைப் பற்றிய ஆன்மீக விளக்கத்துக்கு ஒரு நூலைப் பரிந்துரை செய்யச் சொன்னால் அதையே நான் பரிந்துரை செய்வேன்.

“உங்களில் தலைவராய் இருக்க விரும்புபவர் எல்லோருக்கும் பணியாளனாய் இருக்கட்டும்” என்பதே தலைவருடைய முதல் இலக்கணமாய் இயேசு சொல்லும் செய்தி. இயேசு தலைசிறந்த தலைவர், அவர் தான் சீடர்களின் பாதங்களை ஆர்வமாய்க் கழுவினார். அவர் தான் தன்னை இகழ்ந்து பேசி, அடித்து, ஆணியில் தொங்க விட்டவர்களுக்காய் தந்தையிடம் மன்னிப்பை யாசித்தார்.

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” எனும் பேதுருவின் வார்த்தை தலைவர் ஏன் தாழ்மையுள்ளவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.

வேலைக்கும், அழைப்புக்கும் வேறுபாடு உண்டு. ஒரு ஆயா குழ‌ந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும், தாய் குழ‌ந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சம்பளம் குறைந்தாலே ஆயா வேறு வீடு போய்விடுவார். அன்னை அப்படியல்ல, அனாதை இல்லத்தில் போனால் கூட தனது பிள்ளையை நேசிப்பாள். அழைத்த‌ல் என்ப‌து முத‌ல் தேவை.  “தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை” என்கிற‌து எபிரேய‌ர் 5:4

த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் க‌ட‌வுளை நேர‌டியாக‌ அனுப‌வித்த‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். இறைவ‌னோடான‌ த‌னிப்ப‌ட்ட‌ உற‌வே ஒரு ம‌னிதரை ஆன்மீக‌த் த‌லைவ‌ர் ஆக்க‌ முடியும். நெருப்பில் க‌ட‌வுளின் குர‌ல் ஒலித்த‌ பிற‌கே மோசே ப‌ணிவாழ்வில் நுழைகிறார். க‌ட‌வுள் எதையெல்லாம் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யும் துணிச்ச‌ல் ஒரு த‌லைவ‌ருக்கு மிக‌ முக்கிய‌ம். இறைவாக்கின‌ர்க‌ள், மோசே, ஆபிர‌காம், தானியேல் போன்ற‌ ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் நாம் அதைத்தானே பார்க்கிறோம்.

வார்த்தையை வாசிக்க‌ அறிவு போதும், வார்த்தையான‌வ‌ரோடு வ‌சிக்க‌ ந‌ம‌க்கு தூய்மையான‌ வாழ்க்கை வேண்டும். தூய்மையான‌ வாழ்க்கை ம‌ட்டுமே இறைவ‌னின் குர‌லை ந‌ம‌க்குள் ஒலிக்க‌ச் செய்யும். பைபிளைப் ப‌டித்து அல்ல‌து இணைய‌ த‌ள‌ங்க‌ளில் துழாவி ஒரு அட்ட‌காச‌மான‌ செய்தியைக் கொடுத்து விட‌ முடியும். ஆனால் எவ்வ‌ள‌வு தூர‌ம் க‌ட‌வுள் ந‌ம்மோடு பேசியிருக்கிறார் என்ப‌தை வைத்தே ஒரு செய்தி உயிர் பெற‌ முடியும். ம‌ண்ணால் ம‌னித‌னைச் செய்வ‌து எளிது, உயிர் மூச்சை ஊத‌ இறைவ‌னால் ம‌ட்டுமே முடியும்.

பைபிள் அறிவு ஒருவ‌னைத் த‌லைவ‌னாக்க‌ முடியுமெனில் சாத்தான் தான் இன்றைய‌ மிக‌ப்பெரிய‌ த‌லைவ‌னாய் இருக்க‌ முடியும். அவ‌ன் தானே  இயேசுவுக்கே பைபிள் வார்த்தைக‌ளைச் சொல்லிக் காட்டி ஆசையைத் தூண்டிய‌வ‌ன் !

கடவுள் பைபிள் வார்த்தைகள் மூலமாக மட்டும் பேசுவதில்லை. நமது இதயத்தின் ஆழத்தில் அவருடைய குரல் மெல்லியதாய் ஒலிக்கும். அதைக் கேட்கும் காதுகள் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டியது அவசியம். “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என்பது கடவுளுக்காய் சாப்பாடு தயாரிப்பதை விட முக்கியம் கடவுள் போடும் சாப்பாடைச் சாப்பிடுவது என்பதைக் கற்றுத் தருகிறது.

கடவுளுடைய குரலைக் கேட்காதபோது மனிதருடைய தேவைக்காகப் பேசும் மனிதர்களாக நாம் மாறிப் போகும் ஆபத்து உண்டு. “இஸ்ரயேலர்களை சபிக்கவேண்டும்” எனும் அரச கட்டளையை மீறி அவர்களை வாழ்த்திய பிலயாம் இறைவனுடைய குரலுக்குச் செவிமடுத்தவர். அவருக்கு அரசனைப் பற்றிய பயமோ, உயிர்ப் பயமோ, செல்வ ஆசையோ இருக்கவில்லை.

கடவுளுடைய குரலைக் கேட்கவேண்டுமெனில் முதலில் ஒரு குழந்தையின் மனநிலை தேவை. ஏனென்றால் “மறை உண்மைகளை ஞானிகளுக்கு மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதே” இறைவனின் நோக்கம். ஞானிகள் தாங்கள் கற்றுக் கொண்ட அறிவோடு கடவுளை அணுகுகின்றனர், குழந்தைகள் கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு கடவுளை அணுகுகின்றனர்.

ஒரு ஆன்மீக‌த் த‌லைவ‌ர் க‌ட‌வுள் மீதான‌ ப‌ய‌ம் கொண்ட‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். கார‌ண‌ம் க‌ட‌வுள் க‌ண‌க்கு கேட்கும் போது த‌லைவ‌ர்க‌ளிட‌ம் மிக‌வும் க‌டுமையாய் ந‌ட‌ந்து கொள்வார் என்ப‌தையே பைபிள் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

க‌ட‌வுளிட‌ம் கொள்ளும் ப‌ய‌மே ஞான‌த்தின் ஆர‌ம்ப‌ம். ஞான‌ம் ஒரு த‌லைவ‌ரை ந‌ல்ல‌ வ‌ழிகாட்டியாய் மாற்றுகிற‌து. மோசே ஒரு சிற‌ந்த‌ வ‌ழிகாட்டியாய் இருந்தார். ஆனால் க‌ட‌வுளின் ஒரே ஒரு க‌ட்ட‌ளையை மீறினார். கடவுள் பாறையிடம் பேசச் சொன்னார், மோசே அதை அடித்தார். ‘முன்ன‌மே அடிக்க‌த் தானே செய்தேன்’ என்ப‌தே அவ‌ருடைய‌ சிந்த‌னை. அந்த‌ சின்ன‌ மீறுத‌ல் அவ‌ருக்கு மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையைக் கொண்டு வ‌ந்த‌து. வாக்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்டில் அவ‌ரால் நுழைய‌ முடிய‌வில்லை.

கடவுளிடம் பயம் கொண்டால் வேறு எதற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறது ஏசாயா. அனைத்து அதிகாரங்களையும் கையில் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிக் கொண்டால், பிற பயங்கள் வருவதில்லை. எந்த பயம் வந்தாலும் இந்த சூழலை இறைவன் சரிசெய்வார், சாத்தானை அவர் சிலுவையில் வென்று விட்டார், உலகத்தில் இருப்பவரை விட உங்களுள் இருப்பவர் பெரியவர் எனும் சிந்தனைகள் இருந்தால் போதும். தேவையற்ற பயங்கள் விலகிவிடும். கடவுளில் கொள்ளும் பயத்தைத் தவிர, மற்ற பயங்களை விலக்குவது இறை நம்பிக்கையின் அடையாளம், ந‌ல்ல‌ தலைவருக்கு மிக அவசியம்.

கார‌ண‌ம் ஒரு த‌லைவ‌ர் ந‌ல்ல‌வ‌ராய் இருந்தால் ச‌பை ந‌ல்ல‌தாய் இருக்கும். ஒரு த‌லைவ‌ர் கெட்ட‌வ‌ராய் இருந்தால் ச‌பையும் கெட்ட‌தாய் மாறிவிடும். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ர்க‌ள் எப்போதெல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாய் இருந்தார்க‌ளோ அப்போதெல்லாம் நாடு சுபிட்ச‌மாக‌ இருந்த‌து, எப்போதெல்லாம் வ‌ழிவில‌கினார்க‌ளோ அப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்கும், நாட்டு ம‌க்க‌ளுக்கும் அழிவே வ‌ந்த‌து என்கிற‌து பைபிள்.

ந‌ல்ல‌ த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் த‌ன‌து ம‌ந்தையை செழிப்பான‌ ப‌குதியை நோக்கி ந‌ட‌த்திச் செல்வார். அது இடுக்க‌மான‌ பாதையாக‌வே இருக்கும். ஊசியின் காதைப் போல‌ ஒடுக்க‌மாய் இருக்கும். ஒரு த‌லைவ‌ரின் வெற்றி என்ப‌து “எண்ணிக்கை”யில் இல்லை. அப்ப‌டிப் பார்த்தால் இயேசுவே ப‌டுதோல்விய‌டைந்த‌ த‌லைவ‌ராய் இருப்பார். அவ‌ருடைய‌ வாழ்நாளில் அவ‌ரால் 11 அப்போஸ்த‌ல‌ர்க‌ளையே உருவாக்க‌ முடிந்த‌து.

ந‌ல்ல‌ த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் நாடுக‌ளையோ, க‌ண்ட‌ங்க‌ளையோ ச‌க‌ட்டு மேனிக்கு சுற்றி வ‌ருப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் இல்லை. இயேசு த‌ன‌து வாழ்நாளில் இருநூறு கிலோமீட்ட‌ர்க‌ள் சுற்ற‌ள‌வைத் தாண்டிப் ப‌ய‌ணித்திருக்க‌வில்லை என்கிற‌து கிறிஸ்த‌வ‌ வ‌ர‌லாறு. வெற்றி என்ப‌து எவ்வ‌ள‌வு பேரை கூட்டிச் சேர்க்கிறோம், எத்த‌னை தூர‌ம் ப‌யண‌ம் செய்கிறோம் என்ப‌தில் இல்லை. எப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளை உருவாக்குகிறோம் என்ப‌தே முக்கிய‌ம்.

உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கும் ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கும் முக்கியமான‌ ஒரு வேறுபாடு உண்டு. உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ளாக‌ இருந்திருக்கிறார்க‌ள். நெப்போலிய‌ன், அல‌க்சாண்ட‌ர், பார்வோன், ஹிட்ல‌ர் என உலகத் தலைவர்கள் எல்லோருமே உட‌ல் வ‌லிமையிலோ, சுய‌ ந‌ம்பிக்கையிலோ வ‌லுவாக‌ இருந்த‌வ‌ர்க‌ளே.

ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ளின் முக்கிய‌த் தேவையே உடைப‌டுத‌ல் தான். தான் எனும் சுய‌ம், த‌ன்னால் முடியும் எனும் த‌ன்ன‌ம்பிக்கை, தான் ந‌ல்ல‌ த‌லைவ‌ர் எனும் சுய‌ அங்கீகார‌ம் என‌ அத்த‌னையும் உடைப‌டும் இட‌த்தில் தான் ஒரு த‌லைவ‌ர் முளைத்தெழுகிறார். “தான்” முழுமையாக‌ வெளியே ஊற்ற‌ப்ப‌ட்டால் தான் அங்கே ‘இறைவ‌ன்” ஊற்ற‌ப்ப‌ட‌ முடியும். ப‌ல‌வீன‌த்தில் தான் இறைவ‌னின் ப‌ல‌ம் புகுந்து செல்லும், நாம் பூச்சிய‌மாகும் போது தான் இறைவ‌னின் ப‌டையில் இணைய‌ முடியும். எந்த ஒரு மெல்லிய ஆயுதமும் வீழ்த்தி விடக் கூடிய வலிமை தானே அன்னை தெரசாவுக்கு இருந்தது !!!

ச‌பைக்குத் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் இறைவ‌ன் எனும் திராட்சைக் கொடியில் அங்க‌மாய் இருக்க‌ வேண்டியதும், அந்த‌க் கொடியில் த‌ன‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை ம‌ட்டும் செய்ய‌ வேண்டிய‌தும் மிக‌ முக்கிய‌மான‌து.

த‌ன்னுடைய‌ அழைப்பு ‘கை’ எனில், கைக்குரிய‌ வேலைக‌ளை முழுமையாய்ச் செய்வ‌தும், பிற‌ உறுப்புக‌ளின் ப‌ணிக‌ளை விம‌ர்சிக்காம‌ல் இருப்ப‌தும் அவ‌சிய‌ம். உறுப்புக‌ள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட‌ ப‌ணியை க‌ட‌வுள் கொடுக்கிறார். அந்த‌ந்த‌ ப‌ணிக‌ளின் அங்கீகார‌மும், நிராக‌ரிப்பும் க‌டவுளிட‌மிருந்தே வ‌ரும். த‌ன‌க்குரிய‌ ப‌ணியில் நிலைத்திருப்ப‌தே அவசியம்.

த‌ன‌து ச‌பை ம‌க்களின் முழுமையான பொறுப்பும் தலைவரிடம் உண்டு. ஒரு ஆடு காணாமல் போனால் கூட தேடிப்போகும் தவிப்பு மேய்ப்பனுக்கு இருக்க வேண்டும். வ‌ழிவில‌கிப் போனால் அவ‌ர்க‌ளுக்காய் செபிப்ப‌தும், அவ‌ர்களுக்கு வ‌ழிகாட்டுவ‌தும் த‌லைவ‌ர்க‌ளின் இய‌ல்பாய் இருக்க‌ வேண்டும்.

த‌லைவ‌ர்க‌ள் ஆன்மீக‌த் த‌ந்தை போன்ற‌வ‌ர்க‌ள். குழ‌ந்தைக‌ள் த‌ந்தையின் வார்த்தைக‌ளைக் கேட்டு வாழ்வ‌தை விட‌, அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கையைப் பார்த்தே வாழும். ஆன்மீக‌த் த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ வாழ்க்கையை முழுமையான‌ தூய்மைக்குள் ந‌ட‌த்த‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இத‌னால் எழுகிற‌து.

“நான் சொல்வ‌தைக் கேளுங்க‌ள்” என்ப‌து ப‌ழைய‌ ஏற்பாட்டு பாணி, “என்னைப் பின்செல்” என்ப‌தே புதிய‌ ஏற்பாட்டு அழைப்பு. ந‌ம‌து வாழ்க்கை “என்னைப் பின்செல்” என‌ நாம் ந‌ம‌து ம‌ந்தையை அழைக்கும்ப‌டி இருக்க‌ வேண்டும்.

த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையின் ஒவ்வொரு செய‌லையும், இயேசுவின் வாழ்க்கையோடும் அவ‌ர‌து செய‌லோடும் ஒப்பிட்டுச் செய்தால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும். இல்லையேல் நாம் வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்ல‌றைக‌ளைப் போல‌ வெளியே ம‌ட்டுமே அழ‌காய் இருப்போம். பாத்திர‌த்தை வெளிப்ப‌க்க‌மாய்க் க‌ழுவுவ‌தில் எந்த‌ ப‌ய‌னும் இல்லை என்ப‌து தானே இயேசுவின் போத‌னை.

த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ வ‌ள‌ர்ச்சி, ச‌பையின் வ‌ள‌ர்ச்சி அனைத்தின் ம‌கிமையையும் ஆண்ட‌வ‌ருக்கே வ‌ழ‌ங்கும் ப‌ணிவுடைய‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும். “க‌ட‌வுள் கொடுத்தார், க‌ட‌வுள் எடுத்துக் கொண்டார், அவ‌ருக்கே ம‌கிமை” எனும் ம‌ன‌நிலை இருந்தால் ச‌பையை க‌ட‌வுள் க‌ட்டியெழுப்புவார் என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை.

கடைசியாக‌ ஒரு த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் த‌ன‌து ச‌பையின் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ள், அடையாள‌ங்க‌ள், வ‌ழ‌க்க‌ங்க‌ள், ப‌ழ‌க்க‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை க‌ண்மூடித் த‌ன‌மாக‌ ந‌ம்பாம‌ல் அவ‌ற்றை இறைவார்த்தையின் வெளிச்ச‌த்தில் விள‌ங்கிக் கொண்டு ச‌பையை ந‌ட‌த்துப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும்.

“என் தாத்தா ப‌னையேறினார், நானும் ப‌னையேறித் தான் தீருவேன்” என‌ யாரும் சொல்வ‌தில்லை. ஆனால் “என் தாத்தா கால‌த்துல‌ இருந்தே இந்த‌ கோயில்ல‌ இது தான் வ‌ழ‌க்க‌ம்.. மாத்த‌ முடியாது” என‌ கொடிபிடிப்ப‌வ‌ர்க‌ள் ஏராள‌ம் உண்டு. “போ அப்பாலே சாத்தானே” என‌ த‌வ‌றான‌வைக‌ளுக்கு எதிர்த்து நிற்கும் குண‌மும், தெளிவும் த‌லைவ‌ருக்கு இருக்க‌ வேண்டும். த‌ந்தையின் பெய‌ருக்குக் க‌ள‌ங்க‌ம் ஏற்ப‌ட்டால் சாட்டை சுழ‌ற்றும் திட‌மும் த‌லைவ‌ருக்கு இருக்க‌ வேண்டும். “கொஞ்ச‌ம் அட்ஜ‌ஸ்ட்” ப‌ண்ணினால் பெய‌ரும், ப‌ண‌மும், புக‌ழும் கிடைக்க‌லாம். ஆனால் மீட்பை இழ‌க்க‌ வேண்டிய‌ நிலை வ‌ரும்.

த‌லைமைப் ப‌ணி என்ப‌து எளிதான‌த‌ல்ல‌
இறைவ‌னில் ச‌ர‌ண‌டைந்தால் எதுவும் க‌டின‌மான‌த‌ல்ல‌.

சேவிய‌ர்