கண்ணோடு காண்பதெல்லாம்…

 

Google Glass

 

சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது.

ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் பார்த்து, “ஹே.. இதென்ன கட்டிடம்” என கேட்டால் கூகுள் கண்டுபிடித்துச் சொல்லும். ஒரு அட்டகாசமான அபூர்வக் காட்சியைப் பார்த்தால் வினாடியில் கிளிக்கிக் கொள்ளலாம். கேமரா எடுத்து, லென்ஸ் மாட்டி, மெமரி கார்ட் தேடி எனும் கஷ்டம் தாமதம் ஏதும் இல்லை ! தெரியாத மொழியை ஒருவர் பேசினால் அதையும் மொழிபெயர்த்துத் தெரிந்து கொள்ளலாம் ! வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, “பாத்து போப்பா, இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போன செம டிராபிக்” என அது எச்சரிக்கும் ! என சகட்டு மேனிக்கு “அட” போடவைக்கும் சமாச்சாரங்கள் நிரம்பியிருக்கின்றன.

தொழில் நுட்ப பைத்தியங்கள் என செல்லமாய் அழைக்கப்படுபவர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள் ! விலை வெறும் $1500 தான். முறைக்காதீங்க ! கண்ணில் கண்ணாடியைப் போல மாட்டிக் கொண்டு காண்பவற்றையெல்லாம் படமெடுத்து, அப்படியே ஃபேஸ்புக், டுவிட்டர் என ஷேர் பண்ணி மக்கள் சிலிர்த்தார்கள். அப்படியே “என் வீட்டுக்கு வழி சொல்லு” என சொன்னவர்களிடம் அது அவர்களை அலேக்காகக் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டதாம். கண்ணுக்கு முன்னாடியே படம் பார்த்து தனியே சிரித்தவர்கள் வித்யாசமாகப் பார்க்கப் பட்டார்கள் !

ஆங்காங்கே பலர் தாக்கப்பட்டார்கள். தங்கள் சுதந்திரம் களவாடப்படுவதாக உருவான பயமா ? அல்லது நம்மகிட்டே இல்லையே எனும் எரிச்சலா தெரியவில்லை. கண்ணாடி உடைந்தவர்கள் $1500 போச்சே என அழுது புலம்பியிருப்பார்கள். இது இன்னும் முழுமையடையவில்லை, இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

அடுத்த கட்டமாக மூக்குக்கு மேலே போடும் கண்ணாடியை விட்டு விட்டு, கண்ணுக்குள் பொருத்தும் கான்டாக்ட் லென்ஸ் பக்கம் தனது தொழில் நுட்பத்தை இறக்கி வைத்திருக்கிறது கூகுள். கண்ணுக்குள் இதைப் பொருத்திக் கொண்டால் இமைத்தாலே எதிரே இருப்பதைப் படமெடுக்கலாமாம். “செல்லமே உன்னை என் கண்ணுக்குள்ளே படமெடுத்தேன்” என நிஜமாவே காதலர்கள் கொஞ்சிக் கொள்ளலாம். “கண்ணுக்குள்ளே உன்னை வெச்சேன் கண்ணம்மா” என சோகத்தில் பாடியும் திரியலாம். அது அவரவர் விருப்பம். சுடச்சுட இதற்கான காப்புரிமையை வாங்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

ஆனால் இந்த கான்டாக்ட் லென்ஸ் பற்றி கூகுள் நிறுவனம் சொல்லும் விஷயங்கள் கூகுள் கண்ணாடியை விட அதிக சிலிர்ப்பூட்டுகின்றன. இதைப் போட்டுக் கொண்டு நடந்தால் காண்பவற்றைப் படமெடுக்கலாம் என்பது அடிப்படை விஷயம். அதை அப்படியே உங்கள் கணினிக்கோ, மொபைலுக்கோ வயர்லெஸ் மூலம் இணைத்து வீடியோவை சேமித்து வைக்கலாம் என்பது இன்னொரு விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழலில், வழியில் நீங்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறீர்களெனில் அதை அப்படியே உங்கள் கண் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து வைக்குமாம், ஒரு இமைத்தல் போதும்.

பார்வையில்லாதவர்களுக்கு இந்த கான்டாக்ட் ரொம்பவே உதவி செய்யுமாம். அதிலுள்ள சென்சார்கள் பார்வையற்றவர்களுக்கு ஒரு வகையில் செயற்கைக்கண் போல உதவும். எப்போ ரோட்டைக் கடக்கலாம், வழியில பள்ளம் இருக்கா, மேடு இருக்கா, கதவு இருக்கா என எல்லா விஷயங்களையும் இது சொல்லுமாம்.

தெரிந்த நபர்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு அந்த நபர்கள் அடுத்த முறை பக்கத்தில் வரும்போது, ‘ராமசாமி வரான்’ என உங்கள் காதில் கிசுகிசுக்குமாம். அதனால் யாராச்சும் ராமசாமி மாதிரி குரல் மாற்றிப் பேசி உங்களை ஏமாற்றவும் முடியாது ! ராமசாமி உங்களைக் கண்டும் காணாதது போல் போய்விடவும் முடியாது ! கூடவே மருத்துவ விஷயங்களையும் அதில் புகுத்தி உடம்பிலிருக்கும் குளுகோஸ் அளவு போன்ற விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்குமாம். !

விரல் நுனியில் உலகம் எனும் நிலை மாறி, விழி நுனியில் உலகம் எனும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது இல்லையா ?!


சேவியர்
நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி