உயிர் காக்க கை கழுவுங்கள்

wash.jpg

உலகம் முழுவதும் டயேரியா நோய்க்கு ஆண்டு தோறும் சுமார் இருபத்து ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரம் ஒன்று.

பெரும்பாலும் வளரும் நாடுகளிலும், பிந்தங்கிய நாடுகளிலும் உள்ள மக்களே இந்த நோய்க்கு இலக்காகின்றனர்.

இந்த டயேரியா நோயின் தாக்கத்தை முப்பது விழுக்காடு வரை குறைப்பதற்குரிய வழி “கையை சுத்தமாகக் கழுவுவது” தான் என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி முடிவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பதினான்கு விதமான விரிவான ஆராய்ச்சியின் முடிவாக இந்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்திருக்கின்றனர். குறிப்பாக மருத்துவமனை, கழிவறை, பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் சென்று வரும்போதெல்லாம் சுத்தமாகக் கைகளைக் கழுவினாலே இந்த நோயை பெருமளவுக்கு தடுத்து விட முடியும் என்கின்றனர் அவர்கள்.

நகைப்புக்குரிய அல்லது தேவையற்ற ஆராய்ச்சி போல இது தோற்றமளித்தாலும் இது தரும் பயன் பெரும் வியப்பை அளிக்கிறது. சுமார் எட்டு இலட்சம் பேரை சாவிலிருந்து தடுக்க இந்த சிறு செயல் உதவுகிறது என்பது வியப்பை தருவதில் வியப்பில்லை தான்.

பல வேளைகளில் நாம் அலட்சியமாக இருந்து விடுகின்ற சிறு நிகழ்வினால் பெரிய நோய்க்கு இலக்காக நேரிடுகிறது என்பதை இந்த ஆராய்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

சுகாதாரமாக இருக்க வேண்டியதன் தேவையையும், குறிப்பாக கை கழுவ வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆராய்ச்சி நமக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றது.

அடிக்கடி கை கழுவ வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கிறது, அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் அந்த ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.