கொல்லுங்க பிளீஸ்….

 

1966ம் ஆண்டு ! மும்பையின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்து வந்தாள் அருணா ஷான்பாக் எனும் இளம் பெண். வசீகரிக்கும் அழகிலும், நேர்மையான பணியிலும் வலம் வந்த அவளுக்கு மருத்துவமனையில் மிக நல்ல பெயர். 1973ம் ஆண்டு நவம்பர் 11ம் தியதி. நாளை முதல் திருமண விடுப்பில் செல்ல இருக்கும் உற்சாகத்தில் இருந்தாள் அவள். அன்று வேலை முடிந்து மருத்துவமனையின் ஒரு அறையில் ஆடைமாற்றிக் கொண்டிருந்த போது விதி விளையாடியது. அந்த மருத்துவமனையில் வார்ட் பாய் ஆக இருந்த சோகன்லால் வால்மீகியின் காமக் கண்களில் விழுந்தாள் அவள். 

ஆடைமாற்றிக் கொண்டிருந்தவளின் அறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அடக்கி அவளைப் பாலியல் வன்முறை செய்ய எத்தனித்தான். அவளுக்கோ அது மாதவிடாய் காலம். அப்போதாவது விட்டதா அந்த மிருகம் ? அவளை குப்புறக் கவிழ்த்து கழுத்தில் நாய்ச் சங்கிலியால் நெரித்து பின்புறம் வழியாக புணர்ந்து தன் வெறியை முடித்துக் கொண்டது. கழுத்தில் சுற்றிய சங்கிலி அழுத்தியதில் அருணாவின்  கழுத்து நெரிபட்டு சுவாசக் குழாய் உடைபட்டு மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லும் பாதை நாசமாகி அவளுடைய மூளை இறந்தே போய் விட்டது.

அந்த வெறி பிடித்த விலங்கின் சில நிமிட வெறி அவளைக் கோரமான கோமோ நிலைக்குத் தள்ளியது. அன்றிலிருந்து இன்று வரை நீண்ட நெடிய 36 வருடங்களாக அதே மருத்துவமனையில் கோமோ நிலையில் கிடக்கிறார் அவர் எனும் செய்தி அதிர வைக்கிறது. தினமும் ஐந்து தடவை அவளுடைய அறைக் கதவு திறக்கப்படும். விழுங்க முடியாத அவளுடைய தொண்டையில் நீர் ஆகாரம் செலுத்தப்படும். அவ்வளவு தான். 

அவளைப் பலாத்காரம் செய்து இந்த நிலைக்கு ஆளாக்கியவன் ஏழு வருட காலம் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தும் முப்பது வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் அவனால் பாதிக்கப்பட்ட அவள் முப்பத்து ஆறு ஆண்டு காலமாக வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இருட்டு அறைகளுக்குள் கிடக்கிறாள்.

இனிமேல் பிழைக்கவே முடியாது எனும் நிலையில் உள்ளவர்களை நிம்மதியாய் சாக அனுமதிப்பதைக் கருணைக் கொலை என்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கருணைக் கொலை செய்வதை எந்த நாடும் சட்டமாக்கவில்லை. நெதர்லாந்து மட்டும் மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பரிந்துரை இருந்தால், கருணைக் கொலையை அனுமதிக்கிறது. கருணைக் கொலை எனும் பெயரில் தப்பு ஏதும் நடந்து விடக் கூடாதே எனும் அதீத எச்சரிக்க உணர்வு உலகெங்கும் இருப்பதையே இது தெரிவிக்கிறது.  

அருணா ஷான்பாக் நிலமையும் அது தான். அவரைக் கருணைக் கொலை செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை. பல முறை விண்ணப்பித்தும் நீதிமன்றம் அவற்றை வாசலிலேயே நிராகரித்து அனுப்பி விட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவளுடைய பாதுகாவலரும் எழுத்தாளருமான பிங்கி விரானி அளித்துள்ள புதிய மனு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றம் விண்ணப்பத்தை முதன் முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிமன்றம் இயற்கை மரணத்தையே ஆதரிக்கிறது. அருணாவைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு வழங்காமல் இருந்தால் இயற்கை மரணம் நிகழ்ந்து விடும் என்பது தான் உண்மை. 

அருணாவுக்காக வாதாடிய சேகர் நாபேட் அருணாவின் மரணத்தை அனுமதிக்க வேண்டுமென்று உருக்கமாகவும், ஆழமாகவும் வாதாடினார்.

“வாழ்வது மனித உரிமை என்று சொல்லி தயவு செய்து இதை நிராகரிக்காதீர்கள். அருணாவைப் பாருங்கள். ஒரு மிருகம் கூட இந்த நிலையில் இருக்க முடியாது. இது மனித உரிமை மீறல் என்று சொல்லவே முடியாது. அவர் இயல்பு நிலைக்கு வர வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தால் கூட அவரால் வாழ்க்கை நடத்தவே முடியாது. முப்பத்து ஆறு ஆண்டு கால நீண்ட நெடிய மௌனத்தை நீதிமன்றம் கலைக்க வேண்டும். அவருடைய நிலமையை ஆராய்ந்து மரணத்தை அனுமதிக்க வேண்டும்”  என அவர் உருக்கமாய் வாதாடியதைக் கேட்டு உச்ச நீதிமன்றமே கதிகலங்கிப் போய்விட்டது.

நிலமையை ஆராய்ந்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனைக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முடிவுக்கான துவக்கம் அளிப்பது இதுவே முதல் முறை. 

“அருணாவின் கருணைக் கொலை பற்றி நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்”  என்கிறார் கிங் எட்வர்ட் மருத்துவமனையின் டீன் டாக்டர் சஞ்சய் ஓக். “மருத்துவமனையிலுள்ள நர்ஸ்கள் அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் அவரைப் பராமரித்தோம். இன்னும் பராமரிப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை நீதிமன்றம் எடுக்கட்டும்”  என்கிறார் அவர். அவர் அப்படிச் சொன்னாலும் மருத்துவமனை அருணாவுக்கு நல்ல சிகிச்சையையும், மருத்துவ உதவிகளையும் செய்யவில்லை எனும் குற்றச்சாட்டும் பலமாகவே உலவுகிறது.

கருணைக் கொலையை சட்டம் அனுமதிக்காது தான். ஆனாலும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனதன் தன்மையில் ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பதே சரியான வழிமுறையாய் இருக்க முடியும். சட்டம் இருக்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாய் கதவடைப்பதும், குருட்டுத் தனமாய் அனுமதிப்பதும் எல்லா விஷயத்திலும் ஆபத்தானவையே. இப்போது மனித உரிமைகள் கமிஷனும், ஊடகங்களும் அருணாவின் மரண உரிமைக்கு ஆதரவு அலையை எழுப்பி வருகின்றன.

கைகளெல்லாம் வளைந்து, எலும்புகளெல்லாம் வலுவிழந்து, பற்களெல்லாம் அழுகி வீழ்ந்து அகோரமாகக் கிடக்கிறாள் அருணா. அவளுக்கு வலிக்குமா ? முப்பத்து ஆறு ஆண்டுகாலமாக “என்னைக் கொன்று விடுங்கள்” என கதறிக் கொண்டிருக்கிறாளா ? வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கிடக்கும் அவளுடைய மனதில் என்ன நினைவுகள் ஓடுகின்றன ? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மனம் துடிப்பதையே நிறுத்தி விடுகிறது.

அவளுக்கு வாழ்க்கை மறுக்கப்பட்டு விட்டது, மரணமேனும் பரிசளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத்தை நேசிக்கும் அனைவரின் விருப்பமும்.

வாக்களிக்க விரும்பினால்

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்

 lubnaஇப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

journalists_activists_and_politicians_detained_inஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் lubna12லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

neelima-35பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

 ( ஓ..காட்…. இப்டீ எல்லாம் நட்குதா… நான் சூடான் பட்த்துலே நட்க்கவே மாட்டன்)

 

 

 

  

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால்…. வாக்களியுங்கள்…… நன்றி !