வம்பு என்ன விலை பாஸ் ?

ராபர்ட் எங் பெல்டன் (Robert Young Pelton)

“வம்பை விலை கொடுத்து வாங்குவது “ ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. இவர் விஷயத்துல அது நூறு சதவீதம் பொருந்தும். இவர் ஒரு சாகசப் பிரியர். இவரோட விருப்பம் காட்டுக்கு போறதோ, மிருகங்களோடு கபடி ஆடுவதோ அல்ல. இவருடைய பேவரிட் இடங்களைக் கேட்டால் நமக்கு உதறல் எடுக்கும். ஆப்கானிஸ்தான், அல் குவைதா, ஈராக், கொலம்பியா, லிபேரியா, என பட்டியல் நீள்கிறது.

இங்கெல்லாம் போய் தீவிரவாதக் குழுக்கள், கடத்தல் மன்னர்கள், ஒற்றர்கள் இவர்களிடமெல்லாம் நாசூக்காய் பேசி படம் பிடிப்பார். சின்னதா ஒரு இலை அசைந்தாலே தோட்டா வெடிக்கும் இடங்களுக்குக் கூட தில்லாகப் போவார். இவருடைய பயண அனுபவங்கள் தொலைக்காட்சியில் டேஞ்சரஸ் பிளேஸஸ் என ஒளிபரப்பானது. மக்கள் எல்லா வேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு அதைப் பார்க்க ஆரம்பித்தார்கள். நெட்டில் போட்ட போது கிளிக் ஒரு நாள் எட்டு இலட்சம் என எகிறியது.

இவருடைய பேட்டியின் ஹைலைட், இவர் ஆப்கானிஸ்தானில் போய் அல் குவைதா மெம்பர் ஒருவரையே கேமராவில் கிளிக்கி பேட்டியும் வாங்கியது தான். “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என முன்னுரை கொடுக்க எல்லா அருகதையும் இவரோட வீடியோக்களுக்கு உண்டு.

எங்கெங்கே தீவிரவாதம், கடத்தல் மன்னர்கள், வெடிகுண்டு உண்டோ அங்கெல்லாம் உற்சாகமாய் ஓடுவார். எப்போ வேண்டுமானாலும் பின் மண்டையில் ஒரு புல்லட் வெடிக்கலாம் எனும் சூழலில் தான் எப்போதும் இருப்பார். பலமுறை உயிரை மயிரிழையில் காப்பாற்றியும் இருக்கிறார். ஒருமுறை இவரைக் கடத்திக் கொண்டு போய் நொங்கெடுத்தார்களாம். இவருடைய சாகசப் பயணம் உலகெங்கும் மிகப் பிரபலம். கனடாக் காரரான இவரைப் பற்றி வெளியான பயோகிராபியே 13 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதென்ன பெரிய அல்குவைதா ? ராஜபக்சேயைப் பார்க்கச் சொல்லலாமா ?

Thanks : Ananda Vikatan

சறுக்கினால் சமாதி…

கழைக்கூத்தாடி சமாச்சாரம் நமக்குத் தெரியும். ஐயோ பாவம் ன்னு இரக்கப்படுவோம். ஆனா அதையே வாழ்க்கை இலட்சியமா வெச்சிருக்கிற சிலரும் இருக்கிறாங்க. அவர்களோட பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே கயிறு அல்லது கம்பி மேலே நடப்பது தான். அதில் முக்கியமான நபர் பிலிப் பெட்டி. எங்கே உயரமா எதையாவது பார்த்தால் உடனே இடையே கயிறு கட்டி நடக்க ஆரம்பித்துவிடுவார் மனுஷன்.

1949ல் பிரான்சில் பிறந்த இவருக்கு நடக்கப் பழகிய நாட்களிலேயே இந்த ஆர்வம் வந்து விட்டது. கயிறில் நடப்பார், ஓடுவார், குட்டிக் கரணம் அடிப்பார், சைக்கிள் ஓட்டுவார். இளைஞனான போது சாதாரண மனிதர் தரையில் நின்று கொண்டு செய்யும் பல விஷயங்களை அனாயசமாய் கயிற்றில் நின்று செய்வார். 1960களின் இறுதியில் கயிறு மீது நடப்பதில் கைதேர்ந்த வித்தைக்காரராகிவிட்டார்.

9/11 என்றாலே இரட்டைக் கோபுரங்கள் நினைவுக்கு வருகிறதல்லவா ?  அந்த  இரட்டைக் கோபுரங்களுக்கிடையே கம்பி கட்டி நடந்தார் ஒருமுறை. அதுதான் அவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. அது ஒரு படு சுவாரஸ்யமான கதை. 1968ல் பாரிஸில் பல் வலிக்குதே என டாக்டரைப் பார்க்கச் சென்றார். கொஞ்சம் கூட்டம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னார்கள். சும்மா இருந்தபோது அங்கே கிடந்த ஒரு புத்தகத்தைப் புரட்டினார். அதில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைப் பற்றியும், அதன் உயரத்தைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். உடனே ஐயாவின் மூளையில் லைட் எரிந்தது. மூளையில் அந்த மேகசினையும் எடுத்துக் கொண்டு ஓடினார்.

அப்போது ஆரம்பமானது அவருடைய “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கலைக் குற்றம்” ! இந்த கட்டிடங்களின் மேல் கம்பி கட்டி நடக்க வேண்டுமென தீர்மானித்தார். ஆறு வருடங்கள் திட்டம் தீட்டினார். கட்டிடங்களோ 1368 அடி உயரம் 140 அடி இடைவெளி என மிரட்டியது. அதற்கு நூற்றுக் கணக்கான கிலோ எடையில் கம்பி வேண்டும். இரண்டு கட்டிடங்களுக்கிடையே கம்பியைக் கட்ட வேண்டும். நல்ல இறுக்கமாகக் கட்ட வேண்டும். இத்தனை எடையையும் 1368 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் ! அதி முக்கியமான சமாச்சாரம், இதெல்லாம் எல்லார் கண்ணிலும் மண்ணைத் தூவி நடக்க வேண்டும் !!!!

நடக்கவே நடக்காது என நமக்குத் தோன்றும் இந்த விஷயத்தை நடத்திக் காட்டிவிட்டார். பல்வேறு சிரமங்களுக்குப் பின் 1974ல் காலை 7.15 மணிக்கு கம்பியில் கால் வைத்து நடந்தார். கொஞ்ச நேரமல்ல முழுதாய் முக்கால் மணி நேரம் கம்பியில் ஒரு சாகச வித்தையையே நிகழ்த்திக் காட்டிவிட்டார். அதற்குள் சாலையில் கூட்டம் திகிலடித்தது. பதட்டப்பட்ட போலீசார் அவரைக் கைது செய்தார்கள்.

உனக்கென்ன பைத்தியமா. இங்கிருந்து விழுந்தா என்ன ஆவே தெரியாதா ? என பேயறைந்தது போல் படபடத்த போலீஸிடம் பிலிப் சொன்னார், “ இங்கிருந்து விழுந்து மரணமடைந்தால் அது எத்துணை இனிமையான மரணம் தெரியுமா” ?

இவருடைய இந்த திட்டமிடலும், செயல்படுத்தலும் “மேன் ஆன் வயர்” எனும் டாக்குமெண்டரி படமாய் வந்து ஆஸ்கரையும் அள்ளியது.

Click – here to Vote…

Thanks : Anandan Vikatan

திரில் டூர்….

 

அருஷா, தான்சானியா ( Arusha, Tanzania )

ஆப்பிரிக்காவில் சஃபாரி ரொம்ப பேமஸ். காட்டுக்குள் மிருகங்களைப் பார்த்தபடி ஹாயாகப் பயணிப்பது. அசந்தால் யானை வந்து நம்மை பஞ்சுமிட்டாயாய் பறக்க விடும்! இந்த சஃபாரிக்கு மிகவும் பிரபலமானது அருஷா. வடக்கு தான்சானியாவிலுள்ள ரிப்ட் பள்ளத்தாக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இது. மேரு மலையின் கீழே அமைந்துள்ள இந்த சபாரி ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான திகில் அனுபவம். 

வான்கூவர், கனடா ( Vancouver, British Columbia – Canada )

கனடாவின் வான்கூவர் கண்ணைக் கவரும் ஒரு சிறப்பான சுற்றுலாத் தலம். உலகெங்கும் உள்ள சாகச விரும்பிகளும், அமைதி விரும்பிகளும் இங்கே வருவார்கள். இது ஒரு முரண்பட்ட இடம். நதிகள், கடல், காடு , மலை என கலவையாய் இருக்கிறது வான்கூவர். ஸ்கீயிங் போகணுமா, மலையில் பைக் ஓட்டணுமா, சீறிப் பாயும் நதிகளில் படகு ஓட்டணுமா எல்லாம் இங்கே சாத்தியம். அதெல்லாம் வேண்டாம் சைலண்டாக குடும்பத்தோடு அமர்ந்து சீட்டாடணும்ன்னாலும் ஓகே. ஆனாலும் சாகசப் பயணிகள் தான் இந்த இடத்தை பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் திரில்லுடன் கிடைக்கும் இயற்கை அழகு.

குயீன்ஸ்டவுன், நியூசிலாந்து ( Queenstown, New Zealand )

நியூசிலாந்தின் குயீன்ஸ்லேண்ட். பங்கீ ஜம்பிங்கின் பிறப்பிடமே இந்த இடம் தான். அதனால் இங்கே இருக்கின்ற விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே இருக்கின்றன. குறிப்பாக மலையில் பைக் ஓட்டுவது, காட்டுக்குள் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் கால்நடையாய் போவது, என பல சாகச விளையாட்டுகள் இங்கே சாத்தியம். சம்மரில் இப்படி வேர்க்க விறுவிறுக்க காட்டுக்குள் நடப்பார்கள். விண்டர் வந்து விட்டால் காடு இருந்த இடமே தெரியாது. முழுவதும் பனி மூடிவிடும். அப்புறம் ? இருக்கவே இருக்கிறது பரபரக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் !

பெரு நாட்டு டிரெக்கிங் (  Peru )

பெருவில் டிரக்கிங் போறீங்களா ? உலகப் புகழ்பெற்ற மச்சு பிச்சுவின் வரலாற்றுச் சுவடுகளோடு கலப்பது சிலிர்ப்பானது. ஆனால் அதை அடைய செல்ல வேண்டிய 45 கிலோமீட்டர் தூர நடை பயணம் டூ ஆர் டை டைப். மலை, நதி, பள்ளம் என உயிரை சேட்டு கடையில் அடமானம் வைத்துவிட்டுத் தான் போக வேண்டும். திரில் பிரியர்களுக்கு இவை சுர்ரென சுவாரஸ்யத்தைப் பற்ற வைக்கின்றன. சில பாதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. உங்களுக்கு ஆயுள் கெட்டியென்றால் நீங்கள் தாண்டும் வரை தாக்குப் பிடிக்கும்.

காட்மண்ட் , நேபாள் ( Kathmandu, Nepal )

காட்மண்ட்.  உலகின் சாகசப் பிரியர்களின் பட்டியலில் முக்கியமான இடம் இதற்கு உண்டு.  இடங்களில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நேபாளில் துவங்கி, நேபாளில் முடியும் நிறைய டிரக்கிங் வழிகள் இங்கே உண்டு. இமயமலையின் உயர்ந்த 8 சிகரங்கள் தான் ஹைலைட். இந்த சிகரங்களின் உயரம் சுமார் 8000 மீட்டர். மலையேறுபவர்களுக்கு உள்ளுக்குள் குறுகுறுக்கும் அனுபவம். மிரண்டவர்களுக்கு திகில் குருதி நரம்புகளில் நாட்டியமாடும்.  மலையேற்ற அனுபவத்துடன் நேபாளில் கிடைப்பது பரந்து பட்ட கலாச்சார, வரலாற்று அனுபவங்கள். !

Thanks : Ananda Vikatan

இப்படியும் ஒரு சாகசப் பிரியன்

சாகசப் பயணம் என்றால் தவிர்க்க முடியாத சம காலக் கில்லாடி பெனடிக்ட் ஆலன். எங்கே போறோமோ அந்த சூழலுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும் என்பது அவருடைய ஒருவரிக் கொள்கை. எவ்வளவு கஷ்டமான சூழலுக்குள்ளும் தன்னை நுழைத்துச் செல்வதில் அசகாய சூரன். காட்டுவாசிகள் வசிக்கும் இடங்களுக்குப் போவார். அவர்களுடன் தங்குவார். அவர்கள் அடித்தால் வாங்கிக் கொள்வார். அவர்கள் எதைக் கொடுக்கிறார்களோ அதைச் சாப்பிடுவார். ஓடிக் கொண்டிருக்கும் ஓணானைப் பிடித்து அவர்கள் தின்றால் அவரும் தின்பார். அவ்வளவு ஸ்ட்ராங் பார்ட்டி அவர்.

புரூனேயிலுள்ள அடர் காடு, அமேசான், பல நாட்டு மலைப்பகுதிகள் என இவரது பயணம் பரந்துபட்டது. சைபீரியா, மங்கோலியா, கோபி பாலை நிலங்கள் வழியாக 5 ½ மாதங்கள் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார். பயணித்த தூரம் 4600 கிலோமீட்டர்கள்.  பிரிட்டனைச் சேர்ந்த இவர் தன்னுடைய திகில்ப் பயண அனுபவங்களை 9 நூல்களாக எழுதித் தள்ளியிருக்கிறார். 7 தொலைக்காட்சித் தொடர்களும் இவருடைய பயணத்தை அலசியிருக்கின்றன. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் !

காட்டுக்குள்ளே எல்லாம் போயிருக்கேன் ஒரு மிருகம் கூட என்னைத் தொட்டதில்லை, இந்த மனுஷங்கதான் பின்னி எடுக்கிறாங்க என கவலைப்படுகிறார். இவருடைய முதல் பயணத்தில் அடர் காட்டில் ஒரு முரட்டுக் கும்பலிடம் மாட்டியிருக்கிறார். அவர்கள் இவர் மாபெரும் எதிரி என புரட்டி எடுத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் அடைத்துப் போட்டு விட உணவு ஏதுமின்றி பசியில் சாகும் நிலைக்குப் போயிருக்கிறார்.  அப்புறம் வேறு வழியில்லாமல் தன்னுடைய நாயையே கடித்துத் தின்று உயிர் பிழைத்திருக்கிறார் மனுஷன்.

அமேசான் காட்டுப் பகுதியில் எட்டு மாதங்கள் தன்னந் தனியாக 5760 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார் ! இதில் ஹைலைட் என்னவென்றால், அதிக திரில்லை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே, மேப் காம்பஸ் என எதையும் கொண்டு செல்லவில்லையாம் ! ஆர்டிக் பகுதியில் போனபோது அவரை இழுத்துச் செல்ல வேண்டிய நாய்கள் திடீரென காணாமல் போய்விட்டன. ஒரே நாளில் கண்டுபிடிக்கவில்லையேல் குளிரில் விறைத்து சாக வேண்டியது தான். அந்த திகில் இரவை ஒரு பனிக் குகையில் சுருண்டு படுத்து அனுபவித்திருக்கிறார். நல்ல வேளை சமர்த்தாக மறு நாள் நாய்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.

இப்படி மரணத்தின் விளிம்பு வரை சென்று பெப்பே காட்டி திரும்பி வரும் இவர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. எங்கே கிடைக்கும் இதை விடப் பெரிய திகில் என அலைந்து கொண்டிருக்கிறார் இந்த நாற்பது வயது சாகசப் பிரியர்.

சென்னைல பைக் ஓட்ட சொல்லலாமா ?

Thanks : Ananda Vikatan

ரிஸ்க் எடுக்கிறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரியா ?

ஸ்கை டைவிங்.  

“ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று மிதப்பவர்களின் சாகச விளையாட்டு ஸ்கை டைவிங். ஸ்கைல போயிட்டு டைவ் பண்றது தான் ஸ்கை டைவிங். மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாலே தலை சுற்றும் ஆசாமிகள் இதைப் படிக்காமல் இருப்பது நல்லது.

விளையாட்டு இது தான். இதற்காகவே உள்ள ஸ்பெஷல் விமானத்தில் ஏறி குறிப்பிட்ட உயரம் செல்ல வேண்டும். அங்கிருந்து பொத் தென கீழே குதிக்க வேண்டும்.  அதிக திரில் டைவிங் வானத்தில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் நடக்கும். அங்கிருந்து பார்த்தால் தரையே தெரியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குதிக்க வேண்டும். குதித்த உடனே பாராசூட் விரியாது. கொஞ்ச நேரம் எந்த பிடிமானமும் இல்லாமல் சர்ர்ர் என பூமியை நோக்கி பாய வேண்டும். அதுவும் 200 கிலோ மீட்டர் வேகத்தில். அந்த பாய்ச்சல் தான் திரிலில் உச்சகட்டம். அப்புறம் சுமார் 2500 அடி உயரத்தில் வரும் போது பாராசூட்டை இயக்க வேண்டும். அதுவும் விழுந்து கொண்டிருக்கும் நபர் தான் இயக்க வேண்டும். அப்படி இயக்கும் போது பாராசூட் விரியாமல் போனால் கீழே வரும் வேகத்தில் அப்படியே மேலே போக வேண்டியது தான். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 பேராவது இப்படி ஸ்ட்ரெயிட்டாக ஹெவன் அல்லது ஹெல் போய்ச் சேர்கிறார்கள்.

இப்படி விமானத்திலிருந்து விழும்போது கொஞ்சம் வேகம் கம்மியாய் பறவை போல அதிக நேரம் பறந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார்கள்.  அந்த நினைப்பு தான் “விங் சூட்” (சிறகு உடை) கண்டு பிடிக்கக் காரணமாயிற்று.  இது ஒரு ஸ்பெஷல் டிரெஸ். இந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு எந்த உயரத்திலிருந்தும் குதிக்கலாம். கையையும் காலையும் விரித்தால் குதிப்பவர் ஒரு பறவை போல தோன்றுவார். கோழிக்குஞ்சை குறிவைக்கும் ஒரு பருந்து போல ! இதனால் விழும் வேகம் 200 கிலோமீட்டரிலிருந்து சட்டென 25 கிலோமீட்டர் எனுமளவில் குறையும். இந்த வேகத்தில் ரொம்ப நேரம் வானத்தில் மிதக்கலாம். கூடவே கொஞ்சம் ரிலாக்ஸாக பாராசூட்டை இயக்கவும் செய்யலாம்.

இந்த இறகு ஆடையைத் தயாரிக்க பலர் முயன்றார்கள். 1930, 1961, 1972 மற்றும் 1975 களில் இந்த முயற்சி செய்து குதித்தவர்களெல்லாம் குதித்த இடத்திலேயே சமாதியாகிவிட்டார்கள். அதனால் இந்த விங் சூட் முயற்சியே ஒரு திகில் முயற்சியாக ஒதுக்கப்பட்டது.  கடைசியில் 1990 களில் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஸ்கைடைவர் பாட்ரிக் டி கேயார்டன் வெற்றிகரமாக ஒரு சூட் உருவாக்கி பறந்தும் காட்டினார். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அதில் மாற்றம் செய்கிறேன் பேர்வழி என 1998ல் புதிய அட்வான்ஸ்ட் ஆடை தயாரித்தார். அந்த ஆடையுடன் ஹவாயில் பறந்தபோது பாராசூட் விரியாமல் பரலோகம் போனார். ஆனாலும் அவர் தயாராக்கிய விங் சூட் ரொம்ப பாப்புலராகி விட்டது. இப்போது பல விதங்களில், பல வடிவங்களில் இந்த ஸ்கை டைவிங் ஆடைகள் கிடைக்கின்றன. விங் சூட் போட்டுக்கொண்டு ஸ்கை டைவிங் செய்வது அதி அற்புத அனுபவம் என குதித்தவர்கள் பரவசத்தில் குதிக்கிறார்கள்.

என்ன ஒருதடவை குதிக்கறீங்களா ?

Thanks : Ananda Vikatan