கடாவர் : திரை விமர்சனம்

*

இயக்குனர் அனுப் பணிக்கரின் முதல் திரைப் படைப்பாக வந்திருக்கிறது கடாவர். அமலா பால் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து, தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு மருத்துவ கிரைம் திரில்லர் வரிசையில் வந்தமர்கிறது. 

ஒரு கொலை நடக்கிறது, கொலையாளி யார் என்பது புரியாத புதிராய் இருக்கிறது. காவல் துறை அந்தப் புதிரை படிப்படியாக விலக்கி கடைசியில் ‘வாவ்’ எனும் ஒரு புள்ளியில் பார்வையாளர்களைக் கொண்டு நிறுத்துகிறது ! இது தான் வழக்கமான கிரைம் திரில்லர் திரைப்படங்களின் அக்மார்க் கட்டமைப்பு. அந்தக் கட்டமைப்பிலிருந்து இந்தத் திரைப்படமும் எங்கும் விலகவில்லை. 

இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் அருமை. அந்தக் கதையைப் படமாக்கிய விதத்தில் அறிமுக இயக்குனர் அனுப் பணிக்கர் வசீகரிக்கிறார். அவருடன் பணியாற்றியிருக்கின்ற கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்றோர அற்புதமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஒரு கிரைம் திரில்லருக்கே உரிய கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங் என இந்தத் திரைப்படமும் நம்மை வசீகரிக்கிறது. 

இயக்குநர் பாக்கியராஜ் ஒரு முறை சொன்னார், ‘திரைப்படம் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு நிறைய கேள்விகள், சந்தேகங்கள் வரவேண்டும். அந்த சந்தேகத்தை அடுத்தடுத்த காட்சிகள் விளக்க வேண்டும், அதுவே சிறப்பான திரைக்கதை’ என்று. இந்தத் திரைப்படத்திலும் பல சந்தேகங்கள் எழுகின்றன. அதில் பல சந்தேகங்களை வரலாற்று அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் திரைக்கதை நிரப்பிக் கொண்டே செல்வது ஒரு மிகப்பெரிய பலம். 

திரைப்படத்தின் சில இடங்கள் வியப்பூட்டுகின்றன. குறிப்பாக அந்த விபத்துக் காட்சியைப் படமாக்கிய விதமும், அதன் எடிட்டிங் வேலையும் நம்மைச் ஸ்தம்பிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரின் ஏரியல் ஷாட்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளரின் மழைக் காட்சிகள் போன்றவை சிறப்பாக இருக்கின்றன.  

ஒரு கொலை, அதைச் செய்தேன் என வாக்குமொழி கொடுப்பவர் சிறையில் இருக்கிறார் என துவக்கத்திலேயே பார்வையாளரை நிமிர்ந்து அமரச் செய்கிறர் இயக்குனர். அடுத்தடுத்த பரபரப்புகளையும் அழகாகவே பதிவு செய்கிறார். கதைக்களமாக பிண அறையைக் காட்டி, அதிலிருந்தே படத்தை நகர்த்தும் யுத்தியும் புதுமையாக இருக்கிறது. அமலாபால் தான் தயாரிப்பாளர், அவரை படம் முழுக்கக் காட்டவேண்டும் எனும் மெனக்கெடலும் படத்தில் தெரிகிறது. 

‘என்னய்யா ஒரு பேத்தாலஜிஸ்ட் போலீஸ் கூடவே சுத்தறாங்க ?’  எனும் கேள்விக்கு விடையாக, அவருக்கு சிறு வயதிலிருந்தே போலீஸ் வேலையில் ஆர்வம் என்றும், அவர் கிரிமினாலஜி படித்தவர் என்றும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே கவர்ச்சி ஏரியாவில் கால் வைக்கும் அவர், இந்தத் திரைப்படத்தில் மிக வித்தியாசமான கெட்டப்பில் கதைக்காக தன்னை சமர்ப்பித்திருக்கிறார். காஸ்ட்யூம்ஸ் ஏரியா தன் பனியை செவ்வனே செய்திருக்கிறது !

முதல் பாதியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாவது பாகம் நிவர்த்தி செய்ய முடியாதது ஒரு குறை. எதிர்பார்த்த காட்சிகளும், எதிர்பார்த்த காரணங்களுமாக படம் ஒரே அலைவரிசையில் நகர்கிறது. அதே போல திரைப்படத்தில் வருகின்ற ‘இண்டெலிஜெண்ட் ஃபைண்டிங்க்ஸ்’ எல்லாமே முன்பு எதோ ஒரு திரைப்படத்தில் ஏதோ ஒரு வகையில் பார்த்ததாகவே இருப்பது கதையில் இருக்கின்ற ஒரு பலவீனம். உதாரணமாக சீட் பெல்ட் கழட்டல, வெளியே வர போராடல, பைபிளில் கிடைக்கின்ற ரெஃப்ரன்ஸ் என பல இடங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை. தனித்துவமாக, அந்த நிழல்கள் ரவி என்கவுண்டர் நச் ! 

படத்தில் அமலாபாலுக்கு ஒரு பில்டப் கொடுத்து இன்வெஸ்டிகேஷன் டீமில் சேர்த்ததற்காக, எல்லா விஷயங்களையுமே அவர் கண்டுபிடிப்பதாக இருப்பதும், கூடவே இருக்கின்ற போலீஸ்காரர்களெல்லாம் எதுவுமே தெரியாதவர்கள் போலக் காட்டுவதும் படத்திலுள்ள இன்னொரு பலவீனம். அதிலும் மைக்கேல் எனும் பெயர் கொண்ட காவல் துறை அதிகாரிக்கே, காயின் ஆபேல் – கனெக்ட் பண்ண முடியாது என்பது ஒரு ஓட்டை. ஆபேலை ஏன் காயின் கொன்றார் என்பதற்கு அமலா பால் சொல்லும் காரணம், பைபிளில் சொல்லப்படும் காரணத்திற்கு முரணானது ! 

படத்தில் இருக்கின்ற முக்கியமான டுவிஸ்ட் சிறப்பானது. ஆனால் தொடர்ந்து நிறைய இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களைப் பார்ப்பவர்களை அது திடுக்கிட வைக்காது என்பது தான் யதார்த்தம். இந்தப் படத்தில் கையாளப்பட்டிருக்கும் மருத்துவத் திருட்டும் எந்த வித புதுமையான அம்சமும் இல்லாமல் சமீபத்தில் பல திரைப்படங்களில் பார்த்த விஷயங்களாகவே இருப்பது சற்றே சலிப்பூட்டுகிறது. 

பரபரப்பான திரைக்கதைக்கு இடையே வரும் நீண்ட பிளாஷ்பேக், எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டு வளவளாவென பேசும் பஸ் காட்சி போன்றவையெல்லாம் சற்றே வலிந்து திணிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. முதல் காட்சியில் வெற்றியைக் கைது செய்வது எதற்காக, ஆயுள் கைதியாக ஏன் மாற்றப்பட்டார் ? என்ன பின்னணி என்பதெல்லாம் தெளிவில்லை. அல்லது எனக்குப் புரியவில்லை. 

கடாவர் எனும் புதுமையான பெயரைத் தேர்வு செய்து ( ஒரு ஆங்கிலப் படம் இந்தப் பெயரில் உண்டு என்பது வேறு விஷயம் ) அதில் பல அறிவு பூர்வமான செய்திகளை இணைத்து திரைக்கதை, இயக்கம் செய்ததில் இயக்குனர் அனுப் வெற்றி பெற்றிருக்கிறார். வசனங்களை இன்னும் கூர்மையாக்கி, திரைக்கதை இன்வெஸ்டிகேஷனில் கொஞ்சம் நவீனத்தைச் செலுத்தியிருந்தால் படம் இன்னும் வசீகரமாகியிருக்கும். 

எனினும், தனது முதல் படத்திலேயே சிறப்பான ஒரு படத்தைத் தந்திருக்கும் இயக்குநரை வாழ்த்துவோம். இளையவர்கள் வரட்டும், புதுமைகள் தொடரட்டும். 

*