கோச்சடையான் – விமர்சனம்

கோச்சடையான்
———————-

 

kochadaiyaan-3v

கோச்சடையான்
———-

நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் என அழகு தமிழில் அழைக்கப்படும் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் வெளியாகும் முதல் இந்தியப் படம் எனும் ஒரு மைல் கல்லுடன் இந்தத் திரைப்படம் அறிமுகமாகிறது !

அதென்ன நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் ? ஹாலிவுட்டில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பம் தான். திரைப்படம் முழுவதுமோ, அல்லது தேவைப்படும் காட்சிகளிலோ அதை இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர். ஃபேன்டஸி வகை திரைப்படங்கள், அறிவியல் புனைவுகள், கற்பனை உலகங்கள் இவற்றையெல்லாம் திரையில் கொண்டு வர ஹாலிவுட் நம்பியிருப்பது இந்த பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அல்லது மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தைத் தான். போலார் எக்ஸ்பிரஸ், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், டின் டின், பியோல்ஃப், அவதார், ஹாபிட் போன்றவையெல்லாம் நமக்குப் பரிச்சயமான உதாரணங்கள்.

அந்த நுட்பத்தை நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகிற்கு இழுத்து வந்திருப்பதற்காகவே சவுந்தர்யா குழுவினருக்கு பாராட்டுகளை வழங்கலாம். காலம் காலமாக திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன, அந்த வகையில் இப்போதைய இந்த தொழில் நுட்பமும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் யாரும் நிராகரித்து விட முடியாது எனும் இடத்தை இப்போது எட்டிப் பிடித்திருக்கிறது.

சரி, கோச்சடையான் எப்படி ?

இல்லாத ஒன்றைப் பிரமாண்டமாகக் காட்டுவதில் தான் இந்த தொழிநுட்பம் தனது கைவரிசையைக் காட்டும். ஒரு அவதார் போல பண்டோராவை உருவாக்க வேறு என்ன வழி ? அந்த சிந்தனையை மனதில் கொண்டு தான் இப்படி ஒரு வரலாற்றுக் கதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மாபெரும் கோட்டை கொத்தளங்கள், மிகப்பெரிய படைக்களங்கள், சாகசங்கள், மின்னல் வேக செயல்பாடுகள் என புகுந்து விளையாடத் தோதான ஒரு கட்சிதமான கதைக் களம்.

கதையொன்றும் புதிதில்லை. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் ஒரு மகனின் கதை தான். அதை கே.எஸ். ரவிக்குமார் தனக்கே உரிய மசாலாக்களுடன், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனது குரலினால் தாங்கியிருக்கிறார் ரஜினிகாந்த். தனது டிஜிடல் உருவத்துக்கு துடிக்கும் குரலினால் உயிர் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார். முடிந்த வரை ரஜினியின் மேனரிசங்கள், ஸ்டைல், அசையும் தலைமுடி என ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாய உலகம் என்பதை மறந்து அதனுள் நுழைந்து பயணிக்க இவையெல்லாம் ரொம்பவே உதவுகிறது.

ரஜினி, நாசர், ஷோபனா, நாசர் தவிர மற்ற கதாபாத்திரங்களின் உருவங்கள் முழுமையடையாமல் இருப்பது படத்தின் முக்கியமான குறைகளில் ஒன்றாகச் சொல்லலாம். சரத்குமார், ரஜினியின் தங்கையாக வரும் ருக்மணி இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளவே மாமாங்கம் ஆகிவிடுகிறது. நினைவில் வாழும் நாகேஷை திரையில் உலவ விட்டிருப்பதும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் அருமை ! தீபிகா படுகோன் பார்பி டால் மாதிரி அங்கும் இங்கும் அசைந்து திரிகிறார். அதிரடியாய் ஒரு சண்டையும் இடுகிறார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக, படத்தைத் தூக்கி நிறுத்தும் மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. போர்களிலும், பாடல்களிலும், கடல்பயணங்களிலும், மழையிலும், பஞ்ச் வசனங்களிலும் ரஹ்மானின் இசை நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

பளிச் பளிச்சென வருகின்ற வசனங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன. கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை- திரைகதை – வசனம் பொறுப்பை ஒப்படைத்தது இந்தப் படத்துக்கு ஒரு நல்ல தேர்வு என்பதை நிரூபித்து விடுகிறார். வேகமான முதல் பாதியும், படு வேகமான முதல் பாதியும் என அவருடைய டிரேட்மார்க் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்.

தொழில்நுட்பம் ? ம்ம்…. 100 ஆண்டு கால இந்தியத் திரைப்படத்திற்கு புது வரவு என்பதால் வரவேற்கலாம். ஆனால் பதினைந்து ரூபாய்க்கு லேட்டஸ்ட் ஹாலிவுட் திரைப்படங்கள் கிடைக்கும் இன்றைய சூழலில் சர்வதேச ஒப்பீடுகளையே சாமானிய ரசிகனும் செய்கிறான். அந்த வகையில் கோச்சடையான் இன்னும் பல ஆண்டுகள் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பது போல ஒரு உணர்வு. முப்பரிமாண தெளிவு பல இடங்களில் குறைவுபடுகிறது.

ஆனாலும் தைரியமாக எடுத்து வைக்கப்பட்ட முதல் சுவடு இது என்பதையும், பலருடைய கேலி கிண்டலையும் தாண்டி இது வசீகரிக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.

கோச்சடையான், வீச்சுடையான் !

ரஜினி நினைவுகள்.

aaa

 

பால்யங்கள் சுவாரஸ்யங்களால் நிரம்பியது. பால்யங்களின் படியில் சிதறிக் கிடக்கும் கதைகள் உறைந்து போன காலங்களுக்குள்ளும் வெப்பத்தைப் பாய்ச்சும் வீரியம் கொண்டவை. பால்யங்களின் வீதியைக் கடந்து வெகு காலமாகி விட்டாலும் எல்லாருடைய மனதிலும் நிச்சயம் பால்ய நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

கிராமங்களில் பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காரணம் வேறொன்றுமில்லை. வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவர்களுடைய வேர்களைப் பிடுங்கி நகரத்தின் வீதிகளில் நடும்போது, பால்யத்தின் பச்சைய நினைவுகள் அவர்களுக்கு இளைப்பாறும் சக்தியைக் கொடுக்கின்றன. நகரத்து பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் தங்களுக்கென தனி உலகத்தைப் படைத்துக் கொள்கிறார்கள். நடுவயது தாண்டிய வருடங்களின் பாய்ச்சல் அவர்களை ஒருவேளை கிராமங்களின் கடைசிப் பக்கத்தில் உட்கார வைக்கும். அவர்களோ செல்போன் சிக்னல் சென்னையில் தான் கிடைக்கும் என அலுத்துக் கொள்வார்கள்.

இரண்டு வயதிற்குள் ஒரு குழந்தை உருவாக்கிக் கொள்ளும் சுவையும், உணவுப் பழக்கமும் அவர்களுடைய இறுதி காலம் வரை தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள். ரசனைகளும் பெரும்பாலும் அப்படியே. விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் விதி விலக்குகளையே விதிகளாக்கி விடுவது ரசனைத் துரோகம் இல்லையா ?

எப்போதேனும் சில்லெனும் காற்று வீசும் நகரத்தில் எப்போதும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்த்துக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே சில்லென காற்று வீசும் கிராமங்களில் எப்போதேனும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்க்கின்றன.. சக்கரங்களில் சிக்கிக் கிழியாத காற்று கிராமத்தின் வீதிகளில் அரட்டையடித்துக் கொண்டே திரிகிறது. நகரங்களில் புழுதிகளுக்கு இடையே பதுங்கி, ஆம்புலன்ஸ்களிலும் அடிபட்டு, மூச்சுத் திணறி நடக்கும் காற்றுக்கு அடிக்கடி மாரடைப்பு வந்து விடுகிறது.

எனது ரசனைகள் கிராமத்தின் வயல் வரப்புகளில் நண்டுகளைப் போல ஓடித் திரிகின்றன. சர்ப்பக் குளத்தில் பல்டியடித்துக் குளிக்கும் படிக்கட்டுகளில் பாசியாய்ப் படிந்திருக்கின்றன. பட்டன் பிய்ந்து போன காக்கி நிக்கருக்கு செயினிலிருந்து ஊக்கு எடுத்துத் தரும் பாட்டியின் நினைவுகளுடன் தான் அவை இன்னும் பயணிக்கின்றன.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது அந்தஸ்தின் உச்சம். பணக்காரத்தனத்தின் அடையாள அட்டை. எப்போதேனும் பக்கத்து வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் தருணங்களில் கருப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களும் மெய்மறக்கச் செய்யும். எங்கள் வீட்டின் அடையாளம் மர்பி ரேடியோ. தொலைக்காட்சி நுழைவதற்கான மின்சாரமே அப்போது நுழைந்திருக்கவில்லை.

ரஜினி. எனது சிறுவயதுச் சிந்தனைகளில் சினிமா என்றால் ரஜினி என்று மட்டுமே அர்த்தம். பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் ரஜினியின் திரைப்பட போஸ்டர்கள் பார்ப்பதே சினிமா பார்ப்பதாய் சிலிர்ப்பைத் தரும். பாட்டு ஃபைட்டு சூப்பர் எனும் போஸ்டரின் பின் குறிப்பைப் படித்து விட்டால் தூக்கம் தொலையும். செய்தித் தாள்களில் வருகின்ற பெட்டிச் செய்திகளை வெட்டி எடுத்து கலுங்கில் அமர்ந்து விவாதம் நடத்துகையில் ஏதோ பிரபஞ்ச ஆனந்தம் கூடவே வந்தமரும். ரஜினி ரசிகன், நம் ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினி என ரஜினி பெயர் தாங்கி வரும் வியாபார யுத்திகளில் விழுந்து நான் சேமித்து வைத்த புத்தகங்களில் அப்பாவின் உழைப்பின் வாசனை இன்னும் கசிகிறது.

சினிமா பார்ப்பது என்பது அதிகபட்ட தவறு என்பதே எனது காலத்தின் வழக்கு. அந்தத் தவறை ரஜினியின் திரைப்படங்கள் செய்ய வைத்த தருணங்கள் ஏராளம். கமலுக்கெல்லாம் நடிக்கத் தெரியுமா என்று வாக்குவாதம் செய்த நிமிடங்கள் இன்னும் மனதுக்குள் சிரிப்பையும், நினைவுகளையும் தலையாட்ட வைக்கின்றன.

சாதி, மதம், இனம், மொழி, நுண் அரசியல் இத்யாதி, இத்யாதி போன்ற விஷயங்களெல்லாம் எட்டாத காலங்கள் அவை. அந்தக் காலத்தில் ரஜினி என் மனதில் நுழைந்ததற்கு அவரும் என்னைப் போல கருப்பு என்பது மட்டுமே ஒரு காரணமாய் இருக்க வாய்ப்பில்லை. நாம் செய்ய இயலாதவற்றைச் செய்யும் பிம்பங்கள் தானே சின்ன வயதின் நமது பிரமிப்புகள் !

பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டரில் ரஜினி படம் பார்த்த அனுபவங்கள் அலாதியானவை. சினிமா பார்க்கும் போது சீக்கிரம் வீடு போக வேண்டும், வீட்டில் கண்டு பிடித்து விடுவார்களோ எனும் அச்ச உணர்வே சினிமாவை விட அதிகமாய் மனசுக்குள் காட்சியாய் விரியும்.

இப்போது, நினைத்த நேரத்தில் விரல் சொடுக்கலில் ஒரு படம் பார்த்து விட முடியும் எனும் வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றாலும் அன்றைய அரை குறை சினிமா தந்த ஆனந்தம் கிடைப்பதில்லை. மீறுதல்களின் வழியே கிடைக்கும் நிமிடங்களில் தான் சாதனைகளின் கணங்கள் கண்ணயர்ந்து கிடக்கின்றன.

இன்றைக்கு ரசனைகளின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. உலக சினிமாவின் அறிமுகவும் பிரியமும் அழுத்தமாய் மனதுக்குள் தடம் பதித்திருக்கிறது. நல்ல சினிமாக்கள் எது என்பதில் மாற்றுக் கருத்துகள் மின்னி மறைந்து கொண்டே இருக்கின்றன. எனினும் ரஜினி திரைப்படம் வருகிறது எனும் செய்திகள் தோன்றும் போது மனசுக்குள் நினைவுகளின் மணியோசை சத்தமாகவே ஒலிக்கிறது. பால்யத்தின் வரப்புகளில் இதயமும், மனசும் வழுக்கி ஓடுகிறது. பால்யத்தை மீட்டெடுக்கும் வயதின் ஓட்டமாக இருக்கலாம். அல்லது உறைந்து கிடக்கின்ற ரசனைப் பனிமலையில் சொட்டுச் சொட்டாய் வடியும் எரிமலைத் துளிகளாக இருக்கலாம்.

எதேச்சையாய் நினைவுக்குள் வந்தது எப்போதோ எனது பிளாகில் நான் எழுதிய ஒரு கவிதை http://xavi.wordpress.com/2006/06/15/rajini/

கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.

எனும் வரிகளை வாசிக்கும் போது சிரித்துக் கொள்கிறேன். கவிதைகளில் எதேச்சையாய் வந்து விழும் அடையாளங்கள் கிளைகளில் முளைக்கும் பூக்களல்ல.
வேர்களில் விளையும் பூக்கள்.

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

BLACK SWAN : எனது பார்வையில்

அதென்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல. சமீபகாலமா பார்க்கும் படங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரேஞ்சுக்கு இருக்கிறது. பொதுவாகவே அதிக சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. சொல்ல வேண்டும் எனத் தோன்றும் படங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். முதல்ல சொன்னது மாதிரி, சமீப காலமா பார்க்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேஞ்சில் இருப்பதால் நிறைய விமர்சனங்கள் எழுதுகிறேன் நண்பர்கள் மன்னிப்பார்களாக.

பிளாக் ஸ்வான், பாலே நடனத்தின் பின்னணியில் விரியும் ஒரு அழகிய உளவியல் திரில்லர். பொதுவாகவே கலை, விளையாட்டுகளைப் பின்னணியாகக் கொண்டு கட்டப்படும் படங்கள் மீது எனக்கு தனிப் பிரியம் உண்டு. முழுக்க  முழுக்க புனைவுகளின் அடிப்படையில் நகர்ந்தாலும் விளையாட்டின் நுணுக்கங்கள், வியூகங்கள், சிக்கல்கள், பயிற்சிகள் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படமும் பாலே நடனத்தைக் குறித்த பல்வேறு விஷயங்களை அழகாக விவரிக்கிறது.

நியூயார்க் ஸ்வான் லேக் பாலே குழுவினரின் பாலே நிகழ்ச்சியில் ஸ்வான் குயீனாக தேர்வு செய்யப்படுகிறார் கதா நாயகி நீனா சாயர்ஸ் ( நடாலி போர்ட்மேன்). கதையில் வெள்ளை ஸ்வான் மற்றும் கருப்பு ஸ்வான் என இரண்டு கதாபாத்திரங்கள். இரண்டையும் செய்யப் போவது நீனா தான். ஆனால் அவரோ இளகிய மனம் படைத்த இளம் பெண். வெள்ளை அன்னத்துக்கு அச்சு அசலாகப் பொருந்திப் போனாலும், கருப்பு அன்னத்துக்கான ஏரியாவில் வீக் ஆகவே இருக்கிறார்.

அந்த குறைபாடே அவருக்கு உளவியல் ரீதியான தோற்ற மயக்கங்களையும், காட்சிப் பிழைகளையும் உருவாக்குகிறது. தனது வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் தோழிகள், தன்னைத் துரத்தும் அமானுஷ்ய உருவம் என அவர் தனது மனசுக்குள்ளேயே கற்பனை நிகழ்வுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியில் கற்பனைகள் கழன்று கொள்ள நடப்பது நிஜத்தின் கிளைமேக்ஸ்.

நடனம், காதல், துரோகம், அச்சம், செக்ஸ் என கலவைகளின் நிறமடிக்கிறது படத்தில். இயக்குனர் டேரன் அர்னோஃப்ஸ்கி, ஹாலிவுட் திரைப்படங்களின் பிரியர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர் தான். அவருடைய துணிச்சலான திரைப்படங்களின் தொடர்ச்சியாய் பிளாக் ஸ்வானும் நிலை பெற்றிருக்கிறது.

“உனக்கு எதிரி வேறு யாருமல்ல, நீ தான்” என பயிற்சியாளர் ஒரு காட்சியில் பேசும்போது பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் அர்த்தமும், கடைசியில் அந்த வார்த்தை கொண்டு வரும் புது விதமான அர்த்தமும் நேர்த்தியான திரைக்கதைக்கான ஒரு சோறு பதம் !

மென்மையாக, மெதுவாக நகரும் திரைப்படம் போகப் போக வேகமெடுத்து ஓடுகிறது. கதாநாயகியின் பார்வையில் நகரும் படம் உண்மையையும், நாயகியின் கற்பனைக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்டே செல்கிறது. இதில் சுவாரஸ்யமும், சிக்கலும் என்னவென்றால் எது உண்மை, எது கற்பனை என்பது பார்வையாளனுக்குக் கடைசி வரை தெரியவே தெரியாது என்பது தான். இன்சப்ஷனிலாவது ஒரு பம்பரத்தைச் சுத்த வுட்டாங்க, இங்கே அது கூட லேது !

இசை, அற்புதம் டாட் என்று எந்திரன் ஸ்டைலில் சொல்லி விடுவது சிறப்பு. அதைப் பற்றி அதிகம் பேச எனக்கு இசை ஞானம் இல்லை என்பது ஒரு விஷயம், அந்த அளவுக்கு மார்ஷல் டுவிஸ்ட் வசீகரிக்கிறார் என்பது இன்னொரு விஷயம்.

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

BURIED : எனது பார்வையில்

கண் விழித்துப் பார்க்கும்போது உங்களைச் சுற்றிலும் கும்மிருட்டாய் இருந்தால் எப்படி இருக்கும் ? கைகால்களை நீட்ட முடியாமல், எழ முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? நீங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் எப்படி இருக்கும் ? நினைத்து பார்க்கவே திகிலூட்டும் இந்தச் சூழலை பரீட் திரைப்படம் திரையில் விரிக்கிறது.

கும்மிருட்டில் கண் விழித்து தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலேயே அச்சத்தில் கூச்சலிடும் ஹீரோ, தான் ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து எங்கோ புதைக்கப்பட்டிருப்பதை லைட்டர் வெளிச்சத்தில் உணர்கிறார். அந்த நிமிடங்கள் அவனை அதிர்ச்சியின் பள்ளத்தாக்கில் புதைத்து விடுகின்றன. எதுவும் செய்ய இயலாதவனாய், யாரேனும் காப்பாற்றினால் தான் வெளியே வர முடியும் எனும் நிலையில் அவனுடைய மரண பயத்தை படம் அட்சர சுத்தமாய் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

ஈராக்கில் டிரக் ஓட்டுவதற்காக வந்த ஒரு ஏழை அமெரிக்கப் பிரஜை அவன். ஈராக்கியர்களிடம் பிடிபடுகிறான். அவர்கள் அவனை சவப்பெட்டியில் போட்டு புதைத்து விடுகிறார்கள். 9/11 க்கு சற்றும் சம்பந்தமில்லாத ஈராக்கியர்கள் அமெரிக்கப் படைகளால் பாதிக்கப்பட்டது போல, போருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த டிரைவரும் பாதிக்கப்படுகிறான். சவப்பெட்டிக்குள் ஒரு செல்போன் இருக்கிறது.

அந்த செல்போன் மூலம் வெளியுலகைத் தொடர்பு கொள்ள அவன் முயல்வதும், அவன் தொடர்பு கொள்ளும் இடங்களிலெல்லாம் பொய்களும், தப்பித்தல்களும், சால்ஜாப்புகளும் நிரம்பியிருப்பதும் பதட்டத்தை அதிகரிக்கிறது. போதாக்குறைக்கு மணல் பாம்பு ஒன்றும் திடீரென சிறு ஓட்டை வழியே உள்ளே நுழைந்து விட பரபரப்பு எகிறுகிறது.

எப்படியாவது வெளியேறி விடவேண்டுமே எனும் ஹீரோவின் தவிப்பில் பார்வையாளனுக்கு மூச்சு முட்டுகிறது. மரணம் நெருங்கும்போது தானே வாழ்க்கை உன்னதமாய்த் தெரிய ஆரம்பிக்கிறது. சவப்பெட்டியில் அடைபட்டவனும் அந்த நிலைக்கு வருகிறான். எப்படியேனும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என தவிக்கிறான். ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த தாயை அழைப்பது, மகனைக் காப்பாற்ற சொந்த விரலை வெட்டுவது, மனைவியுடன் உருகுவது என கலங்கடிக்கும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது திரைக்கதை.

அடைபட்டவனைக் காப்பாற்றுவதை விட, இதிலிருந்து கைகழுவி விடவேண்டுமென துடிக்கும் நிறுவனங்களின், அரசு அதிகாரிகளின் சுயநல, மனிதாபினானமற்ற உரையாடல்கள் மனிதத்தின் மீதான கேள்வியை மிக ஆழமாகவே எழுதியிருக்கின்றன.

கடைசியில் சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு மணல் உள்ளே வர ஆரம்பிக்க பின் நடப்பது உறைய வைக்கும் கிளைமேக்ஸ்.

தீவிரவாதிகளால் கடத்தில் செல்லப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார் என்று எட்டாம் பக்கம் பெட்டிச் செய்தியில் வரும் ஒரு செய்தி, உண்மையில் எத்தனை வலிமிகுந்தது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது படம். ஒவ்வொர் நிகழ்வுக்குப் பின்னாலும் உறைந்து கிடக்கும் துயரங்களில் கடலை திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ரசிகனுக்குப் போரடிக்கும் என தமிழ் டைரக்டர்கள் உலகெங்கும் பறந்து பாடல்காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடங்கள் காட்டி படத்தை வினாடி நேரம் கூட போரடிக்காமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ரோர்டிகோ கார்டெஸ்.

படத்தில் நடித்திருக்கும் ஒரே நடிகர் ரயன் ரெய்னாட்ஸ். விருதுகளை அள்ளித் தரக்கூடிய அற்புதமான உணர்வுகளை லைட்டர் வெளிச்சத்திலும், செல்போன் வெளிச்சத்திலும் அவர் வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது. படத்தில் வேறு யாருமே இல்லை. வெறும் தொலைபேசிக் குரல்கள் மட்டுமே !

ஆறடிக்கு நான்கடி அளவுள்ள சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடம் காட்டியிருப்பதில் ஒளிப்பதிவும், டைரக்ஷனும் வியக்க வைக்கின்றன. இன்னொரு குறிப்பிடவேண்டிய அம்சம் இசை. காட்சிகளைக் கட்சிதமாய் உள்வாங்கி பார்வையாளனை இருக்கையில் ஆணி போல அறைந்து வைக்கிறது. 

கர்ப்பிணிகளும், பலவீன இதயமுடையவர்களும் பார்க்க வேண்டாம் என டைட்டில் கார்ட் போடக்கூடிய அளவுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்றி இறக்கும் காட்சிகள் தான் ஒன்றரை மணி நேரமும் !

சமீபத்தில் பார்த்த படங்களில் மனதை உலுக்கிய படங்களில் ஒன்று இது !

வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

DEVIL : திரைப்படம் எனது பார்வையில்

 ஒரு லிப்ட்டில் பயணிக்கிறார்கள் ஐந்து பேர். இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள். லிஃப்ட் அமானுஷ்யமான விதமாக இருபத்தோராவது மாடியில் நின்று விடுகிறது. அந்த லிஃப்டில் நடக்கும் திக் திக் திகில் மர்ம நிகழ்வுகள் தான் ஒன்றரை மணி நேரம் பரபரப்பாய் ஓடும் டெவில் திரைப்படம் !

படம் துவங்கியதும் அந்த உயரமான கட்டிடத்தின் முப்பத்து ஐந்தாவது மாடியிலிருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். பின்னணியில் ஒரு குரல் கதை சொல்கிறது.

“டெவில் உலகத்துக்கு வரும்போது ஒரு தற்கொலையைப் பிள்ளையார் சுழியாய்ப் போட்டு விடுகிறது ! பின்னர் அது நரகத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டிய ஆளை குறி வைக்கிறது. அதன் ஆட்டம் அங்கே ஆரம்பமாகிறது ”

அந்தத் தற்கொலையை விசாரிக்க வருகிறார் ஒரு டிடெக்டிவ். அவர் தன்னுடைய மனைவியையும் மகனையும் ஒரு விபத்தில் பறிகொடுத்து சோகத்தில் சுற்றிக் கொண்டிருப்பவர். அந்த விபத்தை ஏற்படுத்தியவன் இன்னும் சிக்கவில்லை.

அந்த குறிப்பிட்ட லிஃப்டில் ஐந்து பேர் ஒவ்வொருவராக வந்து நுழைகிறார்கள். அவர்கள் ஐந்து பேருமே குற்றப் பின்னணி உடையவர்கள். உடனே அரசியல் வாதிகள் என்று நினைத்து விடாமல் இருப்பீர்களாக. லிஃப்ட் இருபத்து ஒன்றாவது மாடியில் சிக்கிக் கொள்கிறது.

லிஃப்டில் என்ன நடக்கிறது என்பதை கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் செக்யூரிடி ஆபீசர்கள் மெக்கானிக்கை அனுப்புகிறார்கள். ஆனால் நடப்பது டெக்னிகல் பிரச்சினையல்ல. பேய் விளையாட்டு என்பது போகப் போகத் தெரிந்து விடுகிறது. லிஃப்டில் இருப்பவர்கள் பேசுவது செக்யூரிடி ஆபீசர்களுக்குக் கேட்காது என்பது டென்ஷனை அதிகரிக்க பயன்படுகிறது. லிப்டில் சிக்கியிருக்கும் இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பேயாம்.

லிஃப்டில் திடீர் திடீரென டர்ர்ர்…டர்ர்…. என கரண்ட் போய்விடுகிறது. கரண்ட் கட் ஆனதும் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. கேமராவில் திடீர் திடீரென பேய் உருவம் வந்து போக, திகில் பரவுகிறது. காவல்துறை, தீயணைப்புப் படை, ஹோட்டல் நிர்வாகம் என எல்லாரும் பரபரப்பாய் லிஃப்டில் சிக்கியிருப்பவர்களை மீட்கப் போராடுகிறது. ஆனால் லிஃப்டில் விஷயம் கை மீறிப் போய்விடுகிறது. மரணம் லிஃப்டை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

அந்த லிஃப்டில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒருவன் தான் டிடெக்டிவின் மனைவி, மகனை விபத்தில் சாகடித்து விட்டு குற்ற உணர்வோடு ஓடிப் போனவன் ! இப்படி சின்னச் சின்ன டுவிஸ்ட்களால் கட்டப்பட்டிருக்கிறது டெவில்.

நம்ம ஊர் விஜய் போல தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நைட் ஷியாமளனுக்கு கொஞ்சம் மூச்சு விட வாய்ப்புக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் இவர் தான். வழக்கம் போலவே சஸ்பென்ஸ், திகில், ஆவி, அமானுஷ்யம் என கலந்து கட்டியிருக்கிறார். எதேச்சையாய் நடக்கும் நிகழ்வுகள் உண்மையில் எதேச்சையாய் நடப்பதில்லை. அது மிகக் கவனமான திட்டமிடலில் நடக்கிறது. ஒவ்வோர் செயலுக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்பதை ஆழமாக நம்பும் நைட் தன்னுடைய எல்லா படங்களிலும் அந்தக் கான்சப்டை நுழைத்து விடுவார். த சைன்ஸ் படத்தில் ரொம்பவே பளீர் என அதைச் சொன்னவர், இந்தப் படத்திலும் அதை பளிச் எனச் சொல்லியிருக்கிறார்.

கடைசியில் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்றான மன்னிப்புடன் படம் முடிவடைகிறது.

படத்தின் பலம் ஒன்றே கால் மணி நேரத்தில் முடிந்து விடுவது.

மிகவும் குறைந்த செலவில் ஒரு லிஃப்டை மட்டுமே காட்டிக் காட்டி படமெடுத்திருக்கிறார்கள். ஏன் என தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு யாம் தரும் செய்தி, இதைத் தயாரித்திருப்பவர் நைட் ஷாமளான் என்பதாகும் ! இவர் அடுத்து தயாரிக்கும் படம் மறுபிறவி பற்றியதாம் !

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் நைட் அல்ல. ஜான் எரிக் டோடில் என்பவர்.

சிக்ஸ்த் சென்ஸ் போல இது ஒரு அசத்தல் திகில் படம் என்று நினைத்து விடாதீர்கள். இது இரண்டாம் தர திகில் படங்களின் வரிசையில் கொஞ்சம் டீசண்டாய் வந்திருக்கும் படம் அவ்ளோ தான்.

பொழுது போகாதவர்கள் பாருங்க, பயப்பட மாட்டீங்க !

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?

 நந்தலாலாவைப் பற்றி எழுதாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும் என்று கனவில் எச்சரிக்கப்பட்டேன். இருந்தாலும் கிகுஜிரோவைப் பார்க்கும் முன் நந்தலாலா குறித்து ஏதும் எழுதக் கூடாது என்று பிடிவாதமாய் இருந்தேன். காரணம் ஜப்பானிய கிகுஜிரோ சூப்பர் என்றும், தமிழ் நந்தலாலா அதன் ஈயடிச்சான் காப்பி என்றும் வடிவேலு பாணியில் ஷடடடடாஆ… என சலிக்குமளவுக்கு விமர்சனங்களும், மோதல்களும், சண்டைகளும்,  இத்யாதிகளும்.

இன்று தான் கிகுஜிரோவை அமைதியாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அற்புதமான படம். தாயின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை மிக அற்புதமாகப் படம்பிடித்திருந்த படம். மனதை வசீகரிக்கும் பின்னணி இசையில், கண்களை இதமாக்கும் ஒளிப்பதிவில், மென்மையாய் நம்மை அறியாமலேயே மூழ்கடித்து விடும் இயக்கத்தில் கிகுஜிரோ சபாஷ் போட வைக்கிறது.

முதலில் மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கிகுஜிரா என்றொரு படம் இருப்பதே நந்தலாலா வராமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஒரு நல்ல ஜப்பானியப் படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு காட்டிக் கொடுத்தாரே, அதுக்கு முதல் நன்றி.

கிகுஜிரோவின் தாக்கத்தில் உருவான தமிழ்ப்படம் நந்தலாலா அவ்வளவு தான். இரண்டு படங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய காட்சியமைப்புகளும், சிந்தனையும் இருந்தாலும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இரண்டு படத்திலும் உண்டு.

ஒரு படத்தின் கருவை எப்படி மொழிக்கும், கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உருவாக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நந்தலாலாவைச் சொல்லலாம். நந்தலாலாவின் படம் முழுக்க வரும் காட்சியமைப்புகளும், மாந்தர்களும், அவர்களுடைய நுட்பமான உணர்வுகளும் கிகுஜிரோவில் இல்லை. ஜப்பானிய திரைப்படத்தில் விரியும் கலாச்சார மனிதர்கள் நந்தலாலாவில் இல்லை. நாலு ஐட்டம் ஒரே மாதிரி இருக்குங்கறதுக்காக “அதே” சாப்பாடு என்பது கொஞ்சம் ஓவர் தான்.

இசைஞானியைப் பற்றிப் பேசாமல் நந்தலாலாவைப் பேசமுடியாது. சேதுவின் சாயல் ஆங்காங்கே இசையில் தெரிந்தாலும் உணர்வுகளின் அடிப்படையில் இசைஞானி இசையை விளையாட விட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது. பல காட்சிகளை அதன் உணர்வுகளின் அடிப்படையில் ஒரே இசைச் சங்கிலி பிணைத்து வைப்பது விவரிக்க முடியாத இன்பம்.

ஹாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசை தனியே சிடிகளாக வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சிறந்த பின்னணி இசை சிடிகளின் மேல் எனக்கொரு அதீத காதல் உண்டு. இன்னும் கிளாடியேட்டர் பின்னணி என் பேவரிட் லிஸ்டில் கம்பீரமாய் இருக்கிறது. அவ்வப்போது இசையைத் தவழ விட்டு கண்மூடிக் கிடப்பது ஒரு சோம்பேறிச் சுகம். அப்படி ஒரு பின்னணி இசை சிடி நந்தலாலாவுக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நாலு காப்பி வாங்க வேண்டும்.

இசைஞானியைப் பேசவிட்டு வசனங்கள் மௌனித்திருப்பது நந்தலாலாவின் இன்னொரு வசீகரம். கிகுஜிரோவில் பாதிப் படத்திலேயே சிறுவனுக்கு தாயைக் குறித்த உண்மை தெரிந்து விடுகிறது. அதன் பின் தவழும் காட்சிகள் சிறுவனின் சோகத்தையும் சுமந்தே பயணிக்கிறது. நந்தலாலாவோ மாறுபட்ட காட்சியமைப்பினால் ஆழமாகி விடுகிறது.

கிகுஜிரோவில் இறுதியில் தன் பாட்டியிடம் வந்து விடுகிறான் சிறுவன். தமிழில் அனியாயமாகப் பாட்டியை தனியே விட்டு விட்டு பாவம் சம்பாதித்து விட்டார் இயக்குனர். இருந்தாலும் வலிந்து திணிக்கப்படும் சுப்ரமணியபுரக் குப்பை வன்முறைகள், அங்காடித் தெருச் செயற்கைச் சோகங்கள் ஏதும் இல்லாமல் நிறைவாய் படத்தை முடித்திருப்பதில் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

இதொன்றும் புதுசில்லை. இருவர் சேர்ந்து பயணிக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் பிற மொழிகளிலும் நிறையவே உண்டு. அதில் கிகுஜிரோவும் ஒன்று.

கிகுஜிரோவின் அதே தொனியில், அதே காட்சி மொழியில் நந்தலாலாவை மிஷ்கின் எடுத்திருந்தாலும் நந்தலாலா, ஒரிஜினல் படத்தை விட பல மடங்கு உயரமாய் இருக்கிறது என்பது எனது கருத்து.

தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின் என் மனதில் உயரமாய் வந்து அமர்ந்து கொண்ட இரண்டாவது தமிழ்ப்படம் நந்தலாலா !

நன்றி மிஷ்கின்.

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

UNSTOPPABLE : எனது பார்வையில்.

 

ஆளில்லாமல் மெதுவாக ஓட ஆரம்பிக்கும் ஒரு இரயில் வண்டி மெல்ல மெல்ல வேகமெடுத்து தறிகெட்டு ஓடுகிறது. அதை நிறுத்துவது எப்படி என வழி தெரியாமல் விழிக்கிறது நிர்வாகம். சின்ன ரயிலெனில் பரவாயில்லை. இது பத்து டன் எடையுள்ள வண்டி. போதாக்குறைக்கு அதில் இருப்பது ஊரையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ரசாயனங்கள், எரிபொருள்கள், நச்சுப் பொருள் இத்யாதி இத்யாதி. சட்டென ஊரே பதட்டத்துக்குள் தள்ளப்பட்டு விடுகிறது.

இதை எப்படியாவது நிறுத்தியே ஆகவேண்டும் என நினைக்கும் நிர்வாகத்துக்கு தோல்வி. எதேச்சையாக அதே டிராக்கில் பயணிக்கும் ஹீரோ டென்ஸல் வாஷிங்டனும், கிரிஸ் பைனும் இதை நிறுத்த முயல்கிறார்கள். ரயிலை நிறுத்திக் காட்டுவோம் என அவர்கள் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை டிராக்கில் நிகழ்த்துவதே அன்ஸ்டாப்பபிள் படத்தின் கதை.

இந்த கடுகு விதைக் கதையை வைத்துக் கொண்டு வித்தை காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் டோனி ஸ்காட். கடந்த ஆண்டு டேக்கிங் ஆஃப் பெல்ம் படத்தில் ஏகக் கடுப்படித்த இந்த இயக்குனர் அதற்கு நஷ்ட ஈடாக இந்தப் படத்தை பரபரப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். ரயிலில் விட்ட இமேஜை ரயிலிலேயே பிடித்திருப்பதில் அவருடைய திறமை தெரிகிறது !

நகம் கடித்து, பரபரத்து, திக் திக் நிமிடங்களுடன் என பொதுவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் இந்தப் படம் பொருந்தும். வயசாச்சு என வீட்டுக்கு அனுப்பப்படப் போகிறவர் டென்ஸல். பாதி பென்ஷனோடு கிளம்ப வேண்டிய அவருக்கு மிச்சமிருக்கும் வேலை நாட்கள் சில வாரங்கள் தான். இருந்தாலும் தனது கடைசி நிமிடம் வரை உண்மையாய் உழைப்பது எனும் “ஹீரோ இலக்கணத்தை” மீறாமல் இருக்கிறார் !

ஏற்கனவே ஆயிரத்து ஓரு படங்களில் பார்த்த அதே ஹாலிவுட் ஆக்ஷன் பட காட்சிகள் இதிலும் அப்படியே உண்டு. பரபரக்கும் தொலைக்காட்சித் தலைப்புச் செய்தி. நகம் கடித்தபடி நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பத்தினர். ஹீரோவுடையை ஐடியா சரியில்லை எனச் சொல்லும் மேலதிகாரி. ஹீரோவை நம்பும் ஒரு அதிகாரி. அங்கும் இங்கும் பரபரத்துக் கொண்டிருக்கும் அலுவலகம். சிணுங்கும் தொலைபேசி, வட்டமிடும் ஹெலிகாப்டர் இப்படி எல்லா படங்களிலும் பார்க்கக் கூடிய அதே அக்மார்க் காட்சிகள் ஆனாலும் அதை மிகச் சரியாக மீண்டும் ஒரு முறை அரைத்ததில் கமர்ஷியல் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

டென்ஸல் எந்த கெட்டப்பில் வந்தாலும் ஜொலிக்கிறார். த போர்ன் கலக்டர் படத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டே நடித்து பின்னிப் பெடலெடுத்தது போல, இந்தப் படத்தில் பெரும்பாலும் டிரெயின் டிரைவர் சீட்டில் இருந்து கொண்டே கலக்கியிருக்கிறார் ! அதனால் தான் இயக்குனரும் டென்ஸலை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை ! 

எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அசுர வேகமெடுத்து ஓடுகிறது ரயில். ரயிலின் மீது ஓடி டிரைவர் இருக்கைக்கு வர முயல்கிறார் ஹீரோ அதுவும் முடியவில்லை. கடைசியில் ரயிலுக்குப் பக்கவாட்டில் வேகமாய் ஒரு காரில் கிரிஸ் பைன் பயணித்து அங்கிருந்து அப்படியே டிரைவர் சீட்டுக்கு அலேக்காக விஜயகாந்த் போலத்  தாவி ரயிலை நிறுத்துகிறார்.

இது தான் அல்டிமேட் கிளைமாக்ஸ் எனில் எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ?  முதலிலேயே ரயிலுக்குப் பக்கத்தில் ஒருவர் வண்டியை ஓட்டி ஒருவர் குதித்து ரயிலை நிறுத்தியிருக்கலாமே எனும் மில்லியன் டாலர் கேள்வியும் எழாமலில்லை.

எப்படியோ ஒன்றரை மணி நேரம் பரபரப்பில் ரசிகர்களைக் கட்டிப் போட்ட வகையில் வெற்றி பெற்றிருக்கிறது அன்ஸ்டாப்பபிள் திரைப்படம்.

 

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

எந்திரன் : எனது பார்வையில்

 

எந்திரன் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஒருவழியாக நிறைவேறிவிட்டது ! பொதுவாகவே படம் வருவதற்கு முன் ஏகப்பட்ட பில்டப் களைக் கொடுத்தால் படம் கால் நீட்டிப் படுத்துவிடும் என்பது ஐதீகம் ! கந்தசாமி, இராவணன் என சமீபத்திய உதாரணங்கள் எக்கச் சக்கம். ஆனால் எந்த உதாரணத்திலும் சிக்காதவர் தான் ரஜினி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது எந்திரன்.

கிராபிக்ஸ், அது இது என ஏகப்பட்ட கதைகள் உலவியபோது படம் நல்லா இருக்குமா என ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.  உண்மையிலேயே படத்தில் ஷங்கர் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களிலேயே லாஜிக் பாக்காத நமக்கு இதுல ஆங்காங்கே லாஜிக் பாக்காம இருக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லை.

ரஜினி விரும்பிக் கேட்டுக் கொண்டதாலயா என்று தெரியாது, வழக்கத்துக்கு மாறாக படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள். அழகாக இருந்த ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். ஆனால் அந்த உலக அழகையே சில இடங்களில் மிஞ்சுமளவுக்கு ரஜினியின் மேக்கப் அசத்தலாய் வசீகரிக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்பு கவித்துவமாய் சாரலடிக்கிறது.

வில்லனாய் வரும் ரஜினி மனதில் அமர்க்களமாய் வந்து அமர்ந்து கொள்கிறார். அடேங்கப்பா என வியக்கவைக்கும் அளவுக்கு ரஜினியின் வில்லத்தனமான விஷயங்கள் பிரமிப்பூட்டுகின்றன. “கருப்பு ஆடு” காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகிறது. “என்னை யாராலும் அழிக்க முடியாது” எனும் சாதாரண வாசகத்தையே பஞ்ச் டயலாக் ரேஞ்சுக்கு சொல்ல ரஜினியால் மட்டும் தான் முடியும். சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லன் நடிப்பில் பொளந்து கட்டுவேன் என இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.

இசை அமர்க்களம். பின்னணி இசையிலும் ரஹ்மானின் இசை புகுந்து விளையாடியிருக்கிறது. ஹாலிவுட் ஐகான் ஆகிவிட்டதான் இனிமேல் ஹாலிவுட் காரர்களும் இந்த படத்தைப் பார்க்கக் கூடும் எனும் அதீத சிரத்தையாய் இருக்கலாம். அல்லது ஷங்கர் ரஹ்மானை துரத்தித் துரத்தி வேலை வாங்கியிருக்கலாம். எப்படியோ இசை ரொம்பவே மிரட்டுகிறது.

பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார் மனுஷன். கிளிமஞ்சாரோ கடைசிப் பாடலாய் இருக்கும் என நினைத்தேன்… அரிமா..அரிமா அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அமர்க்களமாய்… ! இரும்பிலே ஒரு இதயம் பாடலை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, லொக்கேஷன், காஸ்ட்யூம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. முதல் பாதி செதுக்கி வைத்தது போல கன கட்சிதம். இரண்டாம் பாதி இடையில் கொஞ்சம் நீஈஈண்டு அப்புறம் மறுபடியும் பரபரப்பில் முடிந்திருக்கிறது.

வாத்தியாரின் வசனங்கள் அசத்தல். எளிமையாய், கூர்மையாய் வசீகரிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்… ரோபோ – மனித காதல் பற்றிப் பேசுகையில்… “இது இயற்கைக்கு முரணானது என்கிறார்களே….”, “இல்லை.. இது இயற்கைக்குப் புதுசு ” !  வாவ் !

இனிமேல் இத்தகைய வசனங்களைத் தர அவர் இல்லையே எனும் ஏக்கம் கனமாய் வந்து அமர்கிறது.

ஷங்கருக்கு இது ஒரு மைல் கல் ! அடுத்து தைரியமாய் ஹாலிவுட் படம் இயக்கலாம். சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் இது ஒரு சிகரக் கல் !

ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக…

எந்திரனை மிஸ் பண்ணிடாதீங்க ! டையமாச்சு எந்தி…RUN

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

ஹாலிவுட் டாப் 5 !

டாப் 5 ஹாலிவுட் சூதாட்டத் திரைப்படங்கள்.

சூதாட்ட சப்ஜெக்ட் ஹாலிவுட் காரர்களுக்கு அல்வா போல. அவர்கள் எடுத்துத் தள்ளிய சூதாட்டத் திரைப்படங்கள் எக்கச் சக்கம். அவற்றில் விமர்சகர்களும், ரசிகர்களும் ரசித்த பெஸ்ட் 5 இதோ.

கேசீனோ ( Casino )

கேசீனோக்கள் பற்றித் தெரிய வேண்டுமா ? அவர்களுடைய கசப்பான, இனிப்பான, பரபரப்பான வாழ்க்கையைப் பற்றித் தெரிய வேண்டுமா ? இந்தப் படத்தைப் பாருங்கள். 1995ல் வெளியான இந்தத் திரைப்படம் இன்றும் பெரும்பாலானவர்களின் பேவரிட் ( எனக்கும் தான் ) . ராபர்ட் டி நீரோ, ஜியோ பெஸ்கி மற்றும் ஷாரன் ஸ்டோன் என நடித்திருப்பவர்கள் எல்லாம் கலக்கல் கதாபாத்திரங்கள். இயக்கியிருப்பவர் பிரபல இயக்குனர் மார்டின் ஸ்கோர்சீஸ். சூதாட்ட விடுதிகள் எப்படி இயங்குகின்றன, அதன் உள்ளே நடக்கின்ற தில்லு முல்லுகள் என்னென்ன, வன்முறை என்ன என்பதை அக்குவேறு ஆணி வேறாக துவைக்கிறது படம். விமர்சகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடிய படம். மூன்று மணி நேரம் பொறுமையாய் பார்க்க முடிந்தால் வெகுவாக ரசிக்கலாம்.

ரவுண்டர்ஸ் ( rounders )

பிழைப்புக்காகச் சூதாடுபவர்களை ரவுண்டர்ஸ் என்பார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனும் அப்படி ஒருவர் தான். தனது சட்டப் படிப்பைத் தொடர சூதாடுகிறார். 1998ல் வெளியான இந்தப் படத்தில் மேட் டீமன் போக்கர் பிளேயராக வந்து கலக்கியிருப்பார். போக்கர் ரசிகர்களில் டாப் லிஸ்டில் இந்தத் திரைப்படம் நிச்சயம் இருக்கும். பிழைப்புக்காகச் சூதாடும் நாயகன், பின்னர் அதற்கு அடிமையாகவே மாறி விடுகிறார்.  இருப்பதை இழப்பதும், பிறகு பரபரப்பான இறுதிப் போட்டியில் விட்டதைப் பிடிப்பதும் என படம் செம சூடு ! 

த ஹக்ஸ்லர் ( The Hustler)

1961ல் வெளியாகி ஹாலிவுட்டைக் கலக்கிய படம். இன்னும் ஹாலிவுட் சூதாட்டப் படங்களில் சிறப்பிடம் பெறுகிறது. ஹாலிவுட் ஜாம்பவான்கள் பால் நியூமென், ஜாக்கி கிளிசோன் ஆகியோரின் நடிப்பிலும் ராபர்ட் ரோசனின் இயக்கத்திலும் மிளிர்ந்த படம். வால்டர் டெவிஸ் எழுதிய நாவலின் அடிப்படையிலான இந்தப் படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியது.  பூல் கேம்ஸ் நுட்பங்களைச் சொல்லும் படம். வெற்றிகள், தோல்விகள், விளையாட்டு முறைகள் என சுவாரஸ்யமாய் நகரும் படம். 

குரோப்பியர் (Croupier )

குரோப்பியர் என்பது கேசீனோக்களில் உதவியாளராய் பணிபுரியும் வேலை. கதாநாயகன் கிளைவ் ஓவன் தான் குரோப்பியர். 1998ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒட்டு மொத்த விமர்சன உலகத்தையும் வியக்க வைத்தது. ஒரு பரபரப்பான மசாலாத் திரைப்படம் தான் இது. ஆனால் இதிலுள்ள நுட்பமான திருப்பங்களும், சூதாட்ட வாழ்க்கையும் கவன ஈர்ப்பு பெறுகிறது. கிளைவ் ஓவனுக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் இது. மைக் காட்ஜஸ் இயக்கியிருக்கிறார். 

த ஸ்டிங் ( The sting )

1973ல் வெளியான படம். ஜார்ஜ் ராய் ஹில் இயக்கத்தில் பால் நியூமென், ராபர்ட் ரெட்போர்ட், ராபர்ட் ஷா என பிரபலங்கள் நடித்த படம். ஏழு ஆஸ்கர் விருதுகள், 1973ம் ஆண்டிலேயே 160 மில்லியன் டாலர்கள் வசூல் என்பவையெல்லாம் போதும் படத்தைப் பற்றி விளக்க. விதவிதமான சூதாட்டக் களங்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான, பரபரப்பான திரைப்படம் இது. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்றும் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் ரசிக்கலாம் இதை !

நன்றி : விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்