சிரியுங்கள்

புனிதர்களோடு அமர்ந்து அழுவதை விட  பாவிகளோடு சேர்ந்தாவது 
சிரிப்பதையே விரும்புவேன்  –  பில்லி ஜோயல்

சிலர் சிரிப்பதற்குக் காசு கேட்பார்கள். உம்மணாமூஞ்சிகள் என அவர்களுக்கு ஒரு செல்லப் பெயரை வைத்து உலகம் அழைக்கும். சிலரோ சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிரிப்பு ஒரு அற்புதமான விஷயம். என்ன செய்ய, இன்றைய நாகரீக உலகில் பல வேளைகளில் சிரிப்பதே கூட அநாகரீகமாய் பார்க்கப்படுகிறது !

கிராமங்களிலுள்ள கல்யாண வீடுகளைப் போய்ப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து சிரியோ சிரியென சிரித்து மகிழ்வது வெகு சகஜமாகக் காணக் கிடைக்கும் காட்சி. ஆனால் நகர்ப்புறத்தில் அது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே ஒரு சின்ன சத்தம் எழுந்தால் கூட  “சத்தம் போடாதேப்பா, மெதுவா மெதுவா” என ஏதோ தீவிரவாதிகளில் ரகசியத் திட்டம் போலத் தான் பேசிக்கொள்கிறார்கள்.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது. வஞ்சகமில்லாமல் சிரித்து வாழ்பவர்களுக்கு எண்டோதெலியத்தை ஆரோக்கியமாக்குகிறது. இரத்தக் குழாய்கள் சீராக இயங்குகின்றன என்பதெல்லாம் மருத்துவ உலகம் சொல்லும் ஆராய்ச்சி விளக்கங்கள்.

ஏதோ சிரிப்பது மனம் சார்ந்த விஷயம் என எட்டியே நிற்பவர்கள் கொஞ்சம் பக்கம் வாருங்கள். சிரிப்பதால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக ஏறுகிறது. மூளைக்கு அதிக ஆக்சிஜன் ஏற்றுமதியாகி, மூளை சட்டென சுறுசுறுப்பாகிறது. உடல் தசைகள், முக தசைகள் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக விளங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அப்படியே உடலுக்குள்ளும் பாய்ந்து ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

நிறுவனங்கள் இப்போது சிரிப்பு விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்தால் தான் வேலை நன்றாக நடக்கும் என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவை ஊழியர்களுக்கென சிரிப்பு மூட்டும் கிச்சு கிச்சு நிகழ்ச்சிகளையும், கிச்சு கிச்சு பொழுதுபோக்கு அம்சங்களையும் நடத்துகின்றன.

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது.

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்பு தனி மனித பயன் என்பதையும் தாண்டி வேலை சார்ந்த விஷயங்களிலும் ஊழியர்களை மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கிறது என்பது ஸ்பெஷல் செய்தி. சிரிப்பை அதிகம் நேசிப்பவர்கள் அதிக சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. இதன் மூலம் வேலையில் முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான கிரியேட்டிவிட்டி, புதுமைச் சிந்தனை போன்றவற்றை தூசு தட்டி சரிப்படுத்தும் வல்லமையும் சிரிப்புக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கும், அடுத்த நபரை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கும் கூட இந்த சிரிப்பு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கிறது. கூடவே ஒரு பாசிடிவ் வேலைச் சூழலை இத்தகைய உற்சாகமான சிரிப்பு தருகிறது !

எனவே, சிரிப்பு ஒரு சீரியஸ் சமாச்சாரம் என்பதை மனதில் எழுதுங்கள்.