தொலைக்காட்சியை விடுங்க

தொலைக்காட்சி என்னுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் யாராவது தொலைக்காட்சியை ஆன் செய்யும் போது நான் பக்கத்து அறைக்குப் போய் உட்கார்ந்துப் படிக்க ஆரம்பித்து விடுவேன் –

குரோச்சோ மார்க்ஸ்

தொலைக்காட்சி இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சி நமது அறிவு வளர்ச்சிக்கும், தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. எல்லாம் சரி தான், ஆனால் அது ஒரு கட்டத்தில் பொழுது போக்குவதற்கான சாதனம் எனும் நிலையிலிருந்து தாவி இன்னொரு தளத்துக்குப் போய்விட்டது. இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.

சீரியல்கள் எனும் பெயரில் வீட்டு வரவேற்பறையில் பரிமாறப்படும் கலாச்சாரச் சீரழிவை குடும்பப் பெண்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்து கண்ணைக் கசக்கி சமையலை எக்ஸ்ட்ரா உப்பாக்கி விடுகிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா ? எனும் அதிர்ச்சிச் செய்திகளெல்லாம், இப்போது சகஜமாய் நடப்பதற்குக் காரணம் இந்த சீரியல்களும் தான் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லா வேலைகளையும் சீரியல் நேரத்தை மனதில் கொண்டு வகுக்கும் அம்மாக்கள் வீடு தோறும் சர்வ சாதாரணம்.

ஒரு காலத்தில் “மாலை முழுதும் விளையாட்டு” என்பது சிறுவர்களுக்குப் பிடித்த பாடல் வரியாய் இருந்தது. தொலைக்காட்சி வந்தபிறது எல்லாம் தலைகீழ். பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வக் காட்சியாகி விட்டது. குழந்தைகளைக் குறிவைத்து ஏகப்பட்ட சேனல்களுடன் நிறுவனங்கள் களத்தில் குதிக்க, குழந்தைகளுக்கு வீதி விளையாட்டுகள் மறந்து போய் விட்டன. டோராவும், பவர் ரேஞ்சர்களுமே பிரியமானவர்களாகிப் போனார்கள்.

அப்படியே விளையாடினாலும் அது கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் ரேஞ்சுக்கு நகர்ப்புறக் குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறி விட்டது. தொலைக்காட்சியில் கதாபாத்திரங்கள் “ஓடி விளையாட” குழந்தைகள் வைத்த கண் வாங்காமல் இருக்கைகளில் உறைந்திருப்பது தான் இன்றைய பிஞ்சுகளின் பரிதாப நிலை. நிலவைக் காட்டிச் சோறூட்டுவதை விட்டு விட்டு மிக்கியைக் காட்டித் தான் அம்மாக்கள் குழந்தைகளுக்குச் சோறே ஊட்டுகிறார்கள்.

இதிலென்ன இருக்கு ? அமைதியா வீட்ல இருந்து பொழுதைப் போக்கறோம் – என எதிர் வாதம் செய்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு. இன்றைய சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு, மன அழுத்தம் வரும் வாய்ப்பு ரொம்ப அதிகம் என அழுத்தமாய்ச் சொல்கிறது இந்த ஆராய்ச்சி. இங்கிலாந்தின் ஹார்வர்ட் எனும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் விரிவான ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது

இதற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுமார் 50 ஆயிரம் பெண்களை சர்வே எடுத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதால் பலருடைய உடற்பயிற்சி காணாமல் போயிருக்கிறது. ஓடி விளையாடும் பழக்கம் ஓடிப் போயிருக்கிறது. உடல் இயக்கம் குறைந்து போவதனால் இந்த சிக்கல் அதிகரித்திருப்பதாய் இந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.

நல்ல உடற்பயிற்சி இருக்கும் போது தன்னம்பிக்கையும், உற்சாகமும் தானாகவே தொற்றிக் கொள்ளும்து. உடலின் இயக்கமும், இரத்த ஓட்டமும், ஆக்சிஜன் இருப்பும் தேவையான அளவுக்கு இருக்கும். ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கும் போது இதெல்லாமே தலைகீழாகி விடுகிறது.  இது தான் மன அழுத்தத்தைத் தந்து விடுகிறது – என்கிறார் இந்த ஆய்வில் கலந்து கொண்ட மைக்கேல் லூக்காஸ் என்பவர்.

தினமும் சராசரியாக மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தால் மன அழுத்தம் வரும் வாய்ப்பு உங்களுக்கு 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கூடவே நீங்கள் உடற்பயிற்சி செய்யாமலும், உடல் எடையுடனும், புகை, மது போன்ற பழக்கங்களுடனும் இருந்தால் உங்கள் பாடு சிக்கல் தான்.

இதற்கு முன்பே மன அழுத்தம் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் தேவையான அளவு இருந்தால் மன அழுத்தம் வரும் வாய்ப்பு பெருமளவு குறையும் என்றே எல்லா ஆராய்ச்சிகளும் கூறியிருக்கின்றன. இந்த புதிய ஆராய்ச்சியும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இதன் நம்பத்தன்மையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உடற்பயிற்சியும், விளையாட்டும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைகிறது என்கிறார் கில்லர் மெட் எனும் ஆய்வாளர். மருத்துவ முறையில் சொல்வதானால் மன அழுத்தம் குறைவதற்கு என்டோர்பின் எனும் வேதியல் பொருள் சமநிலையில் இருப்பது அதி முக்கியம். அதற்கு தொலைக்காட்சியை விலக்குவதும், உடற்பயிற்சியைச் செய்வதும் அவசியம்.

இன்றைய நமது சமூகத்தில் தற்கொலைகளும், விவாகரத்துகளும், பல்வேறு விதமான நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம் மன அழுத்தம். சின்ன வயது குழந்தைகளே மன அழுத்தங்களில் உழல ஆரம்பித்திருக்கிறார்கள். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் டிவியை ஆஃப் செய்து வைத்து விட்டு உடற்பயிற்சி, விளையாட்டு, உடல் உழைப்பு என கவனத்தை திசை திருப்பினாலே போதும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இன்னொரு ஆராய்ச்சி ஒன்று அதிகம் டிவி பார்க்கும் குழந்தைகளுடைய இடுப்பு அளவு பெருசாகிக் கொண்டே போகும் என்கிறது. அதாவது சிறுவயதிலேயே கொழுப்பு சேர்ந்து அவர்களுடைய பிற்கால வாழ்க்கையின் சுறுசுறுப்பை நறுக்கி எறியுமாம்.

தொலைக்காட்சியை வெறித்துப் பார்ப்பது அந்த நிழல் உலகத்தின் அங்கத்தினர்களுக்கு வாழ்த்துப் பாடுவதற்குச் சமம். அதற்காக உங்களுடைய முக்கியமான நேரங்களை நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருகாலத்தில் ஊரிலுள்ள அத்தனை பேருமே ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ்ந்தார்கள். தங்களது உறவுகளை பலப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இன்றைக்கு வீடுகளில் உள்ள நான்கைந்து நபர்களே கூட பரஸ்பரம் பேசிக்கொள்ளும் நேரம் ரொம்பக் குறைவு. வீட்டிலேயே இருப்பார்கள், ஆனால் ஏதோ உலக மகா உன்னதத்தைப் பார்ப்பது போல மணிக்கணக்கில் தொலைக்காட்சியையே வெறித்துக் கிடப்பார்கள். உறவுகளின் பலவீனத்துக்கு இந்தத் தொலைக்காட்சி துணைசெய்கிறது !

வாசிக்கும் பழக்கத்தை வாரிச் சுருட்டிப் பரணில் போடுகிறது தொலைக்காட்சி. இன்றைக்கு அத்துடன் டேப்லெட்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவையெல்லாம் சேர்ந்து கொண்டு வாசிக்கும் பழக்கத்தை முடிந்தமட்டும் கழுவில் ஏற்றுகின்றன.

ஓவரா டிவி பார்த்தா ஹார்ட் அட்டாக் கூட வரும் என “அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலகி” நூல் தனது ஆய்வையும் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. இந்த சிக்கல் புகைபிடிப்பது, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது ! என தனது கருத்தையும் இந்த ஆய்வு பதிவு செய்தது.

தொலைக்காட்சி பிரியர்கள் சராசரியாக 5.1 மணிநேரத்தை தொலைக்காட்சியில் செலவிடுகிறார்களாம். இது ரொம்ப ரொம்ப உயர்ந்த அளவு. மக்களுடைய நேரத்தைச் சுரண்டும் இந்த நேரம் வாழ்க்கையிலிருந்து கழிக்கப் படவேண்டியதே.

தொலைக்காட்சி நிஜ உலகிலிருந்து உங்களைக் கடத்திக் கொண்டு போய் ஒரு நிழல் உலகத்தில் குடியேற்றி வைக்கிறது. நிஜ மனிதர்களோடான மனிதனது உறவை அது துண்டித்து விடுகிறது. போதாக்குறைக்கு பெரும்பாலும் வரும் விளம்பரங்கள் வேறு நமது பர்ஸைப் பதம் பார்த்தும் விடுகின்றன.

கூடவே நமது மனசையும் சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டு ஒரு போலித்தன மனிதனாக நம்மை மாற்றியும் விடும். நமது மூளையின் சிந்தனைத் திறமையை மழுங்கடிக்கும் வேலையையும் கன கட்சிதமாய் தொலைக்காட்சி செய்து விடுகிறது. வாழ்க்கையில் ஒரு திருப்தியின்மையையும் அது தந்துவிடும்.

செலவழிக்கும் நேரம் திரும்ப வருவதில்லை. சாதனையாளர்களுக்கு தொலைக்காட்சி நேரம் என்பது தோல்வியை நோக்கிய தூண்டிலாய் மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

தொலைக்காட்சியை மிகக் குறைவாக தேவையான அளவு மட்டுமே உபயோகப் படுத்துவது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். தொலைக்காட்சிக்கு முன்னால் மூன்று மணி நேரம் செலவிடுவதை நிறுத்தி விட்டு, அப்படியே உங்கள் பெற்றோரின் அருகாமையில் மூன்று மணி நேரம் செலவிட்டுப் பாருங்கள். வாழ்க்கை அர்த்தப்படும் !