சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் !

 

அளவுக்கு அதிகமாக விமர்சகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடிய சுப்பிரமணிய புரம் என்னும் படத்தைப் பார்த்தேன்.

1980 களை கண்முன்னால் கொண்டு நிறுத்திய ஒரே காரணத்துக்காகப் படத்தைப் பார்க்க வேண்டுமெனில் நான் பேசாமல் ஒரு தலை ராகத்தையோ, இரயில் பயணங்களையோ இன்னொரு முறை பார்த்து விட்டு பேசாமல் போய் விட்டிருப்பேன்.

அமீர், பாலா இவர்களைப் பின் தொடர்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னோர் இயக்குனர் என்பது அவர்களுடைய சாயலில் வந்திருக்கும் படத்திலேயே தெரிகிறது.

கண்கள் இரண்டால் – என வசீகரிக்கும் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் மிளிர்ந்த பாடலையும், கதா நாயகனின் வசீகரச் சிரிப்பையும், கதாநாயகியின் வெட்கக் கண்ணசைவையும் தவிர்த்துப் பார்த்தால் படம் அசோக் நகர் சைக்கோக் கொலையாளியைப் போல எரிச்சல் படுத்துகிறது.

எடிட்டிங்கிலும், பழைய சூழலைக் கொண்டுவந்ததிலும் பிரமிக்க வைக்கின்றனர். ஆனால் பருத்தி வீரனைப் போல கொடூரமான ஒரு இறுதிக் காட்சி. சமுத்திரக்கனியை ஆட்டோவில் காலால் மிதித்து நர நரவென அறுத்து அதை பையில் போட்டுத் திரிவதும், கதாநாயகனை சரமாரியாக வெட்டிக் கொல்வதும் என காட்சிகளில் வீசும் குருதி நாற்றம் அருவருக்க வைக்கிறது.

இப்படிப் பட்ட திரைப்படங்களின் வெற்றி மீண்டும் சைக்கோ இயக்குனர்களை தமிழுக்கு இறக்கு மதி செய்துவிடுமோ எனும் பயம் மிளிர்கிறது. நேற்று தான் சென்னையில் புதிய ஒரு திரைப்பட போஸ்டரைப் பார்த்தேன் படத்தின் பெயர் : போர்க்களம்  துணை வாசகம் :  KILL or Get Killed  !!!. தமிழக அரசு சலுகை அறிவிக்காமல் இருந்திருந்தால் படத்தின் தலைப்பே KILL or Get Killed ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பருத்தி வீரனின் கொடுமையான இறுதிக் காட்சி எரிச்சலடைய வைத்தது. அந்தப் படத்தை தமிழ் சனங்கள் நானூறு நாள் ஓட வைத்தனர். இந்தப் படத்தில் குருவின் அடியொற்றி இன்னும் சிலரைக் கொன்றிருக்கிறார் சசி குமார்.. மக்கள் ஒரு வெள்ளி விழாவையேனும் கொடுப்பார்கள்.

காட்சிகளை இயல்பாய் காட்டினால் அதுவே அற்புதமான படம் என சில அறிவு ஜீவிகள் நினைக்கின்றனர். அந்தப் படங்கள் நல்லாயில்லை என்று சொன்னால் ஏதோ அவர்களுடைய ரசனையின் மதிப்பு மக்கள் மத்தியில் பலவீனப்படுவதாக நினைக்கிறார்கள். நான் அறிவு ஜீவி இல்லை, எனவே இப்படிப்பட்ட கோரமான படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. இந்தப் படத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக குசேலனைக் கோயில் கட்டிக் கும்பிடலாம்.

மீண்டும் ஒரு இரத்தக் களறியை நோக்கி நகர்கிறது தமிழ் சினிமா. பருத்தி வீரன் முன் மொழிய, சுப்ரமணிய புரம் வழிமொழிய வழியப்போகிறது திரைகளில் பிசுபிசுப்பாய் தமிழனின் ரசனையும், ரத்தமும்.