- தூய ஆவி

கிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள்.
இயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.
தூய ஆவியானவர் ‘தேற்றுபவர்’ என அழைக்கப்படுகிறார். இயேசு சிலுவையில் பலியாகி, உயிர் துறந்து பின் விண்ணேற்பு அடைந்தபின் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார். தூய ஆவியானவர் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.
இயேசு தனது மரணத்துக்கு முன்பே தூய ஆவியானவரைப் பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் சீடர்கள் அப்போது அதைப் புரிந்து கொள்ளவில்லை. ‘நான் விடைபெறுவது நல்லது தான். நான் சென்றால் தான் தூய ஆவியானவர் பூமிக்கு வருவார். அவர் வந்தால் நீங்கள் பலம் அடைவீர்கள், பலன் அடைவீர்கள். அவர் உங்கள் உள்ளங்களில் அமர்ந்து செயலாற்றுவார்’ என்றார் இயேசு.
அதன்படியே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இறந்தார். உயிர்த்தார்.
நாற்பதாவது நாள். பெந்தேகோஸ்தே நாள். அன்று தான் தூய ஆவியானவர் முழு வல்லமையோடு பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து சீடர்களின் இதயங்களில் நிரம்பினார். அதுவரை அச்சத்தோடு அறைகளில் அடைந்து கிடந்தவர்கள், உடனே தங்களது அச்சங்களை உதறிவிட்டு எழுந்தார்கள்.
ஏதோ ஒரு புத்துணர்ச்சி தங்களை நிரப்பியதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தூய ஆவியானவர் என்பதை அறிந்த போது அவர்கள் சிலிர்த்துப் போனார்கள். இயேசுவைப் பற்றிய அறிவித்தலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க அவர்கள் களமிறங்கினார்கள்.
தூய ஆவியானவர் மக்களின் இதயங்களின் வாழ்ந்து அவர்களை வழிகாட்டுபவராக இருக்கிறார். அவருடைய முதன்மையான பணியே, இயேசுவின் வாழ்க்கையின் படி வாழ மக்களைத் தூண்டுவது தான். உள்ளுக்குள்ளே மனசாட்சியைப் போல ஒலிக்கின்ற குரல் தூயஆவியானவருடையது. அது அவரை அழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழிகாட்டும்.
யாரையுமே வலுக்கட்டாயமாய் ஆளுமை செய்வதோ, வன்முறையாய் ஒரு சிந்தனையை மனிதரிடம் புகுத்துவதோ கிடையாது. எனவே தான் பைபிள் ‘தூய ஆவியால் நிரப்பப்படுதல்’ என்கிறது. அதையே தீய ஆவியைப் பற்றிப் பேசும்போது, ‘தீய ஆவி பிடித்துக்கொள்ளும்’ என்கிறது. ஒருவரை வலுக்கட்டாயமாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தீய ஆவி எனவும், ஒருவருடைய அழைப்புக்கு இணங்கி வந்து அன்புடன் வழிகாட்டினால் தூய ஆவி என்றும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளலாம்.
“தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்” (எபேசியர் 4 :30).
“தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.( 1 கொரி 2 : 10 ).
“ஒரே ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்தளிக்கிறார். ( 1 கொரி 12 :11 ) போன்ற பல்வேறு வசனங்கள் தூய ஆவி என்பது ‘உணர்வும், அறிவும், விருப்பமும்’ எல்லாம் உடைய ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
அவர் பேசுகிறார், செபிக்கிறார், கற்றுக் கொடுக்கிறார், தேற்றுகிறார், கண்டிக்கிறார் என பல்வேறு பணிகள் அவர் வெறும் ஒரு ஆற்றல் அல்ல, ஆற்றல் நிரம்பிய கடவுள் என்பதை விளக்குகின்றன.
அவர் திரித்துவக் கடவுளில் ஒருவராக இருப்பதால் தான், “தந்தை, மகனாகிய இயேசு, தூய ஆவி’ எனும் மூவரின் பெயராலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது.
தூய ஆவியானவர் எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துபவராக இல்லாமல், இயேசுவை முன்னிலைப் படுத்துபவராகவே இருக்கிறார். பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவராக அவர் இருக்கிறார். எனவே தான் தூய ஆவியானவரால் நிரம்பப் பெறுதல் தூய்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்கிறது பைபிள். பைபிளில் உள்ள வார்த்தைகள் எல்லாமே தூய ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை.
தூய ஆவியானவர் உலகிற்கு பாவம் தீர்ப்பு நீதி போன்றவற்றை சுட்டிக் காட்டுபவராகவும், உண்மை வழியில் நடத்துபவராகவும், புதுப்பிப்பவராகவும், வழிகாட்டுபவராகவும், இயேசுவை நமக்கு வெளிப்படுத்துபவராகவும், பலப்படுத்துபவராகவும், புனிதப்படுத்துபவராகவும், நிறைப்பவராகவும், கற்பிப்பவராகவும், ஒன்றிணைப்பவராகவும், சுதந்திரம் தருபவராகவும், ஆறுதலளிப்பவராகவும் என பல்வேறு பணிகளில் நம்மோடு இணைந்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி. தூய ஆவியானவரை இதயத்தில் வரவேற்று நமது வாழ்க்கையை தினம் தோறும் புனிதமான வழியில் தொடர்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் உயர்படி.
Like this:
Like Loading...