ஊனம் தடையல்ல

 மோசமான குணாதிசயம் தவிர ஊனம் வேறு இல்லை 
 – ஸ்காட் ஹேமில்டன். 

ஏதேனும் சின்னக் குறைபாடு இருந்தால் கூட அதைச் சுட்டிக் காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச் சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடல் ஊனம் ஒரு பொருட்டே அல்ல !

பேராசிரியர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் பற்றித் தெரியவில்லையென்றால் உங்களுக்கு அறிவியல் அலர்ஜி அன்று அர்த்தம். சமகால அறிவியலார்களில் வியப்பின் குறியீடாக இருப்பவர் இவர். இவருடைய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான புத்தகம். உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை இதை “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் பெயரில் அற்புதமாய் தமிழ்ப் படுத்தியும் இருக்கிறது.

இதைத் தவிரவும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகத்தின் தோன்றல் போன்றவை பற்றியும் இவர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் இவருக்கு இருக்கும் நோய் தான்.

1942ம் ஆண்டு இவர் பிறந்தார். அவருடைய 21வது வயதில் இவருக்கு ஒரு மிகப்பெரிய நரம்பு சார் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவருடைய நோய் அமியோட்ரோபிக் லேட்டரல் செலரோஸிஸ் (amyotrophic lateral sclerosis ) அதாவது உடல் மொத்தமும் செயலிழந்து போகும் நிலை.

இவரால் மூன்று சக்கர வாகனத்தை விட்டு எழும்ப முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. தலையை அசைக்கலாம். பேசுவதற்குக் கூட மைக் தேவைப்படும் ! தனது 21ம் வயதிலேயே இந்தக்  கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டார் இவர். “இன்னும் ரெண்டே வருஷம் தான்” என்று அவருக்கு டாக்டர்கள் கெடு விதித்தார்கள்.

இன்று அவருக்கு 70 வயது ! மரணத்தை வென்றது மட்டுமல்லாமல் அறிவியலையும் அறிந்து உலகையே வியக்க வைத்தார் இவர். 2009ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான “பிரசிடன்ஷியல் மெடல் ஆஃப் பிரீடம்” வழங்கப்பட்டது ! தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகட்த்தின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனராக இருக்கிறார்.

அறிவியல் உலகை இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கும் மாமேதையான ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்க்கு அவருடைய குறைபாடு எப்போதாவது தடைக்கல்லாய் இருந்திருக்குமா ?

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ, கோபம் கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை நன்றாகவே வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் துவங்கினால் வாழ நேரம் கிடைக்காது” எனும் அவருடைய வார்த்தைகளில் பொதிந்துள்ள தன்னம்பிக்கை வாசகங்கள் உயிரை உலுக்குகின்றன.

ஊனம் உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை. அவர்கள் இன்னொரு ஏரியாவில் மிகவும் பலமானவர்களாக இருப்பார்கள். உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பதில்லை. சோதனைகளைத் தரும் இறைவன் அதைத் தாங்கும் மன உறுதியையும் சேர்த்தே தருகிறார். அதை நம்பிக்கையோடு பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே நமது பணி.

நிக் வாயிச்சஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? 1982ம் ஆண்டு அவர் பிறந்தார். துயரம் என்னவென்றால் அவருக்கு இரண்டு கைகளும் கிடையாது, இரண்டு கால்களும் கிடையாது. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான் என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள். தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு. எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தில் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் ஒரு மாற்றுத் திறனாளி கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கால்ஃப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

அதுவரை கண்ணாடியில் ஊனத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தவர், முதன் முறையாக கண்களைப் பார்த்து சிரிக்கத் துவங்கினார். அன்று தொடங்கியது அவருடைய புதிய வாழ்க்கைக்கான காலண்டர். அன்றிலிருந்து அவருடைய சோகமும், துயரமும் காணாமலேயே போய்விட்டது. கால்ஃப் விளையாடினார், நீச்சலடித்தார், கடலில் தண்ணீர்ச் சறுக்கு விளையாட்டு விளையாடினார். குறையில்லாத மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.

இன்று 24க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து, தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். இலட்சக் கணக்கான மக்களின் மனதில் உற்சாகத்தை ஊற்றியிருக்கும் இவர் “லைஃப் வித்தவுட் லிம்ப்” எனும் ஒரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

செவி இல்லாமல் இசையை ரசிக்க முடியுமா” என்பார்கள். பதில் முடியும் என்பது தான் ! முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும். இன்றைக்கும் உலகின் அத்தனை இசை ஜாம்பவான்களையும் வியக்க வைக்கும் ஒரு இசைமேதை பீத்தோவான் தானே ! அவர் சிம்பொனி அமைத்த போது அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாய்க் கேட்காது ! கேட்கும் திறன் இல்லாமலேயே இசையின் உச்சத்தைத் தொட்டு விட்டவர் அவர். இப்போது சொல்லுங்கள். காது இல்லாமல் இசையை ரசிக்க முடியாதா ?

தனக்கு ஊனம் இருக்கிறது என நினைப்பது மட்டுமே ஊனம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும் போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்.

பெருந்தன்மை பழகு

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

கலீல் ஜிப்ரான்

ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தக் காணிக்கைப் பெட்டி. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள். தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது. அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள். அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.

ஓரமாய் அமர்ந்திருந்த இயேசு சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான். எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.

பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும். ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம். தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன்  “சரி” என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !

“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.

பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம். ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.

யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை. நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !

சிரியுங்கள்

புனிதர்களோடு அமர்ந்து அழுவதை விட  பாவிகளோடு சேர்ந்தாவது 
சிரிப்பதையே விரும்புவேன்  –  பில்லி ஜோயல்

சிலர் சிரிப்பதற்குக் காசு கேட்பார்கள். உம்மணாமூஞ்சிகள் என அவர்களுக்கு ஒரு செல்லப் பெயரை வைத்து உலகம் அழைக்கும். சிலரோ சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சிரிப்பு ஒரு அற்புதமான விஷயம். என்ன செய்ய, இன்றைய நாகரீக உலகில் பல வேளைகளில் சிரிப்பதே கூட அநாகரீகமாய் பார்க்கப்படுகிறது !

கிராமங்களிலுள்ள கல்யாண வீடுகளைப் போய்ப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து சிரியோ சிரியென சிரித்து மகிழ்வது வெகு சகஜமாகக் காணக் கிடைக்கும் காட்சி. ஆனால் நகர்ப்புறத்தில் அது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே ஒரு சின்ன சத்தம் எழுந்தால் கூட  “சத்தம் போடாதேப்பா, மெதுவா மெதுவா” என ஏதோ தீவிரவாதிகளில் ரகசியத் திட்டம் போலத் தான் பேசிக்கொள்கிறார்கள்.

வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை வரவழைத்து விடுகிறது. வஞ்சகமில்லாமல் சிரித்து வாழ்பவர்களுக்கு எண்டோதெலியத்தை ஆரோக்கியமாக்குகிறது. இரத்தக் குழாய்கள் சீராக இயங்குகின்றன என்பதெல்லாம் மருத்துவ உலகம் சொல்லும் ஆராய்ச்சி விளக்கங்கள்.

ஏதோ சிரிப்பது மனம் சார்ந்த விஷயம் என எட்டியே நிற்பவர்கள் கொஞ்சம் பக்கம் வாருங்கள். சிரிப்பதால் உடல் ஆரோக்கியம் தான் கணிசமாக ஏறுகிறது. மூளைக்கு அதிக ஆக்சிஜன் ஏற்றுமதியாகி, மூளை சட்டென சுறுசுறுப்பாகிறது. உடல் தசைகள், முக தசைகள் போன்றவை மிகவும் ஆரோக்கியமாக விளங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அப்படியே உடலுக்குள்ளும் பாய்ந்து ஒட்டுமொத்த உடலையுமே ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது.

சிரிக்கும் போது நமது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களின் பயன்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பயோகெமிக்கல்ஸ் செரிமானச் சிக்கல்களை சரிசெய்து, மன அழுத்தத்தை துடைத்தெறிந்து, மூளையை உற்சாகப்படுத்தி, மனதை இலகுவாக்குகிறது. ஒரு முறை மனம் விட்டுச் சிரிக்கும் போது உடலுக்குள் சுரக்கும் அமிலங்களை கடையில் பணம் கொடுத்து வாங்க வேண்டுமானால் எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா ? சுமார் 5 இலட்சம் ரூபாய்கள் ! இன்னுமா சிரிக்கத் தோன்றவில்லை.

நிறுவனங்கள் இப்போது சிரிப்பு விஷயத்தைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் வேலை செய்தால் தான் வேலை நன்றாக நடக்கும் என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவை ஊழியர்களுக்கென சிரிப்பு மூட்டும் கிச்சு கிச்சு நிகழ்ச்சிகளையும், கிச்சு கிச்சு பொழுதுபோக்கு அம்சங்களையும் நடத்துகின்றன.

சிரிப்புக்கு வலிகளைக் குறைக்கும் வலிமையும் இருக்கிறது என்கிறார் நார்மன் கசின் என்பவர். இவர் நிரந்தர முதுகெலும்பு வலியினால் பாதிக்கப்பட்டவர். பத்து நிமிடம் வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்த்தால் என்னால் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார் அவர். அதன் பின் சிரிப்பு வலியைக் குறைக்கும் என பல்வேறு மருத்துவ அறிக்கைகள், ஆய்வுகள் வெளியாகிவிட்டன. ஜேம்ஸ் வால்சன் எனும் அமெரிக்க மருத்துவர் தனது நூலான “ சிரிப்பும் உடல்நலமும்” எனும் நூலில் சிரிப்புக்கு இருக்கும் வலி நீக்கும் குணத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

வலியைக் குறைக்கும் எண்டோர்பின்கள் உடலில் சுரக்க சிரிப்பு உதவும் எனும் நம்பிக்கை சிலருக்கு, இல்லையில்லை சிரிக்கும் போது உடலில் இறுக்கம் குறைவதே வலி குறைய காரணம் என்னும் நம்பிக்கை வேறு சிலருக்கு. எப்படியோ சிரித்தால் வலி குறையும் என்பது மட்டும் பொதுவாகவே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியும், சிரிப்பும் குறித்த விழிப்புணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கிமு எழுநூறுகளில் வாழ்ந்த சாலமோன் மன்னன் தனது நீதி மொழிகளில், “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என எழுதியிருப்பதை நினைத்தால் ஆச்சரியம் மேலிடுகிறது.

நமக்கு வரக் கூடிய நோய்களில் 85 விழுக்காடு நோய்களை நமது உடலிலுள்ள சக்தியைத் தூண்டுவதன் மூலமாக குணப்படுத்த முடியும் என அடித்துச் சொல்கிறார் இங்கிலாந்தின் மருத்துவர் பிரான்ஸ் இன்கெல்பிங்கர். அதற்குத் தேவையானதெல்லாம் மருந்துகளோ, ஊசிகளோ அல்ல, மாறாக உற்சாகமான சிந்தனைகள், இலகுவான மனம், அன்பு செலுத்தும் குணம், நம்பிக்கை, நகைச்சுவை, சிரிப்பு, ஆனந்தம் இவையே !

சிரிப்பு தனி மனித பயன் என்பதையும் தாண்டி வேலை சார்ந்த விஷயங்களிலும் ஊழியர்களை மிகவும் திறமையாக வேலை செய்ய வைக்கிறது என்பது ஸ்பெஷல் செய்தி. சிரிப்பை அதிகம் நேசிப்பவர்கள் அதிக சிந்தனை சக்தியுடையவர்களாக இருப்பார்கள் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. இதன் மூலம் வேலையில் முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான கிரியேட்டிவிட்டி, புதுமைச் சிந்தனை போன்றவற்றை தூசு தட்டி சரிப்படுத்தும் வல்லமையும் சிரிப்புக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதற்கும், அடுத்த நபரை உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கும் கூட இந்த சிரிப்பு ரொம்பவே பயனுள்ளதாய் இருக்கிறது. கூடவே ஒரு பாசிடிவ் வேலைச் சூழலை இத்தகைய உற்சாகமான சிரிப்பு தருகிறது !

எனவே, சிரிப்பு ஒரு சீரியஸ் சமாச்சாரம் என்பதை மனதில் எழுதுங்கள்.

பாசிடிவ் திங்கிங் !

ஒவ்வொரு சாதனை வாய்ப்பிலும் ஒரு கடினத்தைப் பார்ப்பான் நெகடிவ் சிந்தனையாளன். ஒவ்வொரு கடினமான சூழலுக்குள்ளும் ஒரு சாதனை வாய்ப்பு இருப்பதைப் பார்ப்பான் பாசிடிவ் சிந்தனையாளன் – வின்ஸ்டன் சர்ச்சில்

ஒவ்வொரு சூழலையும் நாம் எப்படி அணுகிறோம் என்பதை வைத்து நாம் பாசிடிவ் சிந்தனையாளர்களா ? இல்லை நெகடிவ் சிந்தனையாளர்களா என்பதை அடையாளம் காண முடியும். நம்முடைய சிந்தனைகளின் தொகுப்பு தான் நமது செயல்பாடுகள். நமது சிந்தனைகளின் அடிப்படையில் தான் நமது குணாதிசயம் கட்டமைக்கப்படுகிறது.

பாசிடிவ் திங்கிங் அதிகமாக உள்ளவர்கள் தான் வெற்றியாளர்களாகப் பரிமளிக்கிறார்கள் என ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன. பாசிடிவ் அடி ! காரணங்கள் நிறைய உண்டு.

நேர் சிந்தனை தான் மனதில் தன்னம்பிக்கையை காங்கிரீட் போட்டு கட்டி வைக்கும். அந்த வலுவான அடித்தளம் அடிமேல் அடிவைத்து உங்களை அடுத்த நிலைக்குக் கூட்டிச் செல்லும். எந்த ஒரு செயலையும் பிள்ளையார் சுழி போட்டுத் துவங்குவீங்களோ இல்லையோ, தன்னம்பிக்கையின் சுழி போட்டுத் துவங்கக் கற்றுக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையில்லாமல் வைக்கும் முதல் சுவடு, தோல்வியை நோக்கிய சுவடு தான். அந்த தன்னம்பிக்கைக்குத் தேவை பாசிடிவ் திங்கிங்.

பாசிடிவ் சிந்தனை மனதை உற்சாகமாய் ஒரு செயலில் ஈடுபட வைக்கும். அதே நேரத்தில் அந்த உணர்வு உடலிலும் பரவி உடலையும் ஆரோக்கியமாய் வைத்திருக்கும் என்பது சுவாரஸ்யமான உண்மை. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ள பாசிடிவ் சிந்தனை உடையவர்களால் மட்டுமே முடியும். “என்னத்த எழும்பி இன்னிக்கு கிழிக்கப் போறோம்” என புலம்பிக் கொண்டே எழும்புபவர்கள் உண்மையில் எதையுமே கிழிப்பதில்லை. “ஆஹா… ஒரு நாள் கிடைத்திருக்கிறதே” என அந்த நாளை ஆர்வமுடன் வரவேற்கும் பாசிடிவ் சிந்தனை உடையவர்கள் அந்த நாளை ஒரு மகிழ்வின் நாளாகவோ, சாதனையின் நாளாகவோ செலவிடுவார்கள்.

ஒரு புகழ்பெற்ற உதாரணம் உண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு தண்ணீரை நிரப்புங்கள். ஒரு நெகடிவ் சிந்தனையாளரைக் கூப்பிட்டு இதில் என்ன இருக்கிறது என கேளுங்கள். “ஏங்க பாதி டம்ளர் காலியா இருக்கு? “ என்பார். ஒரு பாசிடிவ் சிந்தனையாளரை அழைத்துக் கேளுங்கள். “வாவ் பாதி டம்ளரில் நல்ல தண்ணீர் இருக்கிறதே” என்பார்.  எந்த ஒரு சூழலிலும் பாசிடிவ் விஷயங்களைப் பார்ப்பவர்கள் வாழ்வின் ஆனந்தமான திசையை நோக்கி நடக்கிறார்கள்.

பாசிடிவ் திங்கிங் உடையவர்களின் இன்னொரு குணாதிசயம் அவர்கள் எளிதில் பின்வாங்கிப் போக மாட்டார்கள் என்பது தான். இலை விழுந்தாலே பதறும் நெகடிவ் மனிதர்கள் மத்தியில், மலை விழுந்தால் கூட தொடர்ந்து நடக்கும் துணிவை பாசிடிவ் மனநிலை தந்து விடும். சின்னச் சின்னத் தோல்விகளைத் தாண்டிய பயணத்துக்கு நமக்குக் கைகொடுக்கப் போவது இந்த பாசிடிவ் சிந்தனைகள் தான். காரணம் ஒரு இருட்டான சுரங்கப்பாதையில் நடந்தால் கூட பாசிடிவ் சிந்தனை உடையவர்களின் கண்ணுக்கு முன்னால் எதிர் முனையிலுள்ள வெளிச்சமே தெரியும். நெகடிவ் மனிதர்களுக்கோ சுற்றியிருக்கும் இருட்டைப் பற்றிய கிலியே சுற்றி இழுக்கும்.

உடல் ஆரோக்கியத்துக்கும் பாசிடிவ் திங்கிங் உதவும் என்பது நம்பக் கடினமாய் இருதாலும் நம்பித் தான் ஆகவேண்டும். பாசிடிவ் சிந்தனை நிரம்பியிருக்கும் மக்களுக்கு ஒரு சின்ன ஜலதோஷம் வருவது கூட குறைவு என வியக்க வைக்கிறது மாயோ கிளினிக் ஆய்வு ஒன்று !

மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டி இதயத்துக்கு கெட்டி ஆயுளைக் கொட்டிக் கொடுப்பதில் பாசிடிவ் திங்கிங் ரொம்ப சமத்தாய்ச் செயல்படும். மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே பாதி நோய்கள் பறந்தே போய்விடும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “ஆயுசு கெட்டியா இருக்கணும்ன்னா, பாசிடிவ் சிந்தனையைக் கெட்டியா புடிச்சுக்கணும்” !

பாசிடிவ் சிந்தனை உடையவர்களே நல்ல தலைவர்களாகப் பரிமளிக்க முடியும். அதற்கு ஒரு காரணம் அவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை இருக்கும். எந்த ஒரு சூழலையும் அதன் பாசிடிவ் விளைவை நோக்கி  முடிவுகளைக் கூற அவர்களால் இயலும். ஒருவேளை தவறாய் முடிவெடுத்தால் கூட அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து பயணிக்கவும் அவர்களால் தான் முடியும்.

நெகடிவ் சிந்தனை பணியிடங்களில் தோல்வியைத் தருவதற்கு பல காரணங்கள் உண்டு. அது ஒருவித அலட்சியப் போக்கைத் தரும், சில விஷயங்களைத் தள்ளிவிடும், “நடந்தா நடக்கட்டும்” எனும் போக்கைத் தரும், சோம்பேறித்தனத்தை தோளில் ஏற்றும். இவையெல்லாம் பணியிடங்களில் உங்களைக் கீழே பிடித்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் பாசிடிவ் சிந்தனை இருந்தால் நம்பிக்கையுடன் திட்டமிடவும், அடுத்தவர்களை ஊக்கப்படுத்தவும், பாராட்டவும், கவனமாய்ச் செயல்படவும் வழிகாட்டும். அது வெற்றியைத் தவறாமல் கொண்டு வரும்.

உங்கள் சிந்தனைகளே உங்களை உருவாக்கும். சிந்தனைகளை பாசிடிவ் வழியை நோக்கிச் செலுத்துங்கள். உங்களை பிடித்துப் பின்னுக்கு இழுக்கும் நெகடிவ் சிந்தனைகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதை விலக்கி பாசிடிவ் மனநிலையை உருவாக்கத் துவங்குங்கள்.

உங்கள் பணியில் நீங்கள் முழு ஆர்வத்தோடு ஈடுபடுகிறீர்களா ? இல்லையேல் ஏன் ? எந்த சிந்தனைகள் உங்களை பின்னுக்குத் தள்ளுகின்றன ?

உங்கள் தனிப்பட்ட செயல்களிலெல்லாம் உற்சாகம் இருக்கிறதா ? உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் ?

நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இருக்கிறதா ? வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறதா ?

இப்படி உங்களையே சில கேள்விகள் கேளுங்கள். எந்த ஒரு நெகடிவ் சிந்தனை எழும் போதும், அதன் பாசிடிவ் சிந்தனை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். மனதில் உங்கள் நெகடிவ் சிந்தனைகளை பாசிடிவ் சிந்தனையால் மாற்ற முயலுங்கள். பழகப் பழக உங்கள் மனம் பாசிடிவ் பக்கம் பார்வையைத் திருப்பும் !

வாழ்க்கையும் வளம்பெறத் துவங்கும் !

நம்மை நாமே ஏற்றுக் கொள்வோம்

தனிமையிலேயே கொடுமையான தனிமை உன்னை நீயே ஏற்றுக் கொள்ளாத நிலை தான் – மார்க் ட்வைன்

வீட்டுக்கு ஒரு நண்பர் வருகிறார் என வைத்துக் கொள்வோம். ஓடிச் சென்று அவரை அப்படியே ஏற்றுக் கொள்வோம். சொந்தக் காரர்கள் வரும்போதும் அப்படியே. உள்ளே உட்கார வைத்து உபசரித்து நல்ல முறையில் அனுப்பி வைப்போம். ரொம்ப நல்ல விஷயம். தேவையான விஷயம். விருந்தோம்பலில் நமக்கு ஆயிரம் கால அனுபவம் உண்டு !

அதே அளவு உற்சாகத்தோடு நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா ? ஒரு சின்னக் குழந்தை தன்னை ஏற்றுக் கொள்ளும் அதே உற்சாகத்தோடு, அதே முழு நிறைவோடு நம்மை நாமே ஏற்றுக் கொள்கிறோமா ? இது தான் நாம் நம்மைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி.

தலையில் கொஞ்சம் முடி குறைவாய் இருந்தாலே “ஐயோ முடி கம்மியாயிடுச்சே” என கண்ட கண்ட தைலங்களைத் தேடி ஓடும் நபர்கள் நம்மிடையே எக்கச் சக்கம். முடி கொட்டினா கொட்டிட்டுப் போவுது, நான் என்னை முழுமையாய் ஏற்றுக் கொள்வேன் என நினைக்கும் நபர்கள் குறைவானவர்களே !

கொஞ்சம் கறுப்பா இருக்கேன், நல்ல முகப் பூச்சு கிடைத்தால் வெள்ளையாகலாம் என சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ரொம்ப வெள்ளையா இருக்கேன், கொஞ்சம் சிவப்பா இருந்தா நல்லா இருக்கும் என சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் கொஞ்சம் கறுப்பாகலாமா என ஓடும் மக்களும் ஏராளம் உண்டு. இருப்பதே சிறப்பானது எனும் ஏற்றுக் கொள்தல் தானே இனிமையான வாழ்க்கையின் முதல் படி.

நான் யாராய் இருந்தால் பரவாயில்லை, என்னை ஏற்றுக் கொள்கிறேன். நான் குண்டாய் இருந்தாலும் சரி, ஒல்லியாய் இருந்தாலும் சரி, என்னை அப்படியே ஏற்றுக் கொள்வேன். நான் பாடகனாக இருந்தாலும் சரி, திக்கு வாயனாய் இருந்தாலும் சரி என்னை அப்படியே ஏற்றுக் கொள்வேன். நான் என்னை நேசித்து என்னை ஏற்றுக் கொள்வேன் என்பதில் தான் நமது ஏற்றுக் கொள்தலின் வெற்றி ஆரம்பமாகிறது

தனக்கு ஏதோ குறையிருக்கிறது என்று நினைப்பது இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறியிருக்கிறது. நான் கொஞ்சம் கறுப்பா இருக்கேனோ ? இன்னிக்கு போட்டிருக்கிற டிரஸ் என்னை கொஞ்சம் டல்லா காட்டுதோ ? என்பது தொடங்கி தங்களுக்கு ஏதோ குறை இருப்பதாய் கற்பனை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இன்று அனேகம்.

நல்லா இருப்பவர்களே இப்படி இருந்தால் கொஞ்சம் குறைபாடு உள்ளவர்களுடைய கதி என்னாவது ? “கொஞ்சம் முதுகு வலி. அதுமட்டும்  இல்லேன்னா பட்டையைக் கிளப்பியிருப்பேன்…. ”,”எனக்கு இங்கிலீஷ் தான் பேச வராது. அது மட்டும் இல்லேன்னா நான் எங்கேயோ போயிருப்பேன்… “  என சாதாரணமான பிரச்சினைகளைக் கூட பேனர் கட்டி விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

ஏற்றுக் கொள்தல் என்பதை உளவியலார்கள் பல பாகங்களாகப் பிரிக்கிறார்கள். உடல் ரீதியான ஏற்றுக் கொள்தல் முதலாவது. இதில் தான் நமது உடல் அமைப்போ, நிறமோ, உயரமோ வருகிறது. அதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியது முதல் தேவை.

இரண்டாவது உணர்வு ரீதியாக நம்மை நாமே ஏற்றுக் கொள்வது. இதில் உறவுகள் சார்ந்த ஏற்றுக் கொள்தல்கள், புரிதல்கள், நிராகரிப்புகள், அதிர்ச்சியான நிகழ்வுகள் என எல்லாவகையான உணர்வு ரீதியான விஷயங்களும் வரும். நம்முடைய உணர்வு ரீதியான விஷயங்களை ஏற்றுக் கொள்வதில் நமது இரண்டாவது வெற்றி இருக்கிறது.

மூன்றாவது திறமை சார்ந்த ஏற்றுக் கொள்தல். நம்முடைய திறமைகள், திறமையின்மைகள் எல்லாம் இந்த வகையில் அடங்கிவிடுகிறது. இருக்கும் திறமையை ஏற்றுக் கொண்டு செயல்படும் மனநிலையை மூன்றாவது நிலை வலியுறுத்துகிறது.

முதலில் எதையெல்லாம் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறகு எதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பட்டியலிடுங்கள். ஏற்றுக் கொள்ளாத விஷயங்களை ஒவ்வொன்றாய் ஏற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள். உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்வது தான் பிறர் உங்களை ஏற்றுக் கொள்வதன் முதல் படி. ஏற்றுக் கொண்டபின் மாற்றிக் கொள்ள வேண்டும் என தோன்றும் தவறுகளை மாற்றிக் கொள்ளுங்கள் !

ஜான் மில்டன் எனும் எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடைய “பேரடைஸ் லாஸ்ட்” எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

நம்மிடம் எது இல்லை என்று பார்த்து முடங்குவது துயரங்களின் தெருக்களில் நடப்பது போன்றது. நம்மிடம் என்ன ஸ்பெஷல் என்று பார்த்து வாழ்வதே வெற்றியின் வீதிகளில் வீறு நடை போடுவது போன்றது.  நம்மை ஏற்றுக் கொள்வோம், அதுவே வெற்றியின் முதல் படி.