பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்

 1. பரிசேயர்

Image result for pharisees

இயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள்.

சட்டமா ? மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.

கடவுளின் வார்த்தையை நம்புபவர்கள். அதே நேரத்தில் பாரம்பரியமாய் செய்து வரும் செயல்களை விட்டு விட மறுப்பவர்கள். சமூக, அரசியல் குழுக்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தங்களுடைய சட்ட அறிவினாலும், மறைநூல் அறிவினாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்கள்.

சமூக அந்தஸ்தைப் பொறுத்தவரை இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. ஆனாலும் மறை நூல் அறிவின் காரணமாக செபக்கூடங்களிலெல்லாம் சிறப்பிடம் பெற்றனர். பொதுமக்களுக்கு இவர்கள் மேல் அச்சம் கலந்த மரியாதை இருந்தது.

ஆன்மா அழியாது என்றும், இறப்பு முடிவல்ல, உயிர்ப்பு உண்டு என்பதையெல்லாம் இவர்கள் நம்பினார்கள். அதே போல கடவுள் வல்லமையுடையவர், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்றும் நம்பினார்கள். அதே நேரத்தில் மனித முடிவுகளும் முக்கியமானவை எனும் சிந்தனை அவர்களிடம் இருந்தது.

சதுசேயர்கள் எனும் இன்னொரு குழுவினர் அப்போது இருந்தனர். அவர்களோடு எப்போதுமே இவர்கள் முரண்பட்டே இருந்தனர்.

பரிசேயர்களில் பல வகையினர் உண்டு. ஒருவகையினர் காணிக்கைகள் இடும்போது எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே காணிக்கையிடுவார்கள். தர்மம் போடும்போது பக்கத்தில் போகிறவர்களை அழைத்து நிற்கவைத்து தர்மம் செய்யும் பரிசேயர்கள் இருந்தனர். பாவம் செய்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன் கண்களை மூடியும், தரையைப் பார்த்தும் நடந்து சென்ற பரிசேயர்களும் இருந்தார்கள்.

சமய நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும் இவர்கள் இயேசுவோடு எப்போதும் முரண்பட்டார்கள். காரணம், இவர்கள் சட்டங்களை நேசித்தார்கள், இயேசுவோ மனிதர்களை நேசித்தார்.

பேய்பிடித்திருந்த ஒருவனுடைய பேயை இயேசு ஓட்டியபோது, “இவன் பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டு தான் பேயோட்டுகிறான்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுவானா ? வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா ?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

இன்னொரு முறை, “உங்க சீடர்கள் சாப்பிடும் முன் கை கழுவுவதில்லை. இது மரபு மீறுதல்” என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவோ அவர்களிடம், “வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. வாயினின்று வெளிவரும் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை போன்ற தீய எண்ணங்களே மனிதனை தீட்டுப்படுத்தும்” என்றார்.

இன்னொரு முறை அவர்கள் இயேசுவிடம் வந்து, “ஒருவர் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா ?” என்று கேட்டனர். ஏனெனில் விலக்குச் சீட்டு கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என மோசே சொல்லியிருந்தார். இயேசு அவர்களிடம்,

“ஆதியில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்த போது அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டார். உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மண விலக்கை அனுமதித்தார். தவறான நடத்தை தவிர எதற்காகவும் மனைவியை விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்பவர் விபச்சாரப் பாவம் செய்கிறார்” என்றார்.

இப்படி இயேசுவை நோக்கி பரிசேயர்கள் நீட்டிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இயேசு மிகவும் தீர்க்கமான பதிலை கொடுத்து வந்தார்.

வெளிவேடமான வாழ்க்கையை இயேசு பரிசேயத்தனம் என்று பெயரிட்டு அழைத்தார். இதயத்தில் தூய்மையையே அவர் விரும்பினார்.

பரிசேயத்தனத்தின் அடையாளங்களில் சில இவை.

 1. வெளிப்படையான நேர்மையான செயல்களில் மட்டுமே கவனம் இருக்கும்.
 2. தாங்கள் செய்கின்ற மத செயல்களான நோன்பு, காணிக்கை போன்றவற்றைப் பெருமையாக பேசித்திரிவர்.
 3. பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை இவர்கள் மனதில் உண்டு.
 4. பிறரைப் பற்றி தாழ்வாகவே எப்போதும் நினைப்பார்கள்.
 5. தங்களது குடும்பக் கடமைகளை உதறிவிட்டு மத செயல்களையும், சட்டங்களையும் தூக்கிப் பிடிப்பார்கள்.
 6. தாங்கள் போதிக்கும் நல்ல விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த மாட்டார்கள்.
 7. பிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமானதாய் தெரியும். புகழ், பெருமை, கௌரவம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.
 8. ஏழைகளை வஞ்சிப்பதற்குத் தயங்க மாட்டார்கள்.
 9. பண ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.
 10. உண்மையான இறைவாக்கினர்களையும், இறை மனிதர்களையும் வெறுப்பார்கள்.

இத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம். அத்தகைய சிந்தனைகளை நம் மனதை விட்டு அகற்றுவோம்.

பரிசேயத்தனம் அல்ல, பரிசுத்தமே நமக்குத் தேவை.

பைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்

 1. லூசிபர்

 Image result for lucifer the fallen angel

முதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.

லூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.

தன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.

சாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.

விண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக‌ செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.

உதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.

இதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.

அலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.

சாத்தானை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.

மக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.

சாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.

பொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.

“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.

 

 1. சாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.
 2. போலித்தனமான போதனைகளை விதைப்பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.
 3. கர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.
 4. மீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்
 5. உண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.
 6. நம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.
 7. பயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.
 8. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.
 9. மனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.
 10. சிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.

சாத்தானின் குணாதிசயங்களை அறிந்து கொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.

 

 

பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி

 1. தூய ஆவி

Image result for Holy Spirit apostle

கிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள்.

இயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.

தூய ஆவியானவர் ‘தேற்றுபவர்’ என அழைக்கப்படுகிறார். இயேசு சிலுவையில் பலியாகி, உயிர் துறந்து பின் விண்ணேற்பு அடைந்தபின் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார். தூய ஆவியானவர் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

இயேசு தனது மரணத்துக்கு முன்பே தூய ஆவியானவரைப் பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் சீடர்கள் அப்போது அதைப் புரிந்து கொள்ளவில்லை. ‘நான் விடைபெறுவது நல்லது தான். நான் சென்றால் தான் தூய ஆவியானவர் பூமிக்கு வருவார். அவர் வந்தால் நீங்கள் பலம் அடைவீர்கள், பலன் அடைவீர்கள். அவர் உங்கள் உள்ளங்களில் அமர்ந்து செயலாற்றுவார்’ என்றார் இயேசு.

அதன்படியே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இறந்தார். உயிர்த்தார்.

நாற்பதாவது நாள். பெந்தேகோஸ்தே நாள். அன்று தான் தூய ஆவியானவர் முழு வல்லமையோடு பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து சீடர்களின் இதயங்களில் நிரம்பினார். அதுவரை அச்சத்தோடு அறைகளில் அடைந்து கிடந்தவர்கள், உடனே தங்களது அச்சங்களை உதறிவிட்டு எழுந்தார்கள்.

ஏதோ ஒரு புத்துணர்ச்சி தங்களை நிரப்பியதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தூய ஆவியானவர் என்பதை அறிந்த போது அவர்கள் சிலிர்த்துப் போனார்கள். இயேசுவைப் பற்றிய அறிவித்தலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க அவர்கள் களமிறங்கினார்கள்.

தூய ஆவியானவர் மக்களின் இதயங்களின் வாழ்ந்து அவர்களை வழிகாட்டுபவராக இருக்கிறார். அவருடைய முதன்மையான பணியே, இயேசுவின் வாழ்க்கையின் படி வாழ மக்களைத் தூண்டுவது தான். உள்ளுக்குள்ளே மனசாட்சியைப் போல ஒலிக்கின்ற குரல் தூயஆவியானவருடையது. அது அவரை அழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழிகாட்டும்.

யாரையுமே வலுக்கட்டாயமாய் ஆளுமை செய்வதோ, வன்முறையாய் ஒரு சிந்தனையை மனிதரிடம் புகுத்துவதோ கிடையாது. எனவே தான் பைபிள் ‘தூய ஆவியால் நிரப்பப்படுதல்’ என்கிறது. அதையே தீய ஆவியைப் பற்றிப் பேசும்போது, ‘தீய ஆவி பிடித்துக்கொள்ளும்’ என்கிறது. ஒருவரை வலுக்கட்டாயமாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தீய ஆவி எனவும், ஒருவருடைய அழைப்புக்கு இணங்கி வந்து அன்புடன் வழிகாட்டினால் தூய ஆவி என்றும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளலாம்.

“தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்” (எபேசியர் 4 :30).

“தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.( 1 கொரி 2 : 10 ).

“ஒரே ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்தளிக்கிறார். ( 1 கொரி 12 :11 ) போன்ற பல்வேறு வசனங்கள் தூய ஆவி என்பது ‘உணர்வும், அறிவும், விருப்பமும்’ எல்லாம் உடைய ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அவர் பேசுகிறார், செபிக்கிறார், கற்றுக் கொடுக்கிறார், தேற்றுகிறார், கண்டிக்கிறார் என பல்வேறு பணிகள் அவர் வெறும் ஒரு ஆற்றல் அல்ல, ஆற்றல் நிரம்பிய கடவுள் என்பதை விளக்குகின்றன.

அவர் திரித்துவக் கடவுளில் ஒருவராக இருப்பதால் தான், “தந்தை, மகனாகிய இயேசு, தூய ஆவி’ எனும் மூவரின் பெயராலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது.

தூய ஆவியானவர் எப்போதுமே தன்னை  முன்னிலைப்படுத்துபவராக இல்லாமல், இயேசுவை முன்னிலைப் படுத்துபவராகவே இருக்கிறார். பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவராக அவர் இருக்கிறார். எனவே தான் தூய ஆவியானவரால் நிரம்பப் பெறுதல் தூய்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்கிறது பைபிள். பைபிளில் உள்ள வார்த்தைகள் எல்லாமே தூய ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை.

தூய ஆவியானவர் உலகிற்கு பாவம் தீர்ப்பு நீதி போன்றவற்றை சுட்டிக் காட்டுபவராகவும், உண்மை வழியில் நடத்துபவராகவும், புதுப்பிப்பவராகவும், வழிகாட்டுபவராகவும், இயேசுவை நமக்கு வெளிப்படுத்துபவராகவும், பலப்படுத்துபவராகவும், புனிதப்படுத்துபவராகவும், நிறைப்பவராகவும், கற்பிப்பவராகவும், ஒன்றிணைப்பவராகவும், சுதந்திரம் தருபவராகவும், ஆறுதலளிப்பவராகவும் என பல்வேறு பணிகளில் நம்மோடு இணைந்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி. தூய ஆவியானவரை இதயத்தில் வரவேற்று நமது வாழ்க்கையை தினம் தோறும் புனிதமான வழியில் தொடர்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் உயர்படி.

பைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு

97 யூதா ததேயு

Image result for Judas thaddeus apostle

இயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம்,

“ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு.

அதற்கு இயேசு  “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்” என்றார்.

இயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.

இவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இயேசுவோடு அவருடைய மரணம் வரைக்கும் தொடர்ந்து நடந்தவர். இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் இவரை இறை ப‌ணிக்காக தயாராக்கின‌. இயேசுவின் மரணத்துக்குப் பின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தார். இயேசு உயிர்த்த பின்பும் இவரிடம் துணிச்சல் வரவில்லை. ஆனால் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின்பே துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் துவங்கினார்.

இயேசுவின் சீடர்களில் பலரும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர்கள். யூதா சற்று வித்தியாசமானவர். அவர் உழவுத் தொழிலைச் செய்து வந்தார். அராமிக் மொழியுடன் கூடவே கிரேக்க மொழியும் இவருக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய நற்செய்தி அறிவித்தலுக்கு மிகவும் கைகொடுத்தது.

யூதேயா, சமாரியா, மெசபடோமியா, சிரியா மற்றும் லெபனானில் இவருடைய பணி இருந்தது. பைபிளில் யூதா என்றொரு நூல் உண்டு. அந்த நூலை இவர் தான் எழுதினார் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் அந்த நூல் காலத்தால் இவருக்குப் பிந்தையது, எனவே இவர் அதை எழுதியிருக்க முடியாது என்பது பல‌ விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த நூல் செறிவான ஆன்மீக சிந்தனைகள் அடங்கிய நூல்.

ததேயுவின் பணிகள் மெசபடோமியாவில் மிகவும் வலுவாக இருந்தன. இயேசுவோடு நேரடியாகப் பயணித்த அனுபவத்திலும், தூய ஆவியானவரின் துணையுடனும் அவர் தனது பணியை தீவிரமாய் மேற்கொண்டார். இயேசுவே உண்மையான கடவுள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள் என்பதே அவருடைய போதனையின் மையமாய் இருந்தது.

நோய் தீர்க்கும் ஆற்றலும் இவரிடம் மிகுதியாய்க் காணப்பட்டது. ஒருமுறை அங்குள்ள மன்னருக்கு தீரா வியாதி ஒன்று வந்தது. ததேயு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மன்னனை இயேசுவின் பெயரால் சுகமாக்கினார். இதனால் நாடெங்கும் யூதாவின் பெயரும், அவர் கொண்டு வந்த நற்செய்தியும் பரவியது.

நோயாளிகள் பலர் ததேயுவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ததேயு நற்செய்தியையும், சுகத்தையும் அளித்தார். “இயேசுவின் பெயரால் நலம்பெறு” என்று சொல்வதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

ஆர்மீனியா பகுதியிலும் ததேயுவின் பணி வீரியத்துடன் இருந்தது. ஆர்மீனியாவில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடு.

ததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். பாரசீகத்தில் சிலை வழிபாடு அப்போது மிகுதியாய் இருந்தது. ததேயு அந்த இடத்துக்குச் சென்றார். துணிச்சலுடன் அவர்களிடம் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார்.

மக்களின் கோபம் கரைகடந்தது. அவர்கள் யூதாவுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றின. நாட்டில் அது ஒரு மாபெரும் கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாட்டு மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவைப் பின்பற்றத் துவங்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கி.பி 67. தற்போதைய ஈரானில் கொலை வெறி கொண்ட மதவாதிகளால் பிடிக்கப்பட்டு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அக்டோபர் 24ம் தியதியை அவர்கள் புனித யூதா ததேயு தினமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசுவின் மீது ஆழமான விசுவாசம் வேண்டும் என்பதையும், தூய ஆவியானவரால் நிரப்பப் பட வேண்டியது அவசியம் என்பதையும் ததேயுவின் வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது.

பைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு

பிலிப்பு

Image result for Philip jesus apostle

பிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத நபர்.

ஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

அப்போது பிலிப்பு, “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

இயேசுவோ, “பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்பு கூர்வோம்” என்றார்.

இயேசு இறந்து உயிர்த்தபின் பிலிப்பு தனது பணியில் விஸ்வரூபம் எடுத்தார். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் அவரோடு முழுமையாக இருந்தது. தூய ஆவியின் அறிவுறுத்தலின் படியே அனைத்தையும் சென்றார்.

“நீ, காசாவுக்குச் செல்லும் வழியே போ…” தூதர் ஒருமுறை பிலிப்புவிடம் சொன்னார். பிலிப்பு அப்படியே செய்தார்.

அங்கே எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் ஏசாயாவின் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.

“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!”

பிலிப்பு அவரருகே சென்று கேட்டார்

” நீர் வாசிப்பதன் பொருள் தெரியுமா ?”

“இல்லை… யாராவது விளக்கமாய்ச் சொன்னால் மகிழ்வேன். இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? “

“நான் சொல்கிறேன்” பிலிப்பு சொன்னார். இயேசுவைக் குறித்தே அந்த தீர்க்கத்தரிசனம் என்பதை மிக தெளிவாக விளக்கினார். அந்த கணமே அந்த அதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்டார்.

“நான் திருமுழுக்கு பெற வேண்டும்” என்றார் அவர். பிலிப்பு மகிழ்ந்தார். போகும் வழியிலேயே ஒரு நீர்நிலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அடுத்த கணமே அங்கிருந்து பிலிப்பு மறைந்து போனார்.

சென்ற இடமெல்லாம் பிலிப்பின் பணி மிகவும் வல்லமையாய் இருந்தது. சமாரியாவில் அவர் பல்வேறு நோயாளிகளை சுகமாக்கியும், பேய்களைத் துரத்தியும், மாபெரும் சாட்சியான வாழ்க்கை வாழ்ந்தார்.

அங்கே சீமோன் என்றொருவர் இருந்தார். அவர் மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கி வைத்திருந்தார். அவருடைய சித்து வேலையில் மக்கள் சிக்கிக் கிடந்தனர். அவர்களிடம் பிலிப்பு இயேசுவைப் பற்றிய உண்மையை போதித்தபோது மக்கள் மனம் மாறினர். கடைசியில் சீமோனே மனம் திரும்பினார். மக்கள் வியந்தனர்.

பிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது என்கிறது வரலாறு. இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர், அதன் பின்னர் அங்கிருந்து தற்போதைய துருக்கியிலுள்ள‌ எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.

எராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.

மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் !

கூடியிருந்த மக்கள் பிலிப்பு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடு நடுங்கினார்கள்.

பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல சிலுவையில் அறைந்து தான் இவரையும்  கொல்லவேண்டும் என்று கூறி, 87 வயதான பிலிப்புவை வளைத்துப் பிடித்தார்கள்.

சிலுவை கொண்டு வரப்பட்டது. பிலிப்பு சிலுவையோடு பிணைத்துக் கட்டப்பட்டார். “இயேசுவே இவர்களை மன்னியும்” என்று பிலிப்பு உரக்கக் கூறினார். அதைக் கேட்ட மக்களின் ஆத்திரம் இரண்டு மடங்கானது. அவரை நோக்கி, கற்களை எறிந்தனர். இரத்தம் சொட்டச் சொட்ட பிலிப்பு மரித்தார்.

பிலிப்புவைப் போல, இயேசுவின் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்களாகவும், தூய ஆவியின் துணையோடு வாழ்பவர்களாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

 

பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு

Image result for Matthew tax collector

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் ம‌த்தேயு. அவ‌ர் சுங்க‌ச்சாவ‌டியில் அம‌ர்ந்து வ‌ரி வ‌சூல் செய்யும் ப‌ணியைச் செய்து வ‌ந்தார்.

ஒரு நாள் இயேசு அவ‌ரைப் பார்த்து,

“என்னைப் பின்பற்றி வா” என்றார்.

சுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார்.

இயேசு த‌ன‌து திருத் தூத‌ர்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌போது, எல்லோரையும் வேலையில் இருந்த‌போது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்ப‌டையில் தான் ம‌த்தேயுவையும் தேர்ந்தெடுத்தார்.

வரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.

இயேசுவோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசு மரணமடைந்து உயிர்த்தபின் தூய ஆவியால் நிரப்பப்பட்டு நற்செய்தி அறிவித்தலுக்கு ஆயத்தமானார்.

மத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவரிடம் ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.

பாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன்னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார். சற்றும் சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தார் அவர்.

எகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயு அந்த சூழலை தனது நற்செய்தி அறிவித்தலுக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பாகக் கொண்டார்.

அரச மாளிகைக்குச் சென்றார் மத்தேயு, “இயேசு நினைத்தால் உங்கள் மகனை உயிர்ப்பிக்க முடியும். அவர் வாழ்ந்த காலத்தில் லாசரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர்” என்றார். அரசர் தனது மகனைக் குணமாக்குமாறு மத்தேயுவிடம் வேண்டினார்.

மத்தேயு எகிப்திய‌ மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் ! நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது. ப‌ல‌ர் இயேசுவின் சீட‌ர்க‌ளாக‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். மத்தேயுவின் நற்செய்தி அறிவித்தல் பணி தீவிரமடைந்தது.

அரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. அவர்களோடு யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது மதச் சட்டம். இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.

இயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். தொழுநோயையெல்லாம் குணப்படுத்த முடியுமா என மக்கள் சந்தேகப்பட்டார்கள். மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். “இயேசுவின் பெயரால் நலம் பெறு” என்றார். அவள் நலம் பெற்றாள்.

ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கை வ‌லுவ‌டைய‌ ஆர‌ம்பித்த‌து. அங்கே கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்துக்கான‌ விதை அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ ஊன்ற‌ப்ப‌ட்ட‌து. மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.

அதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

மத்தேயு கலங்கவில்லை. இயேசுவுடன் நேரடியாகப் பணியாற்றிய அனுபவமும், உயிர்ப்பு அனுபவத்தில் பங்குபெற்ற அனுபவமும், தூய ஆவியால் நிரப்பப்பட்ட அனுபவமும் அவருடைய நெஞ்சில் இருந்தது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவை உறுதியாக பற்றிக் கொண்டார்.

படைவீரர்கள் மத்தேயுவை நிற்க வைத்தார்கள். ஈட்டிகளைக் குறிபார்த்து மத்தேயுவின் உடலில் வீசினார்கள். மத்தேயுவின் உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.

பல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அந்தக் காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிக்கும் தொழிலைச் செய்த மத்தேயு கிறிஸ்தவத்தின் முக்கியமான நபராக மாறினார்.

புதிய ஏற்பாட்டு நூலின் முதல் நூலாகிய “மத்தேயு நற்செய்தி” இவரால் எழுதப்பட்டது தான். அத‌னால் கிறிஸ்த‌வ‌ம் உள்ள‌ கால‌ம் வ‌ரை இவ‌ர‌து பெய‌ர் உச்ச‌ரிக்க‌ப்ப‌டும்.

ந‌ம‌து ப‌ழைய‌ வாழ்க்கை எப்ப‌டி இருந்தாலும் இயேசுவால் அழைக்க‌ப்ப‌ட்ட‌பின் அவ‌ருக்காக‌வே முழுமையான‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் வாழ‌ வேண்டும் என்ப‌தே ம‌த்தேயுவின் வாழ்க்கை ந‌ம‌க்கு சொல்லும் பாட‌மாகும்.

பைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்

நத்தானியேல்

Image result for Nathaniel apostle

நத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. “இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்” என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார்.

நத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார்.

பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்

ந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார்.

ந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்றார். ந‌த்தானியேல் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார். “என்னை உம‌க்கு எப்ப‌டித் தெரியும் ?” என்று கேட்டார்.

“பிலிப்பு உம்மை அழைக்கும் முன், நீர் அத்திமரத்தின் அடியில் இருந்தபோதே உம்மைக் கண்டேன்” என்றார். நத்தானியேல் வியந்து போய், “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

“உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார் இயேசு. அத‌ன்ப‌டியே இயேசுவின் பல்வேறு அதிச‌ய‌ங்க‌ளைக் க‌ண்டார்.

இயேசு இற‌ந்து உயிர்த்த‌பின் இவ‌ரும் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌லிமைய‌டைந்தார். உல‌கெங்கும் சென்று ந‌ற்செய்தியை அறிவிக்க‌வும், ம‌ன‌ம் திரும்புவோரை இயேசுவின் சீட‌ர்க‌ளாக்க‌வும் புற‌ப்ப‌ட்டார்.

இவர் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் சின்ன ஆசியாவில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடருடன் சிலகாலம் பணியாற்றி வந்தார்.

அதன்பின்னர் நத்தானியேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நத்தானியேலும் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.

ஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து நற்செய்தி அறிவித்தலைச் செய்தார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ளும், வ‌ன்முறைக‌ளும் ஏவி விட‌ப்ப‌ட்ட‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். “கிறிஸ்த‌வ‌ர்க‌ள்” எனும் பெய‌ர் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.

நத்தானியேல் தொடர்ந்து பணிசெய்தார்.

அப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நத்தானியேல் அரண்மனைக்குச் சென்றார்.

” நீங்கள் இயேசுவை நம்பினால், இதோ இந்தப் பெண்ணை நான் இயேசுவின் பெயரால் சுகமாக்குவேன்” என்றார். அரண்மனை வாசிகள் சிரித்தனர்.

“அப்படி இயேசு இவருக்குச் சுகம் கொடுத்தால் கண்டிப்பாக நம்புவோம்” என்றார்கள்.

நத்தானியேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக சுகமடைந்து எழுந்தாள்.  அனைவரும் அதிசயித்தனர்.

அரண்மனை சட்டென தலைகீழானது. ப‌லர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.

அரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நத்தானியேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.

சிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். நத்தானியேல் இருந்தால் நமது பொழைப்பு ஓடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அரசனை நம்பி பயனில்லை, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் வந்தார், அரசருடைய சகோதரன்!. அவர் மூலமாக நத்தானியேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.

நத்தானியேல் பிடிக்கப்பட்டார்.

அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.

நத்தானியேல் கலங்கவில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே சாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். “இயேசுவை நான் விரைவில் சந்திக்கப் போகிறேன். இயேசுவே இவர்களை மன்னியும்” என்றார்.

மிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் நத்தானியேலின் தோலை உரித்து, சிலுவையில் அவரைத் தலைகீழாய் அறைந்து கொன்றார்கள். அது கிபி. 68.

டைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.

இயேசுவின் போதனைகளையும், இயேசு இறைமகன் எனும் உண்மையையும் சுமந்து செல்ல ஆதிக் கிறிஸ்தவர்கள் பட்ட வலிகளை நத்தானியேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

 

பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு

யாக்கோபு

Image result for Jacob the apostle

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு சீட‌ர்க‌ளில் ஒருவ‌ர் யாக்கோபு. இவ‌ர் இயேசுவின் ச‌கோத‌ர‌ர்க‌ளில் ஒருவ‌ர் என‌ அறிய‌ப்ப‌டுகிறார்.

இயேசுவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். கூடவே சகோதரிகளும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் நம்புகிறார்கள். அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதுண்டு

இயேசுவின் தாய் மரியாள் தூய ஆவியினால் கருத்தரித்து இயேசுவைப் பெற்றெடுத்தார். அதன்பின் அவருக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருப்பது மரியாவின் தூய்மை நிலையைப் பாதிக்கும் என்பது ஒரு சாராருடைய சிந்தனை. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் மரியம்(மரியாள்) கன்னியாகவே வாழ்ந்தார் என்கிற‌து.

இயேசுவின் அன்னையை வணக்கத்துக்குரியவராகவும், இயேசுவிடம் பரிந்து பேசுபவராகவும் பார்க்கும் பிரிவினர், மரியாள் கன்னியாகவே வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றார் என நம்புகின்றனர். மற்ற பிரிவினர், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

முதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத யாக்கோபு, இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். இயேசுவின் அப்போஸ்தலர்கள் எல்லோருமே இயேசுவின் மரணத்தின் போது பயந்து நடுங்குகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து என அறைகளில் ஒளிந்து கொள்கின்றனர். இயேசு விண்ணகம் சென்று தூய ஆவியை அனுப்பியபின் அவர்கள் துணிச்சலடைகின்றனர்.

யாக்கோபுவும் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு துணிச்சலடைகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது இயேசுவைக் கொலை செய்த‌ எருசலேமில் !

எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னே பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தனர். ஆனாலும், கடைசி வரை துணிச்சலோடு நற்செய்தி அறிவித்தார் யாக்கோபு. இவர் எருசலேமில் துணிச்சலுடன் பணியாற்றியதால், மற்ற அப்போஸ்தலர்கள் நம்பிக்கையுடன் வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றத் துவங்கினார்கள்.

யாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த அவமானமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இயேசுவைக் கொன்றவுடன் எல்லாம் முடிந்து விடும் என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால் கண்ணிவெடியில் கால்வைத்த மனநிலையில் இப்போது இருந்தார்கள்.

எத்தனையோ இறைவாக்கினர்களைக் காலம் காலமாய்க் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.

யாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது ? எப்போது கொல்வது ? சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.

வாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர் எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.

அவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.

யாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவுக்கு தீர்ப்பளித்ததைப் போன்ற ஒரு காட்சி அங்கே அரங்கேறியது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய் சாட்சிகள் கூலிக்குக் கூவினார்கள்.

யாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது !

எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.

கீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.

‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.

கோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.

கீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.

அதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.

இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக‌வும், தூய ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குச் சாட்சியாக‌வும் யாக்கோபு வாழ்ந்து ம‌றைந்தார்.

 

பைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்

கானானியனாகிய சீமோன்

Image result for canaanite simon apostle

 இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார்.

ஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார்.

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு. ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர். அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு. கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை. ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.

இயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள். இயேசுவைப் ப‌ற்றி அறிவிக்க சீமோன் வ‌ட‌ ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார். எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.

செலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது.

கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.

எதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.

கி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது ! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.

சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.

கி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.

பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.

பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு. ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள். ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள்.

ததாயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார். ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.

பைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன். ஆனால் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார். ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

நாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். இயேசுவின் பால் கொள்ளும் உறுதியான‌ விசுவாச‌மே ந‌ம்மை இறை ப‌ணிக‌ளில் உறுதியுட‌ன் ஈடுப‌ட‌ச் செய்யும்.

இந்த‌ அடிப்ப‌டைச் சிந்த‌னைக‌ளை அப்போஸ்த‌ல‌ர் சீமோன் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.

 

பைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா

 1. அந்திரேயா

Image result for Andrew the apostle

அந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி ” இயேசுவே உண்மையான கடவுள்” என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர்.

அந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். தன் சகோதரரோடு சேர்ந்து மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அந்திரேயாவின் சகோதரர் தான் இயேசுவின் முக்கியமான சீடரான பேதுரு. பேதுரை இவரே இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தலை அவர் வீட்டிலிருந்து துவங்கியிருக்கிறார்.

இயேசுவோடு இணைந்து பய‌ணித்தாலும், இவ‌ரைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் விவிலிய‌த்தில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. உல‌க‌த்தின் முடிவு நாளுக்குரிய‌ அடையாள‌ங்க‌ளை இயேசு விள‌க்கிய‌ நான்கு சீட‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர். இயேசு “ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்குக் காரணமான சிறுவனை அழைத்து வந்தவர்” இவர், என்பன போன்ற சில குறிப்புகளே உள்ளன.

இயேசு இறந்து, உயிர்த்தபின் பரிசுத்த ஆவியை சீடர்களுக்கு வழங்கினார். அதுவரை அச்சத்துடன் இருந்த சீடர்கள், அதன் பின் நற்செய்தி அறிவித்தலைத் துணிச்சலுடன் துவங்கினார்கள். அவ‌ர்க‌ளில் அந்திரேயாவும் ஒருவ‌ர்.

அந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா !

ஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயாவின் பணி ஆரம்பமானது. சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து பைசாண்டியம் (இஸ்தான்புல்) சென்றார். அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை சிறையில் அடைத்த‌து, மிர‌ட்டிய‌து பின்ன‌ர் விடுவித்த‌து.

வெளிவந்த அவர், ‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள்.

அவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார்.  பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், “இயேசு உனக்குச் சுகமளித்தார்” என்று சொன்னார். எனவே இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.

அங்கிருந்த ரோம ஆளுநர் ஏஜியேட்ஸ்ன் மனைவி மேக்ஸ்மில்லாவை சுகப்படுத்த, அவர் கிறிஸ்துவை நம்பினார். ஏஜியேட்ஸ் கோபமடைந்தார்.

ஆனால் அவருடைய சகோதரர் ஸ்ராட்டோக்லிஸ் கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். ஏஜியேட்ட‌ஸ் க‌டும் கோப‌ம‌டைந்தார். அந்திரேயாவை அழைத்து க‌டுமையாய் எச்ச‌ரித்தான். ஆனால் அந்திரேயா இயேசுவைப் ப‌ற்றிய‌ போத‌னையிலிருந்து பின் வாங்க‌வில்லை.

இத‌னால் எதிர்ப்பாள‌ர்க‌ள் அவ‌ரை அடித்து, ப‌ற்க‌ளை உடைத்து, விர‌ல்க‌ளை வெட்டி ம‌லைச்ச‌ரிவில் எறிந்தார்க‌ள். அங்கே இயேசு அவ‌ருக்குத் த‌ரிச‌ன‌மாகி ஆச்ச‌ரிய‌மான‌ சுக‌ம் கொடுத்தார்.

மறுநாள் மக்கள் முன்னிலையில் சாதாரணமாய் வந்து நின்ற அந்திரேயாவைக் கண்டவர்கள் மிரண்டனர். அந்திரேயா அந்த சந்தர்ப்பத்தை இயேசுவைப் போதிக்கக் கிடைத்த வாய்ப்பாக்கிக் கொண்டார். ஒருமுறை இற‌ந்த‌ ஒருவ‌ருக்கு உயிர்கொடுக்க‌ அவ‌ருடைய‌ பெயர் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌விய‌து.

ஏஜியேட்ஸ் அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பளித்தார். எக்ஸ் வ‌டிவ‌ சிலுவையில் த‌லைகீழாய் அறைய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌து தீர்ப்பு. அப்போது தான் அதிக‌ வ‌லி, அதிக‌ நேர‌ம் வ‌லி என்ப‌து அவ‌னுடைய‌ க‌ண‌க்கு.

அந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார். சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலுவையில் இயேசு அந்திரேயாவுக்கு காட்சியளித்தார். சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார்.

மன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விட நினைத்தான். அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. “இயேசுவைப் பார்த்துவிட்டேன் இனிமேல் புவி வாழ்க்கை தேவையில்லை” என்று பிடிவாதம் பிடித்தார்.

திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.

அந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.

ஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள்.

மக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்றஉணர்வினால், தற்கொலை செய்து கொண்டான்.

கி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார்.  அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது !