இஸ்ரயேலரான தோபித்து அசீரியர்களின் காலத்தில் நாடுகடத்தப்பட்டு நினிவேயில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன்னுடைய செல்வத்தை 400 வெள்ளிக்காசாய் மாற்றி தூர தேசமான மேதியாவிலுள்ள கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.
தோபித்துவுக்கு ஒரு மகன். பெயர் தோபியா. அந்தக் காலகட்டத்தில் மன்னன் இஸ்ரயேலர்களைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே எறிவதை பெருமையாய் செய்து கொண்டிருந்தான். அந்த இஸ்ரயேலரின் பிணங்களை எடுத்து நல்லடக்கம் செய்வது தோபித்தின் வழக்கமாய் இருந்தது.
ஒருநாள் தான் கொன்ற இஸ்ரயேலரின் பிணங்களைப் பார்க்க வந்தான் மன்னன். ஆனால் எந்த பிணத்தையும் காணாமல் கடும் கோபமடைந்தான். மக்கள் தோபித்து செய்யும் காரியங்களைப் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.
கோபமடைந்த மன்னன் தோபித்தின் மகனையும், மனைவியையும் சிறைப்பிடிக்க, தோபித்து தப்பி ஓடினார். அந்த மன்னனின் ஆட்சி முடிந்தபின் தோபித்தின் குடும்பம் விடுதலையானது.
அதே நேரத்தில் மேதியா நாட்டில் சாரா என்றொரு எழில் மங்கை இருந்தாள். பேரழகியான அவளை சாத்தானான அசுமதேயு பிடித்திருந்தான். அவளை மணக்கும் ஆண்களை முதலிரவிலேயே அவன் கொன்று விடுவான். இப்படி ஏழு பேர் அவளை மணந்து ஏழுபேரும் முதலிரவிலேயே இறந்து விட்டனர். இவர்கள் தோபித்துவின் உறவினர்கள். சாராவும் தந்தையும் கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினர்.
தோபித்துவின் கஷ்டகாலம் அதிகரித்தது. ஒரு பறவை அவரது கண்ணில் எச்சமிட கண்ணின் பார்வை முழுமையாய் போய்விட்டது. வீட்டில் வறுமை வந்தது. திடீரென அவருக்கு மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நானூறு கிலோ வெள்ளி நினைவுக்கு வந்தது. தோபியாவை அனுப்பி அதை கொண்டு வர முடிவு செய்தார்.
கடவுள் தோபியாவின் மன்றாட்டையும், சாராவின் மன்றாட்டையும் கேட்டார். இருவரின் சிக்கலையும் தீர்க்க தனது தூதரான இரபேலை அனுப்பினார்.
“தோபியா, நான் பணத்தை கபேலிடம் கொடுத்தபோது ஒரு ஆவணம் தயாரித்து அதை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவரும், இன்னொரு பாதியை நானும் எடுத்துக் கொண்டோம். அது தான் அடையாளம்” என்று சொல்லி ஒரு ஆவணத்தின் பாகத்தைக் கொடுத்தார் தோபித்து.
தெரியாத ஊருக்கு மிகப்பெரிய வேலைக்காகப் புறப்பட்ட தோபியா, வழித்துணைக்காக அவர் ஒருவரை அழைத்துக் கொண்டார். அவர் இரபேல் !
தோபியாவும், இரபேலும் பயணம் செய்தனர். தீக்ரிசு எனும் ஆற்றங்கரையில் வந்தபோது காலைக் கழுவுவதற்காக தோபியா ஆற்றில் கால் வைத்தார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவருடைய காலைக் கவ்வியது.
“அந்த மீனை பிடி. அதன் இதயம், ஈரல், பித்தப்பை மூன்றையும் தனியே பாதுகாப்பாய் வை. பயன்படும்” என்றார் இரபேல். தோபியா அப்படியே செய்தார்.
இரபேல் தோபியாவை இரகுவேலின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அவருடைய மகள் தான் சாரா.
“நாம் இன்று இங்கே தங்குவோம். இது இரகுவேலின் வீடு. அவருக்கு ஒரு அழகிய மகள் உண்டு. அவள் பெயர் சாரா. உனது முறைப்பெண்.” இரபேல் சொன்னார்.
“ஓ.. சாராவை எனக்குத் தெரியும். அவளை ஏழுபேர் மணத்து ஏழுபேரும் இறந்து போனார்களே” தோபியா பதட்டமாய்ச் சொன்னார்.
“கவலைப்படாதே.. உனக்கு ஒன்றும் ஆகாது” இரபேல் சொன்னார்.
இரகுவேல் அவர்களை வரவேற்றார். தோபியாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு குழப்பம்.
“உன்னை மாதிரி ஒரு சொந்தக்காரர் எனக்கு உண்டு… அவரோட பேர் தோபித்து”
“ஓ… நான் அவரோட பையன் தான் நான்” தோபியா சிரித்தார். இரகுவேல் வியந்து போய் அவர்களை ஆனந்தமாய் வீட்டுக்குள் அழைத்தார்.
சாராவைப் பார்த்ததும் தோபியாவுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டது. அன்று இரவே அவளை அவர் மணமுடித்தார்.
“இரவு நீ சாராவை நெருங்கும்போது அந்த மீனின் ஈரலின் ஒரு பகுதியையும், இதயத்தின் ஒரு பகுதியையும் தீயில் போடு. பேய் ஓடிவிடும்” இரபேல் சொன்னார்.
தோபியா அப்படியே செய்ய, பேய் ஓடியது.
மறுநாள் தோபியாவின் மரணச் செய்தியை எதிர்பார்த்து, அடக்கத்துக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரகுவேல் தோபியா உயிருடன் இருப்பதைப் பார்த்து பரவசமடைந்தார். அவருடைய மனபாரம் முழுமையாய் நீங்கியது.பின்னர் தோபியா கபேலைச் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு, மனைவியுடனும், இரபேலுடனும் தன் வீடு திரும்பினார்.
மகன் திரும்பியதை அறிந்து மகிழ்ந்த தோபித்து, நடந்த கதைகளைக் கேட்டு வியந்தார்.
“உன் கையிலிருக்கும் மீனின் பித்தப்பையை அவருடைய கண்ணில் தேய்” இரபேல் சொல்ல அப்படியே செய்தார் தோபியா. என்ன ஆச்சரியம், தோபித்து பார்வை பெற்றார்.
தோபித்து இரபேலைப் பார்த்து” உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என ஆனந்தமாய்ச் சொன்னார்.
“கொடுப்பதே என் வழக்கம். நான் கடவுளின் தூதன்”. இரபேல் புன்னகையுடன் சொல்லி விட்டு மறைந்தார்.
கடவுளின் வியத்தகு செயலை அனைவரும் போற்றினர்.