பைபிள் மாந்தர்கள் 58 (தினத்தந்தி) நெகேமியா

மன்னர் அர்த்தசஸ்தா அரண்மனையில், மன்னனுக்கு திராட்சை ரசத்தை கிண்ணத்தில் வார்த்துக் கொடுக்கும் வேலை நெகேமியாவுக்கு. அந்த நாட்களில் ‘பானம் பரிமாறுவோர்’ எனும் பணி மிக முக்கியமான பணி.

ஒருநாள் நெகேமியா மன்னரிடம் திராட்சை ரசம் இருந்த கோப்பையை நீட்டினார். நெகேமியாவின் மனம் துயரமடைந்திருந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் நெகேமியா. அவருடைய சகோதரர்கள் சிலர் அவரைக் காண வந்திருந்தார்கள். அவர்களிடம் தனது நாடும் மக்களும் எப்படி இருக்கிறார்கள் என நெகேமியா விசாரித்தார். அப்போது அவர்கள் சொன்ன செய்தி தான் அவரை மிகவும் கலக்கமடையச் செய்திருந்தது.

யூதா நாட்டில் இஸ்ரேல் மக்கள் மிகவும் சிறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவ‌ர்க‌ள் மிக‌வும் புனித‌மாக‌க் க‌ருதும் எருச‌லேமின் ம‌தில் சுவ‌ர் த‌க‌ர்க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. வாயிற்க‌த‌வுக‌ள் தீக்கிரையாக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இந்த‌ச் செய்தி தான் நெகேமியாவின் துயர‌த்துக்குக் கார‌ண‌ம். இர‌வெல்லாம் அவ‌ர் க‌ட‌வுளிட‌ம் அழுது புல‌ம்பி ம‌ன்றாடியிருந்தார்.

நெகேமியாவின் முக‌வாட்ட‌ம் ம‌ன்ன‌ருக்குச் ச‌ட்டென‌ புரிந்த‌து.

‘நெகேமியா.. என்னாச்சு ? ஏன் முக‌வாட்ட‌மாய் இருக்கிறாய். பார்த்தால் நோய் மாதிரி தெரிய‌வில்லை. ஏதேனும் ம‌ன‌க் க‌ஷ்ட‌மா ?’ ம‌ன்ன‌ர் கேட்டார்.

“மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்” நெகேமியா சொன்னார்.

‘உன‌க்கு என்ன‌ வேண்டும் ?’

‘நீர் த‌ய‌வு காட்டினால், அந்த‌ ந‌க‌ரைக் க‌ட்டியெழுப்ப‌ என்னை அனுப்பும்’

‘எத்த‌னை நாட்க‌ளில் திரும்ப‌ வ‌ருவாய் ?” ம‌ன்ன‌ரும், அருகே இருந்த‌ அர‌சியும் கேட்ட‌ன‌ர். நெகேமியா சொன்னார்.

“ச‌ரி…”

“ம‌ன்ன‌ரே… என‌க்கு தேவையான‌ ம‌ர‌ங்க‌ளைக் கொடுத்து உத‌வும். நான் செல்லும் போது என்னை த‌டைசெய்யாம‌ல் இருக்க‌ ஆளுந‌ர்க‌ளுக்கு ம‌ட‌லையும் த‌ந்த‌ருளும்’

‘ச‌ரி.. அப்ப‌டியே ஆக‌ட்டும்’

நெகேமியா ம‌ன‌ம் ம‌கிழ்ந்தார். ம‌ன்ன‌ருக்கு ந‌ன்றி கூறி புற‌ப்ப‌ட்டார். எருச‌லேம் ந‌க‌ருக்கு வ‌ந்தார். அங்குள்ள‌ ம‌க்க‌ளைச் ச‌ந்தித்து ம‌திலைக் க‌ட்டியெழுப்பும் வேலைக்காய் அவ‌ர்க‌ளை த‌யார்ப‌டுத்தினார் நெகேமியா.

அர‌ச‌ அலுவ‌ல‌ர்க‌ள் நெகேமியாவைக் கிண்ட‌ல் செய்த‌ன‌ர். “க‌ல‌க‌ம் செய்ய‌த் திட்ட‌மிடுகிறீர்க‌ளோ?” என‌ மிர‌ட்டின‌ர்.

‘இல்லை.. இங்கே ம‌தில் சுவ‌ர் தான் க‌ட்ட‌ப் போகிறோம்’

ம‌தில் சுவ‌ர் க‌ட்டும் ப‌ணி ஆர‌ம்ப‌மான‌து. ம‌க்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ முழு உழைப்பையும் கொடுத்து வேலை செய்த‌னர். அதிகாலை முத‌ல் ந‌ள்ளிர‌வு வ‌ரை வேலை சுறுசுறுப்பாய் ந‌ட‌ந்த‌து.

ஓரோனிய‌னான‌ ச‌ன்ப‌லாற்று மற்றும் அம்மோனியனான தோபியா இருவரும் கடும் எரிச்சலடைந்தார்கள்.

“இவ‌ர்க‌ளென்ன‌ ம‌திலைக் க‌ட்டி விடுவார்க‌ளா ? அத‌ற்கு நான் விட்டு விடுவேனா ?’ சன்பலாற்று கொக்கரித்தான்.

‘அப்ப‌டியே அவ‌ர்க‌ள் க‌ட்டினாலும் அத‌ன் மேல் ஒரு ந‌ரி ஏறிப் போனால் கூட‌ இடிந்து விழும் ச‌ன்ப‌லாற்று.. ” சிரித்தான் தோபியா.

இந்த‌ எதிர்ப்புக‌ளைக் க‌ண்டு நெகேமியா பின் வாங்க‌வில்லை. ம‌க்க‌ளை மீண்டும் ஊக்க‌ப்ப‌டுத்தினார். உயிருக்கு ஆப‌த்து என்று தெரிந்திருந்தும் ம‌க்க‌ள் இறை ப‌ணியிலிருந்து பின் வாங்க‌வில்லை. யூத‌ர்க‌ள் எந்நேர‌மும் தாக்க‌ப்ப‌ட‌லாம் எனும் நிலை இருந்த‌து.

மக்கள் ஒருகையில் ஆயுத‌த்தை வைத்துக் கொண்டு ம‌றுகையால் வேலை செய்த‌ன‌ர். இன்னும் சில‌ர் இடையில் வாளைச் சொருகி வைத்து விட்டு வேலை செய்த‌ன‌ர்.

ம‌க்க‌ளிடையே வ‌றுமை ப‌ர‌விய‌து. அதைப் ப‌ய‌ன்ப‌டுத்தி அநியாய‌ வ‌ட்டி வாங்குவோர், அட‌மான‌மாய் வீடுக‌ளை வாங்கிவிட்டு தானிய‌ங்க‌ளை அளிப்போர் அதிக‌ரித்த‌ன‌ர். நெகேமியா ம‌ன‌ம் வ‌ருந்தினார். ‘ந‌ம‌க்குள்ளே இப்ப‌டி இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மைப் ப‌ற்றியும், ந‌ம‌து ஆண்ட‌வ‌ரைப் ப‌ற்றியும் ஏள‌ன‌ம் செய்வார்க‌ள்’ என‌ அவ‌ர்க‌ளைக் க‌ண்டித்து திருத்தினார்.

ச‌ன்ப‌லாற்று வேலையை நிறுத்த‌வும், நெகேமியாவைக் கொல்ல‌வும் ப‌ல‌ ச‌தித் திட்ட‌ங்க‌ளை தீட்டினார். ஆனால் க‌ட‌வுளின் அருள் நெகேமியாவோடு இருந்த‌தால் அந்த‌ அனைத்து திட்ட‌ங்க‌ளிலும் அவ‌னுக்கு தோல்வியே மிஞ்சிய‌து.

ம‌தில் ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ள‌ர்ந்து, ஐம்ப‌த்து இர‌ண்டு நாட்க‌ளிலேயே நிறைவ‌டைந்த‌து. மாபெரும் விஸ்வ‌ரூப‌ ம‌தில் வெறும் ஐம்ப‌த்து இர‌ண்டு நாட்க‌ளில் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்ட‌தைக் க‌ண்ட‌ எதிரிக‌ள் வெல‌வெல‌த்துப் போயின‌ர். இது நிச்ச‌ய‌ம் க‌ட‌வுளின் அருள் தான் என‌ அவ‌ர்க‌ள் பின்வாங்கினார்க‌ள்.

எந்த‌ச் செய‌லைச் செய்யும் முன்பும் இறைவ‌னோடு ம‌ன‌ம் க‌சிந்து பிரார்த்திக்க‌ வேண்டும். க‌ட‌வுளின் செய‌லுக்காக‌ முன் வைத்த‌ காலைப் பின் வைக்க‌க் கூடாது. த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாக‌ச் சேர்ந்து விய‌ர்வை சிந்த‌வேண்டும். ம‌க்க‌ளை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ர் த‌ன்ன‌ல‌ம் பார்க்காதவ‌ராய் இருக்க‌ வேண்டும். தொலைதூர‌த்தில் இருந்தாலும் த‌ன் ம‌க்க‌ளுக்கான‌ க‌ரிச‌னை உடைய‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். ம‌ன்ன‌ரின் முன் பேச‌வும் அச்ச‌மில்லாத‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். என‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை நெகேமியாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு போதிக்கிற‌து.