எதுக்கு சும்மா விமானத்திலேயே பறக்கிறது ? நாமே ஒரு விமானமா மாறி பறந்தா என்ன ? ஈவ் ரோசரி க்கு இந்த எண்ணம் தோன்றியதால் அவர் ஒரு ஹிட் மனிதராகி விட்டார். பறக்கணும்னா சிறகு வேணும், அது தானே இயற்கையின் விதி ! கார்பன் பைபரால் 7.9 அடி நீள சிறகு ஒன்றைச் செய்தார். அதில் நான்கு சக்தி வாய்ந்த ஜெட் என்ஜின்களைப் பொருத்தினார். அதை உடலில் கட்டிக் கொண்டு விமானத்தில் 7500 அடி உயரம் போனார். சாவு எனக்குச் சர்க்கரைப் பொங்கலடா என பஞ்ச் வசனம் பேசிக் கொண்டே விமானத்திலிருந்து குதித்தார். எங்கே ? ஆல்ப்ஸ் மலையின் உச்சந் தலையில். கொஞ்ச நேரம் வானத்தில் அப்படியே பொத்தென விழுந்தவர் வழியிலேயே ஜெட் எஞ்சின்களை இயக்கி பறக்க ஆரம்பித்தார். மனிதப் பறவையாய் மாறி வானத்தில் வட்டமடித்தார். அதுவும் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்.
அவர் தலையை எங்கே திருப்புகிறாரோ அந்த திசையில் வண்டி பறந்தது. போதாக்குறைக்கு வானத்திலேயே டைவ் அடித்து சிலிர்ப்பை ஏற்றினார். பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு புல்லரித்தது. கொஞ்ச நேரம் ஆல்ப்ஸ் மலை மீது அசத்தலாகப் பறந்து திரிந்தவர் கடைசியில் ஒரு பாராசூட் மூலம் கீழே இறங்கினார். “கரணம் தப்பினால் மரணம் எனும் சூழலில் டென்ஷனாகாமல் இருப்பது தான் முக்கியம்” என்கிறார் சிரித்துக் கொண்டே. ஐம்பது வயதான ரோசரி ஸ்விட்சர்லாந்தின் விமானப் படையில் பைலட்டாக இருந்தவர் என்பது ஸ்பெஷல் நியூஸ்.
ஆல்ப்ஸ் மலையுடன் மனிதர் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தியதி ஆங்கிலக் கால்வாயைப் பறந்து கடந்து உலகை வியக்க வைத்தார். முப்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவைக் கடக்க இவர் எடுத்துக் கொண்ட நேரம் ஒன்பது நிமிடங்கள் ஏழு வினாடிகள் மட்டுமே. ஆங்கிலக் கால்வாயை இப்படிக் கடந்த முதல் மனிதர் இவர் தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஐயாவோட அடுத்த திட்டம் அமெரிக்காவின் மாபெரும் பள்ளத்தாக்குப் பகுதியான கிரேண்ட் கேனியனில் வட்டமடிப்பது தானாம் !
அதோ அந்த பறவை போல மாற வேண்டும் !!!
Thanks : Ananda Vikatan
You must be logged in to post a comment.