செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

தற்கொலை : உன் உயிர் உன‌த‌ல்ல ( A Christian View )

suicide-note

“இந்த பத்து லட்ச ரூபாயை பத்திரமா வெச்சுக்கப்பா. இதை வெச்சு நிறைய பிளான் பண்ணியிருக்கேன்” என்று நீங்கள் உங்கள் நண்பரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்கிறீர்கள். உங்கள் நண்பர் கொஞ்ச நாளிலேயே உங்களை மறந்து விட்டு பணத்தை இஷ்டம் போல செலவழித்துத் தீர்க்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் குற்றவாளியா இல்லையா ? அவர் நம்பிக்கை துரோகியா இல்லையா ?

“உன்னை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு படைத்திருக்கிறேன். என்னை பற்றிக் கொள். என் கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்” என்கிறார் கடவுள். அதை அலட்சியப் படுத்திவிட்டு அவர் தந்த உயிரை அழித்து விடுவது குற்றமா இல்லையா ?

த‌ற்கொலை என்ப‌து ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ந‌ட‌ப்ப‌த‌ல்ல‌. உல‌க‌ அள‌வில் ஒவ்வொரு நாற்ப‌து வினாடிக்கும் ஒரு ந‌ப‌ர் த‌ற்கொலை செய்து கொள்கிறார். 2012ம் ஆண்டைய‌ க‌ண‌க்குப்ப‌டி உல‌கிலேயே த‌ற்கொலையில் முன்ன‌ணியில் இருக்கும் நாடு எனும் அவ‌ப் பெய‌ர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிற‌து.

இர‌ண்ட‌ரை இல‌ட்ச‌ம் இந்தியர்கள் 2012ம் ஆண்டில் ம‌ட்டும் த‌ற்கொலை செய்திருக்கிறார்க‌ள். எதில் வருகிறதோ இல்லையோ தற்கொலையின் டாப் 3 பட்டியலில் தமிழ்நாடு எப்போதும் வந்து விடுகிறது. உல‌க‌ அள‌வில் ஆண்டுக்கு சுமார் பத்து இல‌ட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாய் உலக நலவாழ்வு நிறுவனம் சொல்கின்ற‌ன‌. அதில் 75 ச‌த‌வீத‌ம் பேர் ம‌த்திய‌த‌ர‌, அல்ல‌து வ‌றுமைக்கோட்டில் இருக்கின்ற‌ ம‌க்க‌ள் தான். 15 வ‌ய‌துக்கும் 29 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் மிக‌ அதிக‌ அள‌வில் த‌ற்கொலை செய்து கொள்கின்ற‌ன‌ர் எனும் த‌க‌வ‌ல் உண்மையிலேயே ப‌த‌ற‌டிக்கிற‌து.

த‌ற்கொலைக்கான‌ கார‌ண‌ங்க‌ளில் ம‌ன‌ அழுத்த‌ம் முத‌லாவ‌து இட‌த்தைப் பிடிக்கிற‌து. ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ இந்த ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ர‌லாம். நிராக‌ரிப்பு, தோல்வி, அவ‌மான‌ம், பொறாமை, எரிச்ச‌ல், என‌ எதுவாக‌வும் இருக்க‌லாம். ஆனால் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் இது தான் த‌ற்கொலைக்கான‌ முத‌ல் கார‌ண‌மாக‌ இருக்கிற‌து.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் ந‌ம்பிக்கை இழ‌ப்ப‌து. தொட்ட‌தெல்லாம் தோல்வி. உப்பு விக்க‌ போனா ம‌ழை பெய்யுது, ப‌ஞ்சு விக்க‌ போனா காத்த‌டிக்குது என‌ புல‌ம்புப‌வ‌ர்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் போதும‌டா சாமி என‌ வாழ்க்கையை முடித்துக் கொள்ள‌ நினைக்கின்ற‌ன‌ர்.

ப‌ய‌ம் இன்னொரு முக்கிய‌மான‌ கார‌ண‌ம். வாழ்க்கையைக் குறித்த‌ ப‌ய‌ம். பிற‌ ச‌க்திக‌ளைக் குறித்த‌ ப‌ய‌ம். நோயைக் குறித்த‌ ப‌ய‌ம். எதிரிக‌ளைக் குறித்த‌ ப‌ய‌ம். எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம். த‌ண்ட‌னை குறித்த‌ ப‌ய‌ம் என‌ ஏதோ ஒரு ப‌ய‌ம் த‌ற்கொலைக்குத் தூண்டுவ‌து பொதுவான‌ கார‌ண‌ங்க‌ளில் ஒன்று.

ப‌தின் வ‌ய‌துக‌ளில் ந‌ட‌க்கின்ற‌ த‌ற்கொலை முய‌ற்சிக‌ள் பெரும்பாலும் முட்டாள்த‌ன‌மான‌வை. “ஒரு பாட‌ம் க‌த்துக்கொடுக்க‌ணும்” என்ப‌தே பெரும்பாலான‌ ம‌ன‌துக்குள் நுழையும் சிந்த‌னை. பெற்றோருக்கு, காத‌ல‌ர்க்கு, ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, உற‌வின‌ர்க்கு என‌ யாரோ ஒருவ‌ருக்கு வ‌லியைக் கொடுப்ப‌தாய் நினைத்துக் கொண்டு த‌ற்கொலை செய்து கொள்கின்ற‌ன‌ர்.

கார‌ணங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் அடிப்ப‌டை விஷ‌ய‌ம் ஒன்று தான். ந‌ம்மையெல்லாம் ப‌டைத்துக் காக்கும் இறைவ‌ன் ந‌ம்மைக் க‌வ‌னிக்கிறார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். தாயின் க‌ருவில் உருவாகும் முன்பே ந‌ம்மைக் க‌ண்ட‌ தேவ‌ன் ந‌ம‌து இந்த‌ சிக்க‌லில் இருந்தும் விடுப‌ட உத‌வுவார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். உன்னைத் தொடுவோன் என் க‌ண்ம‌ணியைத் தொடுகிறான் என்று சொன்ன‌ தேவ‌ன் ந‌ம் மீது அதீத‌ அன்பு கொண்டிருக்கிறார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். க்ஷ்`

பத்து கட்டளைகளைப் பற்றித் தெரியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்பதும் அதில் ஒரு கட்டளை என்பதை யாவரும் அறிவோம். சக மனிதனைக் கொலை செய்வது பெரும் பாவம். அதே போல சுய மனிதனை, அதாவது தன்னைக் கொலை செய்வதும் பாவமே. அதனால் தான் அதைத் தற் கொலை என பெயரிட்டு அழைக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் “அடுத்தவனை” கொலை செய்யாதிருப்பாயாக என கட்டளை சொல்லவில்லை, “கொலை செய்யாதிருப்பாயாக” என பல பொருள் பட கூறுகிறது எனலாம்.

சுருக்கமாக, இறைவன் கொடுத்த உயிரை முடித்துக் கொள்வது என்பது இறைவனுக்கு எதிரான செயல். எனவே தான் அது பாவமாகிறது.

“கடவுளே.. என்னோட பிரச்சினையை உம்மால கூட தீக்க முடியாது. நான் சாகறது மட்டும் தான் இதுக்கு ஒரே வழி” என்பது தான் தற்கொலை செய்பவர்களின் மனநிலை. தற்கொலை விசுவாசமின்மையின் அடையாளம்.

உயிர் என்பது கடவுளால் மட்டுமே வருகிறது. கர்ப்பத்தை அடைப்பதும், திறப்பதும் அவருடைய சித்தம் என்பதை பைபிள் பல இடங்களில் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ எனும் வசனத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எனவே தான், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்” என யோபுவைப் போல‌ அவ‌ரிட‌ம் ச‌ர‌ண‌ட‌வ‌து அவ‌சிய‌மாகிற‌து.

வாழ்க்கை மிக‌வும் ச‌வாலானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போட்டியும் பொறாமையும் நிறைந்த‌ இந்த‌ உலகில் வாழ்க்கையை ஓட்டுவ‌து க‌டின‌மான‌து. இந்த‌ போராட்ட‌மான‌ வாழ்க்கையில் ப‌ல‌ வேளைக‌ளில் நாம் நிலை த‌டுமாறுவ‌துண்டு. “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் ” ( யோனா 4 : 8) என‌ யோனா புலம்பினார். “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என எலியா புலம்பினார். அத்தகைய துயர வேளைகளிலும், கடவுளை நோக்கும் போது கடவுள் விடுவிக்கிறார்.

பைபிளில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு தற்கொலைகள் உண்டு. ஒன்று சவுல் மன்னனுடையது. அவர் த‌ன‌து வாளை த‌ரையில் ந‌ட்டு அத‌ன் மேல் விழுந்து த‌ற்கொலை செய்து கொள்கிறார். இர‌ண்டாவ‌து யூதாஸ் தூக்கு மாட்டிக்கொண்டு த‌ற்கொலை செய்து கொள்கிறார். கடவுளை நோக்காமல் தன்னை நோக்குகையில் மனிதன் பாவம் செய்கிறான்.

ஆன்மீக‌த்தில் உய‌ர் நிலையில் இருந்த‌ ப‌வுல், “மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார்” ( 2 கொரி 1 : 8 9 ) என‌ ம‌ர‌ண‌த்தின் பிடியிலிருந்து மீட்கும் பொறுப்பைக் க‌ட‌வுளிட‌ம் விடுகிறார். விசுவாச‌த்தை நிலை நாட்டுகிறார்.

கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுக‌ளில் “டொனாடிச‌ம்” என்றொரு கிறிஸ்த‌வ‌க் குழு இருந்த‌து. இவ‌ர்க‌ள் த‌ற்கொலை செய்து கொண்டால் நேர‌டியாக‌க் க‌ட‌வுளை அடைந்து விட‌லாம் என‌ ந‌ம்பினார்க‌ள். கிறிஸ்துவின் போத‌னைக‌ளைப் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரித‌ல் இல்லாத‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள்.

“அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது” ( யோபு 14:5 )எனும் பைபிள் வ‌ச‌ன‌ம், ந‌ம‌து வாழ்க்கையை முடிக்கும் உரிமை க‌ட‌வுளிட‌ம் ம‌ட்டுமே இருக்கிற‌து என்ப‌தை தெளிவாக்குகிற‌து. ப‌ழைய‌ கால‌த்தில் த‌ற்கொலை செய்து கொண்ட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ திருச்ச‌பைக‌ள் ம‌றுத்து வ‌ந்த‌ன‌. அந்த‌ அள‌வுக்கு த‌ற்கொலையின் மீது தீவிர‌ எதிர்ப்பு கொண்டிருந்த‌ன‌ர்.

சிசுக்கொலையைப் போல, தற்கொலையும் கிறிஸ்தவத்துக்கு எதிரானது. த‌ற்கொலைக்கு முய‌ல்ப‌வ‌ர்க‌ளை த‌டுப்ப‌தும், அவ‌ர்க‌ளை ச‌ரியான‌ வ‌ழியில் கொண்டு வ‌ருவ‌தும் நாம் செய்ய‌ வேண்டிய‌ காரிய‌ங்க‌ளாகும். த‌ற்கொலைக்கு ஒரு ந‌ப‌ர் முய‌ல்கிறார் எனில் அவ‌ர் சொல்லொண்ணாத் துய‌ரில் இருக்கிறார் என்ப‌தை முத‌லில் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

அவ‌ருட‌ன் கூடவே இருந்து அவ‌ருடைய‌ துய‌ர‌ங்க‌ளை அமைதியாக‌க் கேட்ப‌தும், அவ‌ரை அன்பு செய்ய‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள் எனும் ந‌ம்பிக்கையை விதைப்ப‌தும் முதல் தேவை. அந்த‌ சூழ‌லில் த‌த்துவ‌ங்க‌ளோ, இறையிய‌ல் கோட்பாடுக‌ளோ கை கொடுக்காது. அன்பு ம‌ட்டுமே ஒரு ம‌னித‌னை திருத்த‌ முடியும். இறைவ‌னின் அன்பை உங்கள் மூலமாய்ப் ப‌கிருங்க‌ள்.

சில‌ சிந்த‌னைக‌ளை ம‌ன‌தில் கொள்வோம்.

 

  1. த‌ற்கொலை என்ப‌து ‘வேறு வ‌ழி இல்லை’ என்ப‌த‌ன் வெளிப்பாடு. “என் கிருபை உன‌க்குப் போதும்” என்கிறார் க‌ட‌வுள். அதை ந‌ம்புங்க‌ள் த‌ற்கொலை சிந்த‌னை வில‌கும்.
  2. த‌ற்கொலை என்ப‌து சுய‌ந‌ல‌த்தின் அடையாள‌ம். த‌ன‌து துய‌ர‌ங்க‌ளுக்கான‌ விடுத‌லை ப‌ல‌ வேளைக‌ளில் அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு மிக‌ப்பெரிய‌ துய‌ர‌த்தைத் த‌ரும் என்ப‌தை உண‌ர்வ‌து அவ‌சிய‌ம்.
  3. த‌ற்கொலை என்ப‌து சிலை வ‌ழிபாடு. தன்னையோ, த‌ன் வாழ்க்கையின் ஆன‌ந்த‌த்தையோ வ‌ழிப‌டுப‌வ‌ர்க‌ள் அதில் குறைபாடு ஏற்ப‌டுகையில் எடுக்கும் முடிவு. சிலை வ‌ழிபாடு பாவ‌ம்.

4 த‌ற்கொலை செய்ப‌வ‌ர்க‌ள் உல‌க‌ப் பிர‌கார‌மான‌ காரிய‌ங்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ தோல்விக்காக‌வே த‌ற்கொலை செய்கின்ற‌ன‌ர். முத‌லில் தேவ‌னுடைய‌ ராஜ்ய‌த்தைத் தேடாத‌ பாவ‌த்தை அவ‌ர்க‌ள் செய்கின்ற‌ன‌ர்.

  1. த‌ற்கொலை ஒரு மோச‌மான‌ சாட்சி. க‌னிக‌ளின் மூல‌மாக‌வும், செய‌ல்க‌ளின் மூல‌மாக‌வும் க‌ட‌வுளுக்கு ம‌கிமையையும், க‌ன‌த்தையும் கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ நாம் இருக்க‌ வேண்டும். த‌ற்கொலை ந‌ம் கட‌வுளை அவ‌மான‌ப் ப‌டுத்தும் செய‌ல்.

இவ்வுலக வாழ்க்கை என்ப‌து க‌ட‌வுள் ந‌ம‌க்கு ஒரே ஒரு த‌ட‌வை த‌ரும் வ‌ர‌ம். ஏழு ஜென்ம‌ங்க‌ளோ, ம‌று பிற‌விக‌ளோ இல்லை. இந்த‌ வாழ்க்கையை முழுமையாக, அவருக்கு ஏற்புடையதாக வாழ்வ‌தே ந‌ம‌க்கு இட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ணி. உயிரையும், வாழ்வையும் இறைவ‌னிட‌ம் ஒப்படைப்போம். அவ‌ர் கையில் ஒரு பொம்ம‌லாட்ட‌ப் பொம்மையைப் போல‌ வாழ்வ‌தே சிற‌ப்பான‌ வாழ்க்கை.

பாவ‌த்தை அறிக்கையிட்டால்

ம‌ன்னிப்பு நிச்ச‌ய‌ம் !

த‌ற்கொலையில் அறிக்கையிட‌ல்

இல்லையே சாத்திய‌ம் !!

 

*

தீவிரவாதத்துக்கு எதிராய் அணிதிரளும் இந்திய முஸ்லீம்கள்

IS

 

தத்தின் பெயரால் சர்வதேச சமூகம் சந்தித்ததைப் போன்ற இழப்புகளை வேறெந்த முறையிலும் மனித குலம் சந்திக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதவாதி செய்யும் ஒரு செயலுக்கான எதிர்வினை மறு எல்லையில் ஏதோ ஒரு அப்பாவியின் தலையில் விழும் என்பது எழுதப்படாத விதி.

ஒரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கிறது. ஒரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கிறது. பெரும்பான்மையாய் இருக்கிறோம் எனும் மிதப்பில் மதவாதிகள் செய்கின்ற தவறுகள், அவர்கள் சிறுபான்மையாய் இருக்கும் நாடுகளில் எதிரொலிக்கின்றன. எனவே தான் மதம் சார்ந்த பிளவுகளும், வன்முறைகளும் எப்போதுமே திகிலைக் கிளப்புகின்றன.

இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பரவியிருக்கும் மனநிலைக்கு முக்கியமான காரணம் ஒரு சில தீவிரவாத இயக்கங்களே. அல்குவைதா இயக்கம் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா ) இயக்கம் சர்வதேச அச்சுறுத்தல் இயக்கமாக மிரட்டுகிறது.

ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினர் தடை விதிக்கும் போது அது தீவிரமான‌ மதச் சண்டையை உருவாக்கி விடுகிறது. மதங்களிடையே காழ்ப்புணர்ச்சியையும் வலுவாக்குகிறது. ஆனால் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அதை எதிர்த்து நிற்கும் போது ஆக்கபூர்வமாய் மாறிவிடுகிறது. இப்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்று கூடி ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக பத்வா விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் 14.2 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் 17.22 கோடி பேர் இஸ்லாமியர்கள். உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். என‌வே தான் இந்திய‌ முஸ்லிம்க‌ள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ப‌த்வா விதித்திருப்ப‌து உல‌க‌ நாடுக‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து.

வ‌ன்முறை என்ப‌து இஸ்லாமின் வ‌ழிமுறைய‌ல்ல‌. இப்போது ஐ.எஸ் அமைப்பு செய்து கொண்டிருக்கும் செய‌ல்க‌ளெல்லாம் இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கைக்கு எதிரான‌வை.என‌வே அந்த‌ அமைப்புக்கு எதிராக‌ ப‌த்வா விதிக்கிறோம் என்று அந்த முடிவில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

 

ப‌த்வா என்ப‌து இஸ்லாமிய‌ மதத் தீர்ப்பு. இஸ்லாமிய‌ ம‌த‌த்துக்கோ, கோட்பாடுக‌ளுக்கோ, வாழ்க்கை முறைக்கோ எதிராக‌ச் செய‌ல்ப‌டும் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை விதிக்க‌ப்ப‌டுகிற‌து. ச‌ல்மான் ருஷ்டி முத‌ல் ஏ.ஆர் ர‌ஹ்மான் வ‌ரை ப‌லரையும் இந்த பத்வா பாதித்திருக்கிறது. இப்போது ஒரு மிக‌ப்பெரிய‌ தீவிர‌வாத‌ அமைப்புக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை வ‌லிமையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த்வாவின் ந‌க‌ல்க‌ளை ஐ.நா ச‌பைத் த‌லைவ‌ர்க‌ளுக்கும், உலகின் 47 நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌த் த‌டைக்கு அமெரிக்கா வ‌ர‌வேற்பு தெரிவித்துள்ள‌து. “ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்து இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், அறிஞர்களும் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்கிறோம். அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அந்த இயக்கத்தில் சேர்ப்பதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் ஹெலனா வயிட் தெரிவித்தார்.

ஐ.நா அமைப்பு ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பேர‌ழிவை ஏற்ப‌டுத்தி வ‌ருகிற‌து. கூட‌வே ஆசியாவின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளில் நுழைந்து அத‌ன் இருப்பைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌ முய‌ற்சித்து வ‌ருகிற‌து.இந்தியாவிலும் அத‌ன் கிளைக‌ள் ஆங்காங்கே இருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன‌.

இந்திய‌ அர‌சிய‌ல‌மைப்புச் ச‌ட்ட‌ங்க‌ள் ம‌த‌ச்சார்பின்மைக்கு துணை செய்தாலும் இந்தியாவில் சிறுபான்மையின‌ரின் வ‌ள‌ர்ச்சியும், அங்கீகார‌மும் ச‌க‌ஜ‌ நிலையில் இல்லை என்ப‌தே உண்மை. 14 ச‌த‌வீத‌ம் இஸ்லாமிய‌ர்க‌ள் வாழும் பூமியில் 2 ‍ 3 ச‌த‌வீத‌ம் இஸ்லாமியர்கள் ம‌ட்டுமே ந‌ல்ல‌ அர‌சுப் ப‌த‌விக‌ளில் இருக்கின்ற‌ன‌ர். வெறும் 1.2 ச‌த‌வீத‌ம் பேர் ம‌ட்டுமே ப‌ட்ட‌ மேற்ப‌டிப்பை முடிக்கிறார்க‌ள். வ‌றுமைக்கோட்டின் கீழ் வாழ்ப‌வ‌ர்க‌ளோ 94 ச‌த‌வீத‌த்திற்கும் மேல்.

இப்ப‌டி ச‌மூக‌த்தின் பொருளாதார‌, வாழ்க்கைச் சூழ‌லில் பின் த‌ங்கியிருக்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் மீது தீவிர‌வாதிக‌ள் எனும் ப‌ழியும் சேர்ந்து விடும் போது அவ‌ர்க‌ள் உள‌விய‌ல் ரீதியாக‌வும் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆனாலும் ஒற்றுமையில் எப்போதும் முன்னில் நிற்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது ஐ.எஸ் இய‌க்க‌த்துக்கு எதிராக‌வும் ஒன்றிணைந்திருப்ப‌து இந்தியாவில் மிக‌ப்பெரிய‌ தாக்க‌த்தை ஏற்படுத்தியிருக்கிறது. உல‌கின் பார்வையில் மிக‌ப்பெரிய‌ அங்கீகார‌த்தையும் இந்திய‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருக்கிற‌து.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ச‌மீப‌கால‌மாக தொட‌ர் வ‌ன்முறைக‌ளிலும், ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ செய‌ல்க‌ளிலும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. த‌ன‌து அமைப்பின‌ரோடு பாலிய‌ல் உற‌வு வைத்துக் கொள்ள‌வில்லை என்றெல்லாம் கார‌ண‌ம் காட்டி பெண்க‌ளை ப‌டுகொலை செய்கிற‌து. பிணைக்கைதிக‌ளாக‌ ம‌க்க‌ளைப் பிடித்து ஈவு இர‌க்க‌மில்லாம‌ல் த‌லையைக் கொய்கிற‌து. சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ன்முறையைப் போதிக்கிற‌து. இவையெல்லாம் நிச்ச‌ய‌ம் இஸ்லாமிய‌க் கொள்கைக‌ள் அல்ல.

“அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் எதிர்க்கிறது. பத்திரிகையாளர்கள், உதவியாளர்கள் போன்றவர்களைக் கொல்பவர்களை இஸ்லாம் எதிர்க்கிறது. ஜிகாத் என்பது தற்காப்புப் போர், சரியான காரண காரியமில்லாமல் அதை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றம் இஸ்லாமுக்கு எதிரானது. குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ உரிமைகளை மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது, சித்திரவதை இஸ்லாமுக்கு எதிரானது, இப்படி ஏராளமான வரைமுறைகள் இஸ்லாமில் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ் செய்கிறது” என‌ ப‌ட்டிய‌லிடுகின்ற‌ன‌ர் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.‌

இஸ்லாமிய‌த்தின் பெய‌ரால் ந‌ட‌க்கும் தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துக்கு எதிராக‌ இஸ்லாமிய‌ர்க‌ளே எழுந்திருப்ப‌து ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து. இது மிகச் சரியான ஒரு நடைமுறை. உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் எனும் மாயை உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானது.

எந்த‌ இய‌க்க‌மும், எந்த‌ குழுவும், எந்த‌ ம‌த‌மும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே சுத்த‌ம் செய்து கொள்வ‌தும், விம‌ர்சித்துக் கொள்வ‌தும், வ‌ழிக‌ளைச் செப்ப‌னிட்டுக் கொள்வதும் ஆரோக்கியமான‌து. இந்து சாமியார்க‌ளின் லீலைக‌ளுக்கு எதிராக‌ இந்துக்க‌ள் விம‌ர்சிக்கும் போக்கு உண்டு. போப் உட்பட, கிறிஸ்த‌வ‌த் த‌லைவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ளை க‌டுமையாய் விம‌ர்சிக்கும் போக்கு கிறிஸ்த‌வ‌த்திலும் உண்டு.

அத்த‌கைய‌ ஒரு நிலை இஸ்லாமிலும் எழுந்திருப்ப‌து ச‌ர்வ‌ம‌த‌ சூழ‌லுக்கு வெகு ஆரோக்கிய‌மான‌து. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்திலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது.

எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌மே. அதே நேரத்தில் எந்த‌ ம‌த‌த்திலும் வ‌ன்முறை என்ப‌து எதிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தே. சிறுபான்மையின‌ரைக் காக்கும் க‌ட‌மை பெரும்பான்மையின‌ருக்கு உண்டு. அத்த‌கைய‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ அன்பிலும், ந‌ம்பிக்கையிலும் தான் ச‌ர்வ‌தேச‌ ச‌மாதான‌ம் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட‌ முடியும்

 

சேவிய‌ர்

Thanks : Namma Adayaalam

 

 

 

 

 

 

 

குழந்தைகளைப் பாதுகாப்போம் !

 ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 

 

வீட்டுக்கு வெளியே

 

வெளியே போகும் முன்

குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !

அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.


கடைவீதிகளில்..

கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.


காரில் போகும்போது

“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள். 

 

குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…

பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்

குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

 

 வீட்டுக்கு உள்ளே

 

குழந்தை தனியாய் இருக்கிறதா ?

வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்

உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது ! 

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை

தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !

வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்

குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.

 

வீட்டுப் பொருட்களில் கவனம்

நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

 

மருந்துகளில் கவனம்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !

மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !

 

தண்ணீரில் பாதுகாப்பு

தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்

இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !

 

பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !

 

நல்ல தொடுதல் எது ?

சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !

யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !

குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.  

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.

 

குழந்தைகளிடம் கேளுங்க !

குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க

எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?

“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்”  போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !

பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !

குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !

திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !

குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !

இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

 

நன்றி : தேவதை, மாத இதழ்.

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

குழந்தைகளுக்கான செல்போன் !!! 2G அல்ல 2LKG !

“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.

“பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லாமல் சொல்கின்றன மேலை நாடுகளில் நடக்கும் சமாச்சாரங்கள்.

நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !

நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான் மேலை நாடுகளில் இப்போதைய ஹாட் டாப்பிக்.

எதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.

பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,  இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.

இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.

போதாக்குறைக்கு,  “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.

மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம்.

“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !

இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ?

உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு !

அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும்.

முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.

விட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது.

ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.

குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.

 

நன்றி : அவள் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

பெண்கள் விடுதி ! :- வேண்டியதும், வேண்டாததும்…

 

ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க் கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல் வாழ்க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஹாஸ்டல்கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளை மீறி அத்து மீறல் சமாச்சாரங்களைச் செய்து திரியும் வசீகரத் திமிர் கல்விக் கால இளமையின் சொத்து.

அந்தக் காலகட்டத்தையெல்லாம் தாண்டி சமூகத்துக்கு வரும்போது இன்னொரு வகையான ஹாஸ்டல்கள் உதவிக்கு வருகின்றன. வீட்டை விட்டு வெளியூர்களில் தனியே வேலை செய்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இத்தகைய ஹாஸ்டல்கள் தான் ஆபத்பாந்தவன்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் மேன்ஷன்கள் கை கொடுக்கின்றன. பெண்களுக்கு ஹாஸ்டல்கள் தான். லேடீஸ் ஹாஸ்டல், விமன் ஹாஸ்டல், வர்க்கிங் விமன் ஹாஸ்டல் என பல பெயர்களில் பல வகைகளில் ஹாஸ்டல்கள் முகம் காட்டுகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில், சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே கழைக்கூத்தாடியின் கயிற்று நடை போன்றது. அதிலும் ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டுமென்றால் அவ்வளவு தான். கிடைக்கும் சம்பளமே போதாது ! தனியே பர்சனல் லோன் தான் வாங்கி வாடகையே கட்டவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட திகிலூட்டும் விலைவாசிக்கு கொஞ்சம் ஆறுதல் நிழலாய் வந்து நிற்பது இந்த ஹாஸ்டல்கள் தான்.

செலவு கம்மி. நிறைய பெண்கள் சேர்ந்திருப்பார்கள் என்பதால் கொஞ்சம் பாதுகாப்பு உணர்வு. பொழுதும் போகும். உணவுக்காக வெளியே அலைய வேண்டிய அவசியம் இல்லை இப்படி ஏகப்பட்ட வசதிகள் ஹாஸ்டல்களில் உண்டு.  அதேபோல ஹாஸ்டல் வாழ்க்கை நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும். குறிப்பாக நண்பர்களோடு சேர்ந்து வாழ்வது. பகிர்ந்து வாழ்வது, இருக்கும் வசதிகளைக் கொண்டு “அட்ஜஸ்ட்” பண்ணி வாழ்வது, சில விஷயங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது என ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இங்கே உண்டு. ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் இடங்களில் ஒன்று இந்த ஹாஸ்டல் எனலாம்.

அதே நேரம் தற்கொலைகள், ராகிங்கள், ரகசிய தவறுகள் என ஏகப்பட்ட சிக்கல்களும் விடுதி வாழ்க்கையில் புதைந்து கிடக்கின்றன. இதனால் ஹாஸ்டலில் தங்குபவர்கள் பல விஷயங்களில் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஒரு ஹாஸ்டலில் போகும்முன் அதன் வரலாறைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அதை நடத்துபவர்கள் யார் ? நம்பகத் தன்மை உடையவர்கள் தானா ? ஏதேனும் மதம் சார்ந்த பின்னணியா ? என்பதையெல்லாம் அலசுங்கள். இணையத்தில் அந்த ஹாஸ்டலின் பெயர் அடிபடுகிறதா ? மக்கள் அதைப்பற்றி என்னென்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்தால் விடுதி பற்றி பல விஷயங்கள் சடுதியில் உங்களுக்குக் கிடைக்கும். அந்தத் தகவல்கள் எல்லாம் இருந்தால் ஒரு நல்ல ஹாஸ்டலைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிது !

ஹாஸ்டல் அமைந்திருக்கும் ஏரியாவையும் கவனியுங்கள்.  ரொம்பத் தனிமையான இடமா ? ஆறுமணிக்கு மேல மருந்துக்குக் கூட ஆள் நடமாட்டம் இருக்காத இடமா ? அமானுஷ்யமான ஒரு சூழலா ? பக்கத்துலேயே டாஸ்மாக் டான்ஸ் தெரு இருக்கிறதா ? இப்படிப்பட்ட இடங்களை ஒதுக்கிட்டு வேற இடம் தேடறது உங்களுக்கு நல்லது. பாதுகாப்பான, வெளிச்சமான, அதிக ஆள் நடமாட்டமுடைய, டீசண்டான இடத்திலிருக்கும் ஹாஸ்டல்கள் உங்களுடைய முதல் தேர்வாய் இருக்கட்டும்.

ஹாஸ்டலில் சேர்ந்தாச்சா ! முதல் வேலை உங்கள் ரூமில் இருக்கும் நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வது. ரூமுக்குள்ள போனதும் போகாததுமா உங்களுடைய புராணங்களை அவிழ்த்து விட ஆரம்பிக்காதீர்கள். ரூமில் இருக்கும் நபர் எப்படிப்பட்டவர் ? பூர்வீகம் எங்கே ? எங்கே வேலை செய்கிறார் ? அவருடைய குணாதிசயம் எப்படி என எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாகவே உங்களுடைய ஹாஸ்டல் நாட்கள் ஓடட்டும். “பத்து நிமிஷம் பேசினேன் அதுக்குள்ள ஒண்ணுக்குள்ளே ஒண்ணாயிட்டோம்” டைப் நட்புகள் பலவும் பாதியிலேயே கரையும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

நீங்க போகும் ஹாஸ்டலில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். இருந்தால் ரொம்ப நல்லது. அல்லது உங்கள் ஊர்க்காரர், பக்கத்து ஊர்க்காரர் போன்ற நபர்கள் கிடைத்தால் நல்லது. அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய பாதுகாப்புக்கும், பொழுதுபோக்குக்கும் அது உத்தரவாதம் தரும்.

ஹாஸ்டல்களில் ஒரு சிக்கல் உண்டு. “மன்னார் அண்ட் மன்னார்” கம்பெனியில வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திருடும் நோக்கத்தோடு சிலர் தங்கியிருக்கக் கூடும். கைக்குக் கிடைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுருட்டும் அத்தகைய பேர்வழிகளிடம் ரொம்ப எச்சரிக்கை தேவை. உங்கள் உடமைகளையெல்லாம் ரொம்பப் பாதுகாப்பாய் வைத்திருங்கள். உங்க சொத்து, சுகம், வங்கி, சொங்கி விஷயங்களையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிட்டுத் திரிய வேண்டாம். நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை மனசுக்குள் எழுதி வைத்திருங்கள்.

ஹாஸ்டல்களுக்கு வரும்போது வீட்ல இருக்கிற நகை நட்டையெல்லாம் எடுத்துப் பையில போட்டுட்டு வராதீங்க. அவையெல்லாம் வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ பத்திரமாக இருக்கட்டும். ரொம்ப ரொம்ப அவசியமான நகைகளை மட்டும் கையில் வைத்திருங்கள். ரொம்ப மதிப்பு மிக்க பொருட்களை ஹாஸ்டலில் கொண்டு வராமல் இருப்பது நல்லது. அப்படியே வைத்திருந்தால் கூட அதை வார்டனோட பாதுகாப்பில் வைத்திருக்க முடிந்தால் ரொம்ப நல்லது !

நீங்க நீங்களாகவே இருங்க. உங்க ரூம்மேட் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். கிழிந்த பேண்ட் போடலாம், அல்லது முழுக்க போர்த்தி நடக்கலாம், பர்தா போடலாம் அல்லது பாவாடை போடலாம். அது அவரவர் விருப்பம். யாரையும் கிண்டலடிப்பதோ, அவர்களைக் காப்பியடிப்பதோ வேண்டாம். நீங்க தாவணி போட்ட தீபாவளியாய் இருக்க விரும்புவது உங்கள் விருப்பம். அடுத்தவங்களைக் காப்பியடிப்பது சில வேளைகளில் அவர்களுக்கே பிடிக்காமல் போய்விடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். குறிப்பாக சிலருடைய நடை உடை பாவனைகள் அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கையாய் இருக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் நீங்களாக இருந்தால், தேவையில்லாமல் பிறருடைய மனதை நீங்கள் புண்படுத்தும் வாய்ப்பையும் தவிர்க்கலாம்!

ஹாஸ்டலில் சட்டதிட்டங்கள் இருக்கும். “சட்டம் இருப்பதே அதை மீறுவதுக்குத் தானே” ன்னு சினிமா டயலாக் பேசி நடக்காதீங்க. சட்டங்களை மதியுங்கள். அப்போதான் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் கூட ஹாஸ்டல் நிர்வாகம் உங்கள் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் “அவ எப்பவுமே அப்படித் தான். எந்த சட்டதிட்டத்தையும் மதிக்கிறதில்லை” என கை கழுவி வேடிக்கை பார்க்க வாய்ப்பு உண்டு. அதே போல சட்ட திட்டங்களை எல்லாரும் மதிக்கிறது தான் ஹாஸ்டலோட நல்ல பெயருக்கும், பாதுகாப்புக்கும் கூட உத்தரவாதம் என்பதைச் சொல்லத் தேவையில்லை !

அதே நேரத்தில் பல ஹாஸ்டல்கள் அட்வான்ஸ் விஷயத்தில் சில்லறைத் தனமாக நடந்து கொள்வதும் உண்டு. எனவே அட்வான்ஸ் எவ்வளவு ? ஹாஸ்டலைக் காலி செய்யும் விதி முறைகள் என்ன ? எந்தெந்த சூழலில் அட்வான்ஸ் பணம் பிடிக்கப்படும் போன்ற விஷயங்களை நேரடியாகவே கேட்டுத் தெரிந்து விட்டு ஹாஸ்டலில் சேருங்கள்.
ஹாஸ்டல்ல இருக்கும்போது பொருட்கள் வாங்கறது, கடைக்குப் போறது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஹாஸ்டல் நிர்வாகத்திடம் ஐடியா கேட்பது ரொம்ப நல்லது. கூட இருப்பவர்களைப் பற்றி முழுசாகத் தெரிந்து கொள்ளும் வரை அவர்களை கண் மூடித் தனமாக நம்பாமல் இருப்பதே நல்லது !

ஹாஸ்டல்கள் ஒருவகையில் ஹோட்டல்களைப் போல எனும் நினைப்பும் இருப்பது நல்லது. ரகசிய கேமராக்கள் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஹாஸ்டல்களில் நிகழ்வதுண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது பயனளிக்கும்.

பெற்றோரை விட்டுத் தனியே தூரமாய் அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை “தப்பு செய்தா என்ன ?” எனும் அசட்டுத் துணிச்சலின் கதவைத் திறக்கும். உடனே தடாலடியா உள்ளே நுழைஞ்சுடாதீங்க. மெதுவா அந்தக் கதவை அடைத்துவிட்டு உங்க வேலையைப் பார்க்கக் கிளம்பிடுங்க. புகை பிடிக்கும் பழக்கம், தண்ணியடிக்கும் பழக்கம் என ஆரம்பித்து எல்லா வகையான தப்புகளுக்கும் ஹாஸ்டல் நட்பு காரணமாகிவிடக் கூடும். மற்றவங்க கிண்டலடிச்சாலும் பரவாயில்லை. தப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பேன் எனும் மன உறுதி தான் முக்கியம்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை மனசுக்குள் எழுதிக் கொண்டால், ஹாஸ்டல் வாழ்க்கை உங்களுக்கு ஹேப்பி வாழ்க்கையாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

எனது புதிய நூல் : குழந்தையால் பெருமையடைய….

நூலின் முன்னுரை

அவசர அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். படியில் அமர்ந்து ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது பின்னால் வந்து கழுத்தில் கட்டிக்  கொண்டாள் ஐந்து வயது மகள்.

“ஏன் டாடி ஆபீஸ் போறீங்க ?” 

“ஆபீஸ் போனா தானேடா செல்லம் பணம் சம்பாதிக்க முடியும் ! நீ கேக்கற விளையாட்டெல்லாம் வாங்கித் தர முடியும்” இப்படிச் சொன்னதும் அவளுடைய குரலில் ஒரு சின்ன ஏளனமும், நகைப்பும்…

“ஹேய் டாடி… பொய் சொல்லாதீங்க…. ஏடிஎம் ல போய் கார்ட் போட்டு, ஒரு பட்டனை அமுக்கினா பணம் கிடைக்கும்ல ? அன்னிக்கு பாத்தேனே. ஆபீஸ் போகாம அங்கே போய் பணம் எடுத்துக்கலாமே…  “

எனது மகளின் மழலைத் தனம் மனசுக்குள் புன்னகையை விரித்தது. குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே எனும் குற்றம்,  குழந்தைகளுக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறதே எனும் பொறுப்புணர்வும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது. 

நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் பல விஷயங்களை  நான் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். திருடுவது தப்பு என்பது முதல் பிறரை மதிக்கும் பண்பு வரை எல்லாமே எனது பெற்றோர் சின்ன வயதிலேயே ஊட்டி வளர்த்தவை தான்.

இன்றும் பசுமையாய் மெல்லிய மயில்பீலிச் சாமரமாய் நினைவுகளின் தென்றல் மனசுக்குள் வீசுகிறது. ஆரம்பக் கல்வி கற்றது அம்மா ஆசிரியையாய் பணிபுரிந்த மலையடி பள்ளிக்கூடத்தில். பள்ளிக்கூடத்துக்குப் போக சுமார் 45 நிமிடங்கள் மரங்களடர்ந்த கிராமச் சாலையில் நடக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அம்மா கதை சொல்லிக் கொண்டே கூட்டிப் போவார்கள். கதை சொல்லாவிட்டால் இடுப்பில் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பேனாம் !

அம்மாவின் நினைவுப் பெட்டகத்தில் கதைகளுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை  இல்லை. கரிகால் சோழன், மணிமேகலை, நல்ல தங்காள், நீதிக்கதைகள் என எல்லா கதைகளுமே அம்மாவிடமிருந்து பெற்றவை தான். பிரபல இயக்குனர்களையெல்லாம் வெட்கப்பட வைக்கும் கதை சொல்லும் பாணி அம்மாவின் சிறப்பம்சம். ஒரு பிரம்மாண்ட திரைப்படம் பார்ப்பது போல காட்சிப்படுத்தலும், வசன உச்சரிப்புகளும் என்னைக் கட்டிப் போட்டு விடும். “சே.. அதுக்குள்ள வீடு வந்துடுச்சா ? சரி மீதி கதை நாளைக்கு…” என வீடு வந்ததும் சொல்வேன். அப்படிக் கேட்ட கதைகள் தான் என்னை வார்த்திருக்கின்றன.

வார இறுதிகளிலும், மாலை வேளைகளிலும் அப்பாவின் கரம்பிடித்து வயல்வெளிகளில் நடக்கும் போது பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர் கற்றுத் தந்தார். அவருடைய நடவடிக்கைகள் தான் எனக்குப் பாடமாய் அமைந்தன. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் செயல்களை இமிடேட் செய்யும் எனும் பாலபாடம் அன்று புரியவில்லை. இன்று பளிச் என புரிகிறது.

அப்போதெல்லாம் அம்மாக்களின் முந்தானையும், அப்பாவின் வேட்டி நுனியும் தான் குழந்தைகளின் வழிகாட்டிகளாய் இருந்தன. நேசத்தின் வாசம் முற்றங்களில் நிரம்பி வழியும் மாலை வேளைகள் தான் குழந்தைகளைச் செதுக்கியிருக்கின்றன. கிராமத்து மண்ணின் சாயம் போகாத மழலைத்தனம் தான் மதிப்பீடுகளைக் கட்டி எழுப்பியிருக்கிறது.

இன்றைக்கு அவசரம் அவசரமாய் அலுவலகம் ஓடும் ஜீன்ஸ் அம்மாக்களுக்கும், ஷார்ட்ஸ் அப்பாக்களுக்கும் குழந்தைகளோடு போதிய நேரம் செலவிட முடிவதில்லை. வீடுகளில் தாத்தா பாட்டி இருக்கும் குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் கடந்த தலைமுறையின் நேசப் பகிர்தல்களை இந்தத் தலைமுறையிலும் சுவாசிக்கும் வரம் பெற்றவர்கள். மற்றபடி குழந்தைகளுக்கு இப்போது நண்பர்களெல்லாம் டோராவும், புஜ்ஜியும், மிக்கியும், டோனால்டும் தான்.

காலையில் அரை மணி நேரம் கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் நண்பர்களைப் பார்த்துக் கொண்டே பிரட் சாப்பிட்டு, வீடு திரும்பிய மாலை நேரத்தில் ஏதோ அனிமேஷன் படங்களோடு முடிந்து போய்விடும் அவர்களுடைய பொழுதுகள். நள்ளிரவில் ஆந்தையைப் போல வந்து தூங்கும் அப்பாக்கள் அவர்களைப் பொறுத்தவரை நாளிதழ்களில் வரும் ஞாயிறு இணைப்புகள் போல !

“இன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் ? எப்படியெல்லாம் அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்குவப்படுத்தவேண்டும். இதுதான் கான்சப்ட். ஒரு புத்தகத்தைத் தயாராக்குங்கள். பெற்றோருக்கான பெஸ்ட் கைடாக இருக்க வேண்டும். “ – என பிளாக் ஹோல் மீடியா பதிப்பக இயக்குனர் பிலால் அவர்கள் சொன்னபோது இந்த நினைவுகள் தான் மனதுக்குள் நிழலாடின.

கடந்த சில மாதங்களாக குழந்தைகளின் உலகத்தில் பயணித்துப் பயணித்து  எனக்கே வயது குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. உலக அளவில் உளவியலார்களும், குழந்தைகள் நல ஸ்பெஷலிஸ்ட்களும், மருத்துவர்களும் சொன்ன தகவல்கள், இது குறித்து வெளியான ஆய்வுகள், பல்வேறு நூல்கள் என முழுக்க முழுக்க மூழ்கியபின்பே இந்த நூல் சாத்தியமாகி இருக்கிறது.

இந்த நூல் பெற்றோருக்கு பயனுள்ள நூலாய் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

நிறம் மாறா நேசங்களுடன்

சேவியர்.

 

வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடட்.

செல் : 9600123146

admin@blackholemedia.in

www.blackholemedia.in

=========================
வாக்களிக்க விரும்பினால்….

=========================

வெளியூர் போனா வீடு பத்திரமா இருக்குமா ?

 

“ஹாய் மாலதி எப்படி இருக்கே ?”

“நல்லா இருக்கேன் ரம்யா…நீ எப்படி இருக்கே ? என்ன ஒரு சர்ப்ரைஸ் கால்…”

“என்னத்த சொல்றது. ஒரே ஊர்ல இருக்கோம் ஆனாலும் பாத்து பல மாசங்களாச்சு. அப்பப்போ போன்ல நாலுவார்த்தை பேசறதோட சரி”

“என்ன பண்ண சொல்றே ? நான் பிரீயா இருக்கும்போ உனக்கு வேலை வந்துடுது. உனக்கு நேரம் இருக்கும்போ எனக்கு ஏதாச்சும் ஒரு வேலை வந்துடுது” ரம்யாவின் குரலில் நட்பின் சிரிப்பு வழிந்தது.

“சரி… எனி திங் இண்டரஸ்டிங் ?”

“ஆமா.. நான் இரண்டு வாரம் லீவ்ல குடும்பத்தோட ஊர் சுத்த போறேன்” ரம்யாவின் குரலில் உற்சாகம் சிறகு விரித்தது.

“வாவ்… ரெண்டு வாரமா ? எப்படி லீவ் கிடைச்சுது ? உன் மேனேஜர் தான் லீவே தராத கஞ்சப் பயலாச்சே…. “

“அதையேன்டி கேக்கறே… ஆறு மாசத்துக்கு முன்னாடியே அவர் கிட்டே கெஞ்சி கூத்தாடி ரெண்டு வாரம் லீவ் வாங்கியிருக்கேன். பாவம் குழந்தைங்க, வீட்லயே அடஞ்சு கிடந்து ரொம்பவே சோர்ந்து போயிட்டாங்க”

“ஆமாமா….  குழந்தைங்க கூட நேரம் செலவிடவே முடியறதில்லை. அப்பப்போ வெளியேவாவது கூட்டிட்டு போறது ரொம்ப நல்லது !” சொன்ன மாலதி தொடர்ந்தாள், “சரி எங்கே போறீங்க ?”

“தாய்லாந்து ! “

“வாவ்… கடல் கடந்த பயணமா ? சூப்பர்….”

“ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருக்குடி…” ரம்யா சொன்னாள்.

“என்னடி பயம் ? பறக்கறதுக்கு பயமா ?”

“சே…சே… அதெல்லாம் ஒண்ணுமில்லை. தினமும் நியூஸ் பேப்பரைப் படிக்கிறேன். பூட்டிய வீட்டில் கொள்ளை, பட்டப் பகலில் கொள்ளைன்னு ஒரே டென்ஷன். நான் வேற இரண்டு வாரத்துக்கு வீட்டை அம்போன்னு விட்டுட்டு போயிடப் போறேன். எவனாவது வந்து சுத்தமா தொடச்சிட்டு போயிடுவானோன்னு நினைச்சா பக்குன்னு இருக்கு” ரம்யாவின் குரலில் கவலை அடர்த்தியாய் இருந்தது.

“ஒரு ரெண்டு வாரத்துக்கு உன் வீட்ல யாரையாவது தங்க வைக்கலாமே ? சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ் இப்படி யாராச்சும்  ?”

“பாத்தேன். அப்படி யாரும் கிடைக்கல.”

“அப்போ உன்னோட பயம் நியாயமானது தான்.  ஆனா, கொஞ்சம் உஷாரா இருந்தா இந்த சிக்கலையெல்லாம் சமாளிக்கவும் வழி இருக்கு….” மாலதி சொன்னாள்.

“சரி… என்னென்ன பண்ணனும்ன்னு கொஞ்சம் ஐடியா கொடேன்” ரம்யா கேட்க மாலதி ஆரம்பித்தாள்.

முதல்ல வீட்ல இருக்கிற எல்லா எலக்ட்ரிக் சமாச்சாரத்தோட கனக்ஷனையும் உருவி விட்டுடு. சார்ஜர், டிவி, கம்ப்யூட்டர் எதுவுமே பிளக் பாயிண்ட்ல மாட்டியிருக்காம பாத்துக்கோ. எலக்ட்ரிக் தீ விபத்துல இருந்து தப்பிக்க இது ரொம்ப முக்கியம். சட்டு புட்டுன்னு காலநிலை மாறி மின்னல் ஏதாச்சும் வந்தா கூட எல்லா பொருளும் பாதுகாப்பா இருக்கும்.

அதேமாதிரி கேஸ் நல்லா மூடியிருக்கட்டும். பாதுகாப்பான இடத்துல கேஸ் சிலிண்டரை வைக்கிறது உத்தமம்.

எல்லா சன்னல்களையும், கதவுகளையும் பூட்டு வாங்கி இழுத்துப் பூட்டு. வீட்டை இலட்சக்கணக்கில செலவு பண்ணி கட்டிட்டு பூட்டு வாங்க கஞ்சத் தனம் பாக்கக் கூடாது. நல்ல பூட்டா பாத்து வாங்கணும். சிரமம் பார்க்காம எல்லா கொக்கி, தாழ்ப்பாளையும் போட்டு வை.

இப்பல்லாம் அலாரம் அடிக்கிற பூட்டு கூட இருக்கு. தப்பான சாவி போட்டா சத்தம் போடும். வேணும்ன்னா அதைக் கூட வாங்கி மாட்டலாம். முக்கியமான சமாச்சாரம், வீட்டுக் கீயை வீட்டுக்கு வெளியே ஒளிச்சு வைக்கிற சமாச்சாரமெல்லாம் வேண்டாம். உன்னை விட புத்திசாலிங்க தான் திருடங்க.

ரொம்ப பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரங்க கிட்டே மட்டும் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லிடு. அப்படியே உன்னோட செல்போன் நம்பர்ஸ் எல்லாம் கொடு. அப்பப்போ வீட்டு மேல ஒரு கண் வெச்சுக்கச் சொல்லு.

அதுக்காக ஊர் முழுக்க நீ வெளியூர் போற விஷயத்தை டமாரம் அடிக்காதே. அது வம்பை விலை கொடுத்து வாங்கற மாதிரி. கொஞ்சம் உஷாரா தான் பேசணும். குறிப்பா கேண்டீன்ல, ஜிம்ல, கடைவீதில எல்லாம் இதுபத்தி பேசாதே.

ரொம்ப நம்பிக்கையான  நபர் ஒருத்தர் கிட்டே உன்னோட வீட்டுச் சாவி ஒண்ணைக் குடுத்து வை. ஏதாச்சும் அவசரமா வீட்டைத் திறக்க வேண்டியிருந்தா பயன்படும். முடிஞ்சா அப்பப்போ வீட்டை வந்து திறந்து பாத்துட்டுப் போகச் சொல்லு.

பேப்பர் காரப் பையன் கிட்டே மாசம் ஒண்ணாம் தியதில இருந்து பேப்பர் வேண்டாம்ன்னு சொல்லு. ஒரு வாரம், இரண்டு வாரத்துக்குப் பேப்பர் நிறுத்தினா நீ ஊர்ல இல்லேங்கற விஷயம் பேப்பர் காரப் பையனுக்கு தெரிஞ்சு போயிடும்.   அதே போல காலைல பால்க்காரர் கிட்டேயும் “கொஞ்ச நாளைக்குப் பால் வேண்டாப்பா..” ன்னு சொல்லி நிப்பாட்டி வை.

போஸ்ட் ஆபீஸ்ல போய் உன்னோட லெட்டர்ஸை எல்லாம் இரண்டு வாரம் கழிச்சு வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்னு சொல்லு. பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்ல அந்த வசதி இருக்கு.

வீட்ல இருக்கிற போனோட வால்யூமை ரொம்ப கம்மியா வை. ரொம்ப நேரம் சும்மா அடிச்சிட்டே இருக்கிற மாதிரி வெளியாட்களுக்குத் தெரியக் கூடாது. அதே மாதிரி உன்னோட ஆன்சரிங் மெஷின்ல நீ வெளியூர் போற சமாச்சாரத்தை எல்லாம் போட்டு வைக்காதே.

வீட்டு முற்றத்துல சைக்கிள், பாத்திரம், விளையாட்டு இப்படிப்பட்ட ஐட்டம்ஸ் எல்லாம் போட்டு வைக்காதே. அதையெல்லாம் வீட்டுக்குள்ளே பத்திரமா பூட்டி வெச்சுடு.  வீட்ல இருக்கிற பணம், நகை எல்லாத்தையும் மறக்காம பேங்க் லாக்கர்ல வெச்சுடு. வீட்ல அலமாராவில போட்டு பூட்டி வைக்கிற வேலையே வேண்டாம்.
காரை தெருவிலே நிப்பாட்டுவேன்னா, யாரையாவது வெச்சு காரை அப்பப்போ எடுத்து இடம் மாத்தி நிப்பாட்டச் சொல்லு. ஆள் இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் கிடைக்கும்.

வீடு ஆள் நடமாட்டம் இருக்கும்போ எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கற மாதிரி செட் பண்ணு. குறிப்பா டோர் கர்ட்டன், விண்டோ கர்ட்டனெல்லாம் முழுசா இழுத்து மூட வேண்டாம். நார்மலா இருக்கட்டும். சன்னல் பக்கத்துல அலமாரா, டீவி இப்படிப் பட்ட பொருள் இருந்தா கொஞ்சம் தள்ளி வைக்கப் பாரு.

முடிஞ்சா கிளம்பறதுக்கு முன்னாடி வீட்டை ஹேண்டி கேம்ல வீடியோ எடுத்து வை. திரும்பி வந்தப்புறம் எல்லாம் அதனதன் இடத்துல இருக்கான்னு செக் பண்ண வசதியா இருக்கும்.

கடைசியா ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். உன்னோட ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லு. போலீஸ் விடியற்காலை, ராத்திரின்னு அடிக்கடி அந்தப் பக்கமா விசிட் அடிக்கும்போ உங்க வீட்டுப் பக்கத்துல இறங்கி ஒரு பார்வை பாத்துட்டு போவாங்க ! இதுக்கு கட்டணம் ஏதும் கிடையாது ! ரொம்ப பேருக்கு இப்படி ஒரு போலீஸ் சர்வீஸ் இருக்கிறதே தெரியாது !

சொல்லி விட்டு நீளமாய் பெருமூச்சு விட்ட மாலதி கேட்டாள் “என்ன ? சத்தமே காணோம் ? நான் சொல்றதெல்லாம் நோட் பண்ணிட்டியா இல்லையா ?”  

“நோட் பண்ணல, ஆனா எல்லாத்தையும் மொபைல்லயே ரெக்கார்ட் பண்ணிட்டேன். இதுல இவ்ளோ விஷயம் இருக்கிறது எனக்குத் தெரியவே இல்லைடி. நான் வெளியூர் போறதுக்கு முன்னாடி உன்னை வீட்ல வந்து பாக்கறேன்” ரம்யா சிரித்தாள்.

“ஓ.. வீட்டுக்கு வரியா ?”

“ஆமா… என்னோட வீட்டுச் சாவி ஒண்ணை உன் கிட்டே தான் குடுத்துட்டுப் போகப் போறேன். அப்பப்போ வந்து வீட்டைப் பாத்துக்கோ”

“அடிப்பாவி… கடைசில ஐடியா குடுத்தவளை வாட்ச்மேன் ஆக்கிட்டியே” மாலதி நகைச்சுவையாய் சொல்ல ரம்யா சிரித்தாள். அந்த சிரிப்பில்  உற்சாகம் மின்னியது

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

அப்பார்ட்மெண்ட் அபாயங்கள் : பாதுகாப்பு வழிகள்…

 

ப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம்


ப்பார்ட்மெண்ட் குறித்த அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை. அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர் தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட் விபரீதங்களைச் சொல்லி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. 

பெண்கள் தனியே இருக்கும் வீடுகளைக் குறிவைத்தே பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கையில் அதுவும் அப்பாட்மெண்ட் போன்ற இடங்களில் பாதுகாப்பின்மைக்கு என்னக் காரணம் ?

முதல் காரணம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு என்பார்களே அதைவிட ஒரு படி மேலான அவசரம். நீங்கள் அப்பார்ட்மெண்ட் வாசியா ? சரி உங்கள் அப்பார்ட்மெண்டில் இருக்கும் எத்தனை நபர்களை உங்களுக்குத் தெரியும் ? அவர்களைப் பற்றி என்னென்ன விவரங்கள்  ? அவர் என்ன வேலை செய்கிறார் ? வீட்டில் எத்தனை பேர் உண்டு ? அவர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா ? இப்படி உங்களையே சில கேள்விகள் கேட்டுப் பாருங்கள். விஷயம் பளிச் எனப் புரிந்து போய் விடும்.

எதேர்ச்சையாகப் படியில் சந்தித்துக் கொள்ளும் போது ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து போய் விடுகிறோம். அவ்வளவு தான் பழக்கமெல்லாம். அடுத்த வீட்டு நபர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமலேயே முடிந்து போகிறது வாழ்க்கை. இது தான் நிஜம். இதற்கு நேர் எதிரான வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமானால் கிராமத்துப் பக்கம் தான் போகவேண்டும். 

கிராமத்திலுள்ள அத்தனை நபர்களுக்கும், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தெரியும். அறிதல் என்பது உறவுகளின் இறுக்கத்துக்கு ரொம்பவே அவசியமானது. புதிய நபர் யாராவது கிராமத்து பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கினாலே ஒட்டு மொத்த கண்களும் அவரை மொய்க்கும். அவரிடம் நேரடியாகவே போய் விசாரணையையும் தொடங்கி விடுவார்கள். ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் ஒன்று படுவதும், யாருக்கேனும் உதவி தேவையெனில் சட்டென களம் இறங்குவதும் கிராமத்தின் குணாதிசயங்கள்.  

ஒரு கிராமத்தான் வெளியூர் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே பக்கத்து வீட்டுக் காரர்களிடமெல்லாம் போய், “நான் வெளியூர் போறேன் வீட்டைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்பார். அதே சம்பவம் நகர்ப்புறத்தில் என்றால் எப்படி இருக்கும். நாம வீட்ல இல்லேங்கறது யாருக்கும் தெரியக் கூடாது. ஏதோ பக்கத்து தெருவுக்கு போறாமாதிரி பாவ்லா காட்டணும். பக்கத்து வீட்டுக் காரன் கிட்டேயே மூச்சு விடக் கூடாது. விட்டால் பக்கத்து வூட்டுக்காரனே லவட்டிட்டுப் போக வாய்ப்பு அதிகம். இப்படித் தான் பதட்டப்படும்! 

நகர்ப்புற வாழ்க்கை பயத்தின் மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. முதல் பயம் நம்பிக்கையின்மை. அதற்கு நியாயமான காரணம் உண்டு. பெரும்பாலான நகர்ப்புற விபரீதங்கள் ரொம்பத் தெரிந்த நபர்களின் துணையோடு தான் நடக்கிறது. இரண்டாவது நம்ம வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் போய்விடுவோம், எதுக்கு வீண் வம்பு எனும் மனோபாவம். 

நகர்ப்புற வாழ்க்கையும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் இப்படி ஏகப்பட்ட சிக்கல்களோடு தான் நம் முன்னால் நிற்கிறது. இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது நமது கையில் தான் இருக்கிறது. கீழே உள்ள சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பெரும்பாலான சிக்கல்கள் விலகி ஓடிவிடும்.

  1. அப்பார்ட்மென்ட்களை புக் செய்யும் போதே அதன் பாதுகாப்புக் குறித்து விசாரித்து அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்பாட்மெண்டைச் சுற்றி உள்ள இடங்கள், அதன் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்.
  2. அப்பாட்மெண்ட் கதவு பலமானதாய் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். முன் கதவு நல்ல உறுதியாய் இருக்க வேண்டியது அவசியம். ரொம்ப அலங்காரம் எனும் பெயரில் டிசைன் செய்து மரத்தின் கனத்தைக் குறைத்து விடாதீர்கள்.
  3. கதவில் வெறுமனே பெயருக்கு ஒரு பூட்டு போடுவது உதவாது. பூட்டு நல்ல தரமான பூட்டாக இருக்க வேண்டும். கொஞ்சம் தூரத்திலுள்ள ஏதேனும் ஒரு கடையில் நீங்களாகவே போய் வாங்கிக் கொள்ளுங்கள். 
  4. இப்போதெல்லாம் எல்லாக் கதவுகளுக்கும் முன்னால் ஒரு கிரில் போட்டு விடுகிறார்கள். அது ரொம்ப நல்லது.
  5. கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் “டெட் போல்ட் லாக்” வாங்கி மாட்டுங்கள். கதவை படீரென திறந்து கொண்டு யாரும் வர முடியாது. வெளியே யாராவது வந்து கதவைத் தட்டினால் கூட முழுமையாய்க் கதவைத் திறக்காமலேயே பேச முடியும்.
  6. வீட்டுக் கதவில் எத்தனை பூட்டுகள், தாழ்ப்பாள் சங்கதிகள் உண்டோ எல்லாவற்றையும் இரவில் பூட்டி வையுங்கள். சும்மா ஒரு தாழ்ப்பாள் மட்டும் பெயருக்குப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். நிறைய பூட்டுகள் இருந்தால் திருட நினைப்பவர்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கும். அது யாரையாவது எழுப்பி விடும்.
  7. வீட்டைப் பூட்டாமல் வெளியே போகவே போகாதீர்கள். “ரோட்டுக்கு எதிரே தான் கடை ஒரு எட்டு போயிட்டு ஓடி வந்துடறேன்” ன்னு நினைக்க வேண்டாம். அந்த சில வினாடிகளில் யாராவது உங்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளலாம். நீங்கள் திரும்பி வந்தபின் தாக்கலாம் !  
  8. சந்தேகப் படும்படியான நபர் “வாட்டர் பில்டர்” சரி செய்ய வந்திருக்கிறேன், ஏசி சரிசெய்ய வந்திருக்கிறேன் என்றால் உஷாராகி விடுங்கள். உடனடியாக நிறுவனத்துக்குப் போன் செய்து அப்படி யாரையாவது அனுப்பியிருக்கிறார்களா எனக் கேளுங்கள். எக்காரணம் கொண்டும் “அலுவலக நம்பர் என்னப்பா” என வந்தவனிடமே கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.
  9. இப்போதைய டிவிக்கள், ரேடியோக்கள் எல்லாவற்றிலுமே டைமர் சிஸ்டம் உண்டு. எனவே நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால் கூட சும்மா அவ்வப்போது டிவி ஓடுமாறு செட் செய்யலாம், ரேடியோ பாடுமாறு செய்யலாம். வீட்டில் யாரோ இருப்பது போன்ற தோற்றம் உருவாகும்.\
  10.   வீட்டுக்கு அருகில் நல்ல நண்பர் ஒருவரையாவது கொண்டிருங்கள். நீங்கள் வெளியே போகும் விஷயத்தைச் சொல்லுங்கள். மாறி மாறி தேவைப்படும் போதெல்லாம் உங்கள் வீடுகளைக் கண்காணித்துக் கொள்ளலாம்.
  11. சந்தேகத்துக்கு இடமான நபர் தென்பட்டால் உடனடியாக போலீஸுக்குத் தெரியப்படுத்துங்கள். கூடவே அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், வாட்ச்மேன் அனைவரையும் உஷார் படுத்திவிடுங்கள்.
  12. அப்பார்ட்மெண்ட்களில் சில ஆபத்தான பகுதிகள் உண்டு. படிக்கட்டுகள், கார் பார்க்கிங் போன்றவை சில உதாரணங்கள். அங்கெல்லாம் கொஞ்சம் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம்.
  13. வெளிச்சமான இடங்கள் திருட்டு வேலைக்காரர்களுக்கு அலர்ஜி. அப்பார்ட்மெண்டைச் சுற்றி இரவு முழுவதும் பகல் போல வெளிச்சம் இருந்தால் ரொம்பப் பாதுகாப்பானது. சில வெளிநாடுகளில் இது கட்டாயம்.
  14. அட்டவணைப்படி எல்லாவற்றையும் செய்யாதீர்கள். “எல்லா சனிக்கிழமையும் மாலையில் ஷாப்பிங் போவாங்க, சண்டே ஈவ்னிங் வெளியே டின்னர் போவாங்க, இப்படி ஒரு தெளிவான அட்டவணை இருப்பது ஆபத்து !” இது திருடர்கள் சாவாகாசமாக அமர்ந்து திட்டமிட உதவும். “எப்போ போவாங்க எப்போ வருவாங்கன்னே தெரியாது” எனும் நிலை தான் அப்பார்ட்மெண்ட் விஷயத்தில் பாதுகாப்பானது. வெளியே போகும்போது கூட வேறு வேறு பாதைகளில் உங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.
  15. அப்பார்ட்மெண்ட் வாசிகளுடன் ஒரு நம்பிக்கை  வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கவும் வேண்டாம். “அதை ஏங்கா கேக்கறீங்க என் வூட்டுக் காரர் அடுத்த வாரம் புல்லா வெளியூராம்” என ஸ்பீக்கர் வைத்துப் பேசாதீர்கள்.
  16. எப்போதும் செல்போன் கையிலேயே இருக்கட்டும். அதில் லோக்கல் போலீஸ் நம்பர், ஆம்புலன்ஸ் நம்பர், அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் நம்பர், நம்பிக்கையான சிலருடைய நம்பர்கள் எல்லாம் தவறாமல் இருக்கட்டும். மறக்காம சார்ஜ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
  17. அப்பார்ட்மெண்ட்களில் வாடகைக்குப் போகிறீர்களென்றால் கெடுபிடி அதிகமுள்ள இடங்களுக்கே போங்கள். “ஆயிரத்தெட்டு டீட்டெயில்ஸ் கேட்டு சாவடிப்பாங்க” என வெறுக்காதீர்கள். அதே போல எல்லோரிடமும் கேட்பதால் அப்பார்ட்மெண்ட்களில் வருபவர்கள் பாதுகாப்பானவர்களாய் இருக்க சாத்தியம் அதிகம்.
  18. முன்பு வாடகைக்கு இருந்தவர் பயன்படுத்திய பூட்டு மாற்றப்பட்டுள்ளதா என்பதை 100 சதம் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் முதல் வேலையாக அதை மாற்றுங்கள்.
  19. வசதியிருப்பவர்கள் செக்யூரிடி கேமராக்களையும் வீடுகளில் பொருத்தலாம். வீட்டில் குழந்தைகளை ஆயா நன்றாகக் கவனிக்கிறாரா என்பது முதல், யாராவது அத்துமீறி நுழைகிறார்களா என்பது வரை சகலத்தையும் அதில் பிடித்துவிடலாம்.
  20. அப்பார்ட்மெண்டின் தன்மைக்கு ஏற்ப பாதுகாப்புகள் அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூமில் நடப்பது மற்ற ரூமுக்கே கேட்காது என வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒரு டோர் அலார்ம் சிஸ்டம் வாங்குவது நல்லது. கதவு திறக்கப்பட்டால் அது அதிக சத்தம் போட்டு உங்களை உஷார் ப்படுத்திவிடும்.1.  கதவில் ஒரு சிறிய லென்ஸ் பொருத்தி வெளியே இருப்பவர் யார் என்பதைப் பார்ப்பது ரொம்ப நல்லது. சிம்பிள் செக்யூரிடி சிஸ்டம். ஆனால் ரொம்பப் பயனளிக்கும். இந்த அட்ரஸ் எங்கே இருக்கு தெரியுமா ? ஒரு போன் பண்ணிக்கலாமா ? இப்படி ஏதாவது ஒரு சிம்பிள் உதவியுடன் பெரிய பெரிய ஆபத்துகள் வரலாம் கவனம் தேவை. 
  21. நீங்கள் ஒரு திருடராய் இருந்தால் உங்கள் வீட்டில் எப்படியெல்லாம் நுழைவீர்கள் என யோசியுங்கள். அந்த இடங்களிலெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். 
  22. ஒருவேளை உங்கள் வீட்டில் திருடன் நுழைந்து விட்டானென்றால், உதவி உதவியென கத்தினால் ஒருவேளை உதவி கிடைக்காமல் போகலாம். எனவே தீ.. தீ என கத்துங்கள் !! இது அனுபவஸ்தர்களின் அட்வைஸ்.
  23. கழற்றிப் போட்டிருக்கும் ஷூவிற்குள், மிதியடிக்குக் கீழே, செடித்தொட்டிக்கு அடியில், கதவுக்கு மேல் இப்படிப்பட்ட இடத்திலெல்லாம் சாவியை வைத்துச் செல்லாதீர்கள். இதெல்லாம் ஹைதர் கால டெக்னிக்.
  24. கார் கீயில் வீட்டுச் சாவியையும் போட்டு வைக்காதீர்கள். எங்கேயாவது வேலட் பார்க்கிங் சமயத்தில் கூட உங்கள் கீ டூப்ளிகேட் செய்யப்படலாம். உங்கள் கார் எண்ணை வைத்து உங்கள் விலாசம் கண்டுபிடிக்கப் படலாம் !
  25. யாராவது போன் பண்ணினால் உடனே உங்கள் ஜாதகத்தை அவரிடம் சொல்லாதீர்கள். அவர்கள் யார், என்ன சமாச்சாரம் என்பதையெல்லாம் முதலில் கேட்டு விட்டு தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அடிக்கடி ராங் கால் வருகிறதா ? தொலைபேசி நிறுவனத்திற்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். வீடு காலியாய் இருக்கிறதா ? ஆட்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட ராங் கால்கள் வரும் உஷார்.
  26. முதலில் ஒரு காலர் ஐடி வாங்கிக் கொள்ளுங்கள். யாரெல்லாம் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் எனும் விஷயம் தெரியவரும். உங்கள் வீட்டு குப்பைகளில் கூட கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரைப் பற்றிய, வங்கிக் கணக்கு பற்றிய விஷயங்களெல்லாம் அதில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
  27. யாராவது வந்து உங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களைப் பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்களிடம் கவனமாய் இருங்கள். நம்பிக்கையற்றவராய் தெரிந்தால் அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் போய் செய்திகளை வாங்கச் சொல்லுங்கள். முடிந்தால் செல்போனில் நைசாக அவனை ஒரு படம் பிடித்துக் கொள்ளுங்கள். மறக்காமல் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள்.
  28. நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து விடுதல் உசிதம். கொஞ்சம் தேவைக்கேற்ற பணம் மட்டும் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.
  29. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னென்ன கார் வைத்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ஏதேனும் வித்தியாசமான கார் வந்தால் அலர்ட் ஆகி விடுங்கள். அதன் எண்ணை எழுதி வையுங்கள். தேவைப்படலாம் !

 நன்றி : பெண்ணே நீ…

 

பயனுள்ளதாய் இருந்தால்… வாக்களியுங்கள் ….


சேவியர்