
மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !
பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் !
ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் !
“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?” என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !
சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !
வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.
1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !
வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !
இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.
“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !
1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !
சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.
ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.
“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.
உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !
பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது !
கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !
“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !
“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.
இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.
சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.
ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !
“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.
அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !
ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !
மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !
சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.
ஃ
Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.
சேவியர்
You must be logged in to post a comment.