1943ல் வெளியான பிரஞ்ச் நாவலான லே பெட்டிட் பிரின்ஸ் நாவலின் தமிழ்ப்பதிப்பான குட்டி இளவரசன் நாவலைப் படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள் என்று சொல்வதற்காகவே இந்தப் பதிவு !பெரியவர்களின் உதாசீனத்தால் சின்ன வயதிலேயே ஓவியம் வரையும் ஆர்வத்தை விட்டு விட்டவன் தான் நமது நாயகன். மலைப்பாம்பு யானையை விழுங்கும் அவனுடைய ஓவியத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாத ஆதங்கம் அவனுக்கு. ஓவியத்தை விட்டு விட்டு பைலட் ஆக ஆசைப்படுகிறான். அவன் ஓட்டிச் செல்லும் விமானமோ சகாரா பாலைவனத்தில் விழுந்து விடுகிறது. அங்கே ஒரு சிறுவனைச் சந்திக்கிறான். அவன் வேறு கிரகத்திலிருந்து இங்கே வந்திருப்பவன்.
சிறுவனின் கிரகமோ ரொம்பச் சின்னது. ரொம்பச் சின்னதாக மூன்று எரிமலைகளும், ஒரு ரோஜாப்பூவும், பவோபாப் மரங்களும் தான் அந்தக் கிரகத்தின் சொத்துக்கள். ரோஜா மீதான அவனுடைய காதல் அபரிமிதமானது. பவோபாப் மரங்கள் குறித்த கவலைகளும் அவனுக்கு நிறைய இருக்கிறது.
தனது கிரகத்திலிருந்து பல கிரகங்கள் சுற்றி விட்டு பூமிக்கு வருகிறான். பூமிக்கு வரும் முன் அவன் சந்திக்கும் ஆறு கிரகங்களுமே ரொம்பச் சின்னவை. எல்லாமே ஒற்றை நபர் கிரகங்கள் !
முதல் கிரகத்தில் ஒரு அரசன் இருக்கிறான். கட்டளையினால் நட்சத்திரங்களைக் கூட பணிய வைக்கும் வல்லமை அவனுக்கு உண்டு. என்ன செய்ய ? அவனுடைய நாட்டில் அவனுடைய கட்டளைகளைக் கேட்பதற்கு ஆட்கள் தான் இல்லை.
இரண்டாவது கிரகத்தில் இருக்கும் மனிதன் ரொம்பவே தற்பெருமைக்காரன். யாராவது அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனை யாரும் குற்றம் சொன்னதேயில்லை, காரணம் அந்தக் கிரகத்தில் அவன் மட்டும் தான்.
மூன்றாவது கிரகத்தில் இருந்தவன் குடிகாரன். ஏன் குடிக்கிறோம் என்பதையே தெரியாத குடிகாரன். ஐயோ குடிகாரனாகி விட்டோமே எனும் கவலையை மறக்கவும் குடித்துக் கொண்டிருக்கிறான்.
நான்காவது கிரகத்தில் ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவருடைய வேலை பொழுதெல்லாம் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைக் கணக்கு பார்ப்பது தான். அதை வைத்துக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் அவன் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கிறார்.
அடுத்த கிரகத்தில் தெருவிளக்கு எரியவைக்கும் நபர் மட்டுமே இருக்கிறார். அந்தக் கிரகமோ நிமிடத்துக்கு ஒருமுறை பகல் இரவு என மாறி மாறி வருகிறது. அதனால் அவரும் நிமிடத்துக்கு ஒரு முறை லைட்டை போட்டுப் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. ஆளில்லாத கிரகத்தில் எதுக்கு லைட் போடணும், அணைக்கணும் எனும் கேள்வி அவனிடம் இல்லை.
அடுத்த கிரகத்தில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். தகவல்கள் புள்ளி விவரங்கள் போன்றவற்றில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம்.
ஏழாவதாக வந்த கிராமம் தான் பூமி. பூமியில் கதாநாயகனிடம் சிறுவன் ஓவியம் வரையச் சொல்கிறான். ஒரு ஆடு வரைய வேண்டும் என்பது சிறுவனின் விருப்பம். ஆனால் வரையும் ஆடுகள் எதுவும் சிறுவனைக் கவரவில்லை. எனவே அவர் ஒரு பெட்டியை வரைகிறார். அதற்குள் ஆடு இருக்கிறது என்று சொல்ல, சிறுவனுக்குப் பரம திருப்தி. அவன் தனது கிரகம் குறித்துப் பேசுகிறான். தனது ரோஜாப்பூ பற்றி, போவபாப் மரங்கள் பற்றி பேசுகிறான்.
கடைசியில் பாலைவனத்தில் தண்ணீர் தேடித் தண்ணீர் தேடி, ஒரு கிணறை அடைகிறார்கள். ஒரு பாம்பு சிறுவனைக் கடிக்கிறது, சிறுவன் தனது கிராமத்துக்குப் போய் விடுகிறான்.
Antoine de Saint-Exupery எழுதிய இந்த நாவல் உலகெங்கும் 190 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எட்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. சகாரா பாலைவனத்தில் உண்மையாகவே விமான விபத்தில் சிக்கிக் கொண்ட எழுத்தாளரின் அனுபவங்களின் வெப்பம் எழுத்துகளில் உறைந்திருக்கிறது. அவருடைய மரணத்துக்கு முந்தைய வருடத்தில் 1943ல் வெளியான இந்த நூல் அவருடைய புகழ் மரணமடையாமலிருப்பதை உறுதி செய்கிறது.
சிறுவர்களின் உலகத்துக்குள் பெரியவர்களால் புக முடியவில்லை. பெரியவர்களுடைய உலகமோ சிறுவர்களை வசீகரிப்பதில்லை. பெரியவர்கள் எல்லாவற்றையுமே அறிவு ரீதியாகப் பார்க்கிறார்கள். அல்லது பொருளாதார ரீதியாகப் பார்க்கிறார்கள். ஆனால் சிறுவர்களின் உலகமோ எல்லாவற்றையும் உணர்வு ரீதியாகப் பார்க்கிறது. சிறுவர்களின் பார்வை எல்லோருக்கும் வந்தால் உலகம் எத்துணை இனிமையாய் இருக்கும் எனும் ஏக்கம் கலந்த கேள்வியை இந்த நாவல் தன்னுள்ளே இறுக்கமாய்ப் பொதிந்து வைத்திருக்கிறது.
எனக்கு இந்த நாவலில் பிடித்த விஷயங்கள் சில உண்டு. ஒன்று இதன் எளிமை. பிரெஞ்ச் மூலத்திலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம், ச.மதன கல்யாணி ஆகியோர் மொழி பெயர்த்திருக்கின்றனர். சுவாரஸ்யமான நடை.
ரொம்பவே சின்னப் புத்தகம். நாவல் என்றால் விஷ்ணுபுரம் ரேஞ்சுக்கு தலையணை சைஸில் இருக்கவேண்டும். ஏகப்பட்ட தத்துவ மூட்டைகளோ, கதாபாத்திரங்களோ இருந்தாகவேண்டும் எனும் தப்பான நம்பிக்கைகளை உதறித்தள்ளியிருப்பது பெரிய பலம். குறிப்பாக என்னைப் போன்ற “ஃபாஸ்ட் புட்” வாசகர்களுக்கு நிறைவளிக்கும் நூல். சிற்றிதழில் வரும் ஒரு பக்கக் கவிதையை வாசித்துப் புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலைப் படித்து விடலாம் என்பது ரொம்பப் பிடித்தமான விஷயம் !
வீட்டின் வரவேற்பறையில் ஒரு கையில் சூடான தேனீரையும், இன்னொரு கையில் குட்டி இளவரசனையும் கொடுத்த நண்பர் சுந்தரபுத்தனுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லாமல் போனால் என்னை எக்சுபெரியே மன்னிக்க மாட்டார் !
மறுவாசிப்பில் இருக்கிறேன் !…
You must be logged in to post a comment.