புகை நமக்குப் பகை !

புகைத்தல் கொல்லும். 
நீங்கள் கொல்லப்பட்டால் வாழ்வின் உன்னதமான பகுதிகளை 
இழந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம் –  புரூக் ஷீல்ட்ஸ்.

ஒரு மனிதனை மிக மிக எளிதாகப் பிடித்து விடக் கூடிய அடிமைத்தனம் என்று புகையைச் சொல்லலாம். தண்ணி அடிக்கிறவன் கூட ஒரு வாரம் ஒன்றோ இரண்டோ தடவை தான் தண்ணி அடிப்பான். ஆனால் தம் அடிக்கிறவர்களோ அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை கூட அடிக்கிறார்கள். காரணம் மிக எளிதாக ஊதித் தள்ளி விட முடியும் எனும் காரணம் தான். இது கொண்டு வருகின்ற கேடு அளவிட முடியாதது !

புகை பிடிப்பதன் தீமையைக் குறித்து வால்யூம் வால்யூமாக ஆய்வு முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புகை பிடித்தல் உடலை மட்டுமல்லாமல் மனதையும் பாதிக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். அவர்களுடைய திறமைகள் படிபடியாய் மழுங்கிப் போக இவை காரணமாகி விடுகின்றன. புகை பிடிப்பவர்கள் ஞாபக சக்தியில் ரொம்பவே வீக்காக இருப்பார்கள் என்கிறது ஒரு புது ஆராய்ச்சி.

“தினசரி நிகழ்வுகளில் மூன்றில் ஒரு பாகம் விஷயங்களை இவர்கள் மறந்து விடுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கும். புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது புகை பிடிப்பவர்களின் ஞாபக சக்தி ரொம்பவே பரிதாபமானது” என அதிரடியாக மிரட்டுகிறது இந்த ஆராய்ச்சி.

ஏற்கனவே புகை பிடிப்பவர்களுடைய வயிற்றில் அமிலம் வார்க்கும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. தம் அடிப்பவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கை தகிடு தத்தோம் போடும் என ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்தது.

பிரிட்டனிலுள்ள நார்த்தம்ரியா பல்கலைக்கழகத்தில் தான் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பதினெட்டு வயதுக்கும், இருபத்து ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட எழுபது பேர் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். இவர்களிடம் ஞாபக சக்திக் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள பார்ட்டிகள் வெறும் 56 சதவீதம் கேள்விகளுக்கான விடையை மட்டும் சொல்லி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோ 81 சதவீதம் சரியான பதில்களைச் சொல்லி முன்னணியில் நின்றார்கள்.

கொஞ்ச காலம் புகை பிடிக்கும் பழக்கத்தில் விழுந்து பின்னர் அதை விட்டு விட்டு வெளியே வந்தவர்கள் 74 சதவீதம் கேள்விகளுக்குச் சரியான விடையளித்து வியப்பூட்டினர். இதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை உதறி விட்டால் ஞாபக சக்தியை மீண்டெடுக்கலாம் எனும் உண்மை வலுவடைந்திருக்கிறது.

“அப்பா.. நீங்க புகைப்பதை விட்டு விடுவீர்களா ?” கையைப் பற்றிக் கொண்டே தந்தையிடம் அந்த சிறுவன் கேட்டான்.

“ஏன்பா… ?”

“நான் பெரியவனானதுக்கு அப்புறம் கூட நீங்க என் கூடவே இருக்கணும்ன்னு ஆசைப்படறேன்”

பையனின் பதிலில் தந்தையின் கையிலிருந்த சிகரெட் நழுவியது. அதன் பிறகு அது மேலேறி விரல்களில் அமரவேயில்லை.

குடும்ப உறவுகளை ரசிக்கச் செய்ய விடாமல் இந்த புகைத்தல் பழக்கம் மனிதர்களை கட்டிப் போட்டு விடுகிறது. ஆண்கள் பெண்கள் என சமத்துவப் பந்தியில் இந்த பழக்கம் எல்லா இடங்களிலும் விரிவடைந்திருப்பது நவ யுகத்தின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல ?

புகைப் பழக்கம் தவறு என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன். அப்படியானால் ஏன் இன்னும் அதையே தொற்றிக் கொண்டிருக்க வேண்டும் ?

புகை பிடித்தால் தான் பாட்டு எழுதுவேன், புகை பிடித்தால் டென்ஷன் குறையும், புகை பிடித்தால் ரிலாக்ஸ் ஆவேன் போன்றவையெல்லாம் மனப் பிரமை. புகையை விட்டவர்கள் அதை விட மிகுந்த ஆரோக்கியமாய் இந்த விஷயங்களையெல்லாம் கையாள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அணிவகுத்து நிற்கின்ற நோய்களை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலைமுறைக்கு நீங்கள் தரப்போவது ஆறுதலும், பாதுகாப்புமாக இருக்க வேண்டுமே தவிர, சிக்கலும் மருத்துவமனை வாசமுமாய் இருக்கக் கூடாது என்று முடிவெடுங்கள்.

உங்கள் அன்பான மனைவியின் முகமோ, உங்கள் அன்பான குழந்தைகளின் முகமோ ஒவ்வொரு முறை புகைக்கும் போதும் உங்கள் முன்னால் வரட்டும். உங்கள் புகைத்தல் அதன் மூலம் குறையும் இல்லையா ?

உங்கள் ஆரோக்கியம், தோல், கண், மூளை, இதயம், நுரையீரல் என சர்வ உறுப்புகளுக்கும் ஊறு விளைவிப்பது புகை எனும் சிந்தனை மனதில் இருக்கட்டும். ஒவ்வொரு முறை புகைத்தலை நடத்தும் போதும் இந்த சிந்தனைகளெல்லாம் வட்டமிட்டால் நீங்கள் புகையை விட்டு வெளியே வர வாய்ப்பு உண்டு.

அதுவும் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் புகை பிடித்தால் தலைமுறையே காலி ! ஆண்களுக்கும் புகை ஆண்மையின் துரோகியாய் மாறிவிடும் ஆபத்து ரொம்பவே உண்டு !  புகை பிடித்தலின் சிக்கலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அதற்கென ஒரு தனி நூலே தேவைப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

புகையை நிறுத்த ஒரே வழி, அப்படியே நிறுத்துவது தான். “இந்த வாரம் மட்டும் இழுத்துட்டு அடுத்த சுப முகூர்த்த தினத்துல நிறுத்திடுவேன்”. “இந்த வாரம் ஒரு நாள் பத்து.. அடுத்த வாரம் அஞ்சு, அப்புறம் மூணு..” இப்படியெல்லாம் திட்டம் போட்டு நிறுத்த நினைத்தால் நிறுத்த முடியாது. அப்புறம் மார்க் தைவன் சொல்வது போல, “தம்-மை நிறுத்தறது தான் ஈசியான சமாச்சாரம், நான் ஆயிரம் தடவை நிறுத்தியிருப்பேன்” என்று சொல்ல வேண்டி வரும் !

ஏகப்பட்ட சிக்கல்கள், பூச்சியம் பயன்கள் ! இப்படி ஒரு பழக்கம் தேவையா ?

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

இதுக்கு “தம்” பரவாயில்லையேப்பா !

 namitha1

வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.

இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது ?

அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.

சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.

(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்

வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.

 

புகை : குடும்பத்துக்குப் பகை

smoke

புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.

நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.

குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.

புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !

வரும் வழியில்… தம், ஐபோன் மற்றும் மின்வெட்டு !

“புகைக்கத் தடை” என்பது பெயரளவில் தான் இருக்கிறதோ எனும் சந்தேகம் மதிய உணவுக்குப் பின் அலுவலக டீக்கடைகளின் ஓரத்தில் குவியும் புகையால் ஏற்படுகிறது.

“ஏம்பா… புகை பிடிக்கத் தடை போட்டாங்க தெரியுமா இல்லையா ?” என ஹாயாக ஊதிக் கொண்டிருந்த நண்பன் ஒருவனிடம் கேட்டேன்.

“ஆமா..அவரே பாம் வைப்பாராம். அவரே போய் புடிப்பாராம்” ன்னு முதல்வன்ல வர டயலாக் கணக்கா, “ அவங்களே தம் விப்பாங்களாம், ஆனா புடிக்கக் கூடாதாம். புடிக்காம ஷோகேஸ்லயா கொண்டு வைக்க முடியும்” என்றான் நியாயமான லாஜிக் படி.

சரி என்னதான் சொல்ல வரே ? – மீண்டும் கேட்டேன்.

எவனாவது வந்து புடிச்சா 200 ரூபா கட்டிட்டு இன்னொரு தம் பத்த வைப்பேன் என்றான் கூலாக.

பைக்கில் காத்து குறைவு என சொல்லி நடுவழியில் நிறுத்தி ஐந்து பத்து சம்பாதிப்பவர்களிடம் மொத்தமாய் பிச்சை எடுக்கும் வெள்ளைச் சீருடை ஆசாமிகள் கவனத்துக்கு !… ஐடி கம்பெனிகளின் முன்னே உங்களுக்கு நிறைய வசூலாகும் !

0

உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து வருகையில் ஒரு புத்தம் புதிய ஆப்பிள் ஐபோன் வாங்கி வந்திருந்தார்.

அங்கே தான் மச்சி எல்லாமே ஒரிஜினல் கிடைக்கும். என்றெல்லாம் பீத்திக் கொண்டிருந்தவனை இன்று காலையில் பார்த்தேன்.

ஐபோனின் மேல் மஞ்சள் பொட்டு வைத்திருந்தான்.

“இந்த மஞ்சளும் இறக்கு மதியா ? இல்லை உள்ளூரா ?” என்றேன் சிரித்தபடி.

பூஜை பண்றேன்னு சொல்லி போனோட காமராவை காலிபண்ணிட்டா என் பொண்டாட்டி என மெலிதாய் சலித்துக் கொண்டான் அவன்.

அலுவலகம் வந்து இருக்கையில் அமர்ந்து பார்த்தால் எனது கணினியில் நான்கு மூலைகளிலும் வாஸ்து படி மஞ்சள் வைத்து சென்றிருந்தார்கள்.

0

வரும் வழியில் காலை 9 மணிக்கு ஒரு தெரு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன் !

வியப்பு !

கரண்ட் இல்லாமல் பாவம் தமிழகமே அல்லாடுகிறது. அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாய் நடந்து கொள்ளலாமே. காலையில் வெளிச்சம் வந்ததும் அணைத்து விட்டால் எவ்வளவோ கரண்ட் மிச்சமாகுமே என தோன்றியது.

எங்கள் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரையும் கரண்ட் கட் அடிக்கிறாங்களாம். என்ன லாஜிக்கோ தெரியவில்லை.

“கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பிக்கிறோம் நல்ல தூக்கம் வந்த உடனே கரண்டை கட் பண்ணி எழும்ப வெச்சுடறாங்க. அப்புறம் தூங்கவே மூணு மணி ஆயிடுது” என அங்கலாய்த்தான் கிராமத்து நண்பன் ஒருவன்.

நியாயம் தான் ! என்று தணியும் இந்த தாகம் !

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்

 புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த  வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை

பெற்றோரின் கவனத்துக்கு…

வாகனங்கள் ஓடும் சாலைகளின் அருகே வசிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா மற்றும் அது தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என ஜெர்மன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலக அளவில் வாகனங்களின் பயன்பாடும், எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது சுற்றுப் புறச் சூழலை பெருமளவில் மாசுபடுத்தியிருக்கிறது. பிரிட்டனின் முப்பத்து ஐந்து விழுக்காடு மக்கள் ஆஸ்த்மா தொடர்பான ஏதோ ஒரு நோயின் பாதிப்பில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்கள் அதிகரித்திருப்பதும், அதன் நச்சுப் புகையும், அதனால் உருவாகும் புழுதி மண்டலமும் குழந்தைகளின் உடல்நலத்தை பெருமளவில் பாதிக்கிறது என்பது புதிய தளமாகும்.

இதற்கு முன் புழுதிகளோடு விளையாடாமல் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள் சரியான நோய் எதிர்ப்புச் சக்தி இன்றி அல்லலுறும் என ஆய்வுகள் சேதி தெரிவித்திருந்தன. இப்போது வாகனப் புழுதியில் விளையாடுவது ஆபத்தானது எனும் அச்சமூட்டும் ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

பல்வேறு வயது வரம்புகளில் சுமார் ஆறாயிரம் பேரை பல ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

வாழும் இடம், சூழல், வாழ்க்கைத் தரம், பெற்றோரின் உடல்நலம், மருத்துவ வசதிகள், காலநிலை என பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு நிகழ்த்தப்பட்ட விரிவான ஆய்வு இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வில் பணிபுரிந்த “மருத்துவர் ஹெயின்ரிச்” குறிப்பிடுகையில், சாலைகளின் அருகே வசிக்கும் குடும்பங்களுக்கு மாசு மட்டுமன்றி வாகனப் புகையில் உள்ள விஷத் தன்மை கூட மிகவும் ஊறு விளைவிக்கக் கூடியது என தெரிவித்தார்.

ஆனால் புழுதி, விலங்குகள், தூசு என குழந்தைகள் கலந்து பழகும் போது தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும், அப்படி வளராமல் மிகவும் தூய்மையிலேயே வளரும் குழந்தைகளுக்கு “ஹைஜின் ஹைப்பாத்திசிஸ்”  எனும் அலர்ஜி நோய்கள் உருவாகும் எனவும், மேலை நாடுகளில் இது மிகவும் அதிகம் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விரிந்து பரந்த வயல்வெளிகள், குளங்கள், ஆறுகள், அடர்ந்த மரங்கள் என உன்னதமான வாழ்க்கைச் சூழல் நகரவாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அத்தகைய சூழலில் குறைந்த பட்சம் வாகன மாசு தாக்காதபடி குழந்தைகளைக் காத்துக் கொள்தல் அவசியம் என்பதே இந்த ஆய்வின் மையமாகும்

“புகை” ப்படங்கள் : இதைப் பார்த்த பின்புமா….

புகை பிடிப்பவர்களை அதிர வைக்க வெளியாகி இருக்கின்றன சில புகை எதிர்ப்புப் புகைப்படங்கள். அடுத்த முறை விரல்களிடையே புகை முளைக்கும் போது இந்தப் படங்களும் உங்கள் கண்களுக்கு முன் விரிவதாக…

அடடா !!! அழகான முகம் புகையினால்
இப்படி ஆயிடுமா ??

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன் !

ஐயோ !!!
சந்ததிக்கே சமாதியா !


 
இன்னும் பல புகைப்படங்கள் அன்பு மணியே அருவருக்கும் வகையில் இருந்ததால் அதை இங்கே பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் மஹா ஜனங்களே !

 

புகைப்பதை நிறுத்தினால்….


“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…”

ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள்.

“ஏன் நான் விட்டு விட வேண்டும் ?” தந்தை கேட்டார்.

“நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள்.

அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை.

புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருந்தாலும் அதை விடாமல் தொடரும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

புகை பிடிக்கும் நண்பர்களில் ஒருவர் நிறுத்தினால் மற்றவரும் நிறுத்தும் வாய்ப்பு 36 விழுக்காடு அதிகரிக்கும் எனும் உற்சாகமான புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர்.

புகைக்கும் தம்பதியர்களில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினால் அடுத்தவரும் நிறுத்தும் வாய்ப்பு 67 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

குடும்பத்திலுள்ளவர்கள் புகைத்தலை நிறுத்தும் போது, மற்ற குடும்ப உறுப்பினர்கள் புகைத்தலை நிறுத்தும் வாய்ப்பு 25 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.

சில சமூக அமைப்புகளில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலே, ஒட்டுமொத்த அமைப்பு உறுப்பினர்களுமே அந்த பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்பும் இருக்கிறதாம்.

இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு சுமார் முப்பது ஆண்டுகளாக 12,000 நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆய்வு புகைக்கும் பழக்கத்தை மக்களிடமிருந்து விலக்க ஒரு புதிய கோணத்தைக் கண்டறிந்திருக்கிறது எனலாம்.

புகைத்தல் எனும் பழக்கம் கூட இருக்கும் சகவயது நண்பர்களின் வசீகர விளம்பரத்தாலும், கண்டிப்பினாலும், நட்பென போதிக்கப்படும் உரிமை வற்புறுத்தல்களாலுமே ஆரம்பமாகின்றன. பின்னர் அவை கிளை விட்டு வேர்விட்டு விலக்க முடியா முள் மரமாக உள்ளத்தில் ஊன்றிப் படற்கிறது.

அந்த பழக்கத்தை விட்டு ஒருவர் விலகுவது ஒரு சமூக நன்மையைத் தருகிறது என்பது இதில் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
 புகை பிடிப்பதை நான் நிறுத்தினால் என்ன ?  நிறுத்தாவிட்டால் என்ன ? – என்று இனிமேல் யாரும் கேட்க முடியாது. ஏனெனில் , நீங்கள் நிறுத்தினால் உங்களால் இன்னொருவர் அதை விட்டு விடும் வாய்ப்பு இருக்கிறது. அவரால் இன்னொரு நபர் விடுதலை அடைய வாய்ப்பு இருக்கிறது.. இப்படியே இந்த சங்கிலித் தொடர் நீண்டு, ஒருவர் இந்த பழக்கத்தை நிறுத்துவது ஒரு பெரிய மாற்றத்துக்கான விதையாகவே விழுகிறது.

ஒரு சமூக மாற்றத்துக்கான விதையைப் போட புகைப்போர் முன்வருவார்களாக !

 

திகைக்க வைக்கும் விளம்பரங்கள்

விளம்பரங்கள் சுவாரஸ்யமானவை. சமுத்திரத்தின் அளவை குடுவைக்குள் அடக்கும் கலையே விளம்பரம்.

புகைத்தலை நிறுத்தச் சொல்லி மிரட்டும் கீழ்க்கண்ட விளம்பரங்கள் என்னைக் கவர்ந்தவை. ( கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை )

தற்கொலைக்கு எளிய வழி : புகை பிடித்தல்

4514.jpg

புகை மரணத்தின் வாசனை

4556.jpg

துப்பாக்கி வெடித்தால் கொல்லும்
புகை பிடித்தால் கொல்லும்

4546.jpg