நூலின் முன்னுரை
அவசர அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். படியில் அமர்ந்து ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது பின்னால் வந்து கழுத்தில் கட்டிக் கொண்டாள் ஐந்து வயது மகள்.
“ஏன் டாடி ஆபீஸ் போறீங்க ?”
“ஆபீஸ் போனா தானேடா செல்லம் பணம் சம்பாதிக்க முடியும் ! நீ கேக்கற விளையாட்டெல்லாம் வாங்கித் தர முடியும்” இப்படிச் சொன்னதும் அவளுடைய குரலில் ஒரு சின்ன ஏளனமும், நகைப்பும்…
“ஹேய் டாடி… பொய் சொல்லாதீங்க…. ஏடிஎம் ல போய் கார்ட் போட்டு, ஒரு பட்டனை அமுக்கினா பணம் கிடைக்கும்ல ? அன்னிக்கு பாத்தேனே. ஆபீஸ் போகாம அங்கே போய் பணம் எடுத்துக்கலாமே… “
எனது மகளின் மழலைத் தனம் மனசுக்குள் புன்னகையை விரித்தது. குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே எனும் குற்றம், குழந்தைகளுக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறதே எனும் பொறுப்புணர்வும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது.
நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் பல விஷயங்களை நான் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். திருடுவது தப்பு என்பது முதல் பிறரை மதிக்கும் பண்பு வரை எல்லாமே எனது பெற்றோர் சின்ன வயதிலேயே ஊட்டி வளர்த்தவை தான்.
இன்றும் பசுமையாய் மெல்லிய மயில்பீலிச் சாமரமாய் நினைவுகளின் தென்றல் மனசுக்குள் வீசுகிறது. ஆரம்பக் கல்வி கற்றது அம்மா ஆசிரியையாய் பணிபுரிந்த மலையடி பள்ளிக்கூடத்தில். பள்ளிக்கூடத்துக்குப் போக சுமார் 45 நிமிடங்கள் மரங்களடர்ந்த கிராமச் சாலையில் நடக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அம்மா கதை சொல்லிக் கொண்டே கூட்டிப் போவார்கள். கதை சொல்லாவிட்டால் இடுப்பில் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பேனாம் !
அம்மாவின் நினைவுப் பெட்டகத்தில் கதைகளுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை இல்லை. கரிகால் சோழன், மணிமேகலை, நல்ல தங்காள், நீதிக்கதைகள் என எல்லா கதைகளுமே அம்மாவிடமிருந்து பெற்றவை தான். பிரபல இயக்குனர்களையெல்லாம் வெட்கப்பட வைக்கும் கதை சொல்லும் பாணி அம்மாவின் சிறப்பம்சம். ஒரு பிரம்மாண்ட திரைப்படம் பார்ப்பது போல காட்சிப்படுத்தலும், வசன உச்சரிப்புகளும் என்னைக் கட்டிப் போட்டு விடும். “சே.. அதுக்குள்ள வீடு வந்துடுச்சா ? சரி மீதி கதை நாளைக்கு…” என வீடு வந்ததும் சொல்வேன். அப்படிக் கேட்ட கதைகள் தான் என்னை வார்த்திருக்கின்றன.
வார இறுதிகளிலும், மாலை வேளைகளிலும் அப்பாவின் கரம்பிடித்து வயல்வெளிகளில் நடக்கும் போது பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர் கற்றுத் தந்தார். அவருடைய நடவடிக்கைகள் தான் எனக்குப் பாடமாய் அமைந்தன. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் செயல்களை இமிடேட் செய்யும் எனும் பாலபாடம் அன்று புரியவில்லை. இன்று பளிச் என புரிகிறது.
அப்போதெல்லாம் அம்மாக்களின் முந்தானையும், அப்பாவின் வேட்டி நுனியும் தான் குழந்தைகளின் வழிகாட்டிகளாய் இருந்தன. நேசத்தின் வாசம் முற்றங்களில் நிரம்பி வழியும் மாலை வேளைகள் தான் குழந்தைகளைச் செதுக்கியிருக்கின்றன. கிராமத்து மண்ணின் சாயம் போகாத மழலைத்தனம் தான் மதிப்பீடுகளைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
இன்றைக்கு அவசரம் அவசரமாய் அலுவலகம் ஓடும் ஜீன்ஸ் அம்மாக்களுக்கும், ஷார்ட்ஸ் அப்பாக்களுக்கும் குழந்தைகளோடு போதிய நேரம் செலவிட முடிவதில்லை. வீடுகளில் தாத்தா பாட்டி இருக்கும் குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் கடந்த தலைமுறையின் நேசப் பகிர்தல்களை இந்தத் தலைமுறையிலும் சுவாசிக்கும் வரம் பெற்றவர்கள். மற்றபடி குழந்தைகளுக்கு இப்போது நண்பர்களெல்லாம் டோராவும், புஜ்ஜியும், மிக்கியும், டோனால்டும் தான்.
காலையில் அரை மணி நேரம் கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் நண்பர்களைப் பார்த்துக் கொண்டே பிரட் சாப்பிட்டு, வீடு திரும்பிய மாலை நேரத்தில் ஏதோ அனிமேஷன் படங்களோடு முடிந்து போய்விடும் அவர்களுடைய பொழுதுகள். நள்ளிரவில் ஆந்தையைப் போல வந்து தூங்கும் அப்பாக்கள் அவர்களைப் பொறுத்தவரை நாளிதழ்களில் வரும் ஞாயிறு இணைப்புகள் போல !
“இன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் ? எப்படியெல்லாம் அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்குவப்படுத்தவேண்டும். இதுதான் கான்சப்ட். ஒரு புத்தகத்தைத் தயாராக்குங்கள். பெற்றோருக்கான பெஸ்ட் கைடாக இருக்க வேண்டும். “ – என பிளாக் ஹோல் மீடியா பதிப்பக இயக்குனர் பிலால் அவர்கள் சொன்னபோது இந்த நினைவுகள் தான் மனதுக்குள் நிழலாடின.
கடந்த சில மாதங்களாக குழந்தைகளின் உலகத்தில் பயணித்துப் பயணித்து எனக்கே வயது குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. உலக அளவில் உளவியலார்களும், குழந்தைகள் நல ஸ்பெஷலிஸ்ட்களும், மருத்துவர்களும் சொன்ன தகவல்கள், இது குறித்து வெளியான ஆய்வுகள், பல்வேறு நூல்கள் என முழுக்க முழுக்க மூழ்கியபின்பே இந்த நூல் சாத்தியமாகி இருக்கிறது.
இந்த நூல் பெற்றோருக்கு பயனுள்ள நூலாய் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.
நிறம் மாறா நேசங்களுடன்
சேவியர்.
வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடட்.
செல் : 9600123146
=========================
வாக்களிக்க விரும்பினால்….
=========================
You must be logged in to post a comment.