சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

வசீகர உளவாளிகள்.

 

“ஏய்… நெசமாவா சொல்றே ? அவளா ? இருக்காதேப்பா”

உளவாளிகளின் உண்மை முகம் வெளியே வந்ததும் பதட்டத்துடன் ஓடி வரும் முதல் கேள்வி பெரும்பாலும் இது தான். காரணம் உளவாளிகள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரர்கள். ஒருத்தர் உளவு வேலை செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமா” ரேஞ்சுக்கு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். உளவு பார்க்கச் சென்ற இடத்தின் நம்பிக்கையைப் பெறும் வரை எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வெகு சாதாரணமாய் வலம் வருவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியாது. சரவண பவனில் சாப்பிடுவார்கள், ரங்கநாதன் தெருவில் புடவை எடுப்பார்கள்.

அவர்களுடைய முதல் திட்டம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவது தான். அந்த நம்பிக்கையைப் பெற சில வருடங்கள் ஆனால் கூட பொறுத்திருப்பார்கள். “பொறுத்தார் உளவு பார்ப்பார்” என்று புது பழமொழியே போடலாம் ! இவர்களை சாதாரணமாய் எடை போடக் கூடாது. ரொம்ப கூர்மையான அறிவு, அலர்ட் எல்லாம் இவர்களிடம் இருக்கும்.

இந்த உளவு வேலையில் எக்கச் சக்கமான பெண்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக உலகப் போர் காலத்தில் பெண் உளவாளிகளின் மோக வலையில் விழுந்து மோட்சம் போனவர்கள் எக்கச் சக்கம். ஒரு நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து கொண்டு, எதிரி நாட்டைக் கவிழ்ப்பது இவர்களுடைய வேலை.

அழகினாலும், வசீகரத்தினாலும் ஒரு பெண் நினைத்தால் ஆணை எளிதில் வீழ்த்தலாம் எனும் ஆதாம் கால தந்திரம் தான் இது. எதிரியின் கோட்டைக்குள் ரகசியமாய் புகுவார்கள். அங்குள்ள உயர் அதிகாரியின் பார்வையில் படுவார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவரை நெருங்கி, அவர் அன்புக்குப் பாத்திரமாகி, தேவைப்பட்டால் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெறுவார்கள்.

இந்த நபரால் நமக்கு ஆபத்தே இல்லை. நம்பி கஜானா சாவியைக் கொடுக்கலாம் எனுமளவுக்கு நம்பிக்கை வளர்த்ததும் சுயரூபம் காட்டுவார்கள். ஆளைப் போட்டுத் தள்ளுவதோ. தகவல்களை அப்படியே கப்பலேற்றுவதோ என இவர்களுடைய பங்களிப்பை நம்பித் தான் நாடே காத்திருக்கும். நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது, நம்ப வெச்சு கழுத்தறுப்பது இப்படியெல்லாம் வர்ணிக்கலாம் இந்தப் பணியை !

மாடா ஹரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இவருடைய இயற்பெயர் மார்கரீதா கீர்துரிடா, நெதலாந்து நாட்டுக்காரி. இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுகளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி. மேடைகளில் அரைகுறையாய் ஆடி புகழ் பெற்றவர். ஆடைகளை அவிழ்த்து வெறும் ஆபரணங்களுடன் இவர் ஆடும் ஆட்டம் அப்போது ஜிலீர் ரகம். அழகிய பெண் என்றால் எந்த ஆணுடனும் எளிதில் நெருங்கலாம் எனும் ஹார்மோன் விதி இவருக்கும் உதவியது. உளவு வேலைகளில் இறங்கினார்.

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு நிறைய ரசிகர்கள். யுத்தக் களத்தில் பலர் புரள, இவருடைய முத்தக் குளத்தில் சிலர் புரண்டனர். அந்த பட்டியலில் இராணுவத்தினர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுடன் என பலரும் உண்டு. எல்லோரிடமும் கப்ளிங்ஸ் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்ஸ்க்கு அனுப்பினார்.

கடைசியில் 1917 பிப்ரவரி 13ம் நாள் பாரீஸில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். “நான் பிரான்ஸ் உளவாளிதான்” என மாடா சொன்னார். ஆனால் பிரான்ஸ் அதை மறுத்து “இவர் ஜெர்மன் உளவாளி” என பிளேட்டைத் திருப்பிப் போட்டது. ஜெர்மனிக்கு உளவு வேலை பார்த்ததாகவும், 50,000 படை வீரர்களின் சாவுக்குக் காரணமாய் இருந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுட்டும் விழிச் சுடர் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எடித் கிராவெல் என்றொரு உளவாளி இருந்தார். ஜெர்மன் நாட்டுக்காரியான இவர் இங்கிலாந்துக்கு உளவு வேலை பார்த்ததாகச் சொல்லி இவர் கைதானார். அவர் பார்த்து வந்ததோ யாரும் சந்தேகப்பட முடியாத நர்ஸ் வேலை. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இவர் 1915 அக்டோபர் 15ம் தியதி மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

அமெரிக்க உளவாளிகள் விர்ஜினியா ஹால், மரியா குளோ விச், இங்கிலாந்து உளவாளிகள் பிரின்சஸ் நூர், வயலட் ரெனி எலிசபெத் புஷ்ஷெல், இத்தாலிய உளவாளி பார்பெரா லாவெர்ஸ், பிரான்ஸ் உளவாளி ஏமி எலிசபெத் தோர்பே போன்றவர்கள் இந்த உளவு வேலைப் பிரபலங்கள். உளவாளிகள் பட்டியல் இத்துடன் தீர்ந்து விடவில்லை ஜூலியா மெக்வில்லியம்ஸ், மர்லேன், மெக்கிண்டோஷ், மேரி லூயிஸ், நான்சி கிரேஸ் என நீளும் இந்தப் பட்டியல் ரொம்பவே பெருசு. உலகப் போர் வரலாற்றில் பெண் உளவாளிகள் எந்த அளவுக்கு பரவியிருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறிய அறிமுகமாக இதைக் கொள்ளலாம்.

அதெல்லாம் அந்தக் காலம், இப்போ அப்படியெல்லாம் இல்லை என்று நினைக்கிறீர்களா ? இப்போதும் பெண் உளவாளிகள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அப்படி ஒரு வேலையைச் செய்து வசமாக மாட்டியிருக்கிறார் மாதுரி குப்தா எனும் 53 வயதான பெண். இஸ்லாமாபாத்தில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரக அதிகாரி. ஐ.பி.எஸ் படித்தவர். இவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றிருப்பதோ பரம்பரைப் பகை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு !

பாகிஸ்தானில் உள்நாட்டு உளவுப் பிரிவு அதிகாரியான முடாசர் ராணாவுடன் “நெருக்கமானார்”. எல்லாம் பிஸினஸ் நெருக்கம் தான். நெருக்கத்தை வேண்டுமென்றே உருவாக்கி, ரகசியங்களை விற்று கல்லாவை நிரப்பியிருக்கிறார் மாதுரி. இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளைப் பிரதியெடுத்து ‘ஜஸ்ட் லைக் தேட்’ ராணாவிடம் கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த உளவு வேலைக்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ  இவருக்கு இறைத்ததோ கோடிக்கணக்கான ரூபாய்கள். எல்லாம் பாகிஸ்தான் வங்கிகளில் பத்திரமாய் இருக்கின்றன. அவ்வப்போது தனது இந்திய வங்கிகளுக்கும் அந்தப் பணத்தை அனுப்பி தேசப்பற்றைக் காப்பாற்றுகிறார் ! 

உளவாளிகள் பொறுமை சாலிகள். எல்லாவற்றிலும் கட்சிதமாக சந்தேகம் வராதபடி நடந்து கொள்வார்கள். அப்படின்னா அவர்களைப் பிடிக்கச் செல்பவர்கள் அதைவிட புத்திசாலிகளாக, பொறுமை சாலிகளாக இருக்கணும் இல்லையா ?

அப்படித்தான் நடந்து கொண்டது இந்திய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்தேக வலையில் விழுந்தது பட்சி. ஆனால் சந்தேகத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் வெகு இயல்பாய் கண்காணித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் நிழல் போல் தொடர்ந்து, அவர் உளவாளி என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பின் “வேலை விஷயமாக” என்று சொல்லி டெல்லி அலுவலகம் வர வைத்தனர். அங்கே வந்த பின்பு தான் அவருக்குத் தான் மாட்டிக் கொண்டோம் எனும் விஷயமே புரிந்தது.

“என்னைப் போயி உளவாளின்னு சொல்றீங்களே, இஸ்லாமாபாத் ரா பிரிவு தலைவர் ஷர்மாவே ஒரு பாகிஸ்தான் உளவாளி தான்பா” எனக் கூறி ஒரு நியூக்ளியர் திடுக்கிடலையும் உருவாக்கினார் இவர். அப்புறமென்ன அவர் மீதும் விசாரணை நடக்கிறது.

இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலான உளவு வேலைகளை இயந்திரங்களே கவனித்துக் கொள்கின்றன. ஒரு சின்ன உதாரணம் சொல்றேனே, டிராகன் பிளை எக்ஸ்.6 ஒரு உளவுக் கருவி. சின்ன தும்பி போல இருக்கும். எதிரியின் கோட்டைக்குள் பறந்து திரிந்து அங்கே நடப்பதைப் படம் பிடித்து அனுப்பும். அங்கே நடக்கும் உரையாடல்களையும் அட்சர சுத்தமாய் காது கடத்தும். இதே போல எக்கச் சக்க உளவு டெக்னாலஜி சமாச்சாரங்களும் இன்று நாடுகளிடம் இருக்கின்றன.

இந்த நவீனங்களையெல்லாம் தாண்டியும் உளவு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள். அவர்களுடைய பொறுமையும், அழகும், வசீகரமும் ஆண்களுடைய அறிவுச் சிந்தனைக்கு இடையே ஒரு தற்காலிகத் திரையையாவது விரித்து விடுகிறது. அதில் ஆண்கள் ஏமாந்து விடும் வினாடியில் உளவு வேலை சக்சஸ் !

என்ன தான் ராஜதந்திரம் என வர்ணித்தாலும், இந்த வேலை செய்தெல்லாம் வாழ்க்கையை ஓட்டுவது பெண்மையைப் பெருமைப்படுத்துவது ஆகுமா ? என்பதை பெண்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க….

வெட்டியும், தைத்தும் பெண்மையைச் சிதைத்தும்….

 “அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது ஏதோ பாலியல் பலாத்காரமல்ல. சைக்கோ கொலையாளியின் கைவரிசையுமல்ல. இவர் சொல்வது பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமையைக் குறித்துத் தான். இதை முன்னின்று நடத்துவது வேறுயாருமல்ல பெண்ணின் அம்மாவே தான் !

எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். எஃப்.ஜி.எம் என்பது இதன் சுருக்கம்.

சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன. கலாச்சாரம், மதம், ஆணாதிக்கம், மூடத்தனம் என பல்வேறு காரணங்கள் இதன் பின்னால் உண்டு.

இந்தச் சடங்கைச் செய்ய கைதேர்ந்த மருத்துவர்களோ, அறுவை சிகிச்சை நிபுணர்களோ இருப்பதில்லை. வயதான பாட்டிகள் தான். கத்தி, பிளேடு, உடைந்த கண்ணாடித் துண்டு, கத்திரி, ஊசி நூல் இவை தான் அவர்களுடைய கருவிகள். பெண்ணுறுப்பை வெட்டி எடுத்தபின் கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்டி நாற்பது நாட்கள் வரை அப்படியே போட்டு விடுகிறார்கள். காயம் ஆறுவதற்காக !

மிகக் கொடுமையான வலி. அந்த வலியினால் உருவாகும் அதிகமான அதிர்ச்சி. தொற்று நோய். பலவிதமான உடல் சார்ந்த நோய்கள் என இந்த வழக்கம் கொண்டு வரும் சிக்கல்கள் சொல்லி மாளாது. பல இலட்சம் பெண்கள் இந்த நிகழ்வுக்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்க்கையையே இழந்து விடுகிறார்கள். பலர் முழுமையான மன நோயாளிகளாகவே மாறிவிடுகிறார்கள் என்பது இன்னும் கொடுமையானது.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கடுமையாய் சொல்லியிருக்கிறது  உலக நலவாழ்வு நிறுவனம். கொடுமையின் அளவை வைத்து உலக நலவாழ்வு நிறுவனம் இந்த வழக்கத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. கொஞ்சமாய் வெட்டி அகற்றுவது முதல், முழுமையாய் அகற்றி தைத்து வைப்பது வரை என இந்த வகைப்படுத்தல் வேறுபடுகிறது.

இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமான பழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் எகிப்திய மம்மிகளில் இதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பழக்கம் மிக அதிக அளவில் பரவியிருப்பது 28 ஆப்பிரிக்க நாடுகளில் என்கின்றனர் ஆய்வாளர்கள். எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98 சதவீதம் பெண்களுக்கும் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

எல்லா வயதிலும் இந்தச் சடங்கு நடத்தப்படலாம் என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு நான்கு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.

இந்தக் கொடுமையான சடங்குக்கு பெரும்பாலும் கொடூரமான சமூக நம்பிக்கைகளே காரணமாகிவிடுகின்றன. பல பிரதேசங்களில் இந்தச் சடங்கு செய்தால் தான் ஒரு பெண் முழுமையான பெண்ணாகக் கருதப்படுகிறாள். அப்போது தான் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான ஆண்கள் இந்தச் சடங்கைச் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் இந்த வலிமிகுந்த சடங்கு அந்த பிரதேசங்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது.

இந்தச் சடங்குக்கு பல்வேறு காரணங்கள் அந்தப் பகுதிகளில் உலவுகின்றன. இந்தக் காரணங்கள் எல்லாமே ஆணாதிக்கச் சிந்தனையும், முட்டாள் தன சிந்தனையும் கலந்தே மிதக்கின்றன என்பது கண்கூடு.

“இந்தச் சடங்கைச் செய்தால் பெண்ணுக்கு பாலுணர்வு குறைவாக எழும். இல்லையேல் பெண்கள் திருமணத்துக்கு முன்பாகவே வேறு ஆண்களுடன் தொடர்பு கொண்டு விடுவார்கள். பெண் திருமணம் வரை கற்போடு இருக்க இந்தச் சடங்கு தான் ஒரே வழி” என்பது அத்தகைய காரணங்களில் ஒன்று !

சில குழுக்கள், இந்தச் சிகிச்சை செய்து கொண்டால் பெண்மைத் தன்மை அதிகரிக்கும் என நம்புகின்றனர். உண்மையில் இந்தச் சிகிச்சை பெண்மைக்கே உரிய உணர்வுகள் பலவற்றைச் சிதைத்து விடுகின்றன. பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் பாலுறவில் திருப்தி எனும் நிலையை அடைவதே இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இந்த சிகிச்சை செய்து கொண்டால் தான் பெண்ணுக்கு உரிய தீட்டு மறைந்து விடும் என்றும், உடலிலுள்ள துர் நாற்றங்கள் நீங்கி விடும் என்றும், முகம் அழகாகும் என்றும் எக்கச் சக்கமான பாட்டிக் கதைகள் இந்தச் சடங்கைச் சுற்றி உலவுகின்றன.

இந்தச் சடங்கை எந்த மதமும் முழுமையாய் ஆதரிக்கவில்லை. இஸ்லாமியர்களிலும் ஒரு சிலர் மட்டுமே ஆதரிக்கின்றனர். ஆனாலும் இது பரந்துபட்ட ஒரு மத வழக்கம் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் இதை மக்களின் அறியாமையாகவோ, அல்லது ஆணாதிக்க சமூகத்தின் மிச்சமாகவோ தான் கருதவேண்டியிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் குடியமரும் மக்கள் இதை பல இடங்களுக்கும் கொண்டு செல்வது இன்னும் வேதனையான விஷயம். இந்த வழக்கத்தை அவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என எல்லா இடங்களிலிருந்தும் செய்கின்றனர்! கொண்டு செல்பவர்கள் இது எங்கள் கலாச்சாரம் என்றோ, கற்பைப் பாதுகாக்கும் வழக்கம் என்றோ, மத அடையாளம் என்றோ, குடும்ப கவுரவம் என்றோ ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்கின்றனர். இன்னும் சில பெண்கள், இது ஆண்களுக்கு உறவில் அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்பதற்காகச் செய்து கொள்கிறார்களாம் !

பெண்களுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய சுமையாய் இருக்கின்ற இந்தச் சடங்கு குழந்தைப் பிறப்பிலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறப்பதோ, அல்லது தாய் இறந்து போவதோ அதிகம். ஆப்பிரிக்காவில் சுமார் 20 சதவீதம் குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்து போகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த முட்டாள் தனமான சடங்கு தான் என்கிறது 2007ம் ஆண்டு நடந்த உலக நல வாழ்வு நிறுவன ஆய்வு.

உலக அமைப்புகளின் எதிர்ப்புகளுக்குப் பின் பல்வேறு நாடுகள் இந்தப் பழக்கத்தை தடை செய்திருக்கின்றன. குறிப்பாக இந்தப் பழக்கம் அதிகமாக இருந்த எகிப்து 2007ம் ஆண்டு இந்தப் பழக்கத்தைத் தடை செய்து சட்டம் இயற்றியது. இந்தச் சடங்கின் போது ஒரு பன்னிரண்டு வயது சிறுமி பலியாகி, அது ஒரு போராட்டமாய் வெடித்ததே இந்தச் சட்டம் இயற்றப்பட முக்கியக் காரணம்.

இன்னும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு சவுதி அரேபியா, தெற்கு ஜோர்தான், வடக்கு ஈராக், சிரியா, ஓமன், இந்தோனேஷியா என பல இடங்களிலும் இந்தச் சடங்குகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், ஆண்களைத் தாண்டியும் வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருகும் இன்றைய உலகிலும், பெண்களுக்கு எதிராக இத்தகைய வன் கொடுமைகள் நடக்கின்றன என்பதை நினைக்கும் போது உள்ளம் பதறித் தான் போகிறது !

 நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

Empty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க !

தனிமைக் கூடு… படுத்தும் பாடு…

“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”

“பால் குடிச்சாச்சா…. ?”

“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”

“நேரமாச்சும்மா…  சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”

“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”

பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார்.  குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.

ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.

ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.

“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும். 

ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.

பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும். 

அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும்.  அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.

நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள்.  வெறுமைக் கூடு பாதிப்பு என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !

இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.

வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !

இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?

வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.

ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி  எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.

“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.

“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம். 

இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான்  இந்த ஆலோசனைகள்.

1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.

3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும். 

4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.

5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.

6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.

7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.

8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.

9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.

10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.

11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.

12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.

13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.

14. பிரியமான பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.

15. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.

16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும் 

17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.

18. தியானம், பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.

19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.

20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.

21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.

23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.

24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.

25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ…

தமிழிஷில் வாக்களிக்க……