பெருந்தன்மை பழகு

உன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை விட அதிகமாய்க் கொடுப்பது தான் பெருந்தன்மை. உன்னை விட எனக்கே அதிகம் தேவையாய் இருக்கும் ஒரு பொருளைத் தருவதில் இருக்கிறது பெருந்தன்மை –

கலீல் ஜிப்ரான்

ஆலயத்தின் முன்னால் இருந்தது அந்தக் காணிக்கைப் பெட்டி. செல்வந்தர்கள் வந்தார்கள் தங்கள் கைகளில் அள்ளி வந்திருந்த பணத்தை அதில் கொட்டினார்கள். தங்கள் பெருந்தன்மையை அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் எனும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது. அப்போது ஒரு ஏழை விதவையும் வந்தாள். அவளுடைய சுருக்குப் பையில் இரண்டே இரண்டு காசுகள் இருந்தன. அதைப் போட்டாள். அமைதியாய்க் கடந்து போனாள். அள்ளிக் கொட்டியவர்கள் இந்தப் பெண் கிள்ளிப் போட்டதை ஏளனமாய்ப் பார்த்திருக்கக் கூடும்.

ஓரமாய் அமர்ந்திருந்த இயேசு சொன்னார். “இந்த உண்டியலில் அதிகமாய்க் காணிக்கை போட்டது அந்த ஏழை விதவை தான். எல்லோரும் தன்னிடமிருந்ததில் மிகுதியானதைப் போட்டார்கள். இவளோ தன்னிடம் இருக்கும் முழுவதையும் போட்டுவிட்டாள்” என்றார்.

பெருந்தன்மை என்பது பிச்சையிடுதல் அல்ல. பெருந்தன்மை என்பது தேவையில் இருக்கும் இன்னொருவரின் தேவையை நிறைவேற்றும் மனநிலையும், செயல்பாடும். ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது, ஒரு அன்பின் செயலுக்கான கதவு நம் முன்னால் திறக்கிறது என்பார்கள். அந்தக் கதவைக் கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடும்போது மனித நேயத்தை மறுதலித்தவர்களாய் மாறிவிடுகிறோம். தன்னலம் தாண்டிய இடங்களில் மட்டுமே பெருந்தன்மை கிளை விட்டுச் செழிக்க முடியும்.

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறுவயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது. “தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?” மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன்  “சரி” என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், ”நான் எப்போது சாகத் துவங்குவேன் ?”.

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள். தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள் ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இது தான் தன்னலமற்ற அன்பின் வடிவம் !

“நான்” என்பதை பின்னால் நிறுத்தி “நீ, உனது விருப்பம்” என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

நமக்கு என்ன கிடைக்கிறது என்பது நமது வாழ்தலின் அடிப்படையாகிறது. நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே நமது வாழ்வின் அடிப்படையாகிறது – என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். கொடுத்தல் என்பது வெறும் பணம் சார்ந்ததல்ல ! அது உங்கள் திறமை, நேரம், அருகாமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மன்னிப்பு, ஆறுதல் என அதன் முகம் வேறு படலாம். வகைகள் எதுவானாலும் வேர் என்பது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்வோம்.

பெருந்தன்மை என்பது வெறுமனே மனதுக்குள் சொல்லிப் பார்க்க வேண்டிய கவிதையோ, பாடலோ அல்ல. அது ஒரு செயலாக வெளிப்பட வேண்டிய உயரிய குணாதிசயம். ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும் போதும் பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனும் சிந்தனை மனதின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கட்டும். பெருந்தன்மையைக் கவனமாகச் செயல்படுத்தத் துவங்கினாலே அது நமது வாழ்வின் பாகமாக மாறிவிடும்.

யாருக்கு உதவி செய்தால் அவர்களால் திருப்பி உங்களுக்குத் தர இயலாதோ அந்த அளவுக்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவது உயரிய நிலை. நமது வீட்டின் கதவுகள் ஏழைகளுக்காகவும் திறந்தே இருப்பது பெருந்தன்மையின் அழகிய நிலை. பெருந்தன்மை உடையவர்கள் தான் மனதளவில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கொடுப்பது என்பது இழப்பது அல்ல ! சேமிப்பது ! பிறருடைய அன்பையும், வாழ்வுக்கான அர்த்தத்தையும் !