ஆதியில் மனித இனம் தனித்தனிக் குழுக்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பிரிந்து கிடந்தது. எனவே ஒரு குழுவின் வளர்ச்சியோ தோல்வியோ இன்னொரு குழுவைப் பாதித்ததில்லை. இன்றைக்கு நிலமை அப்படியில்லை. உலகம் முழுவதும் ஒரு சிலந்தி வலை போன்ற அமைப்புக்குள் சிக்கியிருக்கிறது. ஒரு இழை அறுந்தாலும் மறு எல்லை வரை அதன் பாதிப்பு தெரிகிறது. எனவே பொருளாதார வீழ்ச்சி என்பது ஏதோ ஒரு நாட்டுக்குத் தானே என நாம் அலட்சியமாய் இருந்து விட முடியாது.
கிரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் அதிர்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும், உலக வர்த்தகத்திலும் உணரப்பட்டது. இப்போது சீனாவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியானது உலகின் பல பாகங்களிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதார இழப்பு பல இலட்சம் கோடிகள். இதனால் சீனாவின் சிறு வர்த்தகர்கள் கடுமையான சூழலுக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சீனாவின் பொருளாதாரச் சரிவு, ஆசிய சந்தையில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் கணிசமான அளவு சரிவை உண்டாக்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை திடீரென ஏழு இலட்சம் கோடி வரை பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டு ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. அமெரிக்காவின் நெருக்கடி காலத்தில் ஏற்பட்டதை விட அதிகமான சரிவு இது. இந்திய ரூபாயின் மதிப்போ வரலாறு காணாத அளவுக்கு படு பாதாளத்தில் சரிந்து 67 ரூபாய்க்கு வெகு அருகில் நின்று மூச்சு வாங்குகிறது.
சீனா தனது நாணயமான யுவானின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கப் பார்க்கிறது. ‘மேட் இன் சைனா’ வை உலகின் கடைசி மூலை வரைப் பரப்பியிருக்கும் சீனாவின் நாணய மதிப்பு மாற்றம் எல்லா இடங்களிலும் மாற்றத்தை உருவாக்கும் என்பது கண்கூடு. இந்த நாணய மதிப்பு குறைப்பு உலக வர்த்தகத்தைச் சீர்குலைக்கச் செய்யும் சீனாவின் யுத்தி என வர்ணிக்கும் வல்லுநர்களும் உண்டு.
ஏற்றுமதியை அதிக அளவில் செய்யும் சீனாவுக்கு இந்த நிலமை எனில், இறக்குமதியிலேயே இலட்சியத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலமை இதை விடப் படு மோசமாகவே இருக்கும். இந்தியாவின் ரூபாய் ஐ.சி.யூ வில் இருக்கிறது என்று கிண்டலடித்தவர்கள் ஆட்சிக்கு வந்தபின் நிலமை அதை விட மோசமாகியிருப்பது துயரம்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணையின் மதிப்பு வீழ்ச்சியடைகையில் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடையும் என்பது வரலாறு. இப்போது கச்சா எண்ணையின் மதிப்பு 40 டாலர் எனுமளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது அத்தகைய ஒரு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 2008க்குப் பின் இப்போது தான் கச்சா எண்ணை இந்த விலையை எட்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல தங்கம் விலையில் ஏற்படும் வீழ்ச்சியும் தங்கத்தை நிகரப் பொருளாக வைத்திருக்கும் இந்தியாவின் கையிருப்பு மதிப்பைக் குறைக்கும்.
நாடு வளமாகவும், நலமாகவும் இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டை வலுப்படுத்த முடியாது. இன்றைய உலக பொருளாதாரச் சூழலை சரியாகக் கணித்து ரிசர்வ் வங்கி இந்தியாவின் இரண்டு வங்கிகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ இந்த இரண்டுமே அந்த வங்கிகள்.
2008 ல் அமெரிக்க வர்த்தகம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்ததன் விளைவாக ரிசர்வ் வங்கி டி எஸ்.ஐ.பி Domestic Systemically Important Banks (D-SIBs) எனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் கீழ் உள்நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் இணைக்கப்படும். வங்கிகளின் அளவு, அதன் பரிவர்த்தனைகள், சர்வதேச அளவிலான அதன் தொடர்புகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வங்கிகள் தேர்வு செய்யப்படும். இந்த பட்டியலில் வரும் மிக முக்கியமான இரண்டு வங்கிகள் எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.
அரசு வங்கிகளில் ஸ்டேட் பேங்க், தனியார் வங்கிகளில் ஐ.சி.ஐ.சி.ஐ இரண்டுமே கோலோச்சுகின்றன. இந்த இரண்டு வங்கிகளும் ஒருவேளை திவாலாகும் சூழல் வருமானால், 2008ம் ஆண்டு அமெரிக்கா சந்தித்தது போன்ற மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டு விடும். எனவே தான் ரிசர்வ் வங்கி இந்த இரண்டு வங்கிகளும் தங்கள் இக்விடி ஃபண்ட், அதாவது பங்குச்சந்தையின் முதலீட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு வங்கிகளின் பங்குகளும் வலுவிழந்து வருவதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
பல சர்வதேச வங்கிகளும் இந்தியாவிலும் அதன் கிளைகளை வைத்திருக்கின்றன. அவையும் மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களை செய்கின்றன. அத்தகைய வங்கிகளில் முக்கியமானவை ஜி எஸ்.ஐ.பி Global Systemically Important Bank (G-SIB), எனும் வகையில் வரும்.
வங்கிகள் திவாலாவது தேசத்தின் வளர்ச்சியையும், சமநிலையையும் வெகுவாகப் பாதிக்கும். திவாலாகும் வங்கிகளை மீண்டும் இயக்க வேண்டுமெனில், அமெரிக்கா செய்தது போல பொதுமக்களின் பணத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அதற்காகச் செலவிட வேண்டி வரும்.
இந்தச் சிக்கலைச் சரிசெய்ய ஒரே வழி, வங்கிகள் ஒரு குறிப்பிட்ட அளவு அசையாச் சொத்து, பங்குகள், ஃபண்ட்கள் போன்றவற்றை வைத்திருப்பது தான். இது ஒரு சட்டமாக அடுத்த ஆண்டுமுதல் வரவிருக்கிறது.
கடந்த உலக பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து உலகம் முழுமையாக மீளவில்லை என்பது தான் உண்மை. நிறுவனங்களும், அதன் முதலாளிகளும் சரிவிலிருந்து மீண்டுவிட்டார்கள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசுகள் அதற்கு உதவின. ஆனால் உலக அளவில் கீழ்த்தட்டு மக்களிடையே அந்த பாதிப்பு இன்னும் விலகவில்லை. ஆண்டுக்கு 22 ஆயிரம் குழந்தைகள் வறுமையினால் இறந்து போகும் உலகில் தான் இன்னும் நாம் பயணிக்கிறோம்.
அடுத்த ஒரு மிகப்பெரிய உலக பொருளாதாரச் சீர்குலைவை நோக்கி உலகம் சென்று கொண்டிருப்பதாக பல்வேறு வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் பிரபல முதலீட்டு ஆலோசகரும், கேஸி ஆய்வக நிறுவனருமாக “டக் கேஸி”, கடந்த பொருளாதார சீர்குலைவை கணித்துச் சொன்ன “பில் ஃப்ளெக்ஸ்டைன்”, லேரி எட்சன் உட்பட பல்வேறு நிபுணர்கள் இதில் அடக்கம்.
இதை நிரூபிப்பது போல கிரீஸ், சீனாவின் சீர்குலைவைத் தொடர்ந்து கனடாவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நுழைந்திருக்கிறது. கனடா ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் விழுவது எதிர்பாராத நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அதே போல பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளும் பொருளாதார நெருக்கடியின் வாசலில் நிற்கின்றன. பங்குச்சந்தையில் சரிவைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் மலேஷியா, சிங்கப்பூர்,தாய்லாந்து, தென் கொரியா, எகிப்து, கென்யா உட்பட இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன.
உலகம் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நுழைகிறது என்பது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கே கவலையளிக்கும் விஷயமாகும். ஏற்றுமதி, இறக்குமதி, பணப் பரிமாற்றம், வங்கிகள், சர்வதேசத் தொடர்புகள், தனியார் நிறுவனங்கள் என ஒரு ஒட்டு மொத்த அலசல் இந்த நேரத்தில் வெகு அவசியம். எச்சரிக்கையாய் இருக்கிறதா நம் தேசம் ?
ஃ