ஆகதன் : விமர்சனம் ! நாணமில்லே சத்யராஜ் ?

சத்தியராஜின் முதல் மலையாளப் படமான ஆகதன் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மலையாள இயக்குனர்களில் எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கமல் இயக்கியிருக்கும் படம் இது. பல அற்புதமான படங்களை மலையாள உலகுக்கு நல்கியவர் இவர். சரி, இவருடைய ஆகதன் கதை என்ன ?

காஷ்மீரின் ஒரு துயர இரவு. ஆனந்தமான அம்மா, அப்பா, அக்கா என வாழ்ந்த சிறுவனுடைய கண் முன்னாலேயே தீவிரவாதிகள் பெற்றோரைக் கொன்று விடுகிறார்கள். சகோதரியையும், சிறுவனையும் காப்பாற்றும் இராணுவ அதிகாரி சகோதரியைக் கெடுத்து கோமா நிலைக்குத் தள்ளி விடுகிறார். பல ஆண்டுகள் நினைவு திரும்பாமலேயே மருத்துவமனையில் கிடந்து அப்படியே இறந்து விடுகிறாள் சகோதரி. சிறுவன் வளர்ந்து பெரியவனானபின் அந்த இராணுவ அதிகாரியைத் தேடிப் பிடித்து பழி தீர்ப்பது தான் கதை ! ( நெசமாவே இதான் கதை ! )

மஞ்ஞு மழக்காட்டில் எனத் தொடக்கும் மனதை உருக்கும் பாடலுடன் தொடங்குகிறது படம். ஒரு இனிமையான குடும்பத்தின் அழகிய நினைவுகளுடன் அஜயன் வின்செண்டின் ஒளிப்பதிவில் ஸ்தம்பிக்க வைக்கும் அழகிய காட்சிகளுமாய் படம் நகர்கிறது. படம் முழுக்க ஒளிப்பதிவும், அவ்ஸேப்பச்சனின் இசையும் இதமாகப் பயணிக்கின்றன.

திலீப் ஹீரோ. அவருடைய அக்மார்க் நகைச்சுவைகள் ஏதும் படத்தில் இல்லை என்பது பெரும் குறை. அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம். அவ்வப்போது லேப்டாப்பை திறந்து குடும்ப போட்டோவைப் பார்த்துக் கொள்கிறார். (முன்பெல்லாம் பர்சிலிருந்து ஒரு நைந்து போன படத்தை எடுத்துப் பார்ப்பார்கள். இது ஹை பட்ஜெட் படமாம் அதனால ஒரு லேப்டாப் ! ) ஹீரோயின் சார்மி. திலீப்புடன் நெருக்கமாகவும், டி ஷர்ட்களுடன் இறுக்கமாகவும் வந்து கொடுத்த காசுக்கு நடித்துவிட்டுப் போயிருக்கிறார்.

சரி, அப்போ சத்தியராஜ் ! அவர் தான் ஆர்மி ஜெனரல். ஹீரோவின் டீன் ஏஜ் சகோதரியை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கற்பழித்துக் கொன்ற ஆர்மி ஜெனரல். பெற்றோரின் பிணங்களுக்கு இடையே, சிறுவனின் கண் முன்னாலேயே ஒரு பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றியவர். இப்படி ஒரு நச் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காகத் தான் ரஜினியின் சிவாஜியில் கூட நடிக்கமாட்டேன் என்று சொன்னீங்களா சத்யராஜ் சார் ?

ரிட்டையர்ட் இராணுவ ஜெனரலுக்குரிய கம்பீரம் சத்தியராஜிடம் இருக்கிறது. ஆனால் அவருக்குக் கொடுத்திருக்கும் டப்பிங், ஐயோ… ஒட்டாமல் உரசாமல் எங்கோ தொங்குகிறது. குறிப்பாக சத்தியராஜின் குரலைக் கேட்டவர்களுக்கு டப்பிங் குரல் கொஞ்சமும் ரசிக்கப் போவதில்லை. என்ன பண்ண சத்தியராஜுக்கு தான் மலையாளம் வராதே. “ஞானும் திலீபும் பிரண்டாச்சி” எனுமளவுக்கு தான் அவருடைய மலையாளம் என்பதை அவருடைய ஒரு பேட்டியிலேயே சொல்லி விட்டார்.

படத்தில் உறுத்தலாய் எழுந்த இன்னொரு சம்பவம், படத்தின் துவக்கக் காட்சிகளில் ஒன்று. காட்சியில் வண்டியில் அடிபட்ட மூதாட்டி ஒருத்தியை ஹீரோவும் ஹீரோயினும் காப்பாற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார்கள். உடனே ஒரு காட்டுவாசிக் கூட்டம் ஓடி வருகிறது “அம்மா…” என்று கத்தியபடி. “அது தமிழர் கூட்டம். கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல், காப்பாற்றிக் கொண்டு வந்த ஹீரோவிடம் இருந்த பணத்தையெல்லாம் பிடுங்கிவிட்டு, ஹீரோயினை தரக்குறைவாய் நடத்தி விட்டுப் போய் விடுகிறார்கள்.

“இப்படியும் மனுஷங்க, உதவி செய்யப் போனா…” என ஹீரோ சலித்துக் கொள்கிறார். வழக்கமாகவே ஒரு தமிழனை வில்லனாக்கி அவனை செமையாக உதைத்து தமிழ் சமூகத்தையே உதைத்துத் தள்ளி விட்டது போல பெருமிதப்படுபவை தான் பெரும்பாலான மலையாள சினிமாக்கள். இந்தப் படம் ஒரு படி மேலே போய், வில்லன்கள் மட்டுமல்ல, தமிழர்கள் எல்லோருமே படிப்பறிவும், நன்றியும் இல்லாத காட்டுவாசிகள் என்றும் பறைசாற்றியிருக்கிறது. சாதாரண ஒரு மலையாளப் படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்திருந்தால் மலையாளிகளுடைய வெவரமில்லாத்தனம் என ஜஸ்ட் லைக் தேட் போயிருக்க முடியும். ஆனால் தன்மானத் தமிழன் சத்யராஜ் நடித்திருக்கும் முதல் மலையாளப் படத்திலேயே இப்படியென்றால் ?

சத்யராஜ் இந்தக் காட்சியைப் பார்க்கவில்லையா ? அல்லது “ஐயா கமல், தமிழர்கள் இப்படி கிடையாது. படிப்பறிவு உள்ளவங்க தான். நன்றிக்குப் பெயர் போனவங்க தான்” ன்னு சொல்றதுக்கு ஆர்மி ஆபீசருக்கு தெம்பு வரவில்லையா ? அதை விட்டு விட்டு “கமல் சாரே.. நிங்ங்அள் சூப்பர் சீன் வெச்சாச்சி ” என்று கைதட்டிப் பாராட்டி விட்டு வரத் தான் முடிந்திருக்கிறதா ? அப்பவே மைல்டா டவுட் ஆனேன்யா..

தனது மலையாளப் படத்தின் கதாபாத்திரத்தைப் பற்றி ஏகத்துக்குச் சிலாகித்துப் பேசினார் சத்தியராஜ் ! என்ன ? இதுவா சூப்பர் கதாபாத்திரம் ? தமிழ் சினிமாவில் பார்க்காத சத்தியராஜ் இங்கே எங்கே ? ! மலையாளிகள் பாராட்டும் கடைசிக் காட்சி கூட வால்டர் வெற்றிவேலில் பார்த்ததை விட கம்மி தான் !

இன்னொரு காட்சியில் லயோலா கல்லூரியில் படித்த ஒரு தமிழர் வருவார். அவரை “சாப்பாட்டு ராமன்” என கிண்டலடிப்பார்கள் ! இப்படி படம் முழுக்க தமிழ் சார்ந்த விஷயங்கள் எல்லாமே கொச்சைப்படுத்தப்பட்டிருக்கின்றன, சத்யராஜ் உட்பட ! ஆகதன் சத்யராஜின் முதல் மலையாளப் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். கடைசி மலையாளப் படமா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் !

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஆகதன் : சத்தியராஜின் முதல் மலையாளப் படம் !

மலையாளக் கடலில் குதித்திருக்கிறார் சத்யராஜ். படத்தின் பெயர் ஆகதன். ஹீரோ திலீப். மலையாளத்தின் வசூல் ஹீரோவான திலீப்பிற்கு இந்த ஆண்டு வெளியாகப் போகும் முதல் படம் இது என்பதால் கேரளாவில் இந்த படத்துக்கு தனி அடையாளமே கிடைத்திருக்கிறது. சத்தியராஜுக்கு இதில் வெயிட்டான வேடமாம். ஹரேந்திர நாத வர்மா எனும் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபீசர் அவர்.  சாப்ட்வேர் காரரான கவுதம் மேனன் (திலீப்) குடும்பம் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்து விடுகிறது. அப்போது டியூட்டியில் இருந்தவர் நம்ம சத்யராஜ். அப்புறம் என்ன கதையை அப்படியே பில்டப் பண்ணிக்கோங்க. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிவரப்போகும் இந்தப் படத்திற்குப் பின் சத்யராஜின் நக்கலை மலையாளத்திலும் அடிக்கடிக் கேட்கலாம் போலிருக்கிறது.

இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல், சார்மியின் மறு பிரவேசம். வினயனின் காட்டுசெம்பாக்கம் படத்தில் நடித்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் ( அதுதான் எப்பவுமே காணோமே ) என்று ஓடியவர் இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு மலையாள சேனலில் மலபார் போலீஸ் தமிழில் பேட்டிக் கொண்டிருந்தார் சத்தியராஜ். “ஏன் ரஜினி கூட சிவாஜி படத்தில் நடிக்கவில்லை” எனும் கேள்விக்கு (இன்னுமாடா இந்தக் கேள்வியை விடவில்லை  ? ), “அது என்ன வில்லன் ? ரொம்ப சாதாரண வில்லன். எனக்கு வெயிட் இல்லாத கேரக்டர் ஆனதால் தான் சிவாஜியில் நடிக்கவில்லை.” என்று மலையாளத்தில் சொல்வதாக நினைத்து தமிழில் பேசிக்கொண்டிருந்தார் ஐயா. ஏற்கனவே எக்கச் சக்க மலையாளப் படங்களை டப் செய்து வெற்றியும் தோல்வியும் கொடுத்தவர் தான் சத்தியராஜ். அதிலும் சித்ரம் படத்தை எங்கிருந்தோ வந்தான் என ந(க)டித்ததை சித்ரம் ரசிகர்கள் வாழ்நாளில் மற்ற்ற்ற்றக்கவே மாட்டார்கள்.

என்னுடைய நடிப்பின் அதிகபட்ச சாதனை பெரியார் வேடத்தில் நடித்தது தான் என்றவர், கூடவே, இலக்கணம் மாறாமல் திலீப் ஒரு சூப்பர் ஹீரோ. அவருடைய பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது. அவரு சினிமாலே எப்படி நடிக்குதோ அப்படியே இருந்தாச்சி. ரொம்ப ஜாலியா இருந்தாச்சி. 25 வருஷம் பழகின பிரண்ட் மாதிரி பேசியாச்சி. என்றெல்லாம் ஆச்சிக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே மலையாளப் படம் என்றால் அதில் ஒரு தமிழன் கேரக்டர் வரும். ஹீரோவின் கையால் அடிபட்டு “பாண்டி” என அழைக்கப்பட்டு, “இது ஸ்தலம் வேறயா…’ என அவமானப்படுத்தப்பட்டு மல்லூக்களின் கரகோஷத்தைப் பெறும். இப்படியாவது தமிழனை அவமானப்படுத்தி விடுவோமே எனும் மலையாளியின் ஆழ்மன காழ்ப்புணர்ச்சி என அதை உளவியல் பூர்வமாகச் சொல்லலாம். அப்படி ஏதும் இந்தப் படத்தில் நிகழாது என சத்திய(ராஜ்)மாய் நம்புவோம் !

ஆகதம் படத்தின் கிளைமேக்ஸ் போல இதுவரை நான் ஒரு கிளைமேக்ஸைப் பார்த்ததே இல்லை என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். இந்தப் படத்தை இயக்குவது மலையாள இயக்குனர் கமல் என்பதால் சத்யராஜின் பேச்சை கொஞ்சமாச்சும் நம்பலாம் என நினைக்கிறேன். கமலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா ? உள்ளடக்கம் போன்ற பல கலக்கல் படங்களைத் தந்தவர் தானே.

ஆகதன் வரட்டும், புரட்சித் தமிழன்,  “புரட்சி மலையாளி” ஆவாரா பாக்கலாம்.

வாக்களிக்கலாமே….

நான் பார்த்ததிலே : The Spiderwick Chronicles

தமிழ்ப் படங்களைப் பார்க்கும் பொறுமை என்னிடமிருந்து தனியே கழன்று ஓடிவிட்டது போலிருக்கிறது. ஒரு காலத்தில் எந்தப் படமானாலும் எந்த ஓட்டை தியேட்டரானாலும் ஓடிப் போய் உட்கார்ந்து படத்தின் கடைசி டைட்டில் முடிந்தபிறகு கூட திரையையே உற்றுப் பார்க்கும் சினிமா மோகம் இருந்தது.

ரிலீஸ் நாளன்று முதல் காட்சி பார்த்தால் தான் ஏதோ ஜென்ம சாபல்யம் பெற்று விட்டது போல மனம் திருப்திப்படும். அதிலும் குறிப்பாக எங்கள் ஊரில் ஒட்டப்பட்டிருக்கும் பச்சை கலர் சின்ன போஸ்டரின் கீழே “பாட்டு பைட்டு சூப்பர்” என எழுதியிருப்பார்கள். சிரஞ்சீவி படம் என்றால் கண்டிப்பாக அந்த வாசகம் இருந்தே தீரவேண்டும் என்பது எழுதாத விதி.

பாட்டு பைட்டு சூப்பர் – ன்னு போட்டிருக்கு கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும் என மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். அதெல்லாம் சுவாரஸ்யமான அந்தக் காலம். இப்போது பெரும்பாலான படங்களை டிவியில் கூட பார்க்கும் பொறுமை இருப்பதில்லை.

தமிழ்ப் படங்கள் என்றில்லை, மலையாளப் படங்களும் அவ்வாறே. மலையாளத் திரையுலகம் தரமான படங்கள், பாலியல் படங்கள், நகைச்சுவைப் படங்கள், அரைமணி நேரம் தொடர்ச்சியாக டயலாக் பேசும் படங்கள் என சீசனுக்குத் தக்கபடி மாறிக்கொண்டே இருக்கிறது. அதிலும் இந்த சுரேஷ் கோபி படமென்றால் மியூட் செய்துவிட்டு தான் பார்க்க முடியும். எப்போதேனும் ஆங்காங்கே ஒரு நல்ல மலையாள படம் பார்க்க முடிகிறது.

டிவியில் வேறு எந்த உருப்படியான பொழுது போக்கு நிகழ்ச்சியும் இல்லை இல்லை இல்லவே இல்லை. எங்கும் ஏதாவது இரண்டு பேர் கட்டிப் பிடித்து ஆட்டம் போடுகிறாகள், மூன்று பேர் ஜட்ஜ் எனும் பெயரில் உட்கார்ந்து “வாவ் அமேஸிங்” என்கிறார்கள். உடனே ஆடியவர்கள் முழங்கால் வரை தலையைக் குனிந்து “யோகா” பயில்கிறார்கள்.

அடக்கடவுளே,  என்ன செய்வது !!! என தெரியாமல், விழித்துக் கொண்டிருந்த கடந்த வார இறுதியில் பார்க்க நேர்ந்தது The Spiderwick Chronicles எனும் ஆங்கிலப் படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களைப் பொறுத்தவரை நாம் இன்னும் படமெடுக்கத் துவங்கவே இல்லை போலிருக்கிறது என மீண்டும் ஒரு முறை நினைக்க வைத்த படம்.

சாதாரணமான ஃபாண்டஸி கதை. வழக்கமான தனிமையான, ஆண்கள் இல்லாத வீடு, மர்மங்கள் அந்த வீட்டைச் சுற்றிக் கிடக்கின்றன. அந்த வீட்டிலிருக்கும் ஒரு ரகசிய நூலை திறக்கும் போது மர்மங்களும் திகில் களும் துவங்குகின்றன என வழக்கமான கதை. அதை படமாக்கியிருக்கும் விதத்திலும், கிராபிக்ஸ் கலக்கியிருக்கும் விதத்திலும் அசத்திக் காட்டியிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஃபெயரிகள் வருவது, காப்ளின்ஸ் எனும் சிறு சிறு உருவங்களின் அட்டகாசம், அற்புதமான கற்பனை உலகம் என கண்களைக் கட்டிப் போடும் சங்கதிகள் படத்தில் நிறையவே.

குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்ததாலேயே இந்தப் படம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது.

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது இது தான். நமது புராணங்களில் எத்தனையோ அதி அற்புதமான கற்பனைகள் உண்டு. அவற்றை இதே போல பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தினால் அதற்கான உலகச் சந்தை நிச்சயம் மிக அதிகமாகவே இருக்கும்.

தேவையில்லாமல் நூறு கோடி கொடுத்து குப்பைகளை எடுத்துக் கொட்டுவதை விட ஏதாவது பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நமது கதைகளை உலகப் படமாக்கினால் உலகமே நமது இலக்கியங்களையும், புராணங்களையும் ரசிக்கும் சூழல் உருவாகுமே.

இப்படி யோசித்து பெருமூச்சு விட்டபோது மனைவி விண்ணப்பித்தார், இந்த வாரம் குங்பூ பாண்டா பாக்கலாமா ?  மனைவி சொல்லுக்கு மறுப்பேது. அடுத்த வாரம் சொல்றேன் குங்பூ பாண்டா எப்படி இருக்குன்னு 🙂