பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சின்ன இறைவாக்கினர்களில் ஒருவர் மீக்கா. யூதாவிலுள்ள மெரேசேத் தான் இவருடைய சொந்த ஊர். அது எருசலேமுக்குத் தென் மேற்கே சுமார் 20 மைல்கள் தொலைவில் இருக்கிறது. கிமு 737 க்கும் 690க்கும் இடைப்பட்ட காலத்தில் இறைவாக்கு உரைத்தவர். “கடவுளுக்கு இணையானவர் யார்” அல்லது “கடவுளுக்கு ஒப்பானவர் யார் ?” என்பது இந்தப் பெயரின் பொருள். மிக்கேல் எனும் பெயரின் இன்னொரு வடிவமாக மீக்கா எனும் பெயர் அமைந்திருக்கிறது.
கடவுளின் செய்தியை மக்களுக்கு உரைப்பவர்கள் தான் இறைவாக்கினர்கள். அல்லது தீர்க்கத் தரிசிகள். சில வேளைகளில் அவர்களுடைய வார்த்தைகள் எதிர்காலத்தில் நடைபெற இருப்பவற்றைக் குறித்த எச்சரிக்கையாய் இருக்கும். சில வேளைகளில் நிகழ்காலத்தில் அவர்கள் செய்ய வேண்டியவை குறித்த அறிவுரையாய் இருக்கும். இன்னும் சில வேளைகளில் மீட்புக்கான மனம் திரும்புதல் குறித்ததாக இருக்கும். செய்தி எதுவானாலும், அது கடவுளின் செய்தி என்பது மட்டுமே அடிக்கோடிட வேண்டிய விஷயமாகும்.
“எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர், உன்னிடமிருந்தே தோன்றுவார். அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்” எனும் இறைவார்த்தைகள் கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய தீர்க்கத் தரிசனமாய்க் கருதப்படுகிறது. இறைமகன் இயேசுவின் மனித வரவைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகத் துல்லியமாய் உரைக்கப்பட்ட இறைவாக்கு இது.
மீக்காவின் இறைவாக்கு யூதா மற்றும் இஸ்ரேல் நாட்டின் மீது இருந்தது. கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களாக இருந்தாலும் இஸ்ரயேலர்கள் பாவத்தைத் தேடி ஓடுபவர்களாகவே இருந்தார்கள். நாடு செல்வச் செழிப்புடன் இருந்தது. ஆனால் மக்களின் மனங்களோ வறண்டு கிடந்தன. ஏழை எளிய மக்கள் மேலும் மேலும் நசுக்கப்பட்டார்கள்.
ஏழைகளை வஞ்சித்து விட்டு கடவுளை வழிபாடு செய்கிறேன் என்பது போலித்தனமான ஆன்மீகம். இதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. அடுத்திருக்கும் மனிதனை அன்பு செய்வதே, கடவுளை அன்பு செய்வதன் அடையாளம் எனும் அற்புதமான மனித நேயச் செய்தியை மீக்கா இறைவாக்காய்த் தருகிறார்.
மீக்காவின் வார்த்தைகளில் அழகியலும், கடவுளின் மனமும் ஒரு சேர வெளிப்படுகின்றன.
“இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார். அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும். பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்”
என கடவுளின் வருகையின் வீரியத்தை மீக்கா இறைவாக்கினர் விளக்குகிறார். இஸ்ரயேலும், யூதாவும் அழிவுறும். அது கடவுளின் வழியை விட்டு விலகிவிட்டது. எனும் எச்சரிக்கையையும் அவர் விடுக்கிறார்.
“தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு!” என்கிறார் ஆண்டவர்.
“இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ! நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள். என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள். என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்.
அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்” என தலைவர்கள் செய்யும் கொடுமைகளைக் குறித்த கடவுளின் வார்த்தை ஆக்ரோஷமாய்த் தாக்குகிறது. எருசலேமைக் குறித்தும், சமாரியாவைக் குறித்தும் இவர் சொன்ன இறைவார்த்தைகள் அனைத்தும் பின்னாட்களில் அப்படியே நடந்தன.
சிலைவழிபாடு, வஞ்சனை, திருடுதல், பேராசை, பாலியல் தவறுகள், அடக்குமுறை, கபடம், அநியாயம், கொள்ளையடித்தல், பொய் உரைத்தல், கொலை செய்தல் என மீக்கா இடும் பட்டியல் மிகப் பெரிது. அவருடைய செய்தியின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். “பாவத்தை விட்டு விலகி கடவுளிடம் வாருங்கள்”.
அதை மிகத் தெளிவாக “ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்” என முத்தாய்ப்பாய் விளக்குகிறார் மீக்கா.
- கடவுளை விட்டு விலகிச் செல்கையில் அழிவு நிச்சயம். ஆனால் மனம் திரும்பி வருவோருக்கு அடைக்கலம் அதிக நிச்சயம்.
- ஏழைகளின் மீதான வன்முறை கடவுளின் மீதான வன்முறை ! மனித நேயம் மனதில் நிரம்பியிருக்க வேண்டியது ஆன்மீகத்தின் அடிப்படை.
இந்த இரண்டு விஷயங்களையும் மீக்காவின் இறைவாக்கு நூலிலிருந்து கற்றுக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் உயரிய போதனையான “கடவுளை நேசி”, “மனிதனை நேசி” எனும் போதனைகளை ஒட்டியே மீக்காவின் இறைவார்த்தைகள் இருப்பது, கடவுளின் வார்த்தை நிலையானது என்பதை நிரூபிக்கிறது.