பைபிள் மாந்தர்கள் 56 (தினத்தந்தி) யோசியா

எட்டு வயதான ஒரு சிறுவன் என்ன செய்வான் ? மூன்றாம் வகுப்பில் உட்கார்ந்து எழுத்துகள் படித்துக் கொண்டிருப்பான், அல்லது விளையாடித் திரிவான். அப்படித் தானே ? ஆனால் யோசியா எட்டு வயதாக இருந்த போது ஒரு மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டான். யூதா நாட்டின் மன்னனாக !

யோசியாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது மனாசே அரசர் இறந்து போனார். அவர் யோசியாவின் தாத்தா. இஸ்ரவேலில் கடவுளுக்கு எதிரான ஒரு ஆட்சியை ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் நடத்தியவன் அவன். அன்னை எதிதாளின் கரங்களுக்குள் இருந்து வேடிக்கை பார்க்கும் வயது யோசியாவுக்கு. வழக்கத்தின் படி மனாசேவின் மகன் ஆமோன் யூதாவின் மன்னனாரார். அவர் யோசியாவின் தந்தை.

‘ரொம்ப கெட்ட மன்னன்’ என சுருக்கமாகச் சொல்லுமளவுக்கு ஆமோனின் வாழ்க்கை இருந்தது. தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாய்வான் என்பது போல தீமைகளைக் குவித்துக் கொண்டிருந்தான். நாட்டில் பிற தெய்வ வழிபாடுகள் பெருகின. பிற தெய்வங்களுக்காக தொழுகை மேடுகள்,அசேராக் கம்பங்கள், சிலைகள் என நாட்டில் இஸ்ரவேலர்களின் தெய்வத்துக்கு எதிரான செயல்களே நிரம்பியிருந்தன.

ஆமோனின் வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில், அவனது அலுவலர்களே அவனைக் கொன்று விட்டனர். நாட்டுமக்கள் ஆமோனின் ஆதரவாளர்கள். அவர்கள் ஆமோனுக்கு எதிராய்ச் சதி செய்தவர்களையெல்லாம் கொன்று விட்டு யோசியாவைப் பிடித்து அரியணையில் அமர வைத்தார்கள். அப்ப‌டித் தான் யோசியா ம‌ன்ன‌ரானார்.

ம‌க்க‌ள் ஒரு சிறுவ‌னை அர‌ச‌னாக்கி த‌ங்க‌ள் விருப்ப‌ம் போல‌ வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர். ஆனால் யோசியாவின் ஆட்சியின் ப‌ன்னிர‌ண்டாவ‌து ஆண்டில் ஒரு திருப்ப‌ம் நிக‌ழ்ந்த‌து. யோசியா க‌ட‌வுளின் ப‌க்க‌ம் த‌ன‌து ம‌ன‌தை முழுமையாத் திருப்பினார். இஸ்ர‌யேல் நாட்டிலிருந்த‌ அத்த‌னை பிற‌ தெய்வ‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌ங்க‌ளையும் அழித்தார், சிலைக‌ளை உடைத்தார், க‌ம்ப‌ங்க‌ளை வெட்டினார். நக‌ரையே தூய்மையாக்கினார்.

யோசியா த‌ன்னுடைய‌ ஆன்மீக‌ வ‌ழிகாட்டியாக‌ இறைவாக்கின‌ர் செப்ப‌னியாவைச் சார்ந்திருந்தார். இவ‌ர‌து கால‌க‌ட்ட‌த்தில் தான் புக‌ழ்பெற்ற‌ இறைவாக்கின‌ர் எரேமியாவும் வாழ்ந்து வ‌ந்தார். அவர்க‌ளுடைய‌ ஞான‌ம் யோசியாவுக்கு உத‌வியிருக்க‌க் கூடும்.

த‌ன‌து ஆட்சியின் ப‌தினெட்டாம் ஆண்டு ஆண்ட‌வ‌ரின் ஆல‌ய‌த்தைப் புதுப்பிக்க‌ நினைத்தார் ம‌ன்ன‌ர். அத‌ற்காக‌ சாப்பான் என்ப‌வ‌ரையும் வேறு சில‌ரையும் நிய‌மித்தார். அவ‌ர்க‌ள் த‌லைமைக் குரு இல்‌க்கியாவிட‌ம் சென்ற‌ன‌ர். ஆல‌ய‌த் தூய்மைப்ப‌ணி ந‌ட‌ந்த‌து. அப்போது குரு ஒரு விலைம‌திப்ப‌ற்ற‌ பொக்கிஷ‌த்தைக் க‌ண்டெடுத்தார். அது ‘ஆண்ட‌வர், மோசே வ‌ழியாக‌ கொடுத்த‌ திருச்ச‌ட்ட‌ நூலின் மூல‌ப் பிர‌தி’.

திருச்ச‌ட்ட‌ நூல் ம‌ன்ன‌னிட‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. ம‌ன்ன‌ன் அந்த‌ நூலை வாசித்தான்.  அப்போது தான் த‌ன‌து நாடு எத்த‌கைய‌ நிலையில் இருக்கிற‌து, இதற்கு என்னென்ன‌ த‌ண்ட‌னைக‌ள் என்ப‌ன‌வெல்லாம் யோசியாவுக்குப் புரிய‌ ஆர‌ம்பித்த‌ன‌.

அவ‌ர் த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டு, க‌ட‌வுளின் முன்னால் த‌ன்னைத் தாழ்த்திக் கொண்டார். அப்போது குல்தா எனும் பெண் இறைவாக்கின‌ர் பேசினார். “க‌ட‌வுளின் த‌ண்ட‌னை நாட்டுக்கு நிச்ச‌ய‌ம் வ‌ரும், ஆனால் நீர் உம்மைத் தாழ்த்திக் கொண்ட‌தால் உம‌து கால‌த்தில் அழிவு வ‌ராது” என்று யோசியாவிட‌ம் சொன்னார் குல்தா.

யோசியா நாடெங்கும் வாழ்ந்த‌ பெரிய‌வ‌ர்க‌ளை அழைத்தார். எல்லோரையும் ஆண்ட‌வ‌ரின் ஆல‌ய‌த்தில் சேர்த்தார். எல்லோருக்கும் முன்னால் திருச்ச‌ட்ட‌ நூலை வாசித்தார். இனிமேல் அத‌ன்ப‌டி ம‌ட்டுமே வாழ்வ‌தென‌ உறுதி மொழி எடுத்தார். மக்க‌ளும் அவ‌ருடைய‌ வாக்கை ம‌தித்த‌ன‌ர், அத‌ன் ப‌டியே வாழ்ந்த‌ன‌ர்.

க‌ட‌வுளுக்கான‌ பாஸ்கா விழாவையும் யோசியா ம‌ன்ன‌ர் வெகு விம‌ரிசையாக‌க் கொண்டாடினார். எப்ப‌டி விழாவைக் கொண்டாட‌வேண்டும் எனும் வ‌ழிமுறைக‌ளை யோசியாவே முன்னின்று செய்தார்.

அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் எகிப்திய‌ ம‌ன்ன‌ன் நெக்கோ மூல‌ம் வ‌ந்த‌து.நெக்கோ வேறொரு ம‌ன்ன‌னிட‌ம் போருக்குச் செல்கையில், த‌ன்னைத் தான் கொல்ல‌ வ‌ருகிறார் என‌ நினைத்து யோசியா ம‌ன்ன‌ன் எதிர்கொண்டு சென்றார். நெக்கோ சொன்ன‌தையும் அவ‌ர் பொருட்ப‌டுத்த‌வில்லை. யோசியா ம‌ன்ன‌ன் வில்லால் எய்ய‌ப்ப‌ட்டு ம‌ர‌ண‌ம‌டைந்தார்.

யோசியாவின் ம‌ர‌ண‌ம் நாட்டு ம‌க்க‌ளை நிலைகுலைய‌ வைத்த‌து. எல்லோரும் அவ‌ருக்காய் துக்க‌ம் அனுச‌ரித்த‌ன‌ர். எரேமியா இறைவாக்கின‌ரும் ஒரு இர‌ங்க‌ற்பா எழுதினார்.

யோசியாவின் வாழ்க்கை மிக‌ முக்கிய‌மான‌ சில‌ பாட‌ங்க‌ளை ந‌ம‌க்குக் க‌ற்றுத் த‌ருகிற‌து.

‘தாத்தா இதைத் தான் செய்தார், அப்பா இதைத் தான் செய்தார், அத‌னால் நானும் இதையே செய்வேன்’ என‌ யோசியா நினைக்க‌வில்லை. பார‌ம்ப‌ரிய‌ப் ப‌ழ‌க்க‌த்தைத் தாண்டி உண்மையான‌ வ‌ழியை தேடிக் க‌ண்டு பிடித்து அதை ந‌டைமுறைப்ப‌டுத்தினார்.

இர‌ண்டாவ‌தாக‌, த‌வ‌று என்று தெரிந்த‌தும் த‌ன்னை அர‌ச‌ன் என்று க‌ருதாம‌ல் ஆடைக‌ளைக் கிழித்து, தாழ்மை நிலைக்கு இற‌ங்கி, க‌ட‌வுளின் க‌ட்ட‌ளையை முழுதாய் க‌டைபிடிக்க‌ முடிவெடுக்கிறார். ந‌ல்ல‌ த‌லைவ‌னாக‌ த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளையும் அப்ப‌டியே செய்ய‌ வைக்கிறார்.

இந்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை யோசியாவின் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்