நிஜம் நிழலாகிறது

 

 

Wrapper - Sigaram K Balachander

என்னது !!

நிஜமாவா ?

வாட்….!!!

ஓ..மை..காட்….

2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்த‌ன‌. அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்க‌ள். நிஜ‌ம் தான். இனிமேல் அவ‌ர் ந‌ம்முட‌ன் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு நிஜ‌த்தை ஏற்றுக்கொள்ள‌வே நிறைய‌ நேர‌ம் பிடித்த‌து.

இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வாழ்ந்து நட்சத்திரமாய் ஜொலித்த ஒரு பளீர் நட்சத்திரம் உதிர்ந்து விட்டிருக்கிறது. இயேசு பிற‌ந்த‌போது வானில் வால் ந‌ட்ச‌த்திர‌ம் தோன்றிய‌து வ‌ர‌லாறு. இவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ள் தோன்றிய‌ போதெல்லாம் புதுப் புது திரை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் தோன்றிய‌து விய‌ப்பின் குறியீடு.

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ தொலைக்காட்சி ரிமோட்க‌ள் அழுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. மின் ப‌த்திரிகைக‌ள், இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌ர‌ப‌ர‌ப்பாயின‌, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் ப‌ல‌ருடைய‌ புர‌ஃபைல் பிக்ச‌ராக‌ மாறிப் போனார். இர‌ங்க‌ல் செய்திக‌ளால் இணைய‌மே அழுது புர‌ண்ட‌து.

ம‌ல‌ர்க‌ள் உதிர்வ‌து க‌வ‌லைய‌ளிக்கும் விஷ‌ய‌ம்

செடியே உதிர்வ‌து கலங்க வைக்கும்விஷ‌ய‌ம்.

தோட்ட‌மே வீழ்வ‌து க‌திக‌ல‌ங்க‌ வைக்கும் விஷ‌ய‌ம்

வாழ்க்கை எவ்வ‌ள‌வு நிஜ‌மோ அதை விட‌ அதிக‌ நிஜ‌த் த‌ன்மை வாய்ந்த‌து ம‌ர‌ண‌ம். ம‌ர‌ண‌த்தின் க‌த‌வுக‌ளைத் திற‌க்காம‌ல் யாருடைய‌ வாழ்க்கையும் முடிவ‌டைவ‌தில்லை. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் ச‌ல‌ச‌ல‌ப்புக‌ளை உருவாக்குகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அதிர்ச்சிப் பேர‌லைக‌ளை எழுப்புகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் எந்த‌ வித‌மான‌ ச‌ல‌ன‌ங்க‌ளையும் ஏற்ப‌டுத்தாம‌ல் க‌ட‌ந்து போகின்ற‌ன‌.

பால‌ச‌ந்த‌ர் ஒரு தோட்ட‌மாய் வாழ்ந்தார். அந்த‌த் தோட்ட‌த்தில் தான் எத்த‌னை வித‌மான‌ ம‌ல‌ர்க‌ள் உருவாகின‌ ! பால‌ச‌ந்த‌ர் ஒரு வான‌மாக‌ இருந்தார் அதில் தான் எத்த‌னை எத்த‌னை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் மின்னின‌!

ஒட்டுமொத்த‌ திரையுல‌க‌மே ப‌த‌றித் த‌வித்த‌து. புக‌ழின் உச்சியில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளெல்லாம் த‌ங்க‌ளுடைய‌ இமேஜை ம‌ற‌ந்து க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றினார்க‌ள். மைலாப்பூரில் இருந்த‌ அவ‌ருடைய‌ வீட்டை நோக்கி ர‌சிக‌ர்க‌ளும், திரையுல‌க‌ பிர‌முக‌ர்க‌ளும் விழுந்த‌டித்துக் கொண்டு ஓடினார்க‌ள்.

திரையுல‌க‌ம் ஸ்த‌ம்பித்த‌து. ப‌ட‌ப்பிடிப்புக‌ளெல்லாம் அப்ப‌டியே நிறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. கிளிச‌ரின் தேவைப்ப‌டாம‌லேயே க‌ண்க‌ளெல்லாம் த‌ண்ணீரில் மித‌ந்த‌ன‌.

“திரையுலகம் உள்ளவரை இவருடைய‌ புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் இவ‌ர்” என‌ தி.மு.க‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர்.க‌லைஞ‌ர் க‌ருணாநிதி க‌சிந்துருகினார்.

“அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் இவர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என‌ துய‌ர‌த்தை வெளிப்ப‌டுத்தினார் அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் செல்வி.ஜெய‌ல‌லிதா.

“இவர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டாரே” என கண்ணீர் விட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

“இவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என‌ க‌ல‌ங்கினார் தேமுதிக‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌காந்த்.

“இவருடைய‌ புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்” என‌ நெகிழ்ந்தார் த‌மாகா த‌லைவ‌ர் வாச‌ன்.

“இவருடைய‌ மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் இவர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்” என‌ நினைவுக‌ளில் க‌ல‌ங்கினார் ஸ்டாலின்.

”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளி மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.

இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என புலம்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ

இப்ப‌டி எதிர் எதிர் துருவ‌ங்க‌ளாக‌ இருக்கும் அத்த‌னை த‌லைவ‌ர்க‌ள் அந்த‌ ம‌ர‌ண‌த்தினால் க‌திக‌ல‌ங்கிப் போனார்க‌ள். கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் எல்லோருக்கும் அவ‌ரிட‌ம் இருந்த‌ ம‌ரியாதை. எந்த‌ வித‌மான‌ அர‌சிய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாம‌ல் இருந்த‌ அவ‌ருடைய‌ தூய்மையான‌ க‌லைப்ப‌ய‌ண‌ம்.

இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் என்று சொன்னால் போதும் த‌மிழ‌க‌ம் ந‌ன்க‌றியும். அவ‌ருடைய‌ பெய‌ரைச் சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை. அந்த‌ அள‌வுக்கு த‌ன‌து ப‌டைப்புக‌ளைப் பேச‌ வைத்து அமைதி காத்த‌வ‌ர் பால‌ச‌ந்த‌ர்.

பாலசந்தரின் மகன் பால கைலாசம் 54வது வயதில் நிமோனியா காய்ச்சலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். சின்னத்திரை தயாரிப்புகளில் பலரை அறிமுகம் செய்தும், பல வெற்றிகளைக் கொடுத்தும் பிரபலமாக இருந்தவர் பால கைலாசம். அவருடைய மறைவு பாலசந்தரை வெகுவாகப் பாதித்தது. மகன் இறந்த அதே ஆண்டு, சில மாதங்களிலேயே அவரும் பிரிந்து சென்றது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரட்டைத் துயரமாய் மாறிப் போனது..

“இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என‌ சூப்ப‌ர் ஸ்டார் க‌ண்ணீர் விட்டுப் பேசிய‌தில் துளிய‌ள‌வும் க‌ல‌ப்ப‌ட‌ம் இல்லை. கேபி எனும் பெய‌ரைக் கேட்டாலே கையைக் க‌ட்டிக்கொண்டு எழும்பி நிற்கும் ப‌ணிவு சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினிகாந்திட‌ம் எப்போதும் இருந்த‌து.

“ஐயா.. ந‌ன்றி. நீங்க‌ள் கொடை வ‌ள்ள‌ல் ஐயா. உங்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லி தீருமா ?” என‌ அழுதார் உல‌க‌நாய‌க‌ன் க‌ம‌ல‌ஹாச‌ன். உல‌க‌மே கொண்டாடும் ந‌டிக‌னாக‌ இருந்தாலும் பால‌ச‌ந்த‌ரின் முன்னால் ஒரு குழ‌ந்தையாய் க‌ல‌ந்தும், கரைந்தும் விடும் த‌ன்மை க‌ம‌லிட‌ம் இருந்த‌து.

இப்ப‌டி ஒட்டு மொத்த‌ திரையுல‌கையும் க‌ல‌ங்க‌டித்த‌ கே.பால‌ச‌ந்த‌ர் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதை எப்ப‌டி இருந்த‌து ?

(தோழமை வெளியீடு )

கோச்சடையான் – விமர்சனம்

கோச்சடையான்
———————-

 

kochadaiyaan-3v

கோச்சடையான்
———-

நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் என அழகு தமிழில் அழைக்கப்படும் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் வெளியாகும் முதல் இந்தியப் படம் எனும் ஒரு மைல் கல்லுடன் இந்தத் திரைப்படம் அறிமுகமாகிறது !

அதென்ன நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் ? ஹாலிவுட்டில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பம் தான். திரைப்படம் முழுவதுமோ, அல்லது தேவைப்படும் காட்சிகளிலோ அதை இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர். ஃபேன்டஸி வகை திரைப்படங்கள், அறிவியல் புனைவுகள், கற்பனை உலகங்கள் இவற்றையெல்லாம் திரையில் கொண்டு வர ஹாலிவுட் நம்பியிருப்பது இந்த பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அல்லது மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தைத் தான். போலார் எக்ஸ்பிரஸ், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், டின் டின், பியோல்ஃப், அவதார், ஹாபிட் போன்றவையெல்லாம் நமக்குப் பரிச்சயமான உதாரணங்கள்.

அந்த நுட்பத்தை நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகிற்கு இழுத்து வந்திருப்பதற்காகவே சவுந்தர்யா குழுவினருக்கு பாராட்டுகளை வழங்கலாம். காலம் காலமாக திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன, அந்த வகையில் இப்போதைய இந்த தொழில் நுட்பமும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் யாரும் நிராகரித்து விட முடியாது எனும் இடத்தை இப்போது எட்டிப் பிடித்திருக்கிறது.

சரி, கோச்சடையான் எப்படி ?

இல்லாத ஒன்றைப் பிரமாண்டமாகக் காட்டுவதில் தான் இந்த தொழிநுட்பம் தனது கைவரிசையைக் காட்டும். ஒரு அவதார் போல பண்டோராவை உருவாக்க வேறு என்ன வழி ? அந்த சிந்தனையை மனதில் கொண்டு தான் இப்படி ஒரு வரலாற்றுக் கதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மாபெரும் கோட்டை கொத்தளங்கள், மிகப்பெரிய படைக்களங்கள், சாகசங்கள், மின்னல் வேக செயல்பாடுகள் என புகுந்து விளையாடத் தோதான ஒரு கட்சிதமான கதைக் களம்.

கதையொன்றும் புதிதில்லை. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் ஒரு மகனின் கதை தான். அதை கே.எஸ். ரவிக்குமார் தனக்கே உரிய மசாலாக்களுடன், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனது குரலினால் தாங்கியிருக்கிறார் ரஜினிகாந்த். தனது டிஜிடல் உருவத்துக்கு துடிக்கும் குரலினால் உயிர் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார். முடிந்த வரை ரஜினியின் மேனரிசங்கள், ஸ்டைல், அசையும் தலைமுடி என ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாய உலகம் என்பதை மறந்து அதனுள் நுழைந்து பயணிக்க இவையெல்லாம் ரொம்பவே உதவுகிறது.

ரஜினி, நாசர், ஷோபனா, நாசர் தவிர மற்ற கதாபாத்திரங்களின் உருவங்கள் முழுமையடையாமல் இருப்பது படத்தின் முக்கியமான குறைகளில் ஒன்றாகச் சொல்லலாம். சரத்குமார், ரஜினியின் தங்கையாக வரும் ருக்மணி இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளவே மாமாங்கம் ஆகிவிடுகிறது. நினைவில் வாழும் நாகேஷை திரையில் உலவ விட்டிருப்பதும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் அருமை ! தீபிகா படுகோன் பார்பி டால் மாதிரி அங்கும் இங்கும் அசைந்து திரிகிறார். அதிரடியாய் ஒரு சண்டையும் இடுகிறார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக, படத்தைத் தூக்கி நிறுத்தும் மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. போர்களிலும், பாடல்களிலும், கடல்பயணங்களிலும், மழையிலும், பஞ்ச் வசனங்களிலும் ரஹ்மானின் இசை நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

பளிச் பளிச்சென வருகின்ற வசனங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன. கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை- திரைகதை – வசனம் பொறுப்பை ஒப்படைத்தது இந்தப் படத்துக்கு ஒரு நல்ல தேர்வு என்பதை நிரூபித்து விடுகிறார். வேகமான முதல் பாதியும், படு வேகமான முதல் பாதியும் என அவருடைய டிரேட்மார்க் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்.

தொழில்நுட்பம் ? ம்ம்…. 100 ஆண்டு கால இந்தியத் திரைப்படத்திற்கு புது வரவு என்பதால் வரவேற்கலாம். ஆனால் பதினைந்து ரூபாய்க்கு லேட்டஸ்ட் ஹாலிவுட் திரைப்படங்கள் கிடைக்கும் இன்றைய சூழலில் சர்வதேச ஒப்பீடுகளையே சாமானிய ரசிகனும் செய்கிறான். அந்த வகையில் கோச்சடையான் இன்னும் பல ஆண்டுகள் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பது போல ஒரு உணர்வு. முப்பரிமாண தெளிவு பல இடங்களில் குறைவுபடுகிறது.

ஆனாலும் தைரியமாக எடுத்து வைக்கப்பட்ட முதல் சுவடு இது என்பதையும், பலருடைய கேலி கிண்டலையும் தாண்டி இது வசீகரிக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.

கோச்சடையான், வீச்சுடையான் !

கிளிமஞ்சாரோ : பின்னணி தெரிஞ்சுக்கலாம் வாங்க !

கிளிமஞ்சாரோ பாடலின் மூலமாகப் பிரபலமாகியிருக்கும் சிலப் பல விஷயங்களில் இந்த மச்சு பிச்சுவும் ஒன்று. இது குறித்து எனது கவிதைச்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது கவனிக்கப்படாமல் இருந்த அந்த பதிவுக்கு இப்போது ஏக மவுசு… எனவே இங்கே மீள் பதிவு செய்கிறேன்…

800px-machu_pichu_from_guard_house.jpg

பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.

உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காடு.

இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.

intihuatana_solar_clock.jpg

இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், சுமார் ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கானகத்தைப் போலவே அடர்த்தியாய் கிடக்கிறது.

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள் கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.

காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.

நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தன்னுடைய நாட்டை மீட்க நினைத்த இன்கா மக்களின் தாகமே அது.

machu_picchu_locn.png

ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.

மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.

இன்கா மக்களின் வியர்வையில் உருவான வில்காபாம்பா நகர் பாழடைந்து கானகத்தின் மௌனத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தது, ஓர் இனம் அழிந்த வரலாற்றின் கருப்புக் கண்ணீர் துளியாய்.

ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.

hiram-bingham.jpg

இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.

இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.

தொடர்ந்து ஒருவாரம் நடந்த அவர்கள் மண்டோர்பம்பா எனுமிடத்தில் தங்கினர். அங்கே சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர் ! அங்கிருந்து தங்கள் பயணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எதேச்சையாக அங்கிருந்த ஒரு நபரிடம் உரையாடினார்கள் அவர் பெயர் மெல்கோர் அர்டீகா.

அவர் சாதாரணமாய் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு விருட்டென எழுந்தார் பிங்காம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்கோனாட்டா அருவிக்கு மறுபக்கம் மலையின் மேல் சில கல் வீடுகள் உள்ளன என்பதே அந்த செய்தி.

ஹிராம் பிங்காம் அந்த மனிதரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அப்போது மழைக்காலமாக இருந்ததால் கூட வந்தவர்களில் ஒருவரைத் தவிர எவரும் அத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் பயணத்துக்கு விரும்பவில்லை.

பிங்காம் துணிந்தார். தனியே அந்த நபரையும் அழைத்துக் கொண்டு பயணமானார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே அடைந்தனர்.

மேலே சென்று பார்த்த பிங்காம் வியப்பின் உச்சிக்குச் சென்றார். இது தான், இது தான் நான் தேடிய இடம் என குதித்தார். அங்கே அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.

காலம் அந்த நகரின் மீது முளைப்பித்திருந்த மரங்களுக்கு வயதாகியிருந்தது. மரங்களும், பாசிகளும் இடிபாடுகளுக்குமிடையே சத்தமில்லாமல் கிடந்தது அந்த சரித்திரம்.

800px-machupicchu_intihuatana.jpg

இன்னோர் வியப்பு அங்கும் ஒரு சில மனிதர்கள் உலகை விட்டு தனியே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது !

பிங்காம் தனது யேல் பல்கலைக்கழகத்தை உதவிக்காக அணுகினார். பல்கலைக்கழகம் தேசிய சுற்றுச் சூழல் அமைப்புடன் கைகோத்து பிங்காமுக்கு உதவியது.

அடுத்த ஆண்டே பிங்காம் தேவையான உதவிகளுடன் இந்த இடத்திற்கு மீண்டும் வந்து அந்த நகரை அதன் தன்மை கெடாமல் சுத்தம் செய்யத் துவங்கினார். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவருடைய குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் ஆனது !

அங்கிருந்து 173 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 150 பேர் பெண்கள்!. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது மேலும் பல கற்பனைகளுக்கு வழி வகுக்கிறது.

மற்றவர்கள் இந்த கோட்டை பணியாளர்களாக இருக்கலாம், அவர்கள் பள்ளத்தாக்குகளில் எறியப்பட்டிருக்கலாம், அல்லது வேறு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்கலாம், அல்லது வெளியேறியிருக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.

இந்த கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கென பல பொருட்களை பிங்காம் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்.

அங்கிருந்து தங்கம் வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் தெரிவிக்கிறார்.

பிங்காம் மறுத்தாலும், இந்த இடத்திலிருந்து ஏராளம் பொன் வெள்ளி போன்றவை கிடைத்திருக்க வேண்டும் என்றே பலர் கருதுகின்றனர்.

யாரும் அணுகாத, ஒரு பெரும் சாம்ராஜ்யம் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புடைய இந்த இடத்தில் மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும் எனவும் அவை பிங்காம் மூலம் பெரு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பதே பலரின் நம்பிக்கை.

தற்போது யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கின்ற மச்சு பிச்சுவின் மிச்சங்களையும், கலைப் பொருட்களையும் திரும்பவும் மச்சு பிச்சுவுக்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

perfectwall.jpg

அது இருக்கட்டும். நாம் வரலாற்றுக்கு வருவோம்.

மச்சு பிச்சு தான் வில்காபாம்பா என்று நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் பிங்காம். ஆனால் உண்மையில் அது வில்காபாம்பா இல்லை! வில்காபாம்பா 1964ம் ஆண்டு ஜீன் சாவோய் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இடத்தை பிங்காம் 1909ம் ஆண்டே கண்டார். ஆனால் இது ஏதோ முக்கியமற்ற ஒரு இடம் என நினைத்து அசட்டையாய் விட்டு விட்டார் !

1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.

1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.

வில்காபாம்பாவைத் தேடிப்போன பிங்காம் மச்சு பிச்சுவைக் கண்டுபிடித்தார். மச்சு பிச்சு என்ன ? அது ஏன் கட்டப்பட்டது ? போன்ற விவரங்கள் ஏதும் இல்லாமல் ஓர் மர்மத்தின் குழந்தையாய் கிடக்கிறது நகர்.

1450 களில் இந்த மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிறைவேறும் முன்பாகவே இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர் இன்கா மக்கள்.

ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு முன்பே இந்த மச்சு பிச்சுவை விட்டு அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். வறட்சியோ, நோயோ, அமானுஷ்ய பயமோ ஏதோ ஓர் பாதிப்பு இந்த நகரைக் காலி செய்ய மக்களை நிர்ப்பந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

சில ஆய்வாளர்கள் ஒருவேளை மன்னன் மரணமடைந்ததால் அடுத்த மன்னன் அந்த இடத்தை விரும்பாமல் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

thumb600x.jpg

எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்படவேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.

இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது. புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மச்சு பிச்சு உண்மையிலேயே உறையும் உண்மைகளும், நிறையும் எழிலுமாக அதிசய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

எந்திரன் : எனது பார்வையில்

 

எந்திரன் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஒருவழியாக நிறைவேறிவிட்டது ! பொதுவாகவே படம் வருவதற்கு முன் ஏகப்பட்ட பில்டப் களைக் கொடுத்தால் படம் கால் நீட்டிப் படுத்துவிடும் என்பது ஐதீகம் ! கந்தசாமி, இராவணன் என சமீபத்திய உதாரணங்கள் எக்கச் சக்கம். ஆனால் எந்த உதாரணத்திலும் சிக்காதவர் தான் ரஜினி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது எந்திரன்.

கிராபிக்ஸ், அது இது என ஏகப்பட்ட கதைகள் உலவியபோது படம் நல்லா இருக்குமா என ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.  உண்மையிலேயே படத்தில் ஷங்கர் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களிலேயே லாஜிக் பாக்காத நமக்கு இதுல ஆங்காங்கே லாஜிக் பாக்காம இருக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லை.

ரஜினி விரும்பிக் கேட்டுக் கொண்டதாலயா என்று தெரியாது, வழக்கத்துக்கு மாறாக படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள். அழகாக இருந்த ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். ஆனால் அந்த உலக அழகையே சில இடங்களில் மிஞ்சுமளவுக்கு ரஜினியின் மேக்கப் அசத்தலாய் வசீகரிக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்பு கவித்துவமாய் சாரலடிக்கிறது.

வில்லனாய் வரும் ரஜினி மனதில் அமர்க்களமாய் வந்து அமர்ந்து கொள்கிறார். அடேங்கப்பா என வியக்கவைக்கும் அளவுக்கு ரஜினியின் வில்லத்தனமான விஷயங்கள் பிரமிப்பூட்டுகின்றன. “கருப்பு ஆடு” காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகிறது. “என்னை யாராலும் அழிக்க முடியாது” எனும் சாதாரண வாசகத்தையே பஞ்ச் டயலாக் ரேஞ்சுக்கு சொல்ல ரஜினியால் மட்டும் தான் முடியும். சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லன் நடிப்பில் பொளந்து கட்டுவேன் என இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.

இசை அமர்க்களம். பின்னணி இசையிலும் ரஹ்மானின் இசை புகுந்து விளையாடியிருக்கிறது. ஹாலிவுட் ஐகான் ஆகிவிட்டதான் இனிமேல் ஹாலிவுட் காரர்களும் இந்த படத்தைப் பார்க்கக் கூடும் எனும் அதீத சிரத்தையாய் இருக்கலாம். அல்லது ஷங்கர் ரஹ்மானை துரத்தித் துரத்தி வேலை வாங்கியிருக்கலாம். எப்படியோ இசை ரொம்பவே மிரட்டுகிறது.

பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார் மனுஷன். கிளிமஞ்சாரோ கடைசிப் பாடலாய் இருக்கும் என நினைத்தேன்… அரிமா..அரிமா அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அமர்க்களமாய்… ! இரும்பிலே ஒரு இதயம் பாடலை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, லொக்கேஷன், காஸ்ட்யூம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. முதல் பாதி செதுக்கி வைத்தது போல கன கட்சிதம். இரண்டாம் பாதி இடையில் கொஞ்சம் நீஈஈண்டு அப்புறம் மறுபடியும் பரபரப்பில் முடிந்திருக்கிறது.

வாத்தியாரின் வசனங்கள் அசத்தல். எளிமையாய், கூர்மையாய் வசீகரிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்… ரோபோ – மனித காதல் பற்றிப் பேசுகையில்… “இது இயற்கைக்கு முரணானது என்கிறார்களே….”, “இல்லை.. இது இயற்கைக்குப் புதுசு ” !  வாவ் !

இனிமேல் இத்தகைய வசனங்களைத் தர அவர் இல்லையே எனும் ஏக்கம் கனமாய் வந்து அமர்கிறது.

ஷங்கருக்கு இது ஒரு மைல் கல் ! அடுத்து தைரியமாய் ஹாலிவுட் படம் இயக்கலாம். சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் இது ஒரு சிகரக் கல் !

ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக…

எந்திரனை மிஸ் பண்ணிடாதீங்க ! டையமாச்சு எந்தி…RUN

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

எந்திரன் : இசை எனது பார்வையில்…

இனி அடுத்த சில மாதங்களுக்கு இசையை ஆக்கிரமிக்கப் போவது “எந்திரன்” என்று அடித்துச் சொல்கின்றன வசீகரிக்கும் எந்திரன் பாடல்கள்.

“This movie redefines Tamil commercial cinema. I hope it sows seeds to inspire people to take leadership in giving the world original inventions from th e east. I love being a part of it musically… and I hope the audience feels the same. Ellaa pugazhum Iraivanukkae “ எனும் இசைப்புயலின் வசீகரிக்கும் வரிகளுடன் பாடல் வரிகள் அடங்கிய பேம்லெட் அழகாக இருக்கிறது.

வழக்கம் போலவே வைரமுத்து வசீகரிக்கிறார்.

எஃகை வார்த்து,

சிலிகான் சேர்த்து,

வயரூட்டி உயிரூட்டி,

ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி,

அழியாத உடலோடு,

வடியாத உயிரோடு “

 

என ஆரம்பிக்கும் புதிய மனிதா பாடல் அழகாக இருக்கிறது.

“நான் இன்னொரு நான்முகனே

நீ என்பவன் என் மகனே

ஆண் பெற்றவன் ஆண்மகனே

ஆம் உன் பெயர் எந்திரனே”

 

எனுமிடத்தில் வைரமுத்துவின் வசீகரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

காதல் அணுக்கள் பாடலில் வழக்கம் போல அறிவியலைச் சொல்கிறேன் என்று தனது டிரேட் மார்க் பேனாவை எடுத்து “பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி, கால்களைக் கொண்டு தான் ருசியறியும், காதல் கொள்ளும் மனிதப் பூச்சி, கண்களைக் கொண்டு தான் ருசியறியும்” என புன்னகைக்க வைக்கிறார்.

அரிமா அரிமா பாடலிலும் வைரமுத்துவின் பல வரிகள் மயக்குகின்றன. குறிப்பாக

“ராசாத்தி உலோகத்தில் ஆசைத்தீ மூளுதடி

நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்

அக்கினி அணையலையே”

 

“சிற்றின்ப நரம்பு,

சேமித்த இரும்பில்,

சட்டென்று மோகம் பொங்கிற்றே”

“சின்னம் சிறுசின்

இதயம் தின்னும்,

சிலிகான் சிங்கம் நான்”

 

“மேகத்தை உடுத்தும்

மின்னல் தான் நானென்று

ஐஸுக்கே ஐஸை வைக்காதே”

என்று பல வரிகள் வைரமுத்துவின் டிரேட் மார்க் வாசனையில் வசீகரிக்கின்றன.

எந்திரனின் இனிய ஆச்சரியம் பா விஜய் எழுதியிருக்கும் கிளிமாஞ்சாரோ பாடல். இசைப்புயலின் அதிரடி இசையில் விஜயின் வரிகள் அம்சமாய்ப் பொருந்துகின்றன. “ ஏவாளுக்குத் தங்கச்சியே என் கூடத் தான் இருக்கா, ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா ?” எப்போதாவது தான் பா விஜயின் பாடல்கள் எனது ரசனையின் விருப்பப் பட்டியலில் விழும். நீண்ட நாட்களுக்குப் பின் அந்த இடத்தில் வந்திருக்கிறது இந்தப் பாடல்.

எந்திரனின் ஒரே ஏமாற்றம் கார்க்கி ! பெரிதும் எதிர்பார்த்து பொசுக்கென்று போய்விட்ட தீபாவளிப் பட்டாசு போல வரிகள் ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தின் பக்கத்தில் ! வைரமுத்துவின் அடுத்த இடத்தை கம்பீரமாய் எட்டிப் பிடிக்க நா.முத்துக்குமார் போன்ற வலுவான போட்டியாளர்கள் வரிசையாய் இருக்கையில், கார்க்கி தனக்குக் கிடைத்த அசத்தல் வாய்ப்பை அசால்ட்டாய் விட்டிருக்கிறார் ! இரும்பிலே ஒரு இதயம் பாடல் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ரசனை வரிகளைக் கொண்டிருக்கிறது !

சன் டிவி விமர்சனம் போல சொல்ல வேண்டுமென்றால்

எந்திரன், இசையில் மயக்கும் மந்திரன்.

வாக்களிக்க…. கிளிக்கவும்…

எந்திரன் 2D ! No 3D !! லேட்டஸ்ட் தகவல்கள்.

ரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது எந்திரன் பட ஷூட்டிங் ! இனி அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது.

ஏஸ்.பி.பி யோட துவக்க பாடல், ஏ.ஆர் ரஹ்மானின் அசத்தல் பாடல் என ஆடியோ குறித்தும் ஏகப்பட்ட பில்டப்கள் எகிறிக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் கடைசி நாளை ஏதோ காலேஜ் பிரிவு விழா போல நடத்தியதில் “பட்ஜெட்” தெரிகிறது.

முதலில் 3டி யாக வரலாம் என கருதப்பட்ட எந்திரன் 2டி யில் தான் வருகிறது. இப்போதைக்கு 3டி சாத்தியமில்லையாம் ! 

உலகெங்கும் வெளியாகப் போகும் இந்தப் படம் ஆங்கில சப் டைட்டிலோடு வெளிநாடுகளில் வெளியாகுமாம் !

இப்போதைக்கு இமெயிலின் ஹாட் கேக் இந்தப் படங்கள் தான்.

தமிழிஷில் வாக்களிக்க

 

3D யில் எந்திரன் : ஸ்பெஷல் தகவல்கள் !

3D அவதாரின் விஸ்வரூப அவதாரத்தைப் பார்த்து டைரக்டர் ஷங்கர் தனது எந்திரன் படத்தையும் 3D வடிவில் வெளியிட தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார். சில சாம்பிள் காட்சிகளை 3D வடிவமைத்துப் பார்த்ததில் டீமே மிரண்டு போய்விட்டதாம். ஏற்கனவே படத்தை 2Dயில் எடுத்திருந்தாலும் அதையே 3D வடிவில் மாற்றியமைக்கும் வகையில் இப்போதைய டெக்னாலஜி முன்னேற்றம் உள்ளதாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் 3D படத்தை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார் ஷங்கர். எனினும் கடைசி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை . படம் எந்திரன் 3D ஆக வரவும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன !

திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளெல்லாம் எடுத்து முடிக்கப்பட்டிருப்பதால் யூனிட் உற்சாகமாய் இருக்கிறது. எந்திரனின் மொத்தம் ஆறு பாடல்கள். அப்பா வைரமுத்து மூன்று பாடல்களில் முத்தெடுக்க, மகன் கார்க்கி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பாடல் எழுதியதுடன் நிற்காமல் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் கார்க்கி தான் ஷங்கருக்குச் சொல்லி வருகிறார். கூடவே கதை வசனம் எழுதுவதிலும் அவருடைய பங்களிப்பு கணிசமாய் இருக்கிறது. இன்னொரு பாடல் பாவியிடம் சென்று விட்டது. அதாங்க ஞாபகங்கள்ல நடிச்சாரே அந்த பா.விஜய் தான் J அப்போ ஆறாவது பாட்டு எழுதறது யாரு நாமுவா ?

கொச்சின் ஹனீபாவின் மறைவு ஷங்கரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எந்திரனில் அவர் நடித்திருந்த நகைச்சுவைக் காட்சியை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்ணீருடன் சிரித்தாராம். இந்தக் காட்சிகள் அவருக்கு அஞ்சலியாய் அமையும் என்கிறார் அவர். அதே போல மலையாளக் கரை கலாபவன் மணிக்கு இதில் வித்தியாசமான கிராமத்தான் வேடமாம் ! உலகம் முழுதும் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். அதனால் படம் கொஞ்சம் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஷங்கர் வட்டாரம் !

இந்தப் படத்துக்காக பிரபுதேவா ஸ்பெஷலாக ஒரு பாடல்காட்சியை அமைத்திருக்கிறாராம். அது பிரம்மாண்டமாக வந்திருப்பதாக பட்சிகள் படபடக்கின்றன. அதன் பின் பிரபு தேவா 9தாராவுடன் டேரா போட்டு விட்டதால் அவருடைய தம்பி ராஜு சுந்தரம் இரண்டு பாடல்களுக்கு நடனக் காட்சிகள் அமைத்திருக்கிறாராம்.  

எந்திரனுக்குப் பின் ஷங்கர் சித்தார்த்துடன் சிலிர்ப்பூட்டும் காதல் கதை ஒன்றை படமாக்க இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லையாம். ஒரு பக்கா ஸ்கிரிப்ட் இருக்கிறது, அதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ஷங்கரின் விருப்பம். அதுக்கு எக்கச் சக்க மேக்கப் போடவேண்டியிருக்குமே என ஷங்கர் சொல்ல, “அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என் ஒரிஜினல் முகமே எனக்கு மறந்து போயிடும்போல இருக்கு. கொஞ்சம் கேப் விட்டு பண்ணிக்கலாம்” என்றாராம் கமல்.

எந்திரனில் இதுவரைக்கும் எந்தக் காட்சியிலும் நடிக்கவில்லையாம் ஷங்கர். எப்படியாவது ஒரு காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டுமென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பேசாம ஒரு ரோபோவா வர வேண்டியது தானே.

வாக்களிக்க விரும்பினால்…

எந்திரன் சீசன் துவங்கிடுச்சு !!

(கிளிக் பண்ணினா படம் பெருசா தெரியும்னு நான் சொல்ல வேண்டியதில்லை…)

இன்னா ஷங்கர், இரண்டு பக்கமும் பன்றிக் காய்ச்சல் வந்தவனை நிக்க வெச்சுட்டு என்னை நடிக்க சொல்றீங்க ? 

ஐஸ் : ஷங்கர், இது பப்ளிக் பிளேஸ்….

நான் எந்த பொண்ணு பின்னாடியும் போக மாட்டேன், பட், என் முன்னாடி எந்தப் பொண்ணு போனாலும் தடுக்கவும் மாட்டேன். 

வாசிக்கிறது வாத்தியம், எல்லாமே எந்திரனால சாத்தியம்…  இதான்பா பஞ்சு..

ஷங்கர், இந்த ஏரியா முழுக்க கலர் கலரா சாரி கட்டி வுட்டுட்டு நான் வேணும்னா தூம் ஸ்டைல்ல வரட்டுமா ?

ஐஸ் : என்னால சிரிக்காம இருக்க முடியல

ரஜினி : என்னால இருக்காம சிரிக்க முடியல ..வயசாகுதுல்ல.. ஹா..ஹா..ஹா…

ஹைடெக் ஆளு எந்திரனா
மனசை மயக்கும் மந்திரனா
ஐஸுப் பக்கம் ஐஸை வைத்து
நைஸாப் பேசும் தந்திரனா ? சுந்தரனா…..

(ஹி..ஹி… ஓப்பனிங் சாங் )

டைரியில் எழுதாதவை : கமல், கந்தசாமி & அறிவுஜீவிகள் !

 Mohan_Kamal 

அறிவு ஜீவிகள் துவைத்துக் காயப்போட்ட உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கடந்த வாரம் தான் கிடைத்தது. நல்ல வேளை ! படத்தில் ஊடாடும் பார்ப்பனீயத் தன்மைகளையும், தார்மீகக் கோபங்களுக்குள் புதைக்கப்பட்ட வரலாற்று வன்மங்களையும் பிரித்தறியும் வல்லமை எனக்கு இல்லை. எனவே படத்தை ரொம்பவே ரசித்தேன் !! என்ன பண்ண, நானும் ஒரு காமன் (அட ! அந்த காமன் இல்லை) மேன் தானே !

 

சில சினிமாப்பாடல்களைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. ஒருவரி எழுதி விட்டு ஒரு கட்டிங் போட்டு வந்து அடுத்த வரி எழுதுவார்களோ என யோசிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு முரண் படுகிறார்கள் கவிஞர்கள். கவிதைக்கு முரண் அழகுங்கறதை தப்பா புரிஞ்சுகிட்டாங்களான்னே தெரியலை

முன்னாடியெல்லாம் ஒரு படத்தில எழுதும் பாடலுக்கும், இன்னொரு படத்தில் எழுதும் பாடலுக்கும் இடையே தான் முரண்படுவார்கள் கவிஞர்கள். அப்புறம் ஒரு படத்துல இருக்கும் இரண்டு பாடல்களுக்கிடையே முரண்படுவார்கள். சினிமா பாடலில் கூட ஏதாச்சும் கவிதை தேடும் மோசமான புத்தியுள்ள கூட்டத்தில் நானும் ஒருத்தன். “ஆட்டுப் பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு .. “ என்று கிழக்குச் சீமையில் எழுதிவிட்டு “அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் அன்பு வளக்கும் ஆட்டுப்பாலுங்க” என்று அண்ணாமலையில் எழுதிய கவிப்பேரரசு தான் இன்றும் என் பேவரிட் பாடலாசிரியர் 🙂

லேட்டஸ்ட் படங்களையே லேட்டா கேக்கற நிலமையில் இப்போ நான். ஓடிப் போய் கேசட் ரிலீசாகற முதல் நாளே பாட்டு கேக்கற வயசெல்லாம் ஓடிப்போச்சு. வளரும் கவிஞர் விவேகா கந்தசாமில லிரிக்ஸ்ல கலக்கியிருக்காருல்ல என்று என் நண்பன் சொன்னான் சில மாசத்துக்கு முன்னாடி. அப்படியா என்று ஒரு சந்தோஷ உற்சாகத்தில் பாட்டு கேட்டேன்…

ஒரு வரி, “கடவுள் இல்லேன்னு சொன்னார் ராமசாமி, காதல் இல்லேன்னு சொல்றான் இந்த கந்த சாமி” அடடே ! என பார்த்திபன் கவிதை போல வியந்தால் அடுத்த வரியில் ஐயா சொல்கிறார் “ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே… காதலொன்னும் யூதனில்லை கொல்லாதே..” அய்யோ போடா !

 

“கமல் 50  நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சைக் கேட்டு அசந்து விட்டேன். ரஜினியைப் பற்றி நான் கொண்டிருந்த பிம்பத்தையெல்லாம் உடைத்தெறிந்தேன். தீவிர கமல் ரசிகரான நான் நேற்று முதல் முறையாக நெகிழ்ந்தேன். ரஜினி உண்மையிலேயே கிரேட் தான்.” என்றார் பத்திரிகைத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர். அடடா கேட்காமல் போயிட்டோமேன்னு கொஞ்சம் பீல் பண்ணினேன். வேறென்ன பண்ண முடியும் ?

 

ஒரு முறை அமெரிக்காவில் ஓய்வாக ஒரு பிரபல நடிகருடன் அமர்ந்து “வைன்” பேச்சில் லயித்திருந்தேன். ஆள் தான் வில்லன்னு இல்லை, அவரோட நக்கல் எல்லாமே வில்லத்தனமாய் தான் இருந்தது.

“என்னய்யா விஜய்.. இளைய தளபதியாம் ? எந்த போருக்கு போனான்.. ஹா…ஹா..ஹா” என்று ஆரம்பித்து எல்லா இளம் நடிகர்களையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்தார் ஐயா. கடைசியில் கமலைப் பற்றியே பேச ஆரம்பித்தார்.

என்னய்யா உலக நாயகன் ? உலகத்துல எல்லாருக்கும் அவனை தெரியுமா ? அப்படின்னா உகாண்டாவுக்கும் அவன் தான் நாயகனா என சகட்டு மேனிக்கு பேசிக் கொண்டிருந்த அவர் கமலுடன் சரிக்கு சமமாக ஒரு படத்தில் நடித்தவர்.

ரொம்ப மப்பு தலைக்கு ஏற, “கமலுக்கு நடிக்கவே தெரியாது. ஏதோ மலச்சிக்கல் வந்தவன் மாதிரி முகத்தை வெச்சிருப்பான்” என கடைசியில் போட்டாரே ஒரு போடு. கையிலிருந்த பானத்தை ஒரே மூச்சில் லபக்கி விட்டு எஸ்கேப் ஆனேன்.

குசேலன் – உண்மையிலேயே நல்ல படம்

குசேலன் திரைப்படத்தை இத்தனை தாமதமாய் பார்த்ததற்குக் காரணம் நான் இணையத்தில் வாசித்த எதிர் விமர்சனங்கள் தான் காரணம். குசேலன் மகா குப்பை என்றும், இதை விட பத்து பத்து படத்தை பத்து வாட்டி பார்க்கலாம் என்றும் விமர்-ஜனங்கள் சொன்ன பின் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஓரமாய் ஒதுங்கிவிட்டேன்.

இந்த வார இறுதியில் தான் “பார்த்தேன் குசேலனை

சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படத்தையும் பார்த்து அழுத ஞாபகம் இல்லை. கடைசியாக மனதை உலுக்கிய படம் சேரனின் “தவமாய் தவமிருந்து” என நினைக்கிறேன். அதற்குப் பிறகு அந்த அளவுக்கு மனதை உலுக்கி எடுத்த படம் குசேலன்.

பசுபதி எனும் அற்புதமான நடிகனும், ரஜினி எனும் சூப்பர்ஸ்டாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்வையாளர்களை உறைய வைத்த அந்த கடைசி பதினைந்து நிமிடங்களுக்காகவே குசேலன் படம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் பெரும்பாலான காட்சிகள் பசுபதியையும், அவருடைய நடிப்பையும் (வெயிலுக்கு அடுத்தபடியாக) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. யதார்த்தங்களை தனது அசைவுகளில் வெளிப்படுத்தும் பசுபதியை அவனுக்குள் உரம் போட்டுக் கிடந்த நடிப்பின் இன்னோர் பரிமாணத்தை குசேலன் வெளிக்கொணர்ந்தது எனலாம்.

குசேலனின் பலவீனங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டாலும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒன்றே ஒன்று தான். தமிழ்ப்படமெனில் குறைந்தது இரண்டரை மணி நேரம் ஓடியே ஆகவேண்டும் என நினைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் கூட்டு முட்டாள் தனம்.

அப்படி இரண்டரை மணி நேரம் இட்டு நிரப்புவதற்கு சரக்கில்லையெனில் என்ன செய்வது ? அருவருக்கத் தக்க அரைகுறை நகைச்சுவையையும், கவர்ச்சியையும் இட்டு நிரப்புவது. எது சிறந்தது ? அரை மணி நேரம் முன்னதாகவே படத்தை முடிப்பதா ? அல்லது அரை மணி நேரம் திரையில் ஏதேனும் கோணங்கித் தனத்தைக் காட்டி ரசிகனை வெறுப்பேற்றுவதா என்பதை மேற்கூறிய அந்த பெருந்தலைகள் நிர்ணயிக்கட்டும். அப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என அந்தப் பழியை தயவு செய்து ரசிகர்களின் தலையில் போடாதிருக்கக் கடவது.

காலேஜ் டே அன்று பிரின்சிபல் சேர்மேனைக் கூப்பிட்டுச் சொல்வார் “பாருங்கப்பா… இன்னிக்கு ஸ்டேஜ் உங்களுது. காலைல இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் நீங்க அதுல ஆட்டம் போடலாம்… ஏழு மணிக்கு மீட்டிங் இருக்கு அப்போ ஒதுங்கிடுங்க.”

மாணவர்களும் ஆட்டம் போடுவார்கள். எல்லா கோணங்கித் தனத்தையும், சில்மிஷங்களையும் மேடையில் போட்டு துவைப்பார்கள். முடிந்த அளவுக்கு டேபிள் செயரை உடைத்துப் போடுவார்கள். ஏழுமணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும், அமைதியாய் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அழுத்தமாய் நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

இது தான் பெரும்பாலான வெற்றி பெற்ற மலையாள சினிமாவின் பார்முலா. முதல் எழுபத்தைந்து சதவீதம் ஆட்டம், பாட்டம், நகைச்சுவை. கடைசி கால்வாசி அழுத்தமான கதை. பெரும்பாலும் ஆனந்தமாய் ஆடிப்பாடும் கதாநாயகனின் மனசுக்குள் இருக்கும் இன்னோர் சோகக் கதை! மோகன்லாலின் வெற்றிபெற்ற பத்து படங்களைப் பட்டியலிடுங்கள் அதில் எட்டு இப்படித் தான் இருக்கும்.

அந்த பார்முலா அங்கே வெற்றி பெறக் காரணம், முதல் முக்கால் வாசியில் இருக்கும் எதார்த்தமான நகைச்சுவை மட்டுமே.

குசேலனில் இல்லாமல் போனதும் அது மட்டுமே. அவசர அவசரமாய் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் இட்டு நிரப்பப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் பயங்கர சலிப்பு.

எனினும், விமர்சனங்கள் சொன்னது போல குசேலன் மட்டமான படம் அல்ல. விமர்சனங்கள் பெரும்பாலும் ரஜினி எனும் தனிமனிதன் மீதான வெறுப்பாகவே வெளிப்பட்டிருக்கின்றனவோ எனும் ஐயம் எழுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அருகில் இருந்து படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே இறுக்கமாய் அமர்ந்திருந்ததையும், அவ்வப்போது கண்களைக் கசக்கியதையும் பார்க்க முடிந்தது.

தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் சமீபகாலமாக வந்த படங்களில் தரமான படங்களின் வரிசையில் வைக்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஒரு படம் குசேலன்.