ஸ்கை டைவிங்.
“ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று மிதப்பவர்களின் சாகச விளையாட்டு ஸ்கை டைவிங். ஸ்கைல போயிட்டு டைவ் பண்றது தான் ஸ்கை டைவிங். மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாலே தலை சுற்றும் ஆசாமிகள் இதைப் படிக்காமல் இருப்பது நல்லது.
விளையாட்டு இது தான். இதற்காகவே உள்ள ஸ்பெஷல் விமானத்தில் ஏறி குறிப்பிட்ட உயரம் செல்ல வேண்டும். அங்கிருந்து பொத் தென கீழே குதிக்க வேண்டும். அதிக திரில் டைவிங் வானத்தில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் நடக்கும். அங்கிருந்து பார்த்தால் தரையே தெரியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குதிக்க வேண்டும். குதித்த உடனே பாராசூட் விரியாது. கொஞ்ச நேரம் எந்த பிடிமானமும் இல்லாமல் சர்ர்ர் என பூமியை நோக்கி பாய வேண்டும். அதுவும் 200 கிலோ மீட்டர் வேகத்தில். அந்த பாய்ச்சல் தான் திரிலில் உச்சகட்டம். அப்புறம் சுமார் 2500 அடி உயரத்தில் வரும் போது பாராசூட்டை இயக்க வேண்டும். அதுவும் விழுந்து கொண்டிருக்கும் நபர் தான் இயக்க வேண்டும். அப்படி இயக்கும் போது பாராசூட் விரியாமல் போனால் கீழே வரும் வேகத்தில் அப்படியே மேலே போக வேண்டியது தான். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 பேராவது இப்படி ஸ்ட்ரெயிட்டாக ஹெவன் அல்லது ஹெல் போய்ச் சேர்கிறார்கள்.
இப்படி விமானத்திலிருந்து விழும்போது கொஞ்சம் வேகம் கம்மியாய் பறவை போல அதிக நேரம் பறந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார்கள். அந்த நினைப்பு தான் “விங் சூட்” (சிறகு உடை) கண்டு பிடிக்கக் காரணமாயிற்று. இது ஒரு ஸ்பெஷல் டிரெஸ். இந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு எந்த உயரத்திலிருந்தும் குதிக்கலாம். கையையும் காலையும் விரித்தால் குதிப்பவர் ஒரு பறவை போல தோன்றுவார். கோழிக்குஞ்சை குறிவைக்கும் ஒரு பருந்து போல ! இதனால் விழும் வேகம் 200 கிலோமீட்டரிலிருந்து சட்டென 25 கிலோமீட்டர் எனுமளவில் குறையும். இந்த வேகத்தில் ரொம்ப நேரம் வானத்தில் மிதக்கலாம். கூடவே கொஞ்சம் ரிலாக்ஸாக பாராசூட்டை இயக்கவும் செய்யலாம்.
இந்த இறகு ஆடையைத் தயாரிக்க பலர் முயன்றார்கள். 1930, 1961, 1972 மற்றும் 1975 களில் இந்த முயற்சி செய்து குதித்தவர்களெல்லாம் குதித்த இடத்திலேயே சமாதியாகிவிட்டார்கள். அதனால் இந்த விங் சூட் முயற்சியே ஒரு திகில் முயற்சியாக ஒதுக்கப்பட்டது. கடைசியில் 1990 களில் பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஸ்கைடைவர் பாட்ரிக் டி கேயார்டன் வெற்றிகரமாக ஒரு சூட் உருவாக்கி பறந்தும் காட்டினார். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அதில் மாற்றம் செய்கிறேன் பேர்வழி என 1998ல் புதிய அட்வான்ஸ்ட் ஆடை தயாரித்தார். அந்த ஆடையுடன் ஹவாயில் பறந்தபோது பாராசூட் விரியாமல் பரலோகம் போனார். ஆனாலும் அவர் தயாராக்கிய விங் சூட் ரொம்ப பாப்புலராகி விட்டது. இப்போது பல விதங்களில், பல வடிவங்களில் இந்த ஸ்கை டைவிங் ஆடைகள் கிடைக்கின்றன. விங் சூட் போட்டுக்கொண்டு ஸ்கை டைவிங் செய்வது அதி அற்புத அனுபவம் என குதித்தவர்கள் பரவசத்தில் குதிக்கிறார்கள்.
என்ன ஒருதடவை குதிக்கறீங்களா ?
ஃ
Thanks : Ananda Vikatan
You must be logged in to post a comment.