
ஒவ்வொரு வருஷத்தின் கடைசி நாளும் உட்கார்ந்து அப்படி என்னதான் இந்த வருஷம் கிழிச்சோம் ன்னு யோசிச்சுப் பாக்கிறதுல ஒரு அலாதி சுகம் உண்டு. அடடா… இவ்ளோ விஷயம் நடந்து போச்சா என்றோ, அட.. உப்பு சப்பில்லாம போயிருக்கே என்றோ நினைத்துக் கொண்டு அடுத்த ஆண்டுக்குள் நுழைவதில் ஒரு ஆனந்தம்.
அப்படி யோசித்துப் பார்த்ததில், இந்த ஆண்டு நன்றாகவே ஓடியிருப்பது புரிகிறது. வாசிப்பில் எப்போதுமே நான் ரொம்ப சோம்பேறி தான். ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஆண்டு ஏகப்பட்ட நூல்களை வாசித்திருக்கிறேன். ஒரு நண்பனின் அலமாரியிலிருந்து ஒட்டு மொத்தமாக அள்ளி வந்த கவிதை நூல்கள் மட்டுமே நூறு இருக்கலாம்.
கவிதை நூல்கள் ஒருவனை கவிஞனாக அடையாளப்படுத்தற்கு மட்டுமானதல்ல. ஒருவன் கவிஞன் இல்லை என்பதை உரக்கச் சொல்லவும் கவிதை நூல்கள் பயன்படுகின்றன என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது !
சூஃபி, தாவோ குறித்த நூல்களின் மீது இந்த ஆண்டு திடீரென ஒரு ஈடுபாடு உருவானது இனிய ஆச்சரியம். சுவாரஸ்யமான பல நூல்களை வாசித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் நான்கைந்து நூல்கள். மனதில் சட்டென நினைவுக்கு வருவது மால்கம் எழுதிய பிளிங்க்.
சினிமாக்களைப் பொறுத்தவரை தமிழில் வெகு சில படங்கள் தான் பார்த்திருக்கிறேன். மனசை பிரமிக்க வைத்த படம் என்று எதையும் சொல்லத் தெரியவில்லை. சூப்பர் என்று எல்லோரும் கொண்டாடிய நந்தலாலா போன்ற படங்களை நான் பார்க்கவில்லை என்பதும் அதன் ஒரு காரணம். சுப்ரமணியபுரம் தந்த எரிச்சலுக்குப் பின் ஈசன் போன்ற படங்களைப் பார்க்கவே தோன்றவில்லை என்பது உயர் ரசனைக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். நான் எதுவும் சொல்வதற்கில்லை. சுமாரான படங்களின் பட்டியலில் மதராசப் பட்டினம் சேருமா ?
ஆங்கிலப் படங்களே வழக்கம் போல பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. மனசை நிரப்பியவை டாய் ஸ்டோரி, டிங்கர் பெல், டெஸ்பெகபிள் மி போன்ற அனிமேஷன் படங்கள் தான். ஆங்கிலத்தில் நல்லாயிருக்கும் என நினைத்து ஏமாந்த படங்கள் எக்கச்சக்கம். தமிழும், ஹாலிவுட்டும் இதில் மட்டும் நல்லா போட்டி போடறாங்க.
எழுத்து வாழ்க்கையைப் பொறுத்தவரை ரொம்பத் திருப்தி. பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதும் இடங்களில் இந்த ஆண்டு நிறுத்தாமல் பயணித்திருக்கிறேன். 2011க்கான மனோரமா இயர்புக்கில் தொழில்நுட்பம் சார்ந்த நான்கைந்து கட்டுரைகள் எழுதியது புதுசு !
பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷனின் அறிமுகம் இந்த ஆண்டு நடந்த நல்ல விஷயங்களில் முக்கியமான ஒன்று. நண்பர் யாணன் அவர்கள் அவருடைய நண்பர் ஒருவருடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனம். தமிழ்ப் பதிப்பகத் துறையில் எனக்குத் தெரிந்து முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனி இதுவாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன். மெதுவாக அதே நேரம் ஆழமாக வளரும் இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாய் சில நூல்களை எழுதியிருக்கிறேன்.
டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க, வாங்க ஜெயிக்கலாம், ஷாரூக்கான் – மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி, ராஜபக்சே – சூட்சியும், தந்திரமும், ராகுல்காந்தி – மாற்றங்களின் நாயகன், மற்றும் பெற்றோருக்கான சூப்பர் டிப்ஸ் என ஆறு நூல்கள் கடந்த ஆறுமாதத்தில் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நூல்கள் விற்பனையில் வெற்றி பெற்று இரண்டாவது பதிப்புக்குத் தாவியது மனதுக்கு மகிழ்ச்சியான சமாச்சாரம்.
கடந்த ஆண்டில் பிளாக் வாழ்க்கை கொஞ்சம் ஸ்லோ தான். பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் ரொம்பக் கொஞ்சமாய் தான் எழுதியிருக்கிறேன். ஆனாலும் தொடர்ச்சியான வாசகர்களின் அன்பு நீடிப்பது நிம்மதியளிக்கிறது.
இலக்கிய வாழ்க்கையைத் தாண்டிய வாழ்க்கையும் ஆனந்தமாகவே சென்றிருக்கிறது. அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, பயண வாழ்க்கை, நட்பு வாழ்க்கை என 2010 ஆனந்த மூட்டையைத் தான் விட்டுச் சென்றிருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே !
எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் 2011ல் காலடி எடுத்து வைக்கிறேன். உங்கள் அன்பும், நட்பும் இறை கரமும் என்னோடு வரும் நம்பிக்கையில்.. .. ..
ஒரு
ஆனந்தத் துளியாய்
எழும்
புத்தாண்டு நெருப்பு
ஆண்டை முழுமையாய்
ஆக்கிரமித்து நிரப்பட்டும்
ஆனந்தத்தின்
ஆட்சிகளும்,
நல்லவற்றின்
நீட்சிகளும்,
மகிழ்வின்
மாட்சிகளுமாய்
விரல்நீட்டும் புத்தாண்டில்
திசையெட்டும் அதிரட்டும்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
2009 : படித்தவை, பார்த்தவை, கிழித்தவை
பிடித்திருந்தால் வாக்களியுங்கள்
Like this:
Like Loading...