அருஷா, தான்சானியா ( Arusha, Tanzania )
ஆப்பிரிக்காவில் சஃபாரி ரொம்ப பேமஸ். காட்டுக்குள் மிருகங்களைப் பார்த்தபடி ஹாயாகப் பயணிப்பது. அசந்தால் யானை வந்து நம்மை பஞ்சுமிட்டாயாய் பறக்க விடும்! இந்த சஃபாரிக்கு மிகவும் பிரபலமானது அருஷா. வடக்கு தான்சானியாவிலுள்ள ரிப்ட் பள்ளத்தாக்கு பக்கத்தில் அமைந்துள்ளது இது. மேரு மலையின் கீழே அமைந்துள்ள இந்த சபாரி ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான திகில் அனுபவம்.
வான்கூவர், கனடா ( Vancouver, British Columbia – Canada )
கனடாவின் வான்கூவர் கண்ணைக் கவரும் ஒரு சிறப்பான சுற்றுலாத் தலம். உலகெங்கும் உள்ள சாகச விரும்பிகளும், அமைதி விரும்பிகளும் இங்கே வருவார்கள். இது ஒரு முரண்பட்ட இடம். நதிகள், கடல், காடு , மலை என கலவையாய் இருக்கிறது வான்கூவர். ஸ்கீயிங் போகணுமா, மலையில் பைக் ஓட்டணுமா, சீறிப் பாயும் நதிகளில் படகு ஓட்டணுமா எல்லாம் இங்கே சாத்தியம். அதெல்லாம் வேண்டாம் சைலண்டாக குடும்பத்தோடு அமர்ந்து சீட்டாடணும்ன்னாலும் ஓகே. ஆனாலும் சாகசப் பயணிகள் தான் இந்த இடத்தை பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் திரில்லுடன் கிடைக்கும் இயற்கை அழகு.
குயீன்ஸ்டவுன், நியூசிலாந்து ( Queenstown, New Zealand )
நியூசிலாந்தின் குயீன்ஸ்லேண்ட். பங்கீ ஜம்பிங்கின் பிறப்பிடமே இந்த இடம் தான். அதனால் இங்கே இருக்கின்ற விளையாட்டுகளும் வீர விளையாட்டுகளாகவே இருக்கின்றன. குறிப்பாக மலையில் பைக் ஓட்டுவது, காட்டுக்குள் நூற்றுக் கணக்கான மைல்கள் தூரம் கால்நடையாய் போவது, என பல சாகச விளையாட்டுகள் இங்கே சாத்தியம். சம்மரில் இப்படி வேர்க்க விறுவிறுக்க காட்டுக்குள் நடப்பார்கள். விண்டர் வந்து விட்டால் காடு இருந்த இடமே தெரியாது. முழுவதும் பனி மூடிவிடும். அப்புறம் ? இருக்கவே இருக்கிறது பரபரக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் !
பெரு நாட்டு டிரெக்கிங் ( Peru )
பெருவில் டிரக்கிங் போறீங்களா ? உலகப் புகழ்பெற்ற மச்சு பிச்சுவின் வரலாற்றுச் சுவடுகளோடு கலப்பது சிலிர்ப்பானது. ஆனால் அதை அடைய செல்ல வேண்டிய 45 கிலோமீட்டர் தூர நடை பயணம் டூ ஆர் டை டைப். மலை, நதி, பள்ளம் என உயிரை சேட்டு கடையில் அடமானம் வைத்துவிட்டுத் தான் போக வேண்டும். திரில் பிரியர்களுக்கு இவை சுர்ரென சுவாரஸ்யத்தைப் பற்ற வைக்கின்றன. சில பாதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. உங்களுக்கு ஆயுள் கெட்டியென்றால் நீங்கள் தாண்டும் வரை தாக்குப் பிடிக்கும்.
காட்மண்ட் , நேபாள் ( Kathmandu, Nepal )
காட்மண்ட். உலகின் சாகசப் பிரியர்களின் பட்டியலில் முக்கியமான இடம் இதற்கு உண்டு. இடங்களில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நேபாளில் துவங்கி, நேபாளில் முடியும் நிறைய டிரக்கிங் வழிகள் இங்கே உண்டு. இமயமலையின் உயர்ந்த 8 சிகரங்கள் தான் ஹைலைட். இந்த சிகரங்களின் உயரம் சுமார் 8000 மீட்டர். மலையேறுபவர்களுக்கு உள்ளுக்குள் குறுகுறுக்கும் அனுபவம். மிரண்டவர்களுக்கு திகில் குருதி நரம்புகளில் நாட்டியமாடும். மலையேற்ற அனுபவத்துடன் நேபாளில் கிடைப்பது பரந்து பட்ட கலாச்சார, வரலாற்று அனுபவங்கள். !
Thanks : Ananda Vikatan
You must be logged in to post a comment.