
அழைக்கும் ஐடி துறை
1
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.
“நல்லா இருக்கியாடே… ?”
“இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?”
வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.
அத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.
ஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.
உண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.
அதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.
உலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.
இன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன ? காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.
ஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.
கேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா ? கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.
எந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.
ஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.
மென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)
மென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது ? எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.
மென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.
ஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.
இந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
ஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில சான்றிதழ் பெறுவதும் நல்லதே.
‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ?” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.
சுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.
( பேசுவோம் )

2
அழைக்கும் ஐடி துறை
கடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.
டெஸ்டர் ( Software Tester )
மென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.
மென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்தார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.
டெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.
அ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.
ஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா ? செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.
இ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.
குவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.
டெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.
டெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது ? என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.
அ. மேனுவல் டெஸ்டர்ஸ்.
ஆ. ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ்.
மேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
டெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.
டெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன ? அது என்னவெல்லாம் செய்யும் ? எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.
க்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.
இந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.
டெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.
ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.
டொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )
‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.
காப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.
மென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.
வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.
ஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.
ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.
உதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.
எனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் !

அழைக்கும் ஐடி துறை
3.
டேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)
எந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.
இந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.
இந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.
ஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )
கணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.
அந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.
எந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.
மற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.
ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )
கணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.
கணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.
நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.
ஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.
நெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)
கணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.
கணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.
கணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.
இந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.
டெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )
தொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.
தகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.
அட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.
ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.
பட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் கூடிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.

4
கேம்ஸ் ரைட்டர் ( Games Writer )
எந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.
கணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.
நல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.
இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.
பிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.
அனிமேஷன் துறை ( Animation Technology)
இன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.
திரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.
பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.
சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.
அனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.
அட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)
இவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.
திடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.
அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.
அலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.
இந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.
மனிதவளப் பணிகள் ( Human Resources )
ஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.
நிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.
பணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.
சில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.
நல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.
விற்பனை/விற்பனை உதவி ( Sales and Sales Support)
சேல்ஸ் & சேல்ஸ் சப்போர்ட் எனப்படும் பணி ஐடி நிறுவனங்களின் முதுகெலும்பான ஒரு பணி. இதற்கு அனுபவம் உடையவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இதில் நுழைவார்கள், ஆனாலும் எந்த பட்டம் என்பது இங்கே முக்கியம் இல்லை.
இந்த வேலை மூன்றுகட்டமாக நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட் பணியாற்றுவார்கள். நிறுவனத்துக்கு புதிதாக வேலை வாங்குவது தான் இவர்களுடைய பணி. ஒரு பிரிவினர் எப்படியெல்லாம் ஒரு கஸ்டமரை கவரலாம் என்பதைக் குறித்த திட்டமிடுதலைச் செய்வார்கள். இவர்கள் ‘பிரீ சேல்ஸ்” குழுவினர் என அழைக்கப்படுவார்கள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான தகவல் சேகரிப்புகள், நமது பலம் என்ன, நிறுவனத்தின் தனித்துவம் என்ன என்பதையெல்லாம் அழகான பிரசன்டேஷன்கள் மூலம் செய்பவர்கள் இவர்கள்.
இரண்டாவது பிரிவினர் அந்த பிரசன்டேஷனை எடுத்துக் கொண்டு போய் நேரடியாக கஸ்டமர் நிறுவனத்தின் மேலதிகாரிகளைப் பார்த்து அவர்களிடம் தமது அருமை பெருமைகளை விளக்குபவர்கள். வசீகரமாய்ப் பேசி, நம்பிக்கைக்குரிய விதமாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றபடி பேசி நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்குபவர்கள் இவர்கள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.
இவர்களுக்கு நிறைய மென்திறமைகள் தேவை. உரையாடல் திறமை, விவாதத் திறமை, பேரம் பேசும் திறமை, கஸ்டமரின் பலம் பலவீனம் அறிந்து பேசும் திறமை, சுருக்கமாய்ப் பேசி விளங்க வைக்கும் திறமை என ஏராளமான மென் திறமைகள் தேவை.
‘இவன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என உங்களை யாராவது திட்டினால், உங்களுக்கு இந்த வேலை ஒருவேளை செட் ஆகலாம் என நினைத்துக் கொள்ளுங்கள்.

5
வெப் டிசைனர்கள். ( Web Designers)
இணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.
கஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.
வெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.
வெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.
கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.
மொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)
இன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.
டேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.
அதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.
மொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.
கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.
நவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )
எமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.
கிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.
கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.
மெயின்டனென்ஸ் அன்ட் சப்போர்ட் (Maintenance and Production Support )
மென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.
டெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.
கணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.
கணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி ? பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.
- ரெஸ்யூம் அலசல்.
ஐடி நிறுவனங்கள் ஒரு நபரைத் தேர்வு செய்ய முதலில் வாசிப்பது அவர்களுடைய பயோடேட்டாவைத் தான். அந்த பயோடேட்டா ஒரு அழகான விளம்பரம் போல சுருக்கமாக, நேர்த்தியாக, சொல்ல வந்த விஷயத்தை பளிச் என சொல்வதாக இருக்க வேண்டும். முக்கியமாக முதல் பக்கத்தில் உங்கள் பலம், சான்றிதழ்கள், மதிப்பெண் விபரம், விருதுகள் போன்றவற்றையெல்லாம் மிக நேர்த்தியாக எழுதி வையுங்கள். வாசிப்பவர்களை பத்து முதல், பதினைந்து வினாடிகளுக்குள் உங்கள் பயோடேட்டா கவர வேண்டும் என்பது அடிப்படை சிந்தனையாக இருக்கட்டும்.
- டெலிபோனிக் இன்டர்வியூ
பயோடேட்டாவில் பிடித்தமானதைத் தேர்வு செய்தபின் நிறுவனங்கள் அந்த நபர்களை தொலைபேசியில் அழைத்து பேசுவது வழக்கம். சில துவக்க நிலை வேலைகளுக்கு இது நடைபெறாமலும் இருக்கலாம். ஒருவேளை போனில் பேசவேண்டிய சூழல் உருவானால் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். டெலிபோனில் பேசியே ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வது சர்வ சாதாரணம். எனவே டெலிபோனிக் இன்டர்வியூவில் அலட்சியமாய் இருக்க வேண்டாம். உங்கள் உடல்மொழி அவர்களால் பார்க்க முடியாது என்பதால் குரல் மிகத் தெளிவாக, நிதானமாக இருக்கட்டும். சத்தம் இல்லாத சூழலில் நின்று பேசுங்கள். கேள்விகளில் சந்தேகம் இருந்தால் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். பதிலை சுருக்கமாகச் சொல்லுங்கள்.
- எழுத்துத் தேர்வு
இந்த எழுத்துத் தேர்வு பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் உண்டு. அதுவும் ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு இது நிச்சயம் உண்டு. இந்த எழுத்துத் தேர்வு இரண்டு கட்டமாக இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் உங்களுடைய சிந்தனைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப அறிவைச் சோதிக்கும் தேர்வு. இரண்டுக்குமான மாதிரிகள் இணையத்தில் எக்கச்சக்கமாக இருக்கின்றன. நிதானமாய்ப் பயிற்சி எடுங்கள்.
- குழு உரையாடல்.
ஆங்கிலத்தில் குரூப் டிஸ்கஷன் என அழைக்கப்படும் இந்த உத்தி, இருக்கின்ற பெரிய குழுவிலிருந்து திறமையான நபர்களைப் பொறுக்கி எடுக்கும் எளிய வழிமுறை. இந்த குழு உரையாடலில் தைரியமாக, தெளிவாக பேச வேண்டியது அவசியம். அதற்கு நல்ல கம்யூனிகேஷன் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். கொடுத்திருக்கும் தலைப்பில் பேசுவது, குழுவினரோடு கலந்து பேசுவது, உடல் மொழியை பாசிடிவாக வைத்துப் பேசுவது போன்றவையெல்லாம் உங்களுக்கு ஸ்பெஷல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். உங்கள் தைரியம், மொழி ஆளுமை, தலைமைப் பண்பு, குழுவோடு இணைந்து செயல்படும் விதம் இவையே பெரிதும் கவனிக்கப்படும். எனவே தெரியாத தலைப்பென்றால் கூட இந்த விஷயங்களை மனதில் கொண்டு பேசுங்கள்.
- நேர்முகத் தேர்வு
மிக மிக முக்கியமான கட்டம் இந்த நேர்முகத் தேர்வு. இங்கே நீங்கள் தன்னம்பிக்கையாய்க் காட்சியளிக்க வேண்டியது மிக அவசியம். நேர்த்தியான ஆடை. நேரம் தவறாமை. பதட்டமில்லாத பதில்கள் இவையெல்லாம் அவசியம். நேர்முகத் தேர்வு என்பது போலீஸ் குற்றவாளியை விசாரிக்கும் இடமல்ல. உங்கள் திறமை நிர்வாகத்துக்குப் பயன்படுமா என்பதை நிர்வாகம் பார்ப்பதற்கும், இந்த நிறுவனம் நமக்கு சரிப்பட்டு வருமா என நாம் அறிந்து கொள்வதற்குமான ஒரு உரையாடல் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அந்த மனநிலையில் இயல்பாகப் பேசுங்கள்.
- ஹைச்.ஆர் இன்டர்வியூ.
மிக எளிதாகவும், அதே நேரம் கணிக்க முடியாததாகவும் ஹைச்.ஆர் இன்டர்வியூக்கள் இருக்கும். இங்கே தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் ஏதும் இருக்காது. இங்கே உங்களுடைய குணாதிசயங்கள் தான் சோதிக்கப்படும். நீங்கள் நேர்மையான நபரா ?, நிறுவனத்தின் வளர்ச்சியில் உதவுவீர்களா ? தெளிவான கொள்கை வைத்திருக்கிறீர்களா ? வாழ்க்கையில் எதையெல்லாம் முதன்மைப்படுத்துகிறீர்கள் போன்ற விஷயங்களை நேரடியாகக் கேட்டும் கேட்காமலும் இங்கே கண்டறிவார்கள். குணாதிசயம் உங்களோடு பின்னிப் பிணைந்தது. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
வெற்றி வசமாகும். வாழ்த்துகள்.
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.