அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

IT-industry-bcbay

அழைக்கும் ஐடி துறை

1

நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.

“நல்லா இருக்கியாடே… ?”

“இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?”

வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.

அத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.

உண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.

அதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.

உலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.

இன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன ? காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.

ஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.

கேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா ? கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.

எந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.

ஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

மென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)

 

மென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது ? எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.

மென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.

ஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.

இந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில‌ சான்றிதழ் பெறுவதும் நல்லதே.

‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ?” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

சுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.

( பேசுவோம் )

Sony And Google Unveil Internet TV Set

2

அழைக்கும் ஐடி துறை

கடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.

டெஸ்டர் ( Software Tester )

மென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.

மென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்தார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.

டெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.

அ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.

ஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா ? செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.

இ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.

குவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.

டெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.

டெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது ? என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.

அ. மேனுவல் டெஸ்டர்ஸ்.

ஆ. ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ்.

மேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

டெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.

டெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன ? அது என்னவெல்லாம் செய்யும் ? எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.

க்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.

இந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.

டெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.

ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )

‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.

காப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.

மென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.

வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.

ஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.

உதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.

எனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் !

 

Sony And Google Unveil Internet TV Set

அழைக்கும் ஐடி துறை

3.

 

டேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)

எந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.

இந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.

இந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.

ஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )

கணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.

அந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.

எந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.

மற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.

ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )

கணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.

கணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.

நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.

ஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

நெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)

 

கணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.

கணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.

இந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.

டெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )

தொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.

தகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.

அட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.

ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.

பட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் கூடிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.

Sony And Google Unveil Internet TV Set

4

கேம்ஸ் ரைட்டர் ( Games Writer )

 

எந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

கணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.

நல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.

இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.

பிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.

 

அனிமேஷன் துறை ( Animation Technology)

 

இன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.

திரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.

சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.

அனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.

 

அட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)

 

இவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.

திடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.

அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.

அலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.

இந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.

 

மனிதவளப் பணிகள் ( Human Resources )

 

ஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

நிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.

பணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

சில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.

நல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.

 

விற்ப‌னை/விற்ப‌னை உத‌வி ( Sales and Sales Support)

 

சேல்ஸ் & சேல்ஸ் ச‌ப்போர்ட் என‌ப்ப‌டும் ப‌ணி ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளின் முதுகெலும்பான‌ ஒரு ப‌ணி. இத‌ற்கு அனுப‌வ‌ம் உடைய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்க‌ள். பெரும்பாலும் எம்.பி.ஏ ப‌டித்த‌வ‌ர்க‌ளே இதில் நுழைவார்க‌ள், ஆனாலும் எந்த‌ ப‌ட்ட‌ம் என்ப‌து இங்கே முக்கிய‌ம் இல்லை.

இந்த‌ வேலை மூன்றுக‌ட்ட‌மாக‌ ந‌டைபெறும். ஒவ்வொரு க‌ட்ட‌த்திலும் அத‌ற்குரிய‌ ஸ்பெஷ‌லிஸ்ட் ப‌ணியாற்றுவார்க‌ள். நிறுவ‌ன‌த்துக்கு புதிதாக‌ வேலை வாங்குவ‌து தான் இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி. ஒரு பிரிவின‌ர் எப்ப‌டியெல்லாம் ஒரு க‌ஸ்ட‌ம‌ரை க‌வ‌ர‌லாம் என்ப‌தைக் குறித்த‌ திட்ட‌மிடுத‌லைச் செய்வார்க‌ள். இவ‌ர்க‌ள் ‘பிரீ சேல்ஸ்” குழுவின‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டுவார்க‌ள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான த‌க‌வ‌ல் சேக‌ரிப்புகள், ந‌ம‌து ப‌ல‌ம் என்ன‌, நிறுவ‌ன‌த்தின் த‌னித்துவ‌ம் என்ன‌ என்ப‌தையெல்லாம் அழ‌கான‌ பிர‌ச‌ன்டேஷ‌ன்க‌ள் மூல‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

இர‌ண்டாவ‌து பிரிவின‌ர் அந்த‌ பிர‌ச‌ன்டேஷ‌னை எடுத்துக் கொண்டு போய் நேர‌டியாக‌ க‌ஸ்ட‌ம‌ர் நிறுவ‌ன‌த்தின் மேல‌திகாரிக‌ளைப் பார்த்து அவ‌ர்க‌ளிடம் தமது அருமை பெருமைக‌ளை விள‌க்குப‌வ‌ர்க‌ள். வ‌சீக‌ர‌மாய்ப் பேசி, ந‌ம்பிக்கைக்குரிய‌ வித‌மாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றப‌டி பேசி நிறுவ‌ன‌த்தின் வ‌ருமான‌த்தைப் பெருக்குப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.

இவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ மென்திற‌மைக‌ள் தேவை. உரையாட‌ல் திற‌மை, விவாத‌த் திற‌மை, பேர‌ம் பேசும் திற‌மை, க‌ஸ்ட‌ம‌ரின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் அறிந்து பேசும் திற‌மை, சுருக்க‌மாய்ப் பேசி விள‌ங்க‌ வைக்கும் திற‌மை என‌ ஏராள‌மான‌ மென் திற‌மைக‌ள் தேவை.

‘இவ‌ன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என‌ உங்க‌ளை யாராவ‌து திட்டினால், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ஒருவேளை செட் ஆக‌லாம் என‌ நினைத்துக் கொள்ளுங்க‌ள்.

 

Sony And Google Unveil Internet TV Set

5

வெப் டிசைனர்கள். ( Web Designers)

இணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.

கஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.

வெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.

வெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.

 

மொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)

இன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

டேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.

அதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.

நவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )

எமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.

கிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.

 

மெயின்ட‌னென்ஸ் அன்ட் ச‌ப்போர்ட் (Maintenance and Production Support )

மென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.

டெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.

கணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.

 

 

கணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி ? பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

 

  1. ரெஸ்யூம் அல‌ச‌ல்.

 

ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ந‌ப‌ரைத் தேர்வு செய்ய‌ முத‌லில் வாசிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவைத் தான். அந்த‌ ப‌யோடேட்டா ஒரு அழ‌கான‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ சுருக்க‌மாக‌, நேர்த்தியாக‌, சொல்ல‌ வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை ப‌ளிச் என‌ சொல்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். முக்கியமாக முத‌ல் ப‌க்க‌த்தில் உங்க‌ள் ப‌ல‌ம், சான்றித‌ழ்க‌ள், ம‌திப்பெண் விப‌ர‌ம், விருதுக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிக‌ நேர்த்தியாக‌ எழுதி வையுங்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ளை ப‌த்து முத‌ல், ப‌தினைந்து வினாடிக‌ளுக்குள் உங்க‌ள் ப‌யோடேட்டா க‌வ‌ர‌ வேண்டும் என்ப‌து அடிப்ப‌டை சிந்த‌னையாக‌ இருக்க‌ட்டும்.

 

  1. டெலிபோனிக் இன்ட‌ர்வியூ

 

ப‌யோடேட்டாவில் பிடித்த‌மான‌தைத் தேர்வு செய்த‌பின் நிறுவ‌ன‌ங்க‌ள் அந்த‌ ந‌ப‌ர்க‌ளை தொலைபேசியில் அழைத்து பேசுவ‌து வ‌ழ‌க்க‌ம். சில‌ துவ‌க்க‌ நிலை வேலைக‌ளுக்கு இது ந‌டைபெறாம‌லும் இருக்க‌லாம். ஒருவேளை போனில் பேச‌வேண்டிய‌ சூழ‌ல் உருவானால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள். டெலிபோனில் பேசியே ஆட்க‌ளை வேலைக்குத் தேர்வு செய்வ‌து ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். என‌வே டெலிபோனிக் இன்ட‌ர்வியூவில் அல‌ட்சிய‌மாய் இருக்க‌ வேண்டாம். உங்க‌ள் உட‌ல்மொழி அவ‌ர்களால் பார்க்க‌ முடியாது என்ப‌தால் குர‌ல் மிக‌த் தெளிவாக‌, நிதான‌மாக‌ இருக்க‌ட்டும். ச‌த்த‌ம் இல்லாத‌ சூழ‌லில் நின்று பேசுங்க‌ள். கேள்விக‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேட்டு நிவ‌ர்த்தி செய்து கொள்ளுங்க‌ள். ப‌திலை சுருக்க‌மாக‌ச் சொல்லுங்க‌ள்.

 

  1. எழுத்துத் தேர்வு

 

இந்த‌ எழுத்துத் தேர்வு பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் உண்டு. அதுவும் ஆர‌ம்ப‌ நிலை ஊழிய‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் உண்டு. இந்த‌ எழுத்துத் தேர்வு இர‌ண்டு க‌ட்ட‌மாக‌ இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் என‌ப்ப‌டும் உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப‌ அறிவைச் சோதிக்கும் தேர்வு. இர‌ண்டுக்குமான‌ மாதிரிக‌ள் இணைய‌த்தில் எக்க‌ச்ச‌க்க‌மாக‌ இருக்கின்ற‌ன‌. நிதான‌மாய்ப் ப‌யிற்சி எடுங்க‌ள்.

 

  1. குழு உரையாட‌ல்.

 

ஆங்கில‌த்தில் குரூப் டிஸ்க‌ஷ‌ன் என‌ அழைக்கப்படும் இந்த‌ உத்தி, இருக்கின்ற‌ பெரிய‌ குழுவிலிருந்து திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ளைப் பொறுக்கி எடுக்கும் எளிய‌ வ‌ழிமுறை. இந்த‌ குழு உரையாட‌லில் தைரிய‌மாக‌, தெளிவாக‌ பேச‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். அத‌ற்கு ந‌ல்ல‌ க‌ம்யூனிகேஷ‌ன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். கொடுத்திருக்கும் த‌லைப்பில் பேசுவ‌து, குழுவின‌ரோடு க‌ல‌ந்து பேசுவ‌து, உட‌ல் மொழியை பாசிடிவாக‌ வைத்துப் பேசுவ‌து போன்ற‌வையெல்லாம் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் ம‌திப்பெண்க‌ளைப் பெற்றுத் த‌ரும். உங்க‌ள் தைரிய‌ம், மொழி ஆளுமை, த‌லைமைப் ப‌ண்பு, குழுவோடு இணைந்து செய‌ல்ப‌டும் வித‌ம் இவையே பெரிதும் க‌வ‌னிக்க‌ப்ப‌டும். என‌வே தெரியாத‌ த‌லைப்பென்றால் கூட‌ இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு பேசுங்க‌ள்.

 

  1. நேர்முக‌த் தேர்வு

 

மிக‌ மிக‌ முக்கிய‌மான‌ க‌ட்ட‌ம் இந்த‌ நேர்முக‌த் தேர்வு. இங்கே நீங்க‌ள் த‌ன்ன‌ம்பிக்கையாய்க் காட்சிய‌ளிக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். நேர்த்தியான‌ ஆடை. நேர‌ம் த‌வ‌றாமை. ப‌த‌ட்ட‌மில்லாத‌ ப‌தில்க‌ள் இவையெல்லாம் அவ‌சிய‌ம். நேர்முக‌த் தேர்வு என்ப‌து போலீஸ் குற்ற‌வாளியை விசாரிக்கும் இட‌ம‌ல்ல‌. உங்க‌ள் திற‌மை நிர்வாக‌த்துக்குப் ப‌ய‌ன்ப‌டுமா என்ப‌தை நிர்வாக‌ம் பார்ப்பதற்கும், இந்த‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ருமா என‌ நாம் அறிந்து கொள்வ‌த‌ற்குமான‌ ஒரு உரையாட‌ல் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌ ம‌ன‌நிலையில் இய‌ல்பாக‌ப் பேசுங்க‌ள்.

  1. ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூ.

மிக‌ எளிதாக‌வும், அதே நேர‌ம் க‌ணிக்க‌ முடியாத‌தாக‌வும் ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூக்க‌ள் இருக்கும். இங்கே தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ கேள்விக‌ள் ஏதும் இருக்காது. இங்கே உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ள் தான் சோதிக்க‌ப்ப‌டும். நீங்க‌ள் நேர்மையான‌ ந‌ப‌ரா ?, நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா ? தெளிவான‌ கொள்கை வைத்திருக்கிறீர்க‌ளா ? வாழ்க்கையில் எதையெல்லாம் முத‌ன்மைப்ப‌டுத்துகிறீர்க‌ள் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை நேர‌டியாக‌க் கேட்டும் கேட்காம‌லும் இங்கே க‌ண்ட‌றிவார்க‌ள். குணாதிச‌ய‌ம் உங்க‌ளோடு பின்னிப் பிணைந்த‌து. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள்.

இந்த‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள்.

வெற்றி வ‌ச‌மாகும். வாழ்த்துக‌ள்.

 

 

 

செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

 

 

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட்  சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல்  பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது !

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

 

நன்றி : (மவுஸ் பையன் ) தினத்தந்தி…

தொங்கலில் தெங்குமரஹாடா

 

சத்தியமங்கலம் என்றாலே வீரப்பன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் கோடிக்கணக்கில் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளில் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நேரில் கண்டால் தான் புரியும்

சரி, போய் தான் பார்ப்போமே என்று நண்பர்களாகக் கிளம்பினோம். பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு மணி நேரக் காட்டுப் பயண தூரத்தில் இருந்த “தெங்குமரஹாடா” எனும் இடம் தான் எங்கள் இலக்கு.

கற்காலம் தொட்டே பார்த்துப் பழகிய அதே அரசுப் பேருந்து ! தினமும் மாலை 6 மணிக்கு காட்டுக்குள் பயணிக்கும். அப்புறம் காலை ஆறு மணிக்கு காட்டிலிருந்து நாட்டுக்கு திரும்ப வரும்.  அந்த ஊர் மக்களுக்கு அரசு செய்த அதிக பட்ச போக்குவரத்து வசதி அது தான்.  

காட்டுக்குள் பேருந்து போகும் போதே சுவாரஸ்யமும் வியப்பும் சாரைப் பாம்பாய்ச் சுற்றிக் கொள்கிறது. காட்டுப் பாதை எங்கே இருக்கிறது என்பது பழகிய டிரைவருக்கே அடிக்கடி குழப்பமாகிப் போய்விடுகிறது. சாலையின் இருபக்கமும் மான்கள் கூட்டம் கூட்டமாய் ஓடித் திரிகின்றன.

“அங்கே பாருங்க சாமி…” என்று கோயம்புத்தூர் பாஷையில் ஒரு தலைப்பாக்கட்டு கை காட்டிய இடத்தில் ஆஜானுபாகுவாய் ஒரு யானை.

“முந்தா நேத்து என்னை விரட்டிப் போட்டுதுங்க.. நான் இல்லீங்களா.. கைல இருந்த பையை அது தலையில போட்டுப் போட்டு வந்துட்டேனுங்க” என அவர் ஏதோ ஓணானை விரட்டியது போல சொல்ல நமக்குள் லேசாக உதறல்.

“அப்டீங்களாக்கும்..” என கோயமுத்தூர் பாஷையில் திருப்பிக் கேட்க அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது பார்வையிலேயே தெரிந்தது. யானையை விரட்டியவருக்கு இந்தப் பூனையை விரட்ட எவ்ளோ நேரமாகும் எனும் புது டென்ஷன் உள்ளுக்குள் உருவாக அவஸ்தையாய் ஒரு சிரி சிரித்து வைத்தேன்.

யானை, காட்டு மாடுகள், மான்கள், முயல்கள், பறவைகள், மயில்கள் என எல்லாம் சர்வ சாதாரணமாக ரோட்டைக் கடந்தும், பக்கத்தில் நடந்தும் போய்க்கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் ஒரு வழியாக கடைசி பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தோம்.

அதற்குள் கும்மிருட்டு வந்து எங்களைப் போர்த்தியது. உஷாராக டார்ச் லைட் நாலு கையிலேயே வைத்திருந்தோம். ஊர் எந்தப் பக்கம் என்றே தெரியவில்லை. “வாங்க இப்படித்தானுங்க போணும்” என்று டிரைவர் காட்டிய திசையில் ஆறு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

நமது குழப்பத்தை வாசித்தவர் சொன்னார், “பரிசல் வருமுங்க”.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். பரிசல் வந்தது. கும்மிருட்டில், நிலாவின் எதிரொளி நதியில் அசைய, இரைச்சலே இல்லாத ஒரு அசையும் பரிசலில், ரம்மியமாய்ப்  பயணிப்பது அற்புதமான அனுபவம். ஏதோ ஒரு சொர்ணமுத்துவையும் வைரமுத்துவாக உருமாற்றும் எல்லா சாத்தியங்களும் அந்த சூழலுக்கு உண்டு.

ஆற்றின் மறு கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஊரை சென்றடைந்தோம். ஊர் ரொம்ப சின்ன ஊர். அன்று இரவு அங்கே ஒரு வீட்டில் தங்கினோம். விடிவதற்கு இன்னும் நேரம் நிறைய இருந்தபோதே விழித்துக் கொண்டோம்.

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் விலக விலக, கண்ணுக்குள் விரிந்த அந்த குறிஞ்சியும், முல்லையும் கலந்த இலக்கிய நிலம் வியப்புக் குறிகளை விழிகளுக்குள் எழுதியது. அது ஒரு சின்ன மலைக்கிராமம். அருகில் இருந்த பொட்டிக் கடையில் மலைக்குளிரை மறக்கடிக்கும் ஒரு டீ குடித்து விட்டு நடந்தோம்.

ஊர் முழுக்க பூக்களின் ராஜ்ஜியம். எங்கும் செவ்வந்திப் பூ. தோட்டம் தோட்டமாக, ஏக்கர் கணக்கில் பூக்கள் பூத்துக் குலுங்கின. ஷங்கருக்கு ஒரு பாடல்காட்சி எடுக்கத் தேவையான அத்தனை இலட்சணங்களோடும் இருந்தது அந்த பூக்களின்.

“இவ்ளோ பூக்களையும் எப்படி விப்பீங்க?” பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் கேட்டோம்.

“இந்த பூவெல்லாம் எடைக்கு விப்போமுங்க. கிலோ ஆறுரூபா அம்பது பைசாங்க. இதை எடுத்துட்டு டவுணுக்கு போயிடுவாங்கங்க.. இத அரச்சுப் போட்டு வாசனைத் திரவியம் செய்வாங்கங்க..” என்றார் அவர்.

ஒரு சாகுபடிக்கு மூன்று மாதகாலங்கள். ஒரு ஆளுக்கு ஒரு நாள் கூலி 300 ரூபாய். ஒரு ஏக்கர் பயிரிட, பாதுகாக்க, பறிக்க என 20 பேராவது வேலை செய்யணும். கிலோவுக்கு விலை வெறும் 6.50 தான் ! வருமானம் ரொம்ப ரொம்பக் கம்மி என்பது தான் யதார்த்தம்.

“ஆமாங்க.. ரொம்ப எல்லாம் கெடைக்காதுங்க. வெள்ளாம நல்லா இருந்தா பரவாயில்லீங்க. போச்சுன்னா பொழப்பு போயிடுமுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.

பூக்களைத் தவிர அங்கே விளையும் இரண்டு முக்கியமான விஷயங்கள் மஞ்சள் மற்றும் மிளகாய். இரண்டும் நல்ல விளைச்சல் இருந்தால் நல்ல லாபமான தொழில். ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் மஞ்சள், மிளகாய் எல்லாம் வாங்கினோம். புதுசாய்க் கிடைப்பதில் எப்போதுமே ஒரு சுகம் உண்டு இல்லையா ?

அப்படியே நடந்து போனபோது ஆறு பாயும் ஓசை கேட்டது. மலையருகே ஆற்றின் கன்னித்தன்மை கெடாத புனித ஓட்டத்தில் குளிப்பது ஒரு சுகம் இல்லையா ? கிடைத்த இடங்களிலெல்லாம், தாவி, குதித்து ஒரு இடத்தில் குளிக்க இறங்கினோம். அப்படியே சொக்கிப் போகும் சுகம்.

அந்த ஆற்றுக்கு மாயாறு என்றொரு பெயர் உண்டு. எப்போது காட்டு வெள்ளம் ஓடிவரும் என்பதைக் கணிக்க முடியாது. திடீரென பத்தடி உயரத்துக்கு அது பாய்ந்து வந்து அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடும்.ஆற்றின் கரைகளில் சந்தன மரங்களும் எங்களைப் பார்த்துக் கையசைத்தன.

நேரம் போவதே அறியாமல் இரண்டு மணி நேரமாய் குளித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓடி வந்தார். அவர் பெயர் ரமேஷ்.

“ஏனுங்க… கரையேறிப்புடுங்க… சீக்கிரமுங்க…”

“ஏங்க ? காட்டாறு வருதா ? “ பரபரப்பாய் நாங்கள் கரையேறினோம்.

“இல்லீங்க.. இந்த பக்கம் குளிக்கறது டேஞ்சருங்க. முதலை இருக்குல்லா” என்றார் அவர்.

“என்னது மு…மு…முதலையா ?” என நாங்கள் நடுங்கத் துவங்கியபோது அவரே சொன்னார். அந்த இடத்திலிருந்து கொஞ்சம் மேலே முதலைகள் உண்டு. அவை எப்போது எங்கே வரும் என்று சொல்ல முடியாது !

ஆளை விட்டது ஆண்டவன் கருணை என்று நாங்கள் நடையைக் கட்டினோம். “நல்ல மீன் குழம்பு வைத்துத் தாருங்கள்.” எனும் எங்கள் விண்ணப்பத்துக்கு ஏகமாய் தயங்கினார் அவர்.

“இங்க மீன் பிடிக்க தடை பண்ணியிருக்காங்க. மீனு புடிச்சா முதலைக்கு சாப்பாடு கம்மியாயிடுமுங்க. அப்புறம் அதுக ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுடுமுங்க. அதனால இங்க மீன் பிடிக்க முடியாதுங்க. ஆனா இன்னொரு இடமிருக்குங்க. அங்க போய் மீனு வாங்கிட்டு வரேனுங்க” என எங்கள் காதிலும், நாவிலும் இன்பத் தேன் பாய்ச்சியவர் விடைபெற்றார்.

நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம். சென்னையின் புழுதிக் காற்றுக்கும், மலைக்கிராமத்தின் புழுதியற்ற காட்டுக்கும் இடையேயான வாழ்க்கை வேறுபாடுகள் மனதை பிசைந்தன. ‘இழந்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்த பிரக்ஞையற்று கணினிக்கு முன்னால் கட்டுண்டு கிடக்கும்’ எங்கள் நிலையை நொந்து கொண்டே நடந்தோம்.

திடீரென யானையின் பிளிறல் !

திகிலுடன் விரைவாய் ஓடி மீண்டும் ஊரை அடைந்தபோது எதிர்பட்டவர் சொன்னார்.

“இந்த பக்கமா போகப்படாதுங்க. யானை பாத்துச்சுன்னா கொன்னு போட்டுடுங்க. ஏன்னா அது ரொம்ப சமதளமுங்க. நாம தப்பவே முடியாதுங்க”

ரெண்டாவது முறையாக உயிர் தப்பிய உணர்வு எங்களுக்கு ! திகில் நிமிடங்களோடு அன்றைய பொழுது கடக்க, இரவு வந்தது !

மணக்க மணக்க மீன்குழம்பு பரிமாறிக் கொண்டே பேச ஆரம்பித்தார் ரமேஷ், கூடவே சண்முகம்.

“1995ல ஊருக்குள்ள புலி வந்து வரிசையா 14 பேரை கொன்னு போட்டுச்சுங்க. நம்ம சனங்களுக்கு பயமெல்லாம் காட்டு மிருகங்க தாங்க. ஆனாலும் பழகிப் போச்சு. அடிக்கடி யானை விரட்டும். அப்பப்போ மாடு விரட்டும். ஊரு மனுஷங்க ரொம்ப நல்லவங்க. ஒரே குடும்பமா இருக்கமுங்க”

அவர் பேசப் பேச, கிராமத்தின் இயல்புகளும் அவர்களுடைய மகிழ்வும், சோகமும், ஏக்கமும் பேச்சில் மிதந்தது.

960 ரேஷன் கார்ட்கள். 2600 ஓட்டுகள். 3400 மக்கள் என்பது தான் அவர் சொன்ன கிராமத்துப் புள்ளி விவரக் கணக்கு. கிராமத்திலேயே ஒரு சின்ன பள்ளிக்கூடம், அரசு அலுவலகம், தபால் நிலையம், பொட்டிக் கடை என எல்லாம் இருக்கிறது.

“ஒரு காலத்தில் இந்த ஏரியா காட்டில ஓரிரு புலிகளே உலவிக் கொண்டிருந்தன. இப்போதைய கணக்குப் படி 8 புலிகள் இருக்கின்றன” என்றார் அங்கே தங்கியிருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவர்..

“இந்த மலைப்பகுதியை அப்படியே புலிகள் சரணாலயமாய் மாற்றும் திட்டம் அரசுக்கு இருக்கிறது. 14 கிராமங்களைக் காலி செய்ய வேண்டும் என்பது திட்டம். ஆனால் தெங்குமரஹாடா மக்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த மலையை விட்டுச் செல்ல மனம் இல்லை” மேலும் சொன்னார் வனத்துறை அதிகாரி. 

“கவர்மென்ட் ஒரு ரேசன் கார்டுக்கு அஞ்சு லெட்சம் தரலாம்ன்னு சொல்லுதுங்க. நாங்க அதை வெச்சு என்ன பண்ண முடியுமுங்க ? இதே மாதிரி ஒரு கிராமம் உருவாக்கி தரட்டுமுங்க. இல்லேன்னா கார்டுக்கு பத்து இலட்சமும், ரெண்டு ஏக்கர் நிலமும் தரட்டுமுங்க. நாங்க பொளச்சுக்குறோமுங்க” என்றார் நம்முடன் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சண்முகம் .

அங்கிருந்து கோயமுத்தூருக்கு கல்லூரிப் படிப்புக்காகச் சென்று கொண்டிருந்த லாவண்யா எனும் இளம் பெண்ணிடம் பேசினோம். ஊரின் மீதும், ஊர் மக்கள் மீதும் அலாதியான பிரியம் வைத்திருந்தவர் சொன்னார்,

“ஊருக்கு வந்துட்டு போறது தான் பிரச்சினையே. ஊர் பக்கம் வந்தாலே மனசு ரொம்பவே சந்தோசமாயிடுது. இந்த காட்டுக்குள்ள இருந்து கூட எங்க மக்கள் கல்லூரிக்குப் போறாங்கங்கறதே ஒரு சாதனை தானே ? இல்லையா ?” என்ற அவருடைய வெகுளித்தனமான கேள்விக்கு, “நிச்சயமா ! “ என்பது மட்டுமே நாங்கள் சொன்ன பதில் !

வனமா ? மக்களின் மனமா ? எனும் இரண்டு கேள்விகளுக்கு இடையே அரசின் முடிவு இன்னும் முற்றுப் புள்ளி வைக்க முடியாமல் இருக்கிறது. நூறு ஆண்டுகளாக மலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அங்கிருந்து விரட்டப்படுவது உயிரை உலுக்கும் நிகழ்ச்சி. அரசுக்கோ அது வனத்துக்குச் செய்யும் மரியாதை !

வனங்கள் அழிக்கப்பட்டால் காட்டு விலங்குகள் மக்களைத் தாக்கும் எனும் வாதம் அரசிடம் இருக்கிறது. மக்களை விரட்டிவிட்டு விலங்குகளை வாழவைக்கப் போகிறீர்களா எனும் வாதம் மக்களிடம் இருக்கிறது. கள்ளம் கபடமில்லாத இந்த மக்களின் மனம் காயமடையக் கூடாதே எனும் பதட்டம் நம்மிடமும் !

 

சேவியர்

நன்றி : தேவதை

 

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

திரைப்படத்திலிருந்து காமிக்ஸ் !

காமிக்ஸ் புத்தகம் என்றாலே மலரும் நினைவுகள் உங்கள் மனதில் நிழலாடக் கூடும். ஜேம்ஸ்பாண்ட், இரும்புக்கை மாயாவி என்றெல்லாம் வசீகரித்த காமிக்ஸ் வரலாறு கொஞ்சம் தொய்ந்து போய் விட்டது. தொலைக்காட்சியின் தாக்கம் காமிக்ஸ் புத்தகங்களின் வீச்சைப் பாதித்து விட்டன என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனாலும் “படக்கதைக்கு” ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அத்தகைய ரசிகர்களை இந்தச் செய்தி குஷிப்படுத்தும் என நம்புகிறேன். சீனாவிலுள்ள ஹெஃபி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மென்ங் வேங் தங்கள் குழுவினரின் புது மென்பொருள் பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த மென்பொருள் ஒரு திரைப்படத்தைக் கொடுத்தால் அப்படியே அதன் காமிக்ஸ் வெர்ஷனைத் தந்து விடுமாம். சினிமாவில் கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகளை அப்படியே ஒரு சின்ன கட்டத்துக்குள் அடக்கி, அச்சு அசலான காமிக்ஸ் பக்கங்களை இது உருவாக்குகிறது.

இந்த மென்பொருள் குறித்த விரிவான செய்தியை ‘ஐ.இ.இ.இ டிரான்ஷாக்ஸன் ஆன் மல்டிமீடியா’ எனும் இதழில் அவர் எழுதியிருக்கிறார். மூவி2காமிக்ஸ் (Movie2Comics) என இந்த மென்பொருளுக்கு அவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பே பல மென்பொருட்கள் படங்களை காமிக்ஸ் வடிவமாக்கும் முயற்சியில் இறங்கி கொஞ்சம் கொஞ்சம் வெற்றியும் பெற்றன. ஆனால் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் ஒரு படத்தை காமிக்ஸ் ஆக மாற்றுவது இதுவே முதன் முறை! 85 சதவீதம் சரியாக இந்த மென்பொருள் காமிக்ஸைத் தருகிறது. கொஞ்சம் டயலாக் பெட்டியை அங்கே இங்கே இழுத்து வைக்கும் டச் அப் வேலைகளைச் செய்தால் காமிக்ஸ் புக் ரெடி.

காமிக்ஸ் தயாரிப்பவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம். எந்த ஒரு ஹிட் படத்தையும் சில நிமிடங்களிலேயே படக் கதையாக உருமாற்றி விடலாம்.

சாதாரண மக்களுக்கும் இது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம் தான். தங்களுடைய கல்யாண வீடியோவையோ, சுற்றுலா வீடியோவையோ, அல்லது குழந்தைகளின் வீடியோக்களையோ காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே !.

சோதனை முயற்சியாக அவர்கள் செய்து காட்டிய டெமோவில் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களான “டைட்டானிக்” ஷெர்லக் ஹோம்ஸ், மற்றும் த மெசேஜ் எனும் மூன்று படங்களிலுள்ள சில காட்சிகளை எடுத்திருந்தார்கள். 2 முதல் 7 நிமிடங்கள் வரையிலான இந்தக் காட்சிகளை ‘படக் கதையாக’ மாற்றிக் காட்டினார்கள் !

இந்த காமிக்ஸ் வடிவத்தை பார்த்தவர்களெல்லாம் வெகுவாகப் பாராட்டினார்களாம். நல்ல விஷயம் தான், நாமும் பாராட்டுவோம்.

*

 Thanks :  தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம் (மவுஸ் பையன்)

ரோபோவுக்குள் மனிதன் !

ரோபோவுக்குள் மனிதன் !

அவதார் ! படத்தை அவ்ளோ சீக்கிரம் மறந்திருக்க மாட்டீங்க. மனித உடல் ஒரு இடத்தில் இருக்க மனமும், உயிரும் அப்படியே இன்னொரு நீல நிற உடலுக்குள் தாவும் . அப்படியே பண்டோரா எனும் கிரகத்திலுள்ள மனிதர்களோடு போரிடவும் செய்யும்.

ஒரு வகையில் நமது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையின் ஹைடெக் வடிவம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த அவதார் எனும் பெயரில் ஒரு ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கான்செப்ட் கூட அதே தான். மனித மூளையை அப்படியே ஒரு ரோபோவுக்கு பொருத்தினால் எப்படி இருக்கும் என்பது தான் சிந்தனை.

இன்னும் பத்தே வருடங்களில் இந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று விடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இட்ஸ்கோவ், இந்த திட்டத்தின் காரணகர்த்தா. பொதுவாக இத்தகைய ‘பிலிம்’ காட்டும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தான் நடக்கும். அதுவும் இந்த கருவை வைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் ரோபோ காப், கேப்ரிகா, புல்மென்டல் ஆல்கெமிஸ்ட், ஹோஸ்ட் இன் த செல் என வரிசையாக படங்களை சுட்டுத் தள்ளினார்கள்.

இப்போது இந்த கருவைக் கையில் எடுத்திருப்பது ரஷ்யா என்பது தான் ஒரு வித்தியாசம்.

பிறவிக் குறைபாடு உடையவர்களோ, நிரந்தர ஊனமானவர்களோ, அல்லது சாகக் கிடப்பவர்களோ தங்கள் மூளையை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு ரோபோ தலையில் வைத்து சாகா வரத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

அறிவியலின் மிகப்பெரிய கனவுகளின் ஒன்று தான் இத்தகைய மூளை மாற்று சிகிச்சை போன்றவை. இதை அறிவியல் “முழு உடல் மாற்று” என்றும் “ மூளை மாற்று சிகிச்சை” என்றும் அழைக்கிறது. இந்த விஷயத்தில், மூளையை மற்ற நரம்புகளுடன் இணைப்பது படு சிக்கலான விஷயம். இன்றைய நுட்பம் தோற்றுப் பின் வாங்கும் இடங்களில் ஒன்றும் இது தான்.

ஆனால் சமீபத்தில் எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி சில சுவடுகள் முன்னேறிச் சென்றது குறிப்பிடத் தக்கது !

மேட்ரிக்ஸ், அவதார் போன்ற திரைப்படங்கள் சொல்லும் “மைன்ட் அப்லோடிங்” அதாவது மனம் மாற்று முறை சாத்தியமானால் விஞ்ஞானத்தின் மிக முக்கியமான மைல் கல் அதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த பத்தாண்டுத் திட்டமாக மூளையை உள்வாங்கிச் செயல்படும் ரோபோவைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடக்கப் போகின்றனவாம். அமெரிக்காவிலுள்ள டி.ஏ.ஆர்.பி.ஏ எனும் ராணுவ ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தனது திட்டத்தைச் சொல்கிறார் இட்ஸ்கோவ்.

நூறு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் இணைந்துப் பணியாற்றப் போகிறார்களாம். இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றால் விலை மதிப்பற்ற விஞ்ஞானிகள், ஞானிகள், தலைவர்கள் போன்றவர்களின் மூளைகளைத் தாங்கிய ரோபோ மனிதர்கள் அருங்காட்சியகங்களில் வசிக்கக் கூடும் !

விஞ்ஞானம் மிரட்டுகிறது இல்லையா ?

 

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம்

அரை நூற்றாண்டுக்குப் பின் ஒரு ஆனந்த சந்திப்பு

அந்த அதிகாலை நிசப்தத்தை செல்போனின் சிணுங்கல் ஒலி சற்றே உடைத்தது.

“மேரி இருக்காங்களா ?”  மறு முனையில் பேசிய குரலில் தயக்கமும், எதிர்பார்ப்பும் இழையோடியது.

“நான் தான் பேசறேன். நீங்க யாரு ? “

“ஹேய்.. சி.ஆர் … நான் தான் புஷ்பம் பேசறேன்” மறு முனையிலிருந்த குரலுக்குச் சட்டென ஒரு துள்ளல் சந்தோசம்.

“புஷ்பமா 50 years ago...? எந்த புஷ்பம் ? “

“கண்டு பிடி பாக்கலாம் ? “ மறு முனை கொஞ்சம் விளையாட்டுக் குரலுக்கு இறங்கியது.

மேரி தனது தலையிலிருந்த நரை முடிகளைக் கோதியபடியே யோசித்துப் பார்த்தார்.

“சாரி.. யாருன்னு தெரியல. எனக்கு சின்ன வயசுல புஷ்பம்னு ஒரு பிரண்ட் இருந்தா.. அதுக்கப்புறம் எந்த புஷ்பமும் எனக்கு தெரியாது…”

சொல்லி முடிக்கும் முன் மறுமுனை உற்சாகமாய் குரல் கொடுத்தது.

“அதே புஷ்பம் தாண்டி நானு… எவ்ளோ வருசமாச்சு பேசி” மறுமுனையின் உற்சாகம் சட்டென மேரியின் மனதுக்குள்ளும் குடியேறியது.

“ஏய்.. நீயா ? எப்படிடி இருக்கே ? எங்கே இருக்கே ? என் நம்பர் எப்படி கிடைச்சுது ?” படபடப்புடன் கேள்விகளாக கொட்டின மேரியின் உதடுகளிலிருந்து.

“ஒரேயடியா கேள்விகளைக் கொட்டாதே. எனக்கும் ஏகப்பட்ட கேள்வியிருக்கு நிறைய பேசணும்”

“நீ எங்கே இருக்கே ?”

“நான் நாகர்கோயில் லிட்டில் பிளவர் ஸ்கூல்ல இருந்து தான் பேசறேன்”

“ஓ.. நாம படிச்ச ஸ்கூல்… ஹேய்.. கரெக்டா 50 வருஷமாச்சு நாம பத்தாம் கிளாஸ் படிச்சு !”

“ஆமா. அதான் விஷயம். நாம படிச்சு 50 வருஷமாச்சு இல்லையா. அதனால நம்ம கிளாஸ்ல படிச்ச எல்லாரும் இதே ஸ்கூல்ல ஒரு நாள் சந்திச்சுப் பேசினா எப்படி இருக்கும்” புஷ்பம் முடிக்கும் முன் மேரி உற்சாகமானார்

“ரொம்ப நல்லா இருக்கும்… ஆனா, எல்லாரையும் கண்டு பிடிக்கிறது எப்படி ?”

“உன் நம்பரை கண்டு பிடிச்சேன் இல்லையா ? இதே மாதிரி ஒவ்வொரு இடமா தேட வேண்டியது தான். ஏற்கனவே ஹெட்மாஸ்டர் கிட்டே பேசிட்டேன். அவங்க பழைய வீட்டு அட்ரஸ்களையெல்லாம் தரேன்னு சொல்லியிருக்காங்க. ஒவ்வொருத்தரையா தேடணும். நம்பிக்கையிருக்கு எல்லாரையும் ஒண்ணு சேத்துடலாம்” புஷ்பத்தின் குரல் உற்சாகமானது.

“எத்தனை பேரை இதுவரைக்கும் கண்டு பிடிச்சிருக்கே ? “

“நாலு பேரு… இன்னும் நாப்பது பேரைத் தேடணும். உனக்கு வேற யாரையாவது தெரியுமா ?”

“பூமணி நம்பர் மட்டும் தெரியும். அவ கூட மட்டும் தான் காண்டாக்ட் இருக்கு. ஒரு நிமிஷம் இரு.. நம்பர் சொல்றேன்”

மேரி நம்பர் சொல்ல, புஷ்பம் குறித்துக் கொண்டார்.

விஷயம் இது தான். லிட்டில் பிளவர் பள்ளியின் கோல்டன் ஜூபிலி ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவின் ஒரு பாகமாக முதல் முதலாக அந்த பள்ளியில் பத்தாம் கிளாஸ் படித்த எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்பது ஏற்பாடு.

மேரியின் மனதில் உற்சாகம் கரை புரண்டோடியது. முழுதாய் ஐம்பது ஆண்டுகள் முடிந்திருந்தது. பள்ளியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், துயரங்களும் இல்லாமல் திரிந்த காலம் கண் முன்னால் விரிந்தது. அந்த உற்சாகக் குரல்களின் மிச்சம் இன்னும் காதுகளில் ஒலிப்பது போல ஒரு பிரமை.

கண்களை மூடியபோது பள்ளிக்கூட வராண்டாவும், ஆசிரியர்களும், பள்ளிக்கூட முற்றத்தின் நின்ற மரமும் எல்லாம் அவருடைய நினைவுகளில் வந்து போயின.

தன்னுடைய அலமாராவைத் திறந்து துணிகளுக்கு அடியே வைத்திருந்த போட்டோக்களை எடுத்தார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு கருப்பு வெள்ளைப் புகைப்படமும் ஒன்று. அதிலுள்ள முகங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகியிருந்தது. அதிலுள்ள பல முகங்களின் பெயர்கள் தொண்டை வரைக்கும் வந்து விட்டு மனதில் வராமல் முரண்டு பிடித்தன.

நாட்கள் மெல்ல மெல்லக் கரைய, அந்த நாளும் வந்தது.

எதிர்பார்ப்புகளோடு தனது பேரப் பையனையும் அழைத்துக் கொண்டு நாகர்கோயில் புறப்பட்டார் மேரி. பேரப் பையன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

லிட்டில் பிளவர் ஸ்கூல் வாசலில் நீண்ட நெடிய ஆண்டுகளுக்குப் பின் நுழையும் போதே பின்னணியில் நினைவுகளும் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தன.

உள்ளே நுழைந்தபோது ஒரு கத்தோலிக்க சிஸ்டர் அவரை எதிர்கொண்டார்.

“ஹே … நீ சி.எஸ்.ஆர்… தானே ?”

“ஆமா.. நீங்க….”

“ஹே.. நான் தான் புஷ்பம். “

“ஹேய்.. நீ கன்யாஸ்திரி ஆயிட்டியா ? எனக்குத் தெரியவே தெரியாது ! பேசும்போ கூட நீ சொல்லவே இல்லை ?”

“நம்ம கூட படிச்ச நாலஞ்சு பேரு துறவறம் போயிருக்காங்க. உள்ளே வா.. நிறைய பேசலாம். இன்னும் கொஞ்சம் பேரு பேரு வந்திருக்காங்க”

“எல்லாரையும் கண்டு பிடிக்க முடிஞ்சுதா ?

“இல்லை… நம்ம குரூப்ல பத்து பதினைஞ்சு பேரு இறந்துட்டாங்கடி.. நம்ம வேலம்மா கூட இறந்துட்டா.. தெரிஞ்சப்போ ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நாலு பேரை கண்டு பிடிக்க முடியல. மூணு பேரு வெளிநாடு போயிட்டாங்க போல. 27 பேரைக் கண்டு பிடிச்சு வரச் சொல்லியிருக்கேன். மூணு நாலு பேரு வந்திருக்காங்க” சொல்லி முடிக்கவும் வகுப்பறை வரவும் சரியாக இருந்தது.

உள்ளே சில நரைத்த தலைகள் தெரிந்தன. வகுப்பறை புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இருந்தாலும் அதே பழைய நினைவுகளின் மிச்சம் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஹேய்.. நீ சி.ஆர் ?”

“நீ…. விமலா தானே .. இன்னும் ஒன் சிரிப்பு அப்படியே இருக்குடி”

அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பு ஒவ்வொருத்தராய் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், அடுத்தவர் வாழ்க்கையைப் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பேசத் தொடங்கினார்கள்.

அந்தக் கூட்டத்தில் ஒவ்வொருத்தராய் வந்து சேர, கொஞ்ச நேரத்திலேயே அறையில் 27 பேரும் ஆஜர்.

தங்களுடைய வயதுகளை மறந்து, துயரங்களை மறந்து, நோய்களை மறந்து சட்டென அனைவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகப் பறந்து விட்டார்கள். அறை உற்சாக உரையாடல்களாலும், பேச்சுகளாலும் நிரம்பி வழிந்தது.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏகப்பட்ட கதைகள் நிரம்பி வழிந்தன. அவர்களுடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மருமக்கள் என கதைகள் வகுப்பறையில் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தன.

பலரும் தங்கள் உயிர்த்தோழிகளை கட்டியணைத்து தழு தழுத்தனர்.

“சாகறதுக்கு முன்னாடி உன்னைப் பாக்க முடிஞ்சதே போதும்” எனும் உரையாடல்கள் ஆங்காங்கே நட்புக்கு வயதில்லை என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன.

சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள், பரிசுகள், பேச்சு, பாட்டு, பிரார்த்தனை, உணவு என நேரம் போனதே தெரியவில்லை.

சட்டென மாலை வந்து நிற்க அனைவரின் மனதிலும் ஓர் இனம் புரியா சோகம். எல்லாருமா நின்னு ஒரு போட்டோ எடுத்துப்போம், எடுத்துட்டு கன்யாகுமரி கடலுக்குப் போவோம்…

போட்டோ எடுக்கப்பட்டது.

எல்லோரும் ஒரு வேன் பிடித்து குமரிக் கரையில் இறங்கினார்கள்.

ஒரு கூட்டம் முதியவர்கள் வந்து குமரிக் கரையில் கொட்டமடித்ததை வியப்புடன் பல கண்கள் பார்த்தன. இவர்களெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அதுவும் ஐம்பது ஆண்டுகள் தொடர்பே இல்லாத நபர்கள் சட்டென ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாதது. அதுவும், படித்த அதே பள்ளியில் அதே இடத்தில் ஒன்று சேரும்போது மனதுக்கு இரண்டு இறக்கைகள் கூடுதலாய் முளைத்து விடுகின்றன என்பதையே இந்த சந்திப்பு வெளிப்படுத்தியது.

இந்த சந்திப்பு இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் தொடரவேண்டும் எனும் விருப்பங்களின் பரிமாற்றங்களோடு அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு நெகிழ்வான அனுபவத்தைப் பதிவு செய்த ஆனந்தத் தடங்களுடன் பள்ளி வராண்டா மௌனமாய் இருந்தது.

 

நன்றி தேவதை, பெண்கள் இதழ்

பெப்ரவரி 2012

ஆ.வி : மரம் செய்ய விரும்பு

Axel Erlandson-1

அலெக்ஸ் எர்லாண்ட்சன் சுவீடனில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம் என்றாலே மரங்களோடு தொடர்பு இருப்பது இயல்பு தானே. அலெக்ஸ்க்கும் மரங்கள் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் மரங்களில் விளையாடிக் கொண்டிருந்த அவர், 1925 முதல் மரங்களை வளர்க்க ஆரம்பித்தார். அதுவும் எப்படி ? தனக்குப் பிடித்தமான வித விதமான டிசைன்களில்.

முதலில் பேப்பரில் அவருக்குப் பிடித்தமான ஒரு படத்தை வரைவார். பின் தோட்டத்திலுள்ள மரங்களை அதே போல வளர்ப்பார். அவருடைய குடும்பத்தினர் அதைப் பார்த்து வாயடைத்துப் போவார்கள். கூடை, செயர், ஏணி, பாம்பு, கோபுரம், இதயம், வளையம், போன் பூத் என இவருடைய மரங்கள் அசத்தின.

வித்தியாசத்தை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது அவருக்கு லேட்டாய் தான் புரிந்தது. உடனேErlandson2 கலிபோர்னியாவிலுள்ள ஸ்காட்ஸ் வில்லில் ஒரு இடத்தை வாங்கினார். அங்கே அவரது மரங்கள் வளர்ந்தன. சட்டென பல இடங்களுக்கும் தகவல் பரவ புகழ் பெற்றார்.

இவருடைய மரங்களுக்கு சில ஸ்பெஷாலிடீஸ் உண்டு. செயர் போல மரங்களை வளர்த்துவார். இயற்கையின் விதிப்படி மரங்கள் உயரமாகும், செயரும் உயரமாகும் இல்லையா ? ஆனா அலெக்ஸ் வளர்த்த மரங்கள் அப்படியே தான் இருந்தன. “எப்படி இதையெல்லாம் வளர்த்தினீங்க ?” என வியப்பாய் அவரிடம் கேட்டால், “நான் மரங்களிடம் பேசுவேன். நான் சொல்வது போல அவை வளரும்” என்பாராம்.

அலெக்ஸ்க்கு வயதானது. மரங்களைச் சென்று பார்க்க முடியவில்லையே என துயரம் தொண்டையை அடைக்க 1963ல் தனது மரங்களையெல்லாம் விற்றார். விற்றபின் அவருக்கு இருந்த நிம்மதியும் போச்சு. அடுத்த ஆண்டே தனது 79 வது வயதில் அலெக்ஸ் மறைந்தார். மரங்களை அவர் எப்படி வளர்த்தினார் என்பது ஒரு மாபெரும் ரகசியம். கடைசி வரை அந்த ரகசியத்தை அவரும் சொல்லவில்லை, அவர் வளர்த்த மரங்களும் சொல்லவில்லை !

சேவியர்

பி(கி)ல்லி சூனியம் !

 tipton-portrait

அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை.

இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். கொஞ்சம் கொஞ்சமாக இசை அவரை உயர்த்தியது. பின் ஓரளவு பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து ஊர் சுற்றினார். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல பெயர் கிடைத்தது. கே.எஃப்.எக்ஸ்.ஆர் எனும் ஒரு இசைக்குழுவையே ஆரம்பித்து நடத்துமளவுக்கு வளர்ந்தார்.

அடுத்த கட்டமாக இசை ஆல்பங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடைய ஸ்வீட் ஜோர்ஜியா பிரவுண் மற்றும் பில்லி டிப்டன் பிளேஸ் ஹை ஃபை ஆன் பியானோ இரண்டும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அப்புறமென்ன ஆல்பம் தயாரிப்புகள் தொடர்ந்தன. இவருக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பல பெண்களுடன் “நெருக்கமாக” வாழ ஆரம்பித்தார். அதனால் இவரை ஒரு “பெண் பித்தன்” என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஒரு வழியாக 1960 கிட்டி கெல்லி எனும் பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார். தம்பதியர் ஜான், ஸ்காட் மற்றும் வில்லியம்ஸ் என மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தனர். பிள்ளைகளெல்லாம் “இவரு ரொம்ப நல்ல டாடி” என்று சொல்லுமளவுக்கு ஒரு நல்ல தந்தையாகவும் வாழ்ந்தார்.billybet

1989ல் தனது 74வது வயதில் பில்லி டிப்டன் இறந்தார். அப்போது தான் வெளிவந்தது உலகை அதிர்ச்சியூட்டும் ரகசியம். பில்லி டிப்டன் உண்மையில் ஆண் அல்ல ! ஒரு பெண் ! உலகமே வியந்தது. அவர் சுற்றித் திரிந்த பெண் தோழிகளெல்லாம் வியந்தனர். அவருடைய ரசிகர்கள், பிள்ளைகள், மனைவி எல்லோருமே அதிர்ந்தனர் !!! பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கத்தில் வியப்பு காட்டின.

பெண்களிடம் ரகசியம் நிற்காது என யாருப்பா சொன்னது ?