மகிழ்ச்சி ரெடிமேடாய்க் கிடைப்பதில்லை. அது நமது செயல்களின் மூலமாக விளைவதே ! –
தலாய் லாமா
ஆனந்தமாய் இருக்க வேண்டுமா என நீங்கள் யாரிடம் கேட்டாலும் “ஆம்” எனும் பதிலை சட்டென சொல்வார்கள். அப்படிச் சொல்லவில்லையேல் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு இருக்கலாம் என்பதை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லோருமே அடைய நினைக்கும் ஒரு விஷயம் இந்த சந்தோசம். ஆனால் அதைப் பலரும் அடைவதில்லை ! கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் கூட அதைக் கண்டும் காணாததும் போலக் கடந்து செல்கிறார்கள்.
காரணம் மகிழ்ச்சியைக் குறித்தும், அதை அடையும் நிலைகளைக் குறித்தும் மக்களுக்கு இருக்கின்ற தவறான புரிதல்களும், தேடல்களும் தான். நீங்கள் கோபமாய் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி ஆனந்தத்தை இழந்து விடுகிறீர்கள் எனும் ரால்ஃப் வால்டோவின் சொலவடை உலகப் பிரசித்தம். அந்த ஆனந்தத்தை அடைவது எப்படி ?
பணம் தான் ஆனந்தத்தைத் தரும் எனும் நினைப்பு உலக மக்களின் பெரும்பான்மையானவர்களிடம் இருக்கிறது. அப்படியானால் எவ்வளவு பணம் ? நூறு நூபாயா ? நூறு கோடியா ? ஒரு இலட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியா ? கணக்கு வழக்கே இல்லை இல்லையா ? இவ்வளவு பணம் கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்று ஒரு எல்லை வரைவது இயலாத காரியம். பணம் எப்போதுமே மகிழ்ச்சியைத் தருவதில்லை. பணம் தேவைகளை நிறைவேற்றலாம், ஆனால் அது மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதில்லை.
ஒரு வகையில் பணம் மகிழ்ச்சியை இழக்கச் செய்யும். ஒரு டிவி இருந்தா ரொம்ப மகிழ்ச்சியா இருப்போம் என நினைப்போம். ஒரு வீட்டில் எல்லோருமாய் சேர்ந்து கதைகள் பேசிச் சிரிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. அதை விட்டு விட்டு ஒரு தொலைக்காட்சியை வாங்கி வைத்தால், நமது மகிழ்ச்சியின் அளவு சட்டெனக் குறையும் ! உறவுகளின் இறுக்கம் குறைக்கும்.
“நமக்கு யாராச்சும் ஒரு கிஃப்ட் தந்தா சந்தோசமா இருக்குமே” என நினைப்போம். ஏதாவது கிடைச்சா சந்தோசம் வரும் என்பது தற்காலிக உணர்வே. சேர்ப்பதை விடக் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் ! கையேந்தும் ஒரு ஏழைக்குக் கொடுக்கும் உதவி தரும் ஆனந்தம், நமக்கு யாரேனும் தரும் பணத்தை விட நீண்ட நேரம் நிலைக்கும் ! தேவைப்படும் ஒரு ஏழைக்கு செய்யும் உதவி மனதை மெல்லிய ஆனந்தத்துக்குள் இட்டுச் செல்லும்.
விளையாடுங்கள் ! விளையாடுங்கள் என்று சொன்னதும் ஏதோ கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுவதை மட்டும் நான் சொல்லவில்லை. வீட்டில் குழந்தைகளோடு உருண்டு புரண்டு விளையாடுவதையும் சேர்த்தே சொல்கிறேன். விளையாடுவதற்கு உங்களுக்கு விளையாட்டு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விளையாடவேண்டும் எனும் மனம் இருந்தாலே போதும் !
“மகிழ்ச்சியாய் இருக்கத் துவங்கினால் வேலையில் தொய்வு ஏற்பட்டுவிடும்.வேலையில் கவனமாய் இருப்பது தான் முக்கியம் “ என்பது சிலருடைய வாதம். உண்மையில் மகிழ்ச்சியை நாடுபவர்களே வேலையில் வெற்றியாளர்களாய்ப் பரிமளிக்க முடியும். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு “பொழுதுபோக்கு” நிகழ்ச்சிகளை சுயமாகவே நடக்குகின்றன. அதன் மூலம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தி, அதிக பவர்புல் வேலையாட்களாக மாற்றுவதே அவர்களுடைய சிந்தனை. மகிழ்ச்சியாய் இருக்கும் ஊழியர்களே சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்கிறது உளவியல். எனவே அந்தனையையும் தூக்கி ஓரமாய் வையுங்கள்.
“செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் முடிச்ச பிறகு தான் விளையாட்டோ, ஜாலி சமாச்சாரங்களோ “ என்று நினைப்பவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் எப்போதாவது தான் எட்டிப் பார்க்கும். தூரத்துச் சொந்தக்காரன் எதிர்பாராத நேரத்தில் வருவது போல ! காரணம் நமது வேலைகள் எப்போதுமே முடியப் போவதில்லை. அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் ! எனவே மகிழ்ச்சிக்கும் வேலைகளை முடிப்பதற்கும் முடிச்சு போடாதீர்கள்.
சிலரோ, “நானெல்லாம் சந்தோசமா இருக்க அருகதையே இல்லாதவன். அந்த அளவுக்கு மோசமானவன்” எனும் தாழ்வு மனப்பான்மையில் உழல்வதுண்டு. இவர்கள் நிச்சயம் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள். வாழ்வின் அத்தனை மகிழ்வுகளையும் இழந்து விடக் கூடிய அபாயம் இவர்களுக்கு உண்டு. இது அவர்களுடைய செயல்களால் விளைந்த தவறாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடைய தோற்றத்தின் மீது கொள்ளும் தாழ்வு மனப்பான்மையாய் கூட இருக்கலாம் ! எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சி என்பது மனதின் வெளிப்பாடு என்பதை உணர்தல் அவசியம்.
“மகிழ்ச்சி என்பது கடைசியில் கிடைக்கக் கூடிய சமாச்சாரம்” என்பது சிலருடைய சிந்தனை. உண்மையில் மகிழ்ச்சி என்பது பயணம். அது இலக்கைச் சென்று அடைவதில் மட்டுமல்ல. ஒவ்வொரு பாதச் சுவட்டிலும் கிடைக்கும். ஒரு பூந்தோட்டத்தில் நடக்கிறீர்கள். மகிழ்ச்சி என்பது தோட்டத்தில் நடந்து முடித்த பிறகு தான் கிடைக்குமா ? அல்லது பயணத்தில் கிடைக்குமா ? ஒவ்வொரு மலரைச் சந்திக்கும் போதும், ஒவ்வொரு செடியைத் தாண்டும் போதும் மகிழ்வு நம்மை முத்தமுடுவது தானே முறை ? வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சியின் இழைகள் உண்டு. அதை நின்று நிதானித்து அனுமதிப்பதே வாழ்வில் முக்கியமானது !
மகிழ்ச்சி என்பது மனதின் நிலைப்பாடு. நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நீங்கள் நினைத்தால் மகிழ்ச்சி உங்களை வந்தடையும். ஆன்மீக வாதிகள் இறைவனில் மகிழ்ந்திருப்பதன் அடிப்படை இது தான். “மகிழ்ச்சி என்பது நம்மைப் பொறுத்தது” என்கிறார் தத்துவமேதை அரிஸ்டாட்டில்.
தேவையற்ற கவலைகளைத் தூக்கிச் சுமக்கும் கழுதையாய் மாறாதீர்கள். நீங்கள் தூக்கிச் சுமப்பவற்றை வழியில் இறக்கி வைத்து விட்டு நிதானமாய் நடை பழகுங்கள். “அது நடக்குமோ, இப்படி நடக்குமோ, ஏதேனும் நேருமோ’ எனும் பதட்டங்கள், பயங்கள் தவிருங்கள். பெரும்பாலான இத்தகைய பயங்கள் “நிழலோடு கொள்கின்ற நீள்யுத்தம்” போன்றவையே !
அடிக்கடி நீங்களே உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய சின்னச் சின்ன வெற்றிகள், சுவடுகள், முன்னேற்றங்கள், முயற்சிகள், அணுகுமுறைகள், அனைத்தையும் பாராட்டுங்கள். மனம் உற்சாகமடையும். முக்கியமாக உற்சாகத்தை உடைக்கும் சிந்தனைகளை ஒடித்து வெளியே போடுங்கள்.
நண்பர்களோடு இணைந்திருங்கள். உறவு வட்டாரத்தோடு இணைந்திருங்கள். சின்னச் சின்ன சண்டைகளையோ, கோபவார்த்தைகளையோ மறக்கும் வலிமை கொண்டிருங்கள். வாழ்க்கை அழகானது. உங்களுடைய ஈகோவும், வறட்டு கௌரவமும் அதை அழுக்காக்காமல் கவனமாய் இருங்கள்.
அடுத்தவர்களுடைய விமர்சனங்களையோ, கிண்டலையோ மனதில் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை அமைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்களுடையது. இதில் மகிழ்ச்சியாய் இருக்க முடிவெடுப்பதும் நீங்களே. நீங்கள் நீங்களாய் இருங்கள். அது போதும் !
தோல்விகளைக் குறித்த பயங்களை ஒதுக்குங்கள். வழுக்கி விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள முடியாது. தோல்விகளையும் மகிழ்ச்சியை நோக்கிய பயணமாகவே கருதுங்கள். மகிழ்ச்சி என்பது நீங்கள் யார், எப்படி இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதல்ல. நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள், எப்படிச் செயல்படுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் வருவதே !
புன்னகையுங்கள். மகிழ்ச்சி என்பது நாம் தேடி அடையும் பொருள் அல்ல. மகிழ்ச்சி என்பது உணர்ந்து கொள்ளும் விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றி மகிழ்ச்சியைக் கொண்டு வருவதை விட அதிகமாய் மகிழ்ச்சி வெற்றியைக் கொண்டு வரும்.
மகிழுங்கள் ! சோகத்தின் தள்ளுவண்டியை தள்ளியே வையுங்கள் !