குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

மரியாதை கலந்த அங்கீகாரம்

 

kvr3

 

மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.

அந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் ? மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே ! ஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் ? என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம் !

அத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக ! உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் ! அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி !

வார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ? ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ! உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள் !

இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு ! மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.

ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.

கணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம், அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

கண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை ! உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை ! இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.

விட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க ? என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம் !

“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

மரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள் ?

இருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா ? மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா ? ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் ! உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.

கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே !

வாங்க ஜெயிக்கலாம் : எனது புதிய நூல்

“இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க” எனக்கு முன்னால் கத்தையாய் கொஞ்சம் பேப்பரைப் போட்டார் பிலால், பிளாக் ஹோல் மீடியா நிறுவனர்.

ஏதோ ஸ்கூல் பிள்ளைங்களோட பரீட்சை பேப்பர் போல இருந்தது. வித விதமான கை எழுத்துகளில் கிறுக்கலாய் கிடந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து வாசித்தேன். புரியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“என்ன தலைவரே இதெல்லாம் ?”

தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அவர், அருகில் ஆசிரியர் யாணன் அவர்கள்.

ஒருபக்கம் பெண்கள் வளர்கிறாங்கன்னு சொல்றோம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக் காணோம். அப்படி என்னென்ன பிரச்சினைகளைத் தான் பெண்கள் முக்கியமா எதிர்கொள்றாங்க ? அவங்களுக்கு இன்னிக்கு என்னென்ன விஷயத்துல பாதுகாப்பும், ஆலோசனையும் தேவைன்னு யோசிச்சோம். பெண்களோட பிரச்சினையை பெண்களே சொல்லட்டுமேன்னு முடிவு பண்ணினோம். அதோட விளைவு தான் இந்தப் பேப்பர்கள் !

வேலைபாக்கிற பெண்கள் தொடங்கி படிக்கிற பெண்கள் வரை நிறைய பேர்கிட்டே பேப்பரைக் கொடுத்து அவங்களுக்கு ஆலோசனை தேவைப்படற ஐந்து பிரச்சினைகளை எழுதச் சொன்னோம். அந்தப் பிரச்சினைகள் தான் இந்தக் காகிதங்கள்ல இருக்கு.

இந்தப் பிரச்சினைகள்ல முக்கியமான சில பிரச்சினைகளை எடுத்து ஒரு நல்ல புக் போடணும். அது பெண்களோட பிரச்சினைகளுக்கு ஒரு தோழியா கூடவே இருந்து வழிகாட்டணும். அதுதான் பிளாக் ஹோல் மீடியாவோட ஐடியா.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். படிகப் படிக்க வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை ? பெண்கள் வளர வளர அவர்களுக்கு எதிரான சதி வலைகளும் கூட வளர்கிறதோ எனும் பயமும் உருவாகிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகளும், புதைகுழிகளும் அவர்களுடைய பாதைகளில் மறைந்து தான் கிடக்கின்றன. வாசித்தவற்றில் பல பிரச்சினைகள் புதியவை. சில பிரச்சினைகள் விகடன், பெண்ணே நீ போன்ற இதழ்களுக்காக பிரத்தேயகமாக எழுதப்பட்டவை.

“என்ன செய்யலாம் சொல்லுங்க” என்றேன்.

அந்தந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது, பிரச்சினைகளைக் குறித்து அலசி ஆராய்வது, கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து கட்டுரைகள் எழுதுவது என முடிவானது !

அப்படி எழுதப்பட்ட கட்டுரைகள் தான் “வாங்க ஜெயிக்கலாம்” எனும் கட்டுரைத் தொகுப்பு.

பெண்களோட வளர்ச்சிக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்களை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. “நீ நெருப்பின் நடுவில் இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போகாமல், எப்படி வெந்து போகாமல் வெளியே வருவது என்றும் இந்த கட்டுரைகள் வழிகாட்டுகின்றன.

வெற்றி என்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ பெறும் மதிப்பெண்களில் மட்டும் அடங்கிவிடுவதல்ல. சமூகம் நம்மீது திணிக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஜெயித்துக் காட்டுவது தான். வாங்க ஜெயிக்கலாம் நூல் அந்தப் பணியை திறம்படச் செய்திருக்கிறது என நம்புகிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால், வாசித்துப் பாருங்கள்.வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

Pages : 172,  Rs : 130/-

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

வாக்களிக்க விரும்பினால் கிளிக்குங்கள்

சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?

நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?

எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.

இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர். ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர். 

திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும். 

“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.

குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன. 

பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.

பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது  குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர். 

மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.

சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).

தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.

ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.  

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.

கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை !  முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.

நன்றி : பெண்ணே நீ…

நண்பர்கள் வாக்களிக்க விரும்பினால்…

சேவியர்