அன்பு வெற்றியாளர்களை உருவாக்கும்

ஒவ்வொரு மனிதனும் அன்பு செய்யவும், 
அன்பு செய்யப் படவுமே உருவாக்கப்பட்டுள்ளான்.
 –  அன்னை தெரேசா

சில குழந்தைகளைப் பார்த்தால் ரொம்பவே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலரோ ரொம்பவே அமைதியாக, தனிமையாக இருப்பார்கள்.

சில இளைஞர்கள் மிகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகளுக்குத் தாவி ஓடிக் கொண்டே இருப்பார்கள். வேறு சில இளைஞர்கள் வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிக்க முடியாமல் பின் தங்கி விடுவார்கள். பெரும்பாலும் கிடைக்கும் இடத்தில் தங்களை நுழைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முயல்வார்கள். இந்த வித்தியாசங்கள் பல வேளைகளில் நம்மை வியப்படைய வைக்கிறது.

இதன் காரணம் என்ன என்பதை பல்வேறு உளவியலார்கள் ஆராய்ந்தார்கள். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் சொன்னது என்ன தெரியுமா ? “அன்பு தான் இந்த மாற்றங்களுக்கான காரணம் !”

கொஞ்சம் ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவு தான். ஒருவனுடைய தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் அடி நாதமாக இயங்குவது அவன் தன்னுடைய குடும்பத்தில் எத்தகைய சூழலில் வளக்கப்பட்டான் என்பதே ! சின்ன வயதிலேயே பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் கிடைத்து வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்கிறார்கள் என்பதே அந்த ஆய்வு முடிவு.

இன்றைய பெற்றோர் தங்களுடைய பொருளாதார ஓட்டங்களுக்காக குடும்ப உறவுகளை பின் தங்க வைத்து விடுவது வேதனையான உண்மை. அவர்களுக்கு குடும்ப உறவு என்பது நள்ளிரவு தாண்டியோ, வார இறுதி நாட்களிலோ மட்டுமே பூக்கின்ற பூ தான்.

அப்படிப்பட்ட தந்தை ஒருவரிடம் மகன் ஒரு நாள் கேட்டான். “அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துக்கு எவ்ளோ ரூபா சம்பாதிப்பீங்க ?”

“நான் எவ்ளோ சம்பாதிச்சா உனக்கென்னடா ? ஏழு வயசுல இதெல்லாம் என்ன கேள்வி ?”

“சொல்லுங்கப்பா பிளீஸ்”

“ஒரு மணி நேரத்துக்கு நான் நூறு ரூபா சம்பாதிப்பேன்.”

“சரி எனக்கு ஒரு நாப்பது ரூபா குடுங்க “

தான் எவ்வளவு சம்பாதிக்கிறோம் எனக் கேட்டு, நாசூக்காய் நாற்பது ரூபாய் கேட்கும் மகனிடம் தந்தைக்கு எரிச்சல் வந்தது. பளாரென ஒரு அறை கொடுத்து விட்டு போய்விட்டார். ஆனால் இரவில் அவருக்கு மனம் வலித்தது. நேராகப் பையனிடம் சென்றார். “இந்தாப்பா 40 ரூபா. ஏன் ஸ்கூல்ல ஏதாச்சும் வாங்கணுமா ?”

பையனோ பதில் பேசாமல் ஓடிச் சென்று தன் புத்தகப் பையைத் திறந்தான். அதில் சில்லறைகளாகவும் நோட்டுகளாகவும் இருந்த பணத்தை அள்ளினான். கையில் இருந்த நாற்பது ரூபாயையும் அதிலே வைத்தான்.

‘டாடி.. இப்போ 100 ரூபா இதுல இருக்கு, நாளைக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னைக் கொஞ்சுவீங்களா ?”

தந்தையின் மனம் நெகிழ்ந்தது. அலுவல் தேடல்களுக்காக ஓடி ஓடி தனது மகனை ஏக்கத்தில் தவிக்க விட்டிருப்பதை அவர் உணர்ந்தார். மகனை அள்ளி அணைத்துக் கொண்டார். அவரது கண்கள் வழிந்தன.

உங்கள் பிள்ளைகள் நாளை தன்னம்பிக்கையும் வெற்றியும் உடையவர்களாக விளங்க வேண்டுமா ? நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களுக்கு பாடம் கற்பிப்பதல்ல, அன்பைப் பகிர்வது. அவர்களை மரியாதையுடன் நடத்தி அவர்களை மட்டந்தட்டாமல் இருப்பது. அவர்களுக்கு தேவையான உதவிகளைக் கொடுத்து அவர்களை ஊக்குவிப்பது !

அன்பு, மரியாதை, ஊக்குவித்தல் எனும் மூன்று விஷயங்களையும் பெற்றோர் குழந்தைகளுக்கு போதுமான அளவுக்குக் கொடுத்தாலே போதும், தங்கள் எதிர்கால வாழ்க்கையைக் குழந்தைகள் தாங்களாகவே அமைத்துக் கொள்வார்கள்.

பெற்றோர் பிள்ளைகள் உறவு நாட்கள் செல்லச் செல்ல இன்னும் நெருக்கமாகி வழிகாட்டும் ஒரு துணையாக மாறிப் போகும் குடும்பங்கள் பாக்கியம் செய்தவை. வாழ்வின் இனிமையும் வெற்றியும் அவர்களிடம் நிச்சயம் தங்கும்.

ஒரு தந்தையும் மகளும் ஆற்றைக் கடப்பதற்காகப் பாலத்தில் நடந்தார்கள். ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். தந்தை சொன்னார், “என்னோட கையைக் கெட்டியாப் புடிச்சுக்கோ”. மகளோ, ‘இல்லையில்லை, நீங்க என் கையைப் புடிச்சுக்கோங்க” என்றாள். தந்தைக்குப் புரியவில்லை. “இதுல என்ன வித்தியாசம் ?” என்றார் கேள்வியுடன்.

“நிறைய இருக்கு டாடி. நான் உங்க கையைப் புடிச்சா, ஒருவேளை பயந்து போய் விட்டுடுவேன். நீங்க என் கையைப் புடிச்சா ஸ்ட்ராங்கா புடிப்பீங்க. என்ன வந்தாலும் விட மாட்டீங்க. அதான் உங்க கிட்டே புடிக்க சொன்னேன்” என்றாள் மகள். தந்தை நெகிழ்ந்தார். மகளைத் தூக்கிக் கொண்டார்.

இத்தகைய நம்பிக்கையும், அன்பும் கலந்த இறுக்கமான கைப்பற்றுதலை உங்கள் பிள்ளைகளிடம் கொடுங்கள். அவர்கள் நிம்மதியின் நிழலிலும், அன்பின் கதகதப்பிலும் வாழ்க்கையைத் தொடரட்டும். அது அவர்களுடைய மனதுக்குள் தன்னம்பிக்கையின் விதையை நடும்.

அந்த விதை அவர்களுடைய வாலிப வயதில் அவர்களை மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும். அது அவர்களை நிச்சயம் வெற்றியாளர்களாய் உருவாக்கும் ! அன்பே தன்னம்பிக்கையின் அடிப்படை !

நெகடிவ் சிந்தனையும் தேவை

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை. – ஜான் மெக்டனால்ட்

பாசிடிவ் சிந்தனைகள் குறித்து மட்டுமே பெரும்பாலும் நாம் கேட்கிறோம். நெகடிவ் திங்கிங் என்பது சாவான பாவம் போல ஒதுக்கியே வைத்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் இரண்டும் கலந்த நிகழ்வுகளே எழுகின்றன. சில இடங்களில் நெகடிவ் சிந்தனைகள் கூட நம்மை வழிநடத்திச் செல்லும் என்கிறார் டாக்டர். ஜேம்ஸ் டாப்ஸன்.

காரில் ஏறி அமர்கிறோம். உடனே சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம். அல்லது “எல்லாரும் சீட் பெல்ட் போடுங்க” என்று சொல்கிறோம். இதன் காரணம் என்ன ? ஒருவேளை ஆக்சிடன்ட் ஆச்சுன்னா என்ன பண்றது ? சீல் பெல்ட் போட்டா உயிர் தப்ப வாய்ப்பு இருக்கு. இல்லேன்னா உயிருக்கே ஆபத்து தான் போன்ற எதிர்மறை சிந்தனைகள் தான் இல்லையா ? விபத்து நடந்தால் எனும் எதிர்மறைச் சிந்தனை தான் நம்மை சீட் பெல்ட் அணியத் தூண்டுகிறது.

“ஒரு லைஃப் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கணும்ங்க. ஒருவேளை நாம பொட்டுன்னு போயிட்டா பிள்ளைங்க நாளைக்கு நடுத் தெருவில நிக்கக் கூடாது” என பரிதவிக்கும் ஒரு தந்தையிடமும் ஒரு நெகடிவ் சிந்தனையே எழுகிறது. அந்த எதிர்மறைச் சிந்தனை தான் அவரை ஒரு ஆயுள் காப்பீடு வாங்க தூண்டுகிறது.

கஞ்சா பொட்டலம் கையில் இருந்தாலும் தூக்கித் தூர எறியவேண்டும் எனும் எண்ணம் தோன்றுவதில் கூட கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருக்கும். “இதைச் சாப்பிட்டு, இதுக்கு அடிமையாகி, உருப்படாதவனா, கெட்டவனா, நோயாளியா வாழ்வதா ?” என்பன போன்ற எதிர் சிந்தனைகளே தீய பழக்கங்களை விட்டு நம்மை விலக்குகிறது. “நாம் செய்கின்ற இந்தச் சிற்றின்பத் தப்பு வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்” எனும் பயம் கலந்த நெகடிவ் சிந்தனை தான் நம்மை அந்த விஷயத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது.

எனவே நெகடிவ் சிந்தனை என்பது ஒட்டு மொத்தமாகக் கெட்டதல்ல. அது சில நல்ல முடிவுகளை எடுக்க நமக்கு உதவுமானால் அந்த சிந்தனைகள் நல்லதே. எந்த முடிவை எடுத்தாலும் அதை புத்திசாலித்தனத்துடனும், நல்ல சிந்தித்தும் எடுங்கள் என்கிறார் டாக்டர் ஜேம்ஸ் டாப்ஸன் சொல்லும் அறிவுரையாகும்.

மெல்லிய நெகடிவ் அலைகள் நம்மைச் சுற்றி அதிக அலர்ட் ஆக இருக்க வைக்கும். நாம் சார்ந்த சூழலைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு அதிகம் இருக்க உதவும். கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருப்பது நல்லதே என்கிறது “நியூ சவுத் வேல்ஸ்” பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. நேர்சிந்தனைகளையும், சில நேர் விளைவுகளையும் நெகடிவ் சிந்தனைகள் உருவாக்கி விட முடியும்.

எதிர் சிந்தனைகளின் விளைவுகள் பாசிடிவ் ஆக இருந்தால், அல்லது எதிர் சிந்தனைகள் நம்மை ஒரு எச்சரிக்கை உணர்வுக்கு கூட்டிச் சென்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. “நாய் கடிக்குமோ” எனும் பயத்தில் வெறிநாய்களை விட்டு விலகிச் செல்வது ஒரு எச்சரிக்கை உணர்வு. ஓடும் யானைக்கு எதிரே நிற்காமல் விலகி நிற்பது புத்திசாலித்தனமான முடிவு. கடுகடுப்பான பாஸ் திட்டக் கூடும் என கவனமாய் இருப்பது நல்லது. இப்படி எதிர்மறைச் சிந்தனைகளெல்லாம் செயல்களை நேர்கோட்டில் கொண்டு நிறுத்தினால் அவை வரவேற்கப்பட வேண்டியதே.

உலக இலக்கியங்களில் பலவும் மனிதர்கள் உணர்ச்சியின் மிகுதியால் இருக்கும் போது உருவானவையே. தார்மீகக் கோபம், காதலின் சோகம், துரோகத்தின் கசப்பு இவையெல்லாம் உலக இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருக்கின்றன.

பாசிடிவ் விஷயங்கள் நெகடிவ் செயல்களை ஏற்படுத்துவதுண்டு. ஹிரோஷிமாவை அழித்துத் துவம்சம் செய்த அணுகுண்டைப் போல. நெகடிவ் விஷயங்கள் நம்மை பாதுகாப்பதும் உண்டு, கார் சீட் பெல்ட் போல. எந்த விஷயத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

மரணம் குறித்த சிந்தனை நம்மை வாழத் தூண்டவேண்டும். நெகடிவ் சிந்தனை நம்மை பாசிடிவ் வாழ்க்கைக்கு வழிநடத்த வேண்டும். அது தான் முக்கியம் !

பொறுமை கடலினும் பெரிது.

பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான். – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம்.

பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம். பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை. ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள்.

நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும் !

பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை. அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தரமுடியும். “நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்” எனும் லியோ டால்ஸ்டாயின் தத்துவ முத்து பொய் சொல்வதில்லை !

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும் !

பொறுமையான முயற்சியே வெற்றியின் அடிநாதம் என்பதை எல்லா சாதனையாளர்களும் ஒத்துக் கொள்வார்கள். யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை. வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் !

வெற்றியையும், வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிது தான் !