நினைவில் நிற்கும் கலாம் : A Christian Article

2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.

அறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.

“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.

ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.

ஒன்று. அவ‌ருடைய எளிமை,

இரண்டு அவருடைய நேர்மை,

மூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.

சாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.

ஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.

அவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.

அன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.

விழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா ?

உல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.

அவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.

“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.

“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.

க‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி  ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ ?

தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.

எந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.

அவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் ?

சுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.

ந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌ட்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

க‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.

அதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்

 

அன்புட‌ன்

சேவிய‌ர்