பைபிள் மாந்தர்கள் 57 (தினத்தந்தி) எஸ்ரா

எஸ்ரா ஒரு குரு. இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், ஆன்மீகத் தரத்தையும் உயர்த்தப் பாடுபட்டவர். இவருடைய காலத்தில் தான் இறையாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்கள் நடைபெற்றன. குருக்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அவர்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்து அரசியல், ஆன்மீகப் பொறுப்புகளை குருக்களிடமே ஒப்படைத்தவர் அவர்.

பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியாவைக் கைப்பற்றிய ஆண்டு கி.மு.538. வந்ததும் முதல் வேலையாக இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை கொடுத்து, யூதாவுக்குச் செல்லுங்கள் என அனுப்பியும் வைத்தார்.

அவர்களை வெறும‌னே அனுப்ப‌வில்லை. அனுப்பும்போது “இஸ்ர‌யேல‌ர்க‌ளின் க‌ட‌வுளே உண்மைக் க‌ட‌வுள். அவ‌ர்க‌ள் இஸ்ர‌யேலுக்குத் திரும்பிச் சென்று க‌ட‌வுளின் ஆல‌ய‌த்தைக் க‌ட்டி எழுப்ப‌ட்டும். அத‌ற்கு ம‌க்க‌ள் அனைவ‌ரும் த‌ன்னார்வ‌க் காணிக்கைக‌ளை அளிக்க‌ட்டும் என‌ அறிக்கையும் விட்டார்’

ம‌ன்ன‌னின் வேண்டுகோளை ஏற்று, ம‌க்க‌ள் வெள்ளி, பொன், கால்ந‌டைக‌ள், பொருட்க‌ள், விலையுய‌ர்ந்த‌ பாத்திர‌ங்க‌ள் என‌ எல்லாவ‌ற்றையும் கொடுத்து உத‌வின‌ர். பெரும் பொக்கிஷ‌ங்க‌ளோடு இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினர் அப்போது நாடு திரும்பினார். அவர்களுக்கு செருபாவேல் தலைமை தாங்கினார்.

எருசலேம் தேவாலயம் அப்போது அழிந்த நிலையில் இருந்தது. திரும்பி வந்தவர்கள் எருசலேம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பி புதிதாக்கத் துவங்கினார்கள். ஆனால் அந்த‌ ப‌ணி முழுமைய‌டைய‌வில்லை. ஆண்ட‌வ‌ரின் கோயில் க‌ட்டி எழுப்ப‌ முடியாத‌ப‌டி எதிர்ப்பாள‌ர்க‌ள் எழுந்தார்க‌ள். சைர‌சு ஆட்சிகால‌ம் முதல் தாரிபு ம‌ன்ன‌னின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு  வ‌ரைக்கும் இந்த‌ ஆல‌ய‌ம் க‌ட்டும் ப‌ணி த‌டைப‌ட்டுக் கொண்டே இருந்த‌து.

செரூபாவேலும் தலைவர்களும் மீண்டும் ஒரு முறை கூடி ஆலயம் கட்டும் வேலையை ஆரம்பிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். ஆலயம் கட்டும் வேலை மீண்டும் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் அமைதி காக்கவில்லை. விஷயம் மன்னன் தாரிபு காதுகளுக்கு எட்டியது.

தாரிபு விசாரித்தான்.

இஸ்ரவேலர்கள் அவர்களுடைய ஆண்டவருக்கு ஆலயம் கட்டுகிறார்கள். இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். சைரஸ் மன்னன் இதற்கான அனுமதியைக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். அனுமதியோடு சேர்த்து செல்வங்களையும் கொடுத்ததாக அவர்கள் கூறித் திரிகின்றனர். எனும் செய்தி  மன்னனிடம் கூறப்பட்டது.

தாரிபு யோசித்தார். இந்த செய்திகளெல்லாம் உண்மையா என்பதைக் கண்டறிய வேண்டும் என ஆணையிட்டான். பாபிலோனின் கருவூலம் சோதனையிடப் பட்டது. ஏட்டுச் சுருள்கள் இருந்த அறை புரட்டப்பட்டது. கடைசியில் அந்த முக்கியமான ஏட்டுச் சுருள் அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்பட்டது.

உண்மை தான் ! மன்னன் கட்டளையிட்டிருக்கிறான். ஆலயத்தைக் கட்டுவதற்கான ஐடியாக்களையும் வழங்கியிருக்கிறான். செல்வங்களையும் கொடுத்திருக்கிறான் எனும் செய்திகளெல்லாம் தாரிபு மன்னனுக்குத் தெரிய வந்தது.

ஆலயம் கட்டும் வேலையைத் தடைசெய்ய வேண்டாம், அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கட்டளையிட்டான் மன்னன். இஸ்ரயேல் மக்கள் மகிழ்ந்தனர். தாரியு மன்னனின் ஆறாவது ஆட்சியாண்டில் ஆலயம் கட்டும் வேலை முடிவடைந்தது. நுறு காளைகள்,இருநூறு செம்மரிக் கடாக்கள், நானூறு குட்டிகள் என பெரும் பலி நிகழ்ந்து, ஆலயம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பாஸ்கா விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பாபிலோனிலிருந்து இஸ்ரயேல் மக்களில் இன்னொரு பகுதியினர் திரும்பி யூதாவுக்கு வந்தனர். அப்போது பாபிலோனை அர்த்தசஸ்தா ஆட்சி செய்து வந்தார். அவர்களுக்குத் தலைமையேறு வந்தவர் தான் எஸ்ரா. மன்னர் அர்த்தசஸ்தா எஸ்ராவுக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஏராளமான செல்வங்களைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்தது.  எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அக்கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் வேற்று இன‌ப் பெண்ணை ம‌ண‌ப்ப‌து இறைவ‌னுக்கு எதிரான‌ செய‌லாக‌ப் பார்க்க‌ப் ப‌ட்ட‌து. அது க‌ட‌வுளின் நேர‌டிக் கோப‌த்துக்கு ஆளாவ‌தைப் போன்ற‌து. எஸ்ராவின் கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் அந்த‌ப் பாவ‌த்தைச் செய்து வ‌ந்த‌ன‌ர். எஸ்ரா ம‌ன‌ம் க‌ல‌ங்கினார். ம‌க்க‌ளிட‌ம் வ‌ந்து க‌ட‌வுளின் வார்த்தைக‌ளைச் சொல்லி எச்ச‌ரிக்கையும் விடுத்தார். ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வ‌ழியை விட்டு வில‌குவ‌தாக‌ எஸ்ராவிட‌ம் உறுதிமொழி கொடுத்தன‌ர்.

எஸ்ராவின் நூல் சில முக்கியமான விஷயங்களை சொல்லித் தருகிறது. !

எரேமியா இறைவாக்கின‌ர் எருச‌லேமின் அழிவை மிக‌ துல்லிய‌மாக‌ இத‌ற்கு முன்பே இறைவாக்கு உரைத்திருந்தார். எழுப‌து ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் அது மீண்டும் க‌ட்டு எழுப்ப‌ப்ப‌டும் என்றும் அவ‌ர் உரைத்திருந்தார். அந்த‌ இறைவாக்கு நிறைவேறிய‌து. அந்த காலத்திலேயே, ஆல‌ய‌ம் க‌ட்ட‌ ம‌க்க‌ள் உத‌வினார்க‌ள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.

எஸ்ராவின் இறை நேச‌மும், ம‌க்க‌ளை வழிநடத்தும் திற‌மையும், க‌ட‌வுளுக்கு முன்னால் க‌சிந்துருகித் த‌ன்னைத் தாழ்த்தும் பாங்கும், ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் வ‌ல்ல‌மையும் நாம் க‌ற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ சில‌ உய‌ர்ந்த‌  விஷ‌ய‌ங்க‌ளாகும்.

பைபிள் மாந்தர்கள் 55 (தினத்தந்தி) எசேக்கியா

எசேக்கியா யூதாவின் அரசனாக முடிசூட்டிக் கொண்டபோது அவருக்கு வயது 25. தாவீது மன்னனைப் போல கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் எசேக்கியா. நாட்டு மக்கள் வேற்று தெய்வங்களையும், சிலைகளையும் வழிபட்டு வந்தனர். மோசே அடையாளத்துக்காய் செய்து வைத்திருந்த வெண்கலப் பாம்பைக் கூட தூபம் காட்டி வழிபட்டு வந்தனர். எசேக்கியா அத்தனை சிலைகளையும் உடைத்து, தூண்களைத் தகர்த்து நாட்டை தூய்மையாக்கினார்.

இதனால், மீண்டும் உண்மைக் கடவுளை வழிபடும் கூட்டம் அதிகரித்தது. மக்கள் கடவுளை உண்மையுடனும், ஆத்மார்த்தமாகவும் தொழ ஆரம்பித்தனர். காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்த தயக்கம் காட்டவில்லை. எகேக்கியா மன்னன் யூதா நாடு முழுவதும் இந்த மத சீர்திருத்தத்தைச் செய்தார்.

எசேக்கிய மன்னனுக்கு எதிராக அசீரிய மன்னன் செனகெரிபு எழுந்தான். அவன் ஏற்கனவே இஸ்ரவேலின் பத்து கோத்திர நகரங்களை கைப்பற்றியிருந்தான். இப்போது அவன் எசேக்கியாவுக்கு எதிராக போரிட வந்தான்.

எசேக்கிய மன்னன் போரைத் தவிர்க்க விரும்பி சிரிய மன்னனுக்கு அளவில்லாத செல்வத்தை அள்ளி வழங்கினான். ஆண்டவரின் இல்லத்தில் இருந்தவற்றையெல்லாம் கூட‌ மன்னனுக்குக் கொடுத்தான். ஆனால் அவ‌னுடைய‌ க‌ர்வ‌ம் தீர‌வில்லை. எந்த‌க் க‌ட‌வுளும் என்னோடு போரிட்டு வெற்றி பெற‌ முடியாது. எல்லா க‌ட‌வுள்க‌ளையும் விட‌ நானே வ‌லிமையான‌வ‌ன் என‌ க‌ர்வ‌ம் கொண்டு எசேக்கிய‌ ம‌ன்ன‌னை ஏள‌ன‌ம் செய்தான்.

எசேக்கிய‌ ம‌ன்ன‌ன் க‌ட‌வுளின் ஆல‌ய‌த்துக்குச் சென்று அவ‌ர‌து பாத‌த்தில் ச‌ர‌ணடைந்தார். ஆடைக‌ளைக் கிழித்து த‌ன்னைப் ப‌ணிவான‌வ‌னாக்கினான். க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். த‌ன்னை இழிவாய்ப் பேசிய‌ ம‌ன்ன‌னுடைய‌ படை வீரர்கள் ஒரு இல‌ட்ச‌த்து எண்ப‌தாயிர‌ம் பேரை க‌ட‌வுளின் தூத‌ர் அன்று இர‌வே கொன்றார். எசேக்கியேலுக்குப் போர் தேவைப்ப‌ட‌வில்லை. சிரிய‌ ம‌ன்ன‌னோ ந‌ட‌ந்த‌தைக் க‌ண்டு அதிர்ச்சிய‌டைந்தான். த‌ன‌து க‌ட‌வுளான‌ நிஸ்ரோக்கின் ஆல‌ய‌த்தில் சென்று வ‌ழிபாடு செய்தான். அப்போது அவ‌னுடைய‌ ம‌க‌ன்க‌ளில் இருவ‌ர் வ‌ந்து அவரை வெட்டிக் கொன்ற‌ன‌ர் !

கால‌ங்க‌ள் கட‌ந்த‌ன‌. எசேக்கியா ம‌ன்ன‌னுக்கு நோய் வ‌ந்த‌து. ப‌டுத்த‌ ப‌டுக்கையானான். இறைவாக்கின‌ர் எசாயா அவ‌ரிட‌ம் வ‌ந்து. ‘நீர் இற‌ந்து போய் விடுவீர் என்ப‌து க‌ட‌வுளின் வாக்கு’. என்று சொன்னார். எசேக்கியேல் ப‌த‌றினார். ஆண்ட‌வ‌ரே..உம் பார்வையில் ந‌ல்ல‌வ‌னாய் வாழ்ந்தேனே என‌க்கு நோயை தீர்த்து ஆயுளை நீட்டித்துத் தாரும். என‌ க‌த‌றி அழுது வேண்டினார்.

க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். மீண்டும் எசாயா வ‌ழியாக‌ எசேக்கியேலிட‌ம் பேசினார். “க‌ட‌வுளின் வாக்கு என‌க்கு வ‌ந்த‌து. நீர் இன்னும் 15 ஆண்டுக‌ள் வாழ்வீர். இன்றிலிருந்து மூன்றாவ‌து நாளில் க‌ட‌வுளின் இல்ல‌ம் செல்வீர்” என்று மன்னனிடம் தெரிவித்தார் எசாயா.

‘அத‌ற்கு என்ன‌ அடையாள‌ம் ?” எசேக்கியா கேட்டார்.

‘நீயே சொல். உன‌து நிழ‌ல் ப‌த்து பாகை முன்னால் போக‌ வேண்டுமா, பத்து பாகை பின்னால் வ‌ர‌ வேண்டுமா ?” எசாயா கேட்டார்.

‘நிழ‌ல் முன்னால் போவ‌து எளிது. ப‌த்து பாகை பின்னால் வ‌ர‌ட்டும்’ எசேக்கியா சொன்னார்.

எசாயா க‌ட‌வுளிட‌ம் வேண்டினார். நிழ‌ல் ப‌த்து பாகை பின்னால் வ‌ந்த‌து. எசேக்கியா மகிழ்ந்தார். அவ‌ருடைய‌ நோய் நீங்கிய‌து. வாழ்க்கை தொட‌ர்ந்த‌து.

“உம‌க்குப் பின் உம்முடைய‌ ம‌க‌ன்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு பாபிலோனுக்குக் கொண்டு போக‌ப்ப‌டுவார்க‌ள். ‘ என்றார் எசாயா. எசேக்கியேல் அதைக் குறித்து அல‌ட்டிக் கொள்ள‌வில்லை. த‌ன‌து வாழ்நாளில் நாடு ந‌ன்றாய், அமைதியாய் இருந்தால் போதும் என்றே அவ‌ர் நினைத்தார்

எசேக்கியாவின் வாழ்க்கை முடிந்த‌து. அவ‌னுக்குப் பின் அவ‌னுடைய‌ ம‌க‌ன் ம‌னாசே அர‌சரானார். ம‌னாசே அர‌ச‌னான‌போது அவ‌னுக்கு வ‌ய‌து ப‌ன்னிர‌ண்டு. க‌ட‌வுளுக்கு எதிரான‌ ஒரு வாழ்க்கையை அவ‌ன் வாழ்ந்தான். நாடு மீண்டும் மிக‌ மிக‌ மோச‌மான‌ நிலைக்குச் சென்ற‌து. அவ‌னுக்குப் பின் வ‌ந்த‌ அவ‌ன‌து ம‌க‌ன் ஆமோனும் க‌ட‌வுள் வெறுக்க‌த்த‌க்க‌ கெட்ட‌ ஆட்சியையே ந‌ட‌த்தினான்.

எசேக்கியா ஒருவேளை ப‌தினைந்து ஆண்டுக‌ள் அதிக‌மாய் வாழ‌வேண்டும் என‌ ஆசைப்ப‌டாம‌ல் இருந்திருந்தால் ம‌னாசே பிற‌ந்திருக்க‌வே மாட்டான். ம‌னாசேவின் ஐம்ப‌த்து ஐந்து ஐந்து ஆண்டு கெட்ட‌ ஆட்சி ந‌ட‌ந்திருக்க‌வே ந‌ட‌ந்திருக்காது. அவ‌னுடைய‌ ம‌க‌ன் ஆமோனும் பிற‌ந்திருக்க‌ மாட்டான்.உணர்த்தியதும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார் பவுல். “இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார்” என்று ம‌ன‌ப்பூர்வ‌மாய் ஒத்து கொண்டார். ஆனால் எசேக்கியா அப்படிச் செய்யவில்லை.

க‌ட‌வுள் ந‌ம‌க்காக‌ வைத்திருக்கும் திட்ட‌த்தை மீறி நாம் ந‌ம்முடைய‌ விருப்ப‌த்துக்காய் க‌ட‌வுளை இறைஞ்சி ம‌ன்றாடும்போது க‌ட‌வுள் ஒருவேளை அவ‌ற்றைத் த‌ருவார். ஆனால் அது ஆசீர்வாத‌ங்க‌ளுக்குப் ப‌திலாக‌ பெரும் சாப‌த்தைக் கொண்டு வ‌ரும் வாய்ப்பும் உண்டு என்ப‌தை எசேக்கியாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு விள‌க்குகிற‌து.

பைபிள் மாந்தர்கள் 23 (தினத்தந்தி) : இப்தா ( Jephthah)

இப்தா ஒரு வலிமையான போர் வீரன். ஒரு விலைமாதிற்குப் பிறந்தவன். எனவே அவனுடைய தந்தையின் குடும்பத்தினர் அவரை வெறுத்து துரத்தி விட்டார்கள். அவர் தப்பி ஓடி தோபு எனும் நாட்டில் வாழ்ந்து வந்தார். கடவுளின் அழைப்பு இப்தாவுக்கு வந்தது !

எத்தனை முறை பட்டாலும் திருந்தாத இனமாக இருந்தது இஸ்ரயேல். கடவுளின் தொடர்ந்த அன்பையும், பாதுகாப்பையும் பெற்ற அவர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து வேற்று தெய்வங்களை வழிபடத் துவங்கினார்கள். எனவே அவர்கள் பலவீனமடைந்து எதிரிகளால் மீண்டும் அடிமையாக்கப் பட்டார்கள். அம்மோனியர்கள் அவர்களை நீண்ட நெடிய பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் கடவுளிடம் கதறி மன்றாடினார்கள். இந்த முறை கடவுள் சட்டென மனம் இரங்கவில்லை. மீண்டும் மீண்டும் வழி விலகிச் செல்லும் மக்கள் மீது கோபம் கொண்டார். “வேறு தெய்வங்களைத் தேடிப் போனீர்களே..அவர்களே உங்களை விடுவிக்கட்டும் என்றார்”. மக்களோ தொடர்ந்து வேண்டினர்.

தங்களிடம் இருந்த வேற்று தெய்வ வழிபாடுகளை எல்லாம் விலக்கினர். மனம் திருந்தியதைச் செயலில் காட்டியதால் கடவுள் மனமிரங்கினார். அம்மோனியருக்கு எதிராக யார் போரிட்டு வெல்வாரோ அவரே நம் தலைவர் என மக்கள் தங்களுக்குள் முடிவு செய்தார்கள். அப்போது தான் இப்தா அழைக்கப்பட்டார்.

இப்தா மக்களிடம் வந்து,”என்னை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் என்னை அழைப்பீர்களோ ?” என தனது மன வருத்தத்தைக் கொட்டினார். மக்கள் அவரை சமாதானப் படுத்தி தங்கள் விடுதலைக்காகப் போரிடுமாறு வேண்டினார்கள். அவரும் ஒத்துக் கொண்டார்.

முதல் முயற்சியாக அம்மோனிய மன்னனிடம் ஒரு தூதனை அனுப்பி சமாதானம் செய்து கொள்ள முயன்றார். எதிரி மன்னன் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே போர் ஒன்றே முடிவு எனும் நிலை உருவானது. கடவுளின் அருள் இப்தாவின் மீது நிரம்பியது.

இப்தா ஒரு நேர்ச்சை செய்தார். “கடவுளே, நீர் எதிரிகளை என் கையில் ஒப்புவித்தால். நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது என் வீட்டு வாயிலில் இருந்து யார் புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரை எரிபலியாகத் தருவேன்” என்றார்.

போர் நடந்தது. ஆண்டவர் அருளுடன் போரிட்ட இப்தா வெற்றி பெற்றார். பதினெட்டு ஆண்டு கால துயர வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்தா மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். இந்த செய்தியைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுடன் மேள தாளங்களுடனும் அவரைச் சந்திக்க அவர் வீட்டு வாயிலில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் இப்தாவின் அன்பு மகள். ஒரே மகள். அவருக்கு வேறு பிள்ளைகளே இல்லை !

இப்தா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கதறினார்.. “ஐயோ மகளே.. என்னைத் துன்பத்தில் தள்ளி விட்டாயே” என்று புலம்பி தனது நேர்ச்சை பற்றி மகளிடம் சொன்னார். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் சட்டென கலைய, நிலைகுலைந்து போய் நின்றாள் மகள். ஆனாலும் கடவுளின் விருப்பமே நடக்கட்டும். இரண்டு மாதங்கள் நான் என் தோழியருடன் மலைகளில் சுற்றித் திரிந்து எனது கன்னிமை குறித்து நான் துக்கம் கொண்டாட வேண்டும் என்றாள் கண்ணீருடன்.

தந்தை தலையசைத்தார். மகள் மலைகளுக்கு பயணமானாள். இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் கன்னியாகவே தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்பா நான் தயார் என்றாள். இப்தா கடவுளுக்குச் செய்த நேர்ச்சையை நிறைவேற்றினார்.

அதிர்ச்சியும், வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கை இப்தாவுடையது. கடவுளுக்குக் கொடுத்த வாக்கை மன உறுதியுடன் இப்தா காப்பாறினார். அந்த நாட்களில் வீடுகளின் கீழ்த் தளத்திலும், வாயிலிலும் கால்நடைகளை பராமரிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இப்தா நேர்ச்சை செய்திருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவரை எதிர்கொள்ள வீட்டிலிருக்கும் பெண்கள் ஆடிப்பாடி செல்வார்கள் (1 சாமுவேல் 18 : 6-7 ) என்பதும் அன்றைய வழக்கமே ! எப்படியோ, கடவுளின் அழைப்பை அப்படியே ஏற்காமல் இப்தா செய்த நேர்ச்சை தேவையற்ற ஒன்று

தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற தன்னையே தந்த அந்த பெயர் தெரியா பெண்ணின் அன்பும், இறையச்சமும் பிரமிக்கவும் வெலவெலக்கவும் வைக்கிறது.

அழைப்புக்குக் கடவுள் செவி கொடுக்கவில்லையெனில் முதலில் நமது பாவங்களையெல்லாம் விலக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இறைவனின் வார்த்தைகளைச் சோதித்தறியும் தேவையற்ற நேர்ச்சைகளை ஒதுக்க வேண்டும். இறைவனின் முன் செய்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனது வாழ்க்கையை விட இறைவனையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.  என பல வேறுபட்ட படிப்பினைகள் இப்தாவின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

பைபிள் மாந்தர்கள் 19 (தினத்தந்தி) : ஏகூத்

ehud

இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும், கடவுள் அவர்களைத் தண்டிப்பதும், தண்டனை தாங்க முடியாமல் அவர்கள் கடவுளிடம் வேண்டுவதும், கடவுள் அவர்களை மீட்பதும், மீண்டும் இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும்… என அவர்களுடைய வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டே இருந்த காலகட்டம்.

பாவம் செய்த மக்களை விட்டுக் கடவுள் சற்றே பின்வாங்கினார். அவ்வளவு தான், அதுவரை வெல்ல முடியாதவர்களாய் இருந்த இஸ்ரயேலர்கள் திடீரென பலமிழந்தார்கள். மோவாபிய மன்னன் எக்லோன் சட்டென வலிமையடைந்தான். அவன் தன்னுடன் அம்மோனியரையும், அமலேக்கியரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேல் மக்களை போரில் வென்றான். இஸ்ரயேல் மக்கள் மோவாபிய மன்னனுக்கு அடிமையானார்கள்.

பதினெட்டு ஆண்டுகள் எக்லோனின் அடிமைத்தனத்தில் இஸ்ரயேலர்கள் கடும் துயர் அனுபவித்தார்கள். இப்போது அவர்களுக்கு மீண்டும் புத்தி வந்தது. ‘கடவுளே, தப்பு செய்து விட்டோம் எங்களைக் காப்பாற்றும்’ என கதறினார்கள். கடவுள் மனமிரங்கினார்.

இப்போது இஸ்ரயேல் மக்களை மீட்க கடவுள் தேர்ந்தெடுத்த நபர் ஏகூத் ! ஏகூத் இஸ்ரயேலர்களை  மீட்க வேண்டும் என தீர்மானித்தார்.. ஏகூத் இடதுகைப் பழக்கம் உடையவர். இஸ்ரயேல் மக்கள் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டி வந்தார்கள். அவர்கள் ஏகூத்திடம் கப்பம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். ஏகூத் ஒரு அடி நீளமுள்ள, இருபுறமும் கூர்மையான ஒரு வாளை எடுத்துக் கொண்டார். அதை வலது தொடையில் வைத்துக் கட்டிக் கொண்டு ஆடையால் மூடினார்.

மன்னன் கொழு கொழுவென இருந்தான். ஏகூத் கப்பத்தைக் கட்டி முடித்தபின் தன்னுடன் வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். பின் மன்னனிடம் திரும்பவும் சென்றார்.. “அரசே என்னிடம் ஒரு இரகசியச் செய்தி உள்ளது” ஏகூத் சொன்னார். உடனே மன்னர் “அமைதி” என்றார். சுற்றிலும் இருந்த பணியாளர்கள் எல்லோரும் அவரை விட்டுப் போனார்கள். அது குளிரூட்டப்பட்ட அறை.

மன்னன் ஆவலோடு எழுந்தான். ஏகூத் மின்னலென தனது இடது கையால் வலது தொடையிலிருந்த கத்தியை உருவினார். எக்லோனின் பருத்த தொந்தியில் சரக்கென குத்தினார். கத்தி மறு பக்கம் வெளியே வந்தது. கைப்பிடியும் வயிற்றுக்குள் சென்று விட்டது. அப்படிப்பட்ட ஒரு ஆக்ரோஷமான தாக்குதல்லை எதிர்பாராத மன்னன் நிலைகுலைந்து விழுந்தான்.

ஏகூத் ஏதும் நடவாதது போல வெளியே வந்தார். கதவை பூட்டினார். பின் குதிரையில் ஏறி விரைந்தார். எக்லோனின் வீரர்கள் மன்னனைக் காணாமல் அவருடைய அறைக்குச் சென்றார்கள். கதவு பூட்டியிருந்தது. சரி கழிவறைக்குப் போயிருப்பார் என அமைதி காத்தார்கள். வெகு நேரம் ஆளைக் காணாததால் மன்னனின் அறையைத் திறந்தார்கள். அங்கே மன்னன் உயிரிழந்த நிலையில் தரையில் அலங்கோலமாய்க் கிடந்தான்.

மன்னனைக் கொன்ற ஏகூத் இஸ்ரயேல் மக்களிடம் விரைந்து சென்றார். நடந்ததைக்கூறினார். ‘இதோ கடவுள் மோவாபியரான எதிரிகளை நமது கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என அழைத்தார். மக்கள் அனைவரும் உற்சாகமடைந்தார்கள். மோவாபிய மன்னனின் ஆட்சி இஸ்ரயேலர்களால் முடித்து வைக்கப்பட்டது !

மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நீண்ட நெடிய எண்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.

தமது வழிகளை விட்டு விலகிச் செல்லும் மக்களைக் கடவுள் கோபத்துடன் நிராகரிப்பதாக பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து சொல்கின்றன. மீண்டும் மக்கள் மனம் திரும்பி கடவுளிடம் வரும் போது அவர்களை மீட்க கடவுள்  ஒரு விடுதலையாளரை ஏற்படுத்துகிறார்.

மோவாபிய மன்னனிடம் அடிமையாய் இருந்த மக்கள் கடவுளை நோக்கிக் குரல் எழுப்ப 18 ஆண்டுகள் காத்திருந்தார்கள். அதன் பிறகு அபயக் குரல் எழுப்புகிறார்கள். 18 ஆண்டுகள் தங்களுடைய திறமைகளின் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்து முயற்சிகள் செய்து பார்த்திருக்கலாம். எல்லாவற்றிலும் தோல்வியே மிஞ்ச இனிமேல் நமக்கு கடவுள் மட்டுமே துணை என அவரிடம் வந்திருக்கலாம்.

“பாவம் செய்பவன் எல்லோரும் பாவத்துக்கு அடிமை” என்கிறார் இயேசு. இன்றும் பாவத்தில் விழுகின்ற மனிதன் உடனடியாக கடவுளை நோக்கி வேண்டுவதில்லை. “யாரும் செய்யாததா ? இது சின்ன பலவீனம் தான் பாவமில்லை, மனுஷ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்” என ஏதோ ஒரு சாக்குப் போக்கின் பின்னால் அவன் இளைப்பாறுகிறான். எல்லாம் கை மீறி, மீட்பும் கைநழுவும் சூழல் உருவாகும் போது அவன் அபயக் குரல் எழுப்புகிறான். கடவுள் அதுவரை பொறுமையாய்க் காத்திருக்கிறார் !

பாவம் எனும் பள்ளத்தில் விழுபவர்களில் சிலர் அங்கேயே குடியிருக்கிறார்கள். சிலர் சில காலம் தங்கியிருக்கிறார்கள். சிலர் கரையேறிக் கரையேறி மீண்டும் குதிக்கிறார்கள். சிலர் மட்டுமே பதறிப் போய் கரையேறி சட்டென குளித்து தூய்மையாகிறார்கள். தூய்மை வாழ்வைத் தேடும் அத்தகைய பதட்டமே ஆன்மீகத்தின் ஆழங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

தவறாத மனிதன் இல்லை. தவறிவிட்டோம் என்பதை உணராதவன் மனிதனே இல்லை !

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்… : நூல் குறித்து….

 

சிலருக்குக் கவிதை எழுதுவது பொழுதுபோக்கு. சிலருக்கு பொழுதெல்லாம் அதிலேயே போக்கு. இன்னும் சிலருக்கு அது ஒரு தவம். ஆழ்மன ஆராய்ச்சி செய்யும் காதல் தவம். புகாரியின் கவிதைகளைக் கூட அப்படியென்பேன் நான்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைகள் பரிச்சயமானது எனக்கு. இன்னும் அந்த முதல்க் கவிதையின் குளிர்ச் சாரலிலிருந்து நான் முழுமையாய் வெளியே வரவில்லை. இப்போது அவருடைய சமீபத்தியக் கவிதைத் தொகுப்பு என்னைப் பழைய நினைவுகளுக்குள் இன்னுமொருமுறை சிறை வைத்திருக்கிறது.

கவிதைகள் மீது எனக்கிருப்பதைக் காதல் என்று நான் சொன்னால், அவருக்கிருப்பது உயிர்க்காதல் என்றேனும் சொல்ல வேண்டும்.

சில வேளைகளில் கவிதை நூல்களை வேகமாய் வாசிக்கும் மனநிலை எனக்கும் நேர்வதுண்டு. வேகமாய் வாசிக்க கவிதையொன்றும் தினத்தந்தியல்ல. ஆனாலும் பாதிக் கவிதை வாசித்தபின்னும் பாதிக்காக் கவிதையெனில் அதை வேகமாய்க் கடந்து போகவே மனம் அவசரப்படுத்துகிறது. வேகமாய் வாசிக்க விடாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிளாக்ஹோல் கவிதைகள் கவிஞனை ஒரு தத்துவார்த்தவாதியாக முன்னிறுத்துகின்றன. அந்த தத்துவங்கள் காதலாகிக் கசிந்துருகி வழிகிறது “காதலிக்கிறேன் உன்னை எப்போதும்” நூலில்.

கடல்க் கவிதைப் பயணத்தில், தூரப்பார்வைக்கு உயரம் குறைந்த சின்னப்பாறையாய்த் தோன்றி, உள்ளே டைட்டானிக்கையே உடைத்துச் சிதைக்கும் வீரியம் கொண்ட பனிப்பாறைகள் தான் புகாரியின் கவிதைகள். நமது வாழ்வின் நிகழ்வுகளிலிருந்து அவருடைய கவிதைகள் கிளை முளைப்பிக்கின்றன. அவருடைய வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவை வேர் பெறுகின்றன. அவருடைய தமிழின் வற்றாத் தடாகத்திலிருந்து அவை நீர்பெறுகின்றன.

இந்த தஞ்சைக் கவிஞனிடம் தஞ்சம் கொண்டிருப்பது சந்த மனசு. ஆனால் இந்தத் தொகுப்பில் சந்தக் கவிதைகளைக் கொஞ்சம் சத்தம் காட்டாமல் அடக்கியே வைத்திருக்கிறார். எனினும் சன்னல் திறக்கையில் சிரித்துக் கடக்கும் சின்னப் புன்னகையாய் ஆங்காங்கே அவருடைய சந்த வீச்சுகள் விழாமலில்லை.

காதலில்லாமல் எப்படி

ஒரு நொடி நகர்த்துவது ?

என்கிறார் புகாரி. அவருடைய இந்த வரிகளைப் புரிந்து கொள்ள அவருடைய காதலுக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தனது முன்னுரையிலேயே எழுதி வாசகனை கவிதைக்குள் வழியனுப்பி வைத்திருக்கும் உத்தி சிலாகிக்க வைக்கிறது !

காதலிக்கும் ஒவ்வொரு மனிதனும் இவருடைய கவிதைகளின் வரிகளில் விழுந்து விடாமல் இருக்க முடியாது. காதல் கானகத்தின் வரிக்குதிரைகளாய் கவிதை வரிகள் துள்ளித் திரிகின்றன.

வேகமாய் ஓடிக் கிடந்தவன்

நிதானமாய் நடக்கிறான்,

மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்

கனிந்து குழைகிறான்

என காதலிக்கும் இளைஞனின் மனநிலையைப் பதிவு செய்கிறார். மறுத்துப் பேச யாரும் இருக்கப் போவதில்லை. நிதானமாய் மட்டுமா நடக்கிறான். ஆட்டோக்காரனின் “சாவுகிராக்கியை”க் கேட்டால் கூட சிரித்துக் கொண்டேயல்லவா நடக்கிறான்.

“நேரம் போவதெங்கே தெரிகிறது ?

உயிர் போவதல்லவா தெரிகிறது ! ?

 

எனைக் கேட்டுப் போனேன்

மரணம் வந்து சேர்ந்தது.

எதைக் கேட்டுப் போனால்

நீ வந்து சேர்வாய் ?

நண்பரின் கவிதைகளிலுள்ள வரிகளில் மனம் தொட்ட வரிகளைப் பட்டியலிட்டால் எல்லா கவிதைகளிலும் வசீகரிக்கும் ஏதேனும் வரிகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தத் தொகுப்பு காதலை மட்டுமே பாடினாலும், புகாரியின் கவிதை மனசு காதலைத் தாண்டிய பல பரிமாணங்களையும் கண்டது. அவருடைய பஞ்ச பூதக் கவிதைகள் பரவலான கவனத்தையும், கவனித்த அனைவரின் பாராட்டையும் பெற்றக் கவிதைகள்.

புகாரி ஒரு சிற்பி என்று சொல்ல மாட்டேன். சிற்பியின் சிற்பங்கள் குடிசைகளில் புரள்வதில்லை. சிற்பங்கள் ஏழைத் தோழனின் முகமாய் பெரும்பாலும் இருப்பதில்லை. அவரை ஓவியன் என்று சொல்லவும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்போது ஓவியங்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் பணிப்பெண்கள் போல ஒய்யாரச் சுவர்களுக்கே சொந்தமாய்க் கிடக்கின்றன.

அவரைக் கவிதைக் குயவன் என்பேன்.

குயவன் தனது பாண்டத்துக்காக நேர்த்தியான மண்ணைத் தேடும் கவனம் அவருடைய வார்த்தைத் தேர்வில் இருக்கிறது. விரல்களின் லாவகம் மண்பாண்டத்தை கைகளை விட்டுக் காகிதத்தில் இறக்கி வைக்கின்றன.  உடைந்து விடக் கூடாதே எனும் பதை பதைப்புடன் அடுக்கி வைக்கிறார். பானையில் எத்தனை கொள்ளளவு தேவையோ அதை குயவனே முடிவு செய்கிறார். கடைசியில் பாகுபாடில்லாமல் அதைப் பாருக்குப் பந்தி வைக்கிறார்.

புகாரி. தமிழை உயிரின் ஆழம் வரை நேசிப்பவர். மனிதனை தமிழின் ஆன்மாவாய் நேசிப்பவர். அவருடைய இந்தத் தொகுப்பு தோளை விட்டு இறங்க மறுக்கும் சின்னக் குழந்தையாய் என் நெஞ்சம் பற்றிக் கிடக்கிறது.

இன்னும் பல தொகுப்புகளைக் காண அந்த மென் மனசை வாழ்த்துகிறது என் மனசு.

பிடித்திருந்தால்…வாக்களியுங்கள்

வாங்க ஜெயிக்கலாம் : எனது புதிய நூல்

“இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க” எனக்கு முன்னால் கத்தையாய் கொஞ்சம் பேப்பரைப் போட்டார் பிலால், பிளாக் ஹோல் மீடியா நிறுவனர்.

ஏதோ ஸ்கூல் பிள்ளைங்களோட பரீட்சை பேப்பர் போல இருந்தது. வித விதமான கை எழுத்துகளில் கிறுக்கலாய் கிடந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து வாசித்தேன். புரியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“என்ன தலைவரே இதெல்லாம் ?”

தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அவர், அருகில் ஆசிரியர் யாணன் அவர்கள்.

ஒருபக்கம் பெண்கள் வளர்கிறாங்கன்னு சொல்றோம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக் காணோம். அப்படி என்னென்ன பிரச்சினைகளைத் தான் பெண்கள் முக்கியமா எதிர்கொள்றாங்க ? அவங்களுக்கு இன்னிக்கு என்னென்ன விஷயத்துல பாதுகாப்பும், ஆலோசனையும் தேவைன்னு யோசிச்சோம். பெண்களோட பிரச்சினையை பெண்களே சொல்லட்டுமேன்னு முடிவு பண்ணினோம். அதோட விளைவு தான் இந்தப் பேப்பர்கள் !

வேலைபாக்கிற பெண்கள் தொடங்கி படிக்கிற பெண்கள் வரை நிறைய பேர்கிட்டே பேப்பரைக் கொடுத்து அவங்களுக்கு ஆலோசனை தேவைப்படற ஐந்து பிரச்சினைகளை எழுதச் சொன்னோம். அந்தப் பிரச்சினைகள் தான் இந்தக் காகிதங்கள்ல இருக்கு.

இந்தப் பிரச்சினைகள்ல முக்கியமான சில பிரச்சினைகளை எடுத்து ஒரு நல்ல புக் போடணும். அது பெண்களோட பிரச்சினைகளுக்கு ஒரு தோழியா கூடவே இருந்து வழிகாட்டணும். அதுதான் பிளாக் ஹோல் மீடியாவோட ஐடியா.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். படிகப் படிக்க வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை ? பெண்கள் வளர வளர அவர்களுக்கு எதிரான சதி வலைகளும் கூட வளர்கிறதோ எனும் பயமும் உருவாகிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகளும், புதைகுழிகளும் அவர்களுடைய பாதைகளில் மறைந்து தான் கிடக்கின்றன. வாசித்தவற்றில் பல பிரச்சினைகள் புதியவை. சில பிரச்சினைகள் விகடன், பெண்ணே நீ போன்ற இதழ்களுக்காக பிரத்தேயகமாக எழுதப்பட்டவை.

“என்ன செய்யலாம் சொல்லுங்க” என்றேன்.

அந்தந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது, பிரச்சினைகளைக் குறித்து அலசி ஆராய்வது, கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து கட்டுரைகள் எழுதுவது என முடிவானது !

அப்படி எழுதப்பட்ட கட்டுரைகள் தான் “வாங்க ஜெயிக்கலாம்” எனும் கட்டுரைத் தொகுப்பு.

பெண்களோட வளர்ச்சிக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்களை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. “நீ நெருப்பின் நடுவில் இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போகாமல், எப்படி வெந்து போகாமல் வெளியே வருவது என்றும் இந்த கட்டுரைகள் வழிகாட்டுகின்றன.

வெற்றி என்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ பெறும் மதிப்பெண்களில் மட்டும் அடங்கிவிடுவதல்ல. சமூகம் நம்மீது திணிக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஜெயித்துக் காட்டுவது தான். வாங்க ஜெயிக்கலாம் நூல் அந்தப் பணியை திறம்படச் செய்திருக்கிறது என நம்புகிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால், வாசித்துப் பாருங்கள்.வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

Pages : 172,  Rs : 130/-

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

வாக்களிக்க விரும்பினால் கிளிக்குங்கள்

ராஜபக்சேவும், தினத் தந்தியும் …

தினமணியைத் தொடர்ந்து, இன்றைய தினத்தந்தி இதழில் எனது ராஜபக்சே – சூழ்ச்சியும், தந்திரமும் நூலுக்கான விமர்சனம் வந்திருக்கிறது…

“மொத்தத்தில் ராஜபக்சே பற்றி முழுமையாக, முதல் முறையாக வெளிவந்துள்ள புத்தகம்” எனும் பஞ்ச் வரிகளோடு !

நன்றி தினத்தந்தி !

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

தமிழிஷில் வாக்களிக்க…..

ஷாரூக்கான் – எனது புதிய நூல்

பதிப்பகத் துறையில் புதிதாய்க் காலடி எடுத்து வைத்திருக்கிறது “பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்” எனும் நிறுவனம். பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிட உத்தேசித்திருக்கும் அந்த நிறுவனத்துக்காக நான் எழுதியிருக்கும் நூல்களில் ஒன்று ஷாரூக்கான், மேன் ஆஃப் பாசிடிவ் எனர்ஜி.

ஒரு நடிகரைப் பற்றி நான் எழுதுகின்ற முதல் நூல் இது தான். வெறுமனே ஷாரூக்கானின் சினிமாக்களைக் குறித்து அலசாமல் அவருடைய பன்முக ஆளுமையைச் சொல்ல முயன்றிருக்கிறேன். நிழல் உலக தாதாக்கள், மிரட்டும் சிவ சேனா, ஐபிஎல், விளம்பர மோகம் என பல கிளைகளில் பயணிக்கிறது இந்த நூல்.

நூலின் அட்டையில் பதிப்பகத்தார் இப்படிச் சொல்கிறார்கள்.

“சினிமா வாசனையே இல்லாத பின்னணியிலிருந்து வந்து சினிமாவைப் பிரமிக்க வைத்தவர் ஷாரூக். நூறு திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற பரபரப்பான திருப்பங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கையும், காதலும். ஷாரூக்கின் வாழ்க்கை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான நம்பிக்கை டானிக்”

வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

வாசித்தால் கருத்துச் சொல்லுங்கள்.

பக்கங்கள் : 160

விலை : 130 ரூபாய்கள்

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட்

எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு,

ஆலந்தூர் , சென்னை – 16

9600086474