கிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு

 

qw

வெண்டக்காயை உடைச்சுப் பாத்து வாங்கு, முருங்கக் காயை முறுக்கிப் பாத்து வாங்கு என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சந்தையில் பொருட்கள் வாங்கும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாங்கும் காய்கறி தரமான காய்கறியாய் இருக்க வேண்டும் எனும் ஆர்வம் தான் அதன் காரணம். எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் கழுகுக் கவனம் நம்மிடம் இருக்கும். புழு விழுந்த கத்தரிக்கா ஒரு மூட்டை வாங்குவதை விட நல்ல கத்தரிக்கா கால் கிலோ வாங்கணும் என்பது தானே நமது அக்மார்க் திட்டம்.

இன்னும் ஒரு படி மேலே போய் புடவைக் கடையில் போய் பார்த்தால் தெரியும், நூலை இழுத்துப் பார்த்து, ஓரத்தைக் கசக்கிப் பார்த்து, ‘ஏங்க இது ஒரிஜினல் தானா’ என நாலு தடவை கடைக்காரரை இம்சைப்படுத்தி, மலை போன்ற புடவைக் குவியல்களிடையே ஒன்றை எடுக்க பெண்கள் நடத்தும் தேடல். நொந்து நூடூல்ஸாகிப் போகும் கணவர்களுக்கென்றே கடைகளின் ஓரமாய் ஒரு சோபா போட்டிருப்பார்கள். அந்த சோபாக்களில் அமர்ந்து கணவர்கள் விடும் குறட்டைக்குக் காரணம், பெண்களின் தரமான புடவைத் தேடல் தான்.

இதே சிந்தனை தான் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் இருக்கும். தங்கமோ, நிலமோ, உடையோ எதுவானாலும், தரமானதையே தேடுவோம். இதே சிந்தனை தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதையே இயேசு விரும்புகிறார். தரமான கிறிஸ்தவ வாழ்க்கை, நம்முடைய தினசரி வாழ்க்கையில் வெளிப்படவேண்டும்.

இயேசு தன்னோட காலத்தில் ஆயிரக்கணக்கான ஆட்கள் தன் பின்னால் வரணும் என்று நினைக்கவில்லை. போற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டவேண்டும் என்றோ, கட் அவுட் வைத்து கௌரவிக்க வேண்டுமென்றோ அவர் ஆசைப்படவில்லை. ஒரு சின்ன குழு. அதை ரொம்ப நல்ல குழுவாக உருவாக்க வேண்டும், என்பது தான் அவருடைய சிந்தனை. அதனால் தான் வெறும் பன்னிரண்டு பேருடன் அவருடைய பணியின் அஸ்திவாரத்தை உருவாக்கினார். அவர்களுக்கு பணிவைப் போதித்தார், துணிவைப் போதித்தார், விசுவாசத்தைப் போதித்தார். இன்றைக்கு கிறிஸ்தவம் இத்தனை பெரிய அளவில் விரிவடைந்திருக்கக் காரணம் அந்த சின்னக் குழு தான். அவர்களுக்குள் இருந்து செயலாற்றிய தூய ஆவியானவரும், விசுவாசமும் தான்.

இன்றைக்கு நாடுகள் கடந்து, தேசங்களின் எல்லைகள் தாண்டி பயணம் செய்கிறோம். இயேசுவின் பயண எல்லை வெறும் 200 மைல் சுற்றளவு தான் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எவ்வளவு தூரம் பயணம் செய்தேன், எத்தனை இலட்சம் மக்களை சந்தித்தேன் எனும் புள்ளி விவரங்களை இயேசு விரும்பவில்லை. பயணத்திலும் அர்த்தமான பயணத்தையே விரும்பினார். கிலோ மீட்டர்களால் தன்னுடைய பயணத்தை அவர் குறித்து வைக்கவில்லை.

இயேசுவின் போதனைகள் கூட ‘அளவு’ எனும் புற எல்லையைத் தாண்டி, புனிதம் எனும் அக எல்லையையே குறி வைத்தது. அதில் தான் இறை வாழ்வின் உயர்ந்த தரம் அடங்கியிருக்கிறது. இயேசுவின் போதனைகள் சட்டங்களாக இல்லாமல் போனதன் காரணம் அது தான். சட்டங்கள் இருந்தால் வேற வழியில்லாமல் அதைக் கடை பிடிப்பவர்களாகத் தான் மக்கள் இருப்பார்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றொரு சட்டம் இருப்பதால் பிறருடைய பொருட்களை விட்டு வைக்கிறோம். ஆனால் பிறர் மீதான அன்பினால் நாம் அப்படி இருப்பதே உயரிய வாழ்க்கை ! அதனால் தான் இயேசு சொன்னார், “பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை சுத்தம் செய்வதல்ல, உள் பக்கத்தை சுத்தம் செய்வதே அவசியம்” என்று.

நல்ல இதயம் என்பது தரமான வாழ்க்கையின் அடிப்படை. தூய்மையான மனம், தூய்மையான சிந்தனை, இவை இருந்தால் நமது செயல்களும் நல்ல செயல்களாகத் தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல, அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியும். என்னதான் தங்கத்தால வேலி கட்டி, சர்க்கரைத் தண்ணி ஊத்தி வளத்தினாலும் மாமரத்தில் மாதுளம் பழம் காய்க்கப் போவதில்லை. உள்ளே உள்ள தன்மை தான் செயலில் வெளிப்படும். எனவே தான் மனம் சார்ந்த போதனைகளை இயேசு முதன்மைப் படுத்தினார்..

ஆலயத்தில் இரண்டு காசு போட்ட விதவையை இயேசு பாராட்டியதன் காரணம் அது தானே ! அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா ? எவ்வளவு கொடுக்கிறியோ அதை மகிழ்ச்சியோடு கொடு. என்பது தான் இயேசுவின் போதனை. இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம், எப்படிப்பட்ட மனநிலையில குடுக்கிறோம் என்பது தான் முக்கியம், என்கிறார் இயேசு.

ஒருவன் கொலை செய்யாமலோ, பாலியல் தவறு செய்யாமலோ, களவு செய்யாமலோ இருப்பதற்குக் “காரணம்” என்ன என்பதையே இயேசு நோக்கினார். நீ வெறும் சட்டத்துக்காக இதையெல்லாம் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் கடவுளின் மீதான அன்பினால் இதையெல்லாம் செய்தால் உனக்கு நிச்சயம் பலன் உண்டு. காரணம் அது தான் உன்னுடைய உண்மையான மனதை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசுவின் போதனை பத்து கட்டளைகளாக வரவில்லை. அன்பின் இரண்டு கிளைகளாக வந்தது. இறைவனை நேசி, மனிதனை நேசி ! அவ்வளவு தான்.

கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே என்றெல்லாம் இயேசு போதிக்கவில்லை. அதன் அடுத்த நிலைக்குச் சென்றார். கொலை அல்ல, கொலைக்குக் காரணமான கோபம் கூட உன்னிடம் இருக்க வேண்டாம் என்றார். விபச்சாரம் செய்யாமல் இருப்பதல்ல, அடுத்த பெண்ணை இச்சையுடன் நோக்குவதையே நிறுத்து என்றார். களவு செய்யாமல் இருப்பதல்ல, அடுத்தவனை உன்னைப் போல நினை என்றார். இயேசு வேர்களை விசாரித்தார். தூய்மையின் அடுத்தடுத்த நிலைகள் என்பது நமக்கு உள்ளே இறங்குவது. புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல, நமக்குள் செல்வது.

நோன்பு இருக்கணுமா, இரு. ஆனால் வேறு யாருக்கும் சொல்லாதே. செபம் செய், ரொம்ப நல்லது. ஆனால் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு செபம் செய். ஓவரா பிதற்றத் தேவையில்லை, ரொம்ப நேரம் பேசத் தேவையில்லை. சுருக்கமா சொன்னாலே போதும். அது நல்ல ஆத்மார்த்தமான பிரார்த்தனையாய் இருக்கணும். அவ்வளவு தான். இயேசுவின் போதனைகள் உண்மையானவை. தரத்தின் உச்சத்தைத் தொட்ட எளிமையான போதனைகள்.

மோசேயின் சட்டங்களை பல இடங்களில் இயேசு மீறி புதிய வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கியதன் காரணம் மக்களின் வாழ்க்கையை தரமானதாக மாற்றுவதற்குத் தான். மணமுறிவு என்பதை சகட்டு மேனிக்கு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயேசு என்ன சொன்னார் ? ஆதியில் கடவுள் ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். எனவே மண முறிவு என்பதை பாலியல் குற்றம் எனும் ஒரு காரணம் தவிர வேறு எதற்காகவும் பண்ண வேண்டாம் என்றார். ‘உங்கள் கடின உள்ளத்தின் காரணமாகத் தான்’ மோசே அப்படி ஒரு போதனையைத் தந்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவின் சிந்தனை நமக்கு பளிச் என தெரிகிறது இல்லையா ?

விபச்சாரப் பாவத்தில் பிடிபட்ட பெண்ணையும் மோசேயின் கட்டளையைக் காட்டி கற்களோடு விரட்டியது கும்பல். இயேசு சட்டங்களைப் பேசவில்லை. ஆதாரங்களைக் கேட்கவில்லை. சமூகத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அடியோடு அகற்றுவேன் என புரட்சி செய்யவில்லை. கூட்டத்தினரின் உள் மனதோடு பேசச் சொன்னார். ‘உங்களில் பாவம் செய்யாதவன்’ முதல் கல்லை எறியட்டும் என்றார்.

இப்படி இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே, தரமான வாழ்க்கைக்கான தேடலாகத் தான் இருந்தது. போதனைகள் அர்த்தமுள்ளவையாக மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது. தரமான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது ! போலித்தனமான வாழ்க்கையை விட்டு விலக வேண்டியது. ஆத்மார்த்தமான ஒரு அன்னியோன்யத்தை இயேசுவோடு உருவாக்கிக் கொள்ள வேண்டியது.

அதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் சிந்தனைகளை விலக்க வேண்டியது. ரொம்ப நேரம் செபம் செய்யாட்டா மக்கள் என்ன நினைப்பாங்க ? நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க ? ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ ? கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ ? இப்படிப்பட்ட பிறர் சார்ந்த சிந்தனைகளை ஒதுக்க வேண்டியது வெகு அவசியம்.

ஆன்மீகம் நமக்கும் இயேசுவுக்குமான அன்பைச் சொல்லும் பாதை. அதில் இயேசு என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதே முக்கியம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. அப்படித் தான் ஏரோது பயந்தான். விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டினான். பிலாத்து, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேப்பா என கைகளைக் கழுவினான்.

அந்த பயம் இல்லாதவர்கள் இயேசுவை வாழ்ந்து காட்டினார்கள். அதிகாரிகளின் முன்னால் “உயிர்த்த இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள்” என்றனர். சிலுவையில் என்னை தலைகீழாய் அறையுங்கள் பிளீஸ் என கேட்டு வாங்கி மரணத்தைப் பெற்றனர். அவையெல்லாம் தரமான விசுவாசத்தின் சான்றுகளாய் இருந்தன.

நாமும் நமது வாழ்க்கையை ஒரு அவசரப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நமது செயல்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆழ்மன அன்பின் வெளிப்பாடாக இருக்கட்டும் என நினைப்போம். உள்ளத்தில் உள்ளதையே வாய் பேசும், எனவே உள்ளத்தை தூர் வாருவோம்.

தரமான வாழ்க்கையே வரமான வாழ்க்கை என்பதை உணர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

சேவியர்

எநன்றி :