உயிர்ப்பு திருநாள் சிந்தனைகள்.

easter-paintings

கிறிஸ்தவ ஆன்மீகத்தின் அடிப்படை இயேசுவின் உயிர்ப்பிலிருந்து தான் துவங்குகிறது. உயிர்ப்பு இல்லாவிடில் இயேசு ஒரு தத்துவ ஞானியாகவோ, ஒரு புரட்சியாளராகவோ, அல்லது அன்பைப் போதித்த ஒரு அடியாராகவோ வரலாற்றில் இடம்பிடித்திருப்பார். உயிர்ப்பு தான் அவரை மனித மகன் எனும் நிலையிலிருந்து இறை மகன் எனும் நிலைக்கு சந்தேகமில்லாமல் உயர்த்தியது.

இயேசு படுகொலை செய்யப்பட்ட உடன் அவருடன் இருந்த சீடர்கள் எல்லாரும் திசைக்கொன்றாய் தலை தெறிக்க ஓடினர். சிலர் பழைய மீன் பிடித்தல் வேலைக்காக வலைகளைத் தூசு தட்டினர். சிலர் இயேசுவோடு சுற்றிச் சுற்றி வாழ்க்கையில் மூன்று வருடங்களை வீணடித்து விட்டோமே என ஊர் விட்டு ஊர் தாவினர், இன்னும் சிலர் இனிமேல் என்ன நடக்குமோ எனும் பயத்தில் இருட்டு அறைகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். உயிர்ப்பு தான் அவர்கள் எல்லோரையும் மீண்டும் வீறு கொண்டு எழ வைத்தது. உயிர்த்த இயேசுவின் காட்சி தான் பயந்தாங்கொள்ளிகளை பாசறைகளின் தலைமை வீரர்களாக்கியது.

ஒரு வேலைக்காரப் பெண்ணிடம், “இயேசுவா, அவர் யாரென்று தெரியவே தெரியாது” என பயந்து கொண்டே பதிலளித்த சீடர், அரசவையில் ‘உயிர்த்த இயேசுவின் சாட்சி நான்’ என பின்னர் வீரியம் கொண்டு எழ இயேசுவின் உயிர்ப்பு தான் காரணம். இயேசுவைப் பிடித்ததும் பின்னங்கால் பிடறியில் பட ஓடிய சீடர்கள் தான் பின்னாளில், “என்னை இயேசுவைப் போல சிலுவையில் அறையாதீர்கள், தலைகீழாய் அறையுங்கள், தோலை உரியுங்கள்” என்றெல்லாம் சற்றும் பயமில்லாமல் மரணத்தை அரவணைத்தார்கள்.

உயிர்ப்பு என்பது ஒரு கொண்டாட்டமல்ல. அது ஒரு அனுபவம். கிறிஸ்தவத்தின் அழைப்பு என்பது இயேசுவின் உயிர்த்தெழுதல் அனுபவத்தில் பங்கு கொள்வதே.. இயேசுவின் உயிர்ப்பில் பங்கு கொள்தல் என்பது மூன்று நிலைகளில் முழுமை அடைகிறது. 1, சிலுவையை நாள் தோறும் சுமத்தல். 2, இயேசுவோடு அறையப்படுதல். 3, இயேசுவோடு உயிர்த்தல்.

சிலுவையை நாள் தோறும் சுமத்தல் என்பது என்ன ? நமது பாவ வாழ்க்கையை விட்டு விட்டு தூய்மையான வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும். உலக செல்வங்களை வெறுத்து, ஆன்மீக செல்வங்களை நேசிக்க வேண்டும். சிற்றின்பத்தை வெறுத்து இறை அன்பைத் தேடவேண்டும். ஏழைகளை வரவேற்கவேண்டும், கோபம், எரிச்சல், பகைமை, தீமை முதலிய அத்தனை விஷயங்களையும் விட்டு விட வேண்டும். இப்படி எல்லாவற்றையும் விடும் போது நமக்கு உள்ளத்திலும், வெளியிலும் பல சிக்கல்கள் உருவாகும். அந்த சிக்கல்களை இயேசுவுக்காய் மகிழ்வுடன் சுமப்பதே ‘நாள் தோறும் சிலுவை சுமப்பது”

பாவத்தில் நிரம்பியிருக்கும் நமது பழைய மனிதனை இறை நம்பிக்கையில் இணைந்து கொள்வதன் மூலம் சிலுவையில் அறைவது இரண்டாவது கட்டம். பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு இயேசுவோடு உயிர் விட வேண்டும். அந்த நிகழ்வுடன் அதுவரை செய்த பாவங்கலெல்லாம் கழுவப்பட்டு விடும்.

இயேசுவோடு உயிர்த்தல் கடைசி நிலை. இயேசுவோடு உயிர்த்தபின் நமக்குள் வாழ்வது நாமல்ல, இயேசுவே எனும் சிந்தனை மனதில் இருக்க வேண்டும். நமது உடலுக்குள் இயேசு இருந்தால் நமது செயல்கள், சொற்கள், நடவடிக்கைகள் எப்படி புனிதமாய் இருக்கும் என்பதை செயலில் காட்டவேண்டும். பழைய சிந்தனைகள், வழிகளையெல்லாம் அகற்றிவிட்டு தூய்மையான ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இதுவே இயேசுவோடு உயிர்ப்பது.

இந்த மூன்று செயல்களையும் செய்யவேண்டும் என்பதே உயிர்ப்பு விழா நமக்குச் சொல்லும் செய்தியாகும். ஒருவர் நல்வழியில் சென்று விட்டார் என்பதை நிர்ணயிப்பது அவருடைய நல்ல செயல்களும், அந்த நல்ல செயல்களுக்குப் பின்னால் இருக்கும் நல்ல சிந்தனையும் தான். சிந்தனையும், செயலும் புனிதமடையும் போது நாம் கிறிஸ்துவின் உயிர்ப்பில் இணைந்தோம் என்று பொருள்

அனைவருக்கும் உயிர்ப்பு விழா நல்வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி