இட்லி, தோசை சுட இயந்திரம் !

அரிசியும் உளுந்தையும் ஊற வைத்து, ஆட்டுரலில் அரைத்து காலையில் தோசையோ, இட்டிலியோ சுடுவது ரொம்ப கடினமாய் இருக்கிறதே என நினைப்பவர்களுக்காகத் தோன்றியவை தான் தெருவோர மாவு விற்பனை நிலையங்கள்.

காலையில் போனோமா, ஒரு கவர் மாவு வாங்கினோமா தோசை சுட்டோமா தின்றோமா சென்றோமா என உருமாறி விட்டது வாழ்க்கை.

இந்தத் தோசையைக் கூட ஒரு இயந்திரம் சுட்டுத் தந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறீர்களா ? அதற்கும் இயந்திரங்கள் இருக்கின்றன ! உண்மை தான் விளையாட்டு இல்லை !

மாவைப் போட்டால் இட்டிலி சுடலாம், தோசை சுடலாம், சப்பாத்தி சுடலாம், சமோசா செய்யலாம் அப்படி பல்வேறு இயந்திரங்கள் உள்ளன. அதுவும் நமது இந்தியத் திரு நாட்டில்.
CFRTI எனப்படும் நடுவண் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் . எல்லாவற்றுக்கும் உஷாராய் காப்புரிமையும் வாங்கி வைத்தாயிற்று.

ஒரு மணி நேரத்துக்கு எண்ணூறு இட்டிலி, எண்ணூறு சப்பாத்தி என இந்த இயந்திரங்கள் நல்ல சுவையாக உணவுகளை தயாரித்துத் தள்ளுகின்றன.

இப்படி இயந்திரங்கள் எல்லாம் எதுக்கு ? பேசாம கொஞ்சம் கொஞ்சமாய் சுட்டு தேவைக்கேற்ப பரிமாற வேண்டியது தானே எனும் உங்களுடைய எண்ணம் தவறில்லை. ஆனால் இப்படி ஒரு சூழல் நினைத்துப் பாருங்கள்.

ஒரு மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம், அல்லது வெள்ள அபாயம் நேர்ந்து விடுகிறது ஆயிரக்கணக்கான மக்கள் தனியே பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். எத்தனை பேர் எத்தனை மணி நேரம் தயாரிப்பது ? இந்த இயந்திரம் இருந்தால் போதும் சட்டென அனைவருக்கும் தேவையான உணவு கிடைத்து விடும்.

இந்த இயந்திரங்களை அடிக்கடி பரிசீலனை செய்து நவீனப்படுத்தவும் செய்கின்றனர். இப்போது தோசையுடன் கூடவே சட்னியும் தயாராக்குகின்றன இயந்திரங்கள்.
காலப்போக்கில் சின்ன இயந்திரங்கள் வரக் கூடும், அவை நமது சமையலறைகளில் இடம் பிடிக்கக் கூடும்.

எங்கே என்ன சாப்பிடலாம் !

சே… நார்த் போக வேண்டியிருக்கு. அங்கே போய் எதைச் சாப்பிடறதுன்னே தெரியலையே என தென்நாட்டு வாசிகளும், சவுத் போனா சோறு, சாம்பார் தவிர வேற என்ன இருக்கு என குழம்பும் வட வாசிகளும் இந்த படத்தை கிளிக்கிப் பாருங்கள்.

 

எந்த ஊருக்குப் போனா, என்ன சாப்பிடலாம் எனும் பட்டியல். சுவாரஸ்யமாய் இருந்ததால் பகிர்கிறேன்.

 

பின் குறிப்பு : எவ்வளவு சாப்பிடலாம் என்பது உங்கள் வயிறையும், பர்சையும் பொறுத்தது