குட் டச், பேட் டச் – பெண்ணே நீ கட்டுரை

“குட் டச், பேட் டச்” ன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. நல்ல தொடுதல், மோசமான தொடுதல். பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் இது. ஆனாலும் இன்னிக்கும் பல்லாயிரம் பேர் இதனால பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

சுருக்கமா இதைச் சொல்லணும்ன்னா, நல்ல தொடுதல் ஒரு அம்மாவோட அரவணைப்பைப் போல அன்பானது. எந்தவிதமான கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நேசம் உடையது. குறைந்த பட்சம் எந்த தப்பான சிந்தனையும் இல்லாத தொடுதல் நல்ல தொடுதல்.

மோசமான தொடுதல்ங்கறது தலை கீழ். தப்பான சிந்தனையோட தொடறது. குறிப்பா பெண் குழந்தைகளைக் கொஞ்சுவது போலவோ, விளையாடுவது போலவோ பாவனை காட்டி உள்ளுக்குள் வக்கிரமாய் தொடுவது என சொல்லலாம். இதைத் தவிர குழந்தைகளை அடிக்கிறது, உதைக்கிறது, அவர்களைக் காயப்படுத்தறது என நல்ல தொடுதல் இல்லாத எல்லாமே மோசமான தொடுதல்களில் வரும் விஷயங்கள் தான்.

தப்பான தொடுதலில் மிக முக்கியமானது பாலியல் ரீதியிலான தொடுதல். இந்தியா மாதிரி கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரம் இருக்கிற இடங்களில் இது ரொம்பவே அதிகம். மாமா, மச்சான் ன்னு புடை சூழ வீடு நிரம்பியிருக்கும்போ பல தப்பான விஷயங்களும் நடந்து விடுகிறது. தப்பான தொடுதலுக்கு ஆளான குழந்தைகள் இதை பெரும்பாலும் வெளியே சொல்வதில்லைங்கறது தான் கவலைக்குரிய முதல் விஷயம். சுமார் 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப் பற்றி யார் கிட்டேயும் சொல்வதே இல்லையாம் ! இது இந்தியாவில் அரசு சார்பாக நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவரம் சொல்லும் சேதி !!

90 சதவீதம் தொந்தரவுகளும் குழந்தைக்குத் தெரிந்த நபர்களால் தான் வருதுங்கறது தான் ரொம்பவே அதிர்ச்சியூட்டும் செய்தி. இந்த பேட் டச் விஷயத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்வதும், அதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியமான தேவைகள். ஒரு குழந்தை மூன்று வயதாக இருக்கும் போதே பெற்றோர் இந்த எச்சரிக்கையையும், வழிகாட்டுதலையும் குழந்தைகளுக்கு வழங்கலாம் என்பது உளவியலார் கருத்து ! எனவே பிள்ளை வளரட்டும்ன்னு காத்திருக்காதீங்க.

குழந்தைங்களை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்த்துவதும். எது நல்லது, எது கெட்டதுங்கற புரிதலை குழந்தைகளுக்குச் சொல்வதும் இன்றைய தேதியில் ரொம்ப முக்கியமான விஷயங்கள்.

இதொண்ணும் நிலாவுக்கு ராக்கெட் விடறமாதிரி கஷ்டமான விஷயம் கிடையாது. சிம்பிள் தான். நான் சொல்லப் போற தகவல்களை மனசுல வெச்சுருந்தீங்கன்னா போதும் !

1. குழந்தை ஸ்கூல் போயிட்டு வந்தாலோ, வெளியே யார் வீட்டுக்காவது போய் வந்தாலோ அங்கே நடந்த எல்லா விஷயங்களையும் கேளுங்க. கள்ளம் கபடமில்லாமல் பிள்ளைங்க சொல்ற விஷயங்களை வெச்சே நீங்க விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியும். ஒருவேளை ஏதாச்சும் தப்பு நடந்திருக்குன்னு தெரிஞ்சா கூட பதட்டப்பட்டு குழந்தைகளைப் பயப்படுத்தாதீங்க. முழுசா கேளுங்க.

2. “நோ” ன்னு சொல்ல குழந்தையைப் பழக்கணும். குழந்தை கிட்டே குழந்தையோட உடம்பு குழந்தைக்கு மட்டுமே சொந்தமானதுங்கற உண்மையை சொல்லுங்க. யாராச்சும் தப்பா தொட முயற்சி பண்ணினா “நோ” ன்னு அழுத்தமா, சத்தமா சொல்லப் பழக்குங்க.

3. குழந்தையை தன்னம்பிக்கை உடைய குழந்தையா வளர்க்க வேண்டியது அவசியம். அப்பா அம்மா அதுக்கு முன் மாதிரிகையா இருக்கணும். குழந்தைங்க கூட ரொம்ப நேரம் செலவிடுங்க. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு வரவேண்டியது அவசியம்.

4. அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே நல்ல உரையாடல் பழக்கம் வேணும். அன்பான, விரிவான, அமைதியான உரையாடல் ரொம்ப முக்கியம். தினமும் குழந்தை கூட பேசுங்க. “அம்மா கிட்டே எதுன்னாலும் நம்பிக்கையா சொல்லலாம்” ங்கற நிலமை தான் இருக்கணும். அதுதான் அடிப்படை. இல்லேன்னா, குழந்தை உங்க கிட்டே விஷயத்தை மறைக்கவும் வாய்ப்பு உண்டு.

5. குழந்தை என்ன சொல்லுதோ அதை ரொம்பக் கவனமா கேளுங்க. எந்த குழந்தையும் கற்பனையா ஒரு பாலியல் தப்பை உருவாக்கிச் சொல்லாது. பொதுவா தெரிந்த நபர்கள் விளையாட்டுங்கற போர்வைல தான் இதைச் செய்வாங்க. அதைக் கவனத்துல வெச்சுக்கோங்க. குழந்தைகளை முழுக்க முழுக்க நீங்க நம்ப வேண்டியது ரொம்ப முக்கியம்.

6. “எனக்கு அந்த மாமாவைப் புடிக்காது” ன்னு ஒரு குழந்தை சொன்னா உள் மனசுல ஒரு சின்ன மணி அடிக்கட்டும். ஒருவேளை ஏதேனும் சில்மிஷம் நடந்திருக்கலாம். குழந்தையை வற்புறுத்தாதீங்க. யாராச்சும் குழந்தை கூட பழகற விதத்துல சந்தேகம் தெரிஞ்சா அந்த நபரை முழுமையா தவிர்க்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

7. நீங்க இல்லாதப்போ குழந்தையை ஒரு மூணாவது நபர் கிட்டே ரொம்ப நேரம் விட்டுட்டு போகாதீங்க. உங்களுக்கு சந்தேகமே வராத இடத்துல கூட குரூரமான மனசு ஒளிஞ்சிருக்கலாம்.

8. “அம்மா கிட்டே சொல்லாதே” ன்னு யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களான்னு கேளுங்க. பிள்ளைங்க கள்ளம் கபடமில்லாதவங்க. நீங்க கேட்டா சொல்லிடுவாங்க. நிறைய தப்புகள் இந்த வாக்குறுதிக்குப் பின்னால இருக்க வாய்ப்பு உண்டு.

9. அதே மாதிரி “அம்மா கிட்டே சொல்லுவேன், அப்பா கிட்டே சொல்லுவேன்” ன்னு யாராச்சு மிரட்டினாங்களான்னும் கேளுங்க. இப்படிப்பட்ட பிளாக் மெயில் தொந்தரவு ரொம்ப ஆபத்தானது ! தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடும்.

10. யாராச்சும் சாக்லேட் குடுத்தாங்களா ? கிஃப்ட் குடுத்தாங்களா ? ஏதாச்சும் வாங்கித் தரேன்னு சொன்னாங்களான்னு கேளுங்க. இதெல்லாம் மோசமான தொடுதலுக்கான முன்னுரைகளாய் இருக்கலாம். இந்த விஷயத்துல மட்டும் படிச்சவங்க, படிக்காதவங்க, ஏழைங்க, பணக்காரங்கன்னு வித்தியாசமே கிடையாது. இது உங்க மனசுல இருக்க வேண்டியது அவசியம்.

11. குழந்தை கிட்டே பதட்டமோ, சோகமோ, கவலையோ இருந்தா அமைதியா உக்காந்து என்ன விஷயம்ன்னு கேளுங்க. குழந்தையோட உடம்புல ஏதாச்சும் காயம், அடையாளம் ஏதாச்சும் இருக்கான்னும் பாருங்க. வித்தியாசமா ஏதாச்சும் தெரிஞ்சா உஷாராயிடுங்க.

12. இப்படி ஏதாச்சும் தப்பு நடந்தா, தப்பான விஷயத்தை யாராச்சும் பண்ண முயற்சி பண்ணினா, யார் கிட்டே தகவல் சொல்லணும்ங்கற விஷயத்தை குழந்தை கிட்டே சொல்லிடுங்க. முக்கியமான போன் நம்பர்களை குழந்தைகிட்டே எழுதிக் குடுத்திருங்க.

13. குழந்தைங்க தப்பு செய்தா உடனே எகிறிக் குதிச்சு களேபரம் பண்ணாதீங்க. அதுக்காக தப்பை கண்டிக்காதீங்கன்னு சொல்ல வரலை ! தப்பு பண்றது சகஜம், ஆனா அதை திரும்ப பண்ணக் கூடாதுங்கறதை சொல்லிப் புரியவையுங்க. தப்பு பண்ணினா கூட அதை உங்க கிட்டே சொல்ற அளவுக்கு குழந்தைகளை பழக்குங்க.

14. திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், பூங்கா போன்ற இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்ங்கறதை அவங்களுக்கு சொல்லிக் குடுங்க. எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணுங்கறதை அவங்களுக்கு அமைதியா சொல்லிக் குடுங்க. அதுக்காக அவங்களை ஒரேயடியா பயமுறுத்தி வைக்காதீங்க.

15. திடீர்ன்னு யாராச்சும் சொந்தக்காரங்க குழந்தை கிட்டே ரொம்ப பாசமா இருந்தா கவனிங்க. கடைக்குக் கூட்டிட்டு போறேன், சினிமாக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னா மறுத்துடுங்க. இந்த தொந்தரவு தருபவர்களில் எல்லா வயசு மனிதர்களும் உண்டு. பதின் வயது விடலைகள் முதல், நரை விழுந்த கிழடுகள் வரை. எனவே விழிப்பு அவசியம்.

16. ஆபாசப் புத்தகம், படம் இப்படியெல்லாம் யாராச்சும் காட்டினா வீட்ல சொல்லச் சொல்லுங்க. குழந்தைங்களை தப்பான சிந்தனைக்குள்ள கொண்டு போய் அவங்களை பயமுறுத்தி பாலியல் பிரச்சினை செய்றவங்க ஏராளம்.

17. யாராச்சும் குழந்தையை போட்டோ எடுக்க வந்தால் “வேண்டாம்” ன்னு சொல்லப் பழக்குங்க. குழந்தைகளை மோசமா படம் எடுக்கவும் இது வழி வகுக்கும்.

18. அதேபோல குழந்தைங்க கிட்டே ஒரு தடவை இதைப் பற்றி சொல்லிட்டேன்னு விட்டுடாதீங்க. அடிக்கடி கேட்டுட்டே இருங்க. குழந்தைங்களை மத்தவங்க சீக்கிரம் ஏமாத்திட முடியும் !

19. கிராமத்து அம்மாக்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. இந்த மாதிரி பேட் டச் சமாச்சாரங்களெல்லாம் நகரத்துல மட்டும் தான்னு ! ஆனா அது ரொம்ப தப்பான அபிப்பிராயம். இந்த விஷயத்துல எல்லா இடத்துலயும் சிக்கல் உண்டு. அதுவும் சம அளவில் !

20. தப்பு நடந்தது தெரிஞ்சா அதை லேசா எடுத்துக்காதீங்க. “அவரு தெரியாம பண்ணியிருப்பாரு. இனிமே பண்ண மாட்டாரு” ன்னு நீங்களா தீர்ப்பு எழுதாதீங்க. இந்த மாதிரி சிந்தனை உள்ளவங்க சினிமாவோட கிளைமேக்ஸ் மாதிரி சட்டுன்னு திருந்த மாட்டாங்க.

எது தப்பு எது சரின்னு தெரியாத மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கொடுப்பது குழந்தைகள் பாதுகாப்பா இருக்க வழி வகுக்கும். இன்னொரு முக்கியமான விஷயம். பாலியல் சிக்கல் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் உண்டு. சுமார் 18 சதவீதம் ஆண் குழந்தைகள் இந்த சிக்கலை சந்திக்கிறாங்க என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஒட்டு மொத்த சமூகமும் ஒரு நாளில் திருந்தி விடப் போவதில்லை. பெற்றோர் விழிப்பாய் இருப்பதும், குழந்தைகளை விழிப்பாய் இருக்கப் பழக்குவதுமே இந்தக் சிக்கலை எதிர்கொள்ளும் வழிகளாகும் !

 
 

வாக்களிக்க விரும்பினால்