என்ன நடக்கிறது கிரீஸில் ?

greek

 

தாங்கள் சேமித்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும், தேவையான நேரத்தில் தமக்கு உதவ வேண்டும் என்பது தான் சாமானியர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற எதிர்பார்ப்பு. அதனால் தான் பைனான்ஸ் நிறுவனங்களை நம்பாமல், தேசிய வங்கிகளில் பணத்தைச் சேமியுங்கள் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

அப்படி வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் கூட எந்த ஒரு பயனும் இல்லாமல் போகலாம் எனும் நிலமை ஒரு தேசமே திவாலானால் நடக்கும் ! அப்போது வங்கிகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வெறும் எண்களாக மாறிவிடும். இலட்சக்கணக்கான பணம் வங்கியில் இருந்தால் கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் எடுக்க முடியாத கொடுமை நேரிடும்.

அந்த நிலமையில் தான் கிரீஸ் இப்போது சிக்கித் தவிக்கிறது. தத்துவஞானி சாக்ரடீஸ் பிறந்த மண் இன்று கடனில் சிக்கித் தவிக்கிறது. அதி பலசாலி ஹெர்குலிஸின் தேசம் இன்று வலுவிழந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 60 யூரோவுக்கு மேல் ஏடிஎம்மில் எடுக்க முடியாது, வேறு நாடுகளுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் கிரீஸ் நாட்டு மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர்.

2008களில் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் உடைந்து பதறியபோதும் கிரீஸ் சமாளித்து நின்றது. ஆனால் அதன் பின் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி வேகமாக வலுவிழக்க ஆரம்பித்தது. நெகடிவ் 1.2 சதவீதம் எனுமளவுக்கு அடுத்த ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி இருந்தது.

2010ல் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), ஐரோப்பிய வங்கி (ஈ.சி.பி) மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து நூற்று பத்து பில்லியன் யூரோவை கடனாக வழங்கின. மூன்று வருடங்களுக்குள் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் எனும் கந்து வட்டிக் கண்டிப்புடன்.

கிரீஸ் தன்னால் இயன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. தொழிலாளர்களின் போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை நிறுத்தியும், சேவை வரியை உயர்த்தியும், சில திட்டங்களை தாமதப்படுத்தியும் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. யானைப் பசிக்குப் போட்ட சோளப்பொரி போல அது காணாமல் போய்விட்டது.

2012ல் மீண்டும் ஒரு 130 பில்லியன் யூரோவை கடனாய் வாங்கியது கிரீஸ். அதை வைத்துக் கொண்டும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கே அது தேவைப்பட்டது. கடன் வாங்கிக் கடன் வாங்கி வாழும் குடும்பம் நடுத்தெருவிற்கு விரைவிலேயே வந்து விடுவது போல கிரீஸ் நான்கு பேர் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஜெர்மனிக்கு 68.2 பில்லியன், பிரான்ஸ் க்கு 43.8 பில்லியன், இத்தாலிக்கு 38.4 பில்லியன், ஸ்பெயினுக்கு 25 பில்லியன்,அமெரிக்காவுக்கு 11.3 பில்லியன், இங்கிலாந்துக்கு 10.8 பில்லியன் உட்பட சுமார் 270 பில்லியன் யூரோ கடன் இப்போது கிரேக்கத்தின் தலையில்.

சரி, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம், காட்சி மாறுகிறதா பார்க்கலாம் என இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தேர்தலில் மாற்று ஆட்சி யான இடதுசாரியின் அலெக்சிஸ் சிப்ரஸ் பதவிக்கு வந்தார். அவரிடமும் வறுமையையும் கடனையும் சட்டென அடைக்கும் மந்திரக் கோல் இல்லை.

ஒரு நாலு மாசம் கழிச்சு பணத்தைக் கொடுத்துடறேன் என கேட்டு வாங்கிய தவணையும் ஜூன் 30ம் தியதியோடு நின்று போக, கடன் கொடுத்தவர்கள் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தார்கள். கடன் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளைக் கேள் என நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

அவர்களுடைய நிபந்தனை ரொம்ப சிம்பிள். “மக்களுடைய வயிற்றில் அடித்து எங்கள் கடனை அடை !” என்பது தான் அவர்களுடைய நிர்ப்பந்தம்.

முதலாளித்துவம் வரியைக் கூட்டு, பென்ஷனை குறை, ரிட்டயர்ட்மென்ட் வயதை அதிகரி என ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிற்க, எளியவர்களோ வங்கியில் கிடக்கும் கொஞ்சம் பணத்தைக் கூட பயன்படுத்த முடியாமல் திகைத்தனர்.

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா வேண்டாமா என்பதை அறிய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நேரிடும். இப்போதைய கரன்சியை மாற்ற வேண்டியிருக்கும். பணவீக்கம் சுனாமியாய் தாக்கும். வெளிநாட்டு உதவிகளெல்லாம் நின்று போகும் என ஏகப்பட்ட சிக்கல்கள்.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் 25 சதவீதம் எனவும், குழந்தை வறுமை நிலமை 40 சதவீதம் எனவும் திணறிக் கொண்டிருக்கையில் உலகத்தின் கோபத்தையும் சம்பாதிக்க வேண்டுமா எனும் குழப்பம் ஒரு பக்கம். மக்களோ அரசின் பக்கம் நின்றார்கள். 61 சதவீதத்துக்கும் ஆதிகமானோர் அரசின் சார்பாய் வாக்களித்தார்கள்.

மக்களின் வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் பறித்து வட்டியாக கட்டிய பணம் பல்லாயிரம் கோடி. ஏற்கனவே கிரீஸ் நாடு சுகாதாரத்துக்காக செலவிடும் பணத்தையும், மருத்துவத்துக்காகச் செலவிடும் பணத்தையும் பாதிக்கு மேல் குறைத்திருந்தது. இதனால் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தும், குழந்தைகள் இறந்தே பிறக்கும் விகிதம் அதிகரித்தும் இருக்கிறது.

இருந்தாலும் உலக நாடுகள் கிரீஸிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், கிரீஸ் மக்களின் உறுதியான நிலைப்பாடு உலக நாடுகள் எதிர்பாராத ஒன்று. ஐரோப்பிய யூனியன் பெருந்தலைகள் இந்த முடிவினால் சற்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. யூரோவின் மதிப்பு சட்டென ஒரு சிறு சறுக்கலையும் சந்தித்திருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரீஸுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன. இந்த நாடுகளும் தங்கள் தலையில் கடனை வைத்திருக்கின்றன. இங்கும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லை. ஒரு வேளை நாமும் நாளை நடுத்தெருவில் நிற்கலாம் எனும் அச்ச உணர்வே இதன் காரணம். இப்படி ஐயோப்பிய யூனியன் இரண்டாக உடைந்தால் அதனால் பயனடையப் போவது அமெரிக்காவின் டாலர் என்பதும், வலுவிழக்கப் போவது யூரோ என்பதும் தான் ஐரோப்பிய யூனியனை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடுகள் கைவிட்டால் கிரீஸின் நிலமை இன்னும் மோசமாகி விடும் அபாயம் உண்டு. கிரீஸுக்கென தனி கரன்சி இல்லை. யூரோவே அங்கு பணமாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸை ஆதரிப்பதில்லை என நாடுகள் முடிவெடுத்தால் அதன் வங்கிகளில் பணம் இருக்காது. மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் முடங்கும். அரசு அவசர அவசரமாக புதுப் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதானதல்ல. இப்படி அடுக்கடுக்காய் இமாலயப் பிரச்சினைகள் அவர்கள் தலையில்.

இத்தகைய சூழலில் கிரீஸ் நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சி உலக வரலாற்றில் முக்கியமானது. உள்நாட்டு வளங்களைச் சார்ந்த வாழ்க்கை முறையை நாடுகள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கிரீஸ் நாட்டின் இன்றைய நிலமை நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்தியிருக்கிறது.

மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கிரீஸுக்கு மனரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் பண உதவி கிடைக்காவிட்டால் அவர்களால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாது. எனவே கிரீஸ் நாடாளுமன்றம் மீண்டும் கூடி கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைகளை ஏறக்குறைய ஏற்றுக் கொண்டும், சிலவற்றை மாற்றியும் புதிய ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தப் பட்டியலை அளித்திருக்கிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் நாடுகள் மீண்டும் ஒரு முறை தங்களுக்கு 53.3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை கிரீஸ் வைத்திருக்கிறது. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் கடனுதவி கிடைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சியிலிருந்து கிரீஸ் ஓரளவு மீண்டு வரும் என்பது வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கிடையே வங்கியில் கிடக்கும் பணம் தங்களுக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் பதட்டம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் தங்களுடைய கிரடிட், டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தி தங்கமாகவோ, வைரமாகவோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகவோ வாங்கிக் குவித்து வருகின்றனர். அதே நேரம் பணமாகக் கொடுக்க வேண்டிய இடங்களில் செலவுகளைக் குறைத்து வருகின்றனர். குறிப்பாக பார்கள், திரையரங்கங்கள், நாடக இடங்களெல்லாம் ஈயோட்டுகின்றன.

கிரீஸின் வீழ்ச்சி உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கிரீஸைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீன பொருளாதாரத்தில் நிலவி வரும் சறுக்கல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. டாலருக்கு நிகரான யென் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கமும் விலை வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்காமல், விவசாயத்தை வளப்படுத்தாமல், சிறு தொழில்களை மேம்படுத்தாமல் முதலாளித்துவத்தின் கைவிசிறிகளாகச் செயல்படும் எந்த நாடும் இத்தகைய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம் என்பதன் எச்சரிக்கை மணி இது.

*

 

சேவியர்

( Thanks : Namma Adayalam )