இந்திராணி : பதறடித்த ஒரு படுகொலை.

Indrani

ஒரு சின்ன செய்தியாக முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தேசத்தின் முதுகெலும்பை சில்லிட வைக்கும் பெரும் செய்தியாக உருமாறியிருக்கிறது. தனது சொந்த மகளை, அதுவும் திருமண வயதான மகளை, திட்டமிட்டு படுகொலை செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கை வாழ்ந்த நாற்பத்து மூன்று வயதான இந்திராணி முகர்ஜி தான் வழக்கின் மையம்.

அஸ்ஸாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்தவர் இந்திராணி. இவரது தந்தை ஒரு பொறியாளர். பெற்றோருடன் கவுகாத்தியில் வசித்து வந்த இந்திராணிக்கு முதல் காதலனாக அறிமுகமானார் சித்தார்த் தாஸ். திருமணம் நடக்கிறது. திருமண வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு குழந்தைகள். அவர்களில் மூத்தவர் தான் ஷீனா போரா. கொலை செய்யப்பட்டவர். இரண்டாவது குழந்தை மைக்கேல்.

ஷீனாவுக்கு இரண்டு வயதாகவும், மைக்கேல் கைக்குழந்தையாகவும் இருக்கும் போதே குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு கொல்கத்தாவிற்கு மேல்படிப்புக்காகச் சென்றார் இந்திராணி. அங்கே அவருக்கு இன்னொரு காதல் காத்திருந்தது. அவர் சஞ்சீவ் கன்னா. தனது இளமையையும், வனப்பையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தனக்கு திருமணம் ஆனதையும், குழந்தைகள் இருப்பதையும் மறைத்து காதலை வளர்த்தார் இந்திராணி. காதல் கனிந்து திருமணம் நடந்தது. இந்த‌ ச‌ஞ்சீவ் க‌ன்னா ஷீனாவின் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர்.

குழ‌ந்தைக‌ளின் போட்டோவை எப்போதும் த‌ன்னுட‌ன் வைத்திருப்பார் இந்திராணி. விசாரித்த கணவனிடம், இவ‌ர்க‌ள் என்னுடைய‌ ச‌கோத‌ரியும், ச‌கோத‌ர‌னும் என ஒரு மாபெரும் பொய்யைக் கூறினார். அப்ப‌டியே கால‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. இத‌ற்கிடையில் ச‌ஞ்சீவ் க‌ன்னாவுட‌னான‌ திருண‌த்தின் மூல‌ம் அவ‌ருக்கு வைதி என்றொரு மகள் பிறக்கிறாள்.

2000 ல் இவ‌ருடைய‌ வாழ்க்கை இன்னுமொரு திருப்ப‌த்தைச் ச‌ந்திக்கிற‌து. அழ‌கும், திற‌மையும் அவருக்கு மீடியாவில் அவ‌ருக்கு ஒரு ந‌ல்ல‌ வேலையைப் பெற்றுத் த‌ருகிற‌து. ஸ்டார் இந்தியா டிவியில் கிடைத்த‌ அந்த‌ வேலைக்காக‌ இப்போது கொல்கொத்தாவை விட்டு மும்பைக்குக் குடியேறுகிறார்.

மீடியா வாழ்க்கை அவ‌ருக்கு ஆட‌ம்ப‌ர‌த்தின் இன்னொரு ப‌க்க‌த்தை அறிமுக‌ம் செய்து வைக்கிற‌து. பிர‌ப‌ல‌ங்க‌ளுட‌ன் கிடைக்கும் தொட‌ர்பு அவ‌ருக்கு வ‌ச‌தியான‌ வாழ்க்கையின் மாய‌பிம்ப‌த்தை ம‌ன‌துக்குள் வ‌ரைகிற‌து. அப்போது அவ‌ருடைய‌ பார்வையில் விழுகிறார் பீட்ட‌ர் முக‌ர்ஜி. ஸ்டார் டிவியின் த‌லைமைச் செய‌ல் அதிகாரி. வ‌ய‌து வித்தியாச‌ம் பார்க்காம‌ல் அவ‌ரை வ‌லைக்குள் விழ‌ வைக்கிறார் இந்திராணி.

பீட்ட‌ர் அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் த‌ன‌து ம‌னைவி ஷ்ப்னத்தைப் பிரிந்து ம‌கன்கள் ராகுல் ம‌ற்றும் ராபினுடன் த‌னியே வ‌சித்து வ‌ந்தார். அது இந்திராணியின் காத‌ல் திட்ட‌ங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருந்த‌து. இங்கே த‌ன‌து ம‌க‌ள் வைதியை, ம‌க‌ள் என்றே அறிமுக‌ம் செய்கிறாள். ஷீனாவும், மைக்கேலும் த‌ன‌து ச‌கோத‌ரியும், ச‌கோத‌ர‌னும் என்று பீட்ட‌ரிட‌மும் கதை கட்டுகிறாள்.

மனைவியைப் பிரிந்த பீட்டரும், கணவனைப் பிரிந்த இந்திராணியும் வாழ்க்கையில் இணைகிறார்கள். அவ்வப்போது பெற்றோரையும், உலகிற்கு சகோதர சகோதரியாய் அறிமுகப்படுத்தப்பட்ட தனது குழந்தைகளையும் கவுகாத்திக்குச் சென்று பார்த்து வருகிறார் இந்திராணி. அவர்களுடைய படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்குகிறார்.

2007ம் ஆண்டு ஒரு புதிய‌ தொலைக்காட்சி சேன‌லை ஆர‌ம்பிக்கிறார்க‌ள் பீட்ட‌ர் இந்திராணி த‌ம்ப‌தியின‌ர். நயன்.எக்ஸ் மீடியா எனும் அந்த‌ சேன‌ல் இவ‌ர்க‌ளுக்கு ஒரு புதிய‌ அந்த‌ஸ்தைக் கொடுக்கிற‌து. ப‌க‌ட்டும், ஆட‌ம்ப‌ர‌மும் நிறைந்த‌ வாழ்க்கையை இந்திராணி முழுமையாய் அனுப‌விக்கிறார்.

கால‌ம் ஓடுகிற‌து. ஷீனா போரா ப‌தின் வ‌ய‌துக‌ளில் இருக்கிறார். மேல்ப‌டிப்புக்காக‌ க‌வுகாத்தியை விட்டு இந்திராணி இருக்கும் மும்பைக்கு வ‌ருகிறார். அங்கேயே ப‌டித்து விட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு வேலையிலும் சேர்கிறார். தன்னைப் பார்க்க‌ வ‌ந்த‌ ஷீனாவை, ‘இவ‌ள் தான் என் த‌ங்கை ஷீனா’ என‌ பீட்ட‌ரிட‌ம் அறிமுக‌ம் செய்து வைக்கிறாள் இந்திராணி.

பீட்ட‌ரின் ம‌க‌னுக்கு இள‌மைத் துள்ள‌லான‌ வய‌து, ஷீனா ப‌தின் வ‌ய‌துக‌ளில். இருவ‌ரும் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிய‌ர் என்ப‌து ராகுலுக்குத் தெரியாது. காத‌ல் ப‌ற்றிக் கொள்கிற‌து. இந்த‌க் காத‌ல் தான் இந்திராணிக்கு த‌லைவ‌லியாய் மாறிவிடுகிற‌து. ஷீனாவோ அன்னையின் மிர‌ட்ட‌லுக்கும், க‌ண்டிப்புக்கும், அறிவுரைக்கும் க‌ட்டுப்ப‌ட‌வில்லை.

ஷீனா தனது மகள் எனும் உண்மை பீட்டருக்குத் தெரிந்து விடுமோ, அதன் மூலம் தனது உல்லாச வாழ்க்கை முடிவுக்கு வருமோ என இந்திராணி பயப்படுகிறாள். இதற்கிடையில் ஷீனா கர்ப்பமாகிறார். இந்திராணி ஒரு ப‌டுகொலைக்கு த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக் கொள்கிறார்.

கையில் புர‌ளும் ப‌ண‌ம் அவ‌ருக்கு வ‌ச‌தியாய்ப் போய்விடுகிற‌து. 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தியதி ஷீனாவை வலுக்கட்டாயமாய் காருக்குள் திணிக்கிறார். பாந்திரா நேஷனல் கல்லூரி அருகில் வைத்து சொந்த மகள் என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறார். உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் எரித்து விடுகிறார். இத‌ற்கு துணை நின்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர‌து இர‌ண்டாவ‌து க‌ண‌வ‌ன் ச‌ஞ்சீவ் ம‌ற்றும் டிரைவர் ஷியாம் ம‌னோக‌ர் ராய்.

ஷீனாவைக் காணாத‌தால் க‌வ‌லைப்ப‌ட்ட‌ ஒரே ம‌னித‌ர் அவ‌ரை விரும்பிய‌ ராகுல் தான். இந்திராணியோ, ஷீனா மேல்ப‌டிப்புக்காக‌ வெளிநாடு போய்விட்ட‌தாய் க‌தை விடுகிறார். ஆனாலும் அது குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் இந்திராணி கொடுக்கவில்லை. ந‌வீன‌ தொழில்நுட்ப‌ யுக‌த்தில் எந்த‌ நாடும் தொலைவாக‌ இல்லை. அதுவும் ப‌ண‌த்துக்குக் குறைவில்லாத‌ ராகுலுக்கு இந்த‌க் க‌தையெல்லாம் ந‌ம்பும்ப‌டியாக‌ இல்லை. என‌வே போலீஸில் புகார் அளிக்கிறார்.

ராகுலை நம்ப வைக்க இந்திராணி பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்கிறார். இறந்து போன ஷீனாவின் மொபைலில் இருந்து ராகுலுக்கு “உன்னை பிடிக்கவில்லை” என்பது போன்ற எஸ்.எம்.எஸ் களை அனுப்புகிறார். ஷீனா வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு ராஜினமா கடிதத்தைப் போலியாக அனுப்புகிறார். தான் வாடகைக்கு இருந்த வீட்டைக் காலி செய்வதாக போலியாக கடிதம் அனுப்புகிறார். இப்படி ஷீனாவின் மொபைலை ஒரு வருடம் கையிலேயே வைத்திருந்து ஷீனா உயிருடன் இருப்பது போல‌ ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

தனது அக்கா எங்கே என மைக்கேலும் விசாரிக்கிறார். கைக்குழந்தை முதல் அக்காவுடனே வளர்ந்த மைக்கேலுக்கு இந்த பிரிவு பெரும் கவலையளிக்கிறது. அக்கா எங்கே என தொடர்ந்து விசாரிக்கிறார். “ஷீனா அமெரிக்கா போயிருக்கிறார். உன்னைத் தொடர்பு கொள்ள அவள் விரும்பவில்லை” எனும் இந்திராணியின் பொய்யை மைக்கேல் நம்பவில்லை. அக்காவின் பாசம் அவருக்கு மட்டுமே தெரியும். கடைசியில், இனிமேல் அவளைப்பற்றி விசாரித்தால் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை என மிரட்டுகிறார். அம்மாவின் பணமும், உதவியும் தேவைப்பட்ட மைக்கேல் அமைதியாகிறான்.

2012ம் ஆண்டு ராகுல் அளித்த‌ புகார் அப்ப‌டியே மெல்ல‌ மெல்ல‌ ம‌றைந்து போய்விட்ட‌து. இந்திராணி வெகு இயல்பாக தனது வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையில் வெகு சமீபத்தில் ஷாம் மனோகர் ராய் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக, ஆயுத சட்டத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்படுகிறார். வசமாக மாட்டிய டிரைவரிடம் தங்களுக்கு வந்த பழைய புகாரின் அடிப்படையில் ஷீனாவைப் பற்றி விசாரித்த போது டிரைவர் நடந்த விஷயத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்.

இந்த டுவிஸ்டை காவல்துறையே எதிர்பார்க்கவில்லை. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்திராணி அப்போது ஊரில் இல்லை, எனவே ரகசியமாய்க் கண்காணிக்கப்பட்டார். பின்னர் நாடு திரும்பிய இந்திராணி கைது செய்யப்பட்டார்.

காவ‌ல்துறையிட‌மும் முத‌லில் ஷீனா த‌ன‌து ச‌கோத‌ரி என்றே கூறினார் இந்திராணி. ஆனால் அந்த‌ பொய் மிக‌ எளிதில் உடைந்து விட‌க் கூடிய‌து என்ப‌து அவ‌ருக்குத் தெரிந்தே இருந்த‌து. விசாரணை என்று வந்து விட்டால், இந்தத் தொழில் நுட்ப யுகம் அனைத்தையும் காட்டிக் கொடுத்துவிடும் எனும் உண்மை மீடியாவில் இருந்த இந்திராணி அறியாததல்ல. எனவே, இப்போது ஒப்புத‌ல் வாக்குமூல‌த்தில் உண்மை விஷ‌ய‌ங்களை ஒவ்வொன்றாய்ப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

நில‌மையின் வீரிய‌த்தைக் க‌ருத்தில் கொண்டு மும்பை க‌மிஷ‌ன‌ர் ராகேஷ் ம‌ரியா நேர‌டியாக இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வ‌ருகிறார். இந்திராணியின் இர‌ண்டாவ‌து க‌ண‌வ‌ன் ச‌ஞ்சீவ் க‌ன்னாவும் கைது செய்யப்பட்டார்.

வ‌ழ‌க்கின் முக்கிய‌ குற்ற‌வாளிக‌ளான‌ இந்திராணி முக‌ர்ஜி, ச‌ஞ்சீவ் க‌ன்னா, ஷ்யாம் ம‌னோக‌ர் மூவ‌ருமே காவ‌ல் துறையின் பிடியில் இருப்ப‌தால் இந்த‌க் கொலையின் ம‌ர்ம‌ முடிச்சுக‌ள் அனைத்தும் மிக விரைவில் அவிழும் என‌ எதிர்பார்க்க‌ப் ப‌டுகிற‌து. ராகுல், மைக்கேல் போன்றோரின் த‌க‌வ‌ல்க‌ள் இந்த‌ வ‌ழ‌க்கிற்கு வ‌லுவூட்டும் என்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு ஆருஷி கொலை வ‌ழ‌க்கு தேச‌த்தை உலுக்கிய‌து. இப்போது அதே போல‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு மீண்டும் ஒரு முறை தேச‌த்தைப் புர‌ட்டிப் போட்டிருக்கிற‌து.

இது க‌வுர‌வ‌க் கொலையா ? ஷீனாவின் பெய‌ரில் பினாமியாய் சேர்த்த‌ சொத்துகள் தான் காரணமா ? ஷீனாவின் காத‌ல் தான் பிர‌ச்சினையா ? ஈகோ மோதலா ? என‌ ப‌ல்வேறு கோண‌த்தில் இந்த‌ வ‌ழ‌க்கை காவ‌ல்துறையின‌ர் விசாரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

குடும்ப உறவுகள் பலவீனமடைந்து வருவது மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான கவலையை உருவாக்கியிருக்கிறது.

*

சேவிய‌ர்

( Thanks to Namma Adayalam )