IOF : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !

Internet-of-Thingsன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !

இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.

பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

பின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.

இந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா ? அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.

ஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா ? அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு !

அப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.

அதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா ? இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.

இதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா  வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே  இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் ? இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.

“இணையம் என்றால் என்ன ? “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன ? “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”.  இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் !

இதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா ?, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது? என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா ? இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.

இதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.

சில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ?” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ?

இங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது ! அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.

RFID – ஞாபகம் இருக்கிறதா ? NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.

ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது ! அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.

உணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

ஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி  வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ! ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ? இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.

வீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

தற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.

2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம்.  மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் ! இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.

இங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.

இன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் ! கட்டிலுக்கு அடியிலிருந்து.

சேவியர்

நன்றி – தினத்தந்தி.

டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் ! 

இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.

எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட்  சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும். 

சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை. விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.

உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை  வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.

ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.

கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.

டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” – மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.

நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.

டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.

நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான்.  உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.

ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம்.  ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.

ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.

மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து ! 

இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.

இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.

கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !

நன்றி : அவள் விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

சிறுகதை : யோவ்… இண்டர்நெட் வேலை செய்யலைய்யா…

  

“சுவிட்சை ஆன் பண்ணியிருக்கீங்களா சார் ” மறு முனையில் பேசிய கஸ்டமர் சர்வீஸ்காரனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க கிருபாவுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு பதில் சொன்னான். 

“ஆன் பண்ணியிருக்கேன்” 

“உங்க மோடம்ல லைட் எரியுதா ?” 

“சுவிட்சைப் போட்டா லைட் எரியாம மோடமேவா எரியும்?” 

“சார்… பிளீஸ் சொல்லுங்க.. எத்தனை லைட் எரியுது ? 

“நாலு லைட்… பச்சை பச்சையா எரியுது” 

“அப்போ ஏதோ மிஸ்டேக். இரண்டாவதா இருக்கிற லைட் மஞ்சள் கலரா எரியணும்” 

“பாஸ்… இதையெல்லாம் நான் லாஸ்ட் ஒன் வீக்கா உங்க கிட்டே டெய்லி போன் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீங்க தான் வயரு சுவத்துல இருக்கா, சுவரு வீட்டுல இருக்கா, வீட்ல கரண்ட் இருக்கான்னு கடுப்படிக்கிறீங்க” 

“சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்… எவ்ளோ நாளா இண்டர்நெட் வர்க் ஆகலைன்னு சொன்னீங்க ?” 

“இன்னியோட முழுசா ஒரு வாரம்” 

“ஓ..கே சார்… உங்க பழைய கம்ப்ளையண்ட் நம்பர் என்ன ?” 

சொன்னான். 

“பிளீஸ் ஹோல்ட் ஆன்” மறுமுனை சொல்லி முடித்ததும் போனில் ஏதோ இசை வழியத் தொடங்கியது. மெலிதான இசைதான். ஆனால் இந்த சூழலில் அது கர்ண கொடூரமாய்த் தெரிந்தது. 

இந்த ஹோல்ட் ஆனைக் கண்டு பிடிச்சவனைக் கொல்லணும். நாலு கேள்வி கேட்டுட்டு ஹோல்ட்ல போட்டுட்டு டீ குடிக்க போயிடறாங்க போல. பத்து நிமிசம் கழிச்சு சாவாகாசமா வந்து சாவடிப்பாங்க. கிருபாவின் எரிச்சல் ஏறிக் கொண்டிருந்தது. 

இருக்காதா பின்னே. போன மாசம் தான் பிரியாவுக்கு அவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆச்சு. நிச்சயதார்த்தம் ஆன முதல் நாள்ல இருந்து எப்போவும் ஸ்கைப் தான் ஒரே துணை. நெட்ல பேசறது, வெப் கேம்ல சிரிச்சுக்கிறது, இ மெயில்ல போட்டோ அனுப்பிக்கிறது ன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடிட்டே இருந்தது. சுவாரஸ்யத்தோட உச்சத்துல இருந்தப்போ தான் ஒரு நாள் சட்டுன்னு அந்த சிக்கல் வந்துது. இண்டர் நெட் கணக்ட் ஆகலை ! 

நெட் கனெக்ட் ஆகாததெல்லாம் ஒரு பெரிய சர்வதேசக் குற்றம் கிடையாது தான். இன்னிக்கு பெப்பே காட்டும். கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்தா கணெக்ட் ஆயிடும். இதுக்குன்னு சில ஸ்பெஷல் வைத்தியங்கள் உண்டு. 

முதல்ல மோடம் பின்னாடி இருக்கிற வயரை எல்லாம் கழற்றிட்டு திரும்ப மாட்டணும். என்னத்த கழட்டறோம்ன்னும் எதுக்கு கழட்டறோம்னும் யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு தடவை புல்லா கழற்றி மாட்டினா செத்துப் போன மேடம் வேலை செய்ய சாத்தியம் இருபது சதவீதம் உண்டு. 

அதுவும் வேலைக்காவலைன்னா இருக்கவே இருக்கு சிஸ்டம் ரீஸ்ட்டார்ட். கம்ப்யூட்டரை ஒரு வாட்டி ஷட்டவுன் பண்ணி ஆன் பண்ணினா அதுபாட்டுக்கு எல்லா கனெக்ஷன்களையும் தூசு தட்டு ஜம்முன்னு இண்டர்நெட் வேலை செய்ய ஆரம்பிக்கும். 

இப்படி எல்லா முதலுதவிகளும் செய்து பார்த்து கிருபாவுக்கே சலிப்பு வந்துடுச்சு. இந்த வாட்டி தான் இப்படிப் படுத்துது. என்ன பண்ணினாலும் வேலைக்காவலை. தெரியாத் தனமா இந்த பி.எஸ்.என்.எல் வேற வாங்கித் தொலச்சுட்டேன். வேற பிரைவட் கம்பெனின்னா கூப்பிட்டா உடனே வந்து நிப்பாங்க. முதல்ல இதை தலையைச் சுத்தி தூரப் போடணும். கிருபாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஸ்பீக்கர் போனில் இன்னும் மியூசிக் தான் ஓடிக் கொண்டிருந்தது. 

கண்டிப்பா அந்த ….. போனை ஹோல்ட் பண்ணிட்டு டீ குடிக்கத் தான் போயிருக்கும்.  பொறம்போக்கு… கிருபா சத்தமாகவே அந்த வார்த்தையைச் சொல்லி அருகிலிருந்து சேரை எட்டி உதைத்துத் தள்ளியபோது மியூசிக் நின்றது. 

ஐயையோ .. மிதிச்ச மிதியில போனும் கட்டாச்சோ என ஒரு வினாடி கிருபா திடுக்கிட்டான். நல்ல வேளை அப்படியெல்லாம் நடக்கவில்லை. இல்லேன்னா மறுபடியும் போன் பண்ணி “பிரஸ் ஒன் பார் இங்கிலீஸ்” ன்னு கேக்கறதுக்கு பதிலா மோடத்தையே எரிச்சுடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. 

“தேக்ஸ் ஃபார் ஹோல்டிங் சார்” 

“சரி சரி.. டீ குடிச்சாச்சா ?” 

“ஐ.. டிடிண்ட் கெட் யூ சார்…” 

“எவ்ளோ நேரம் தான் ஹோல்ட்ல போடுவீங்க. இந்த மியூசிக் கேட்டுக் கேட்டு காதெல்லாம் வலிக்குது. உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கணும்ன்னு தோணினா ஹோல்ட் ல போட்டுடுவீங்க. அப்படித்தானே ? உண்மையைச் சொல்லுங்க… ” 

மறுமுனையில் அவன் சிரித்தான். “நோ சார்.. நான் உங்க டேட்டா எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தேன்” 

“ஓ… மறுபடியும் ஒரு செக்கிங்ஆ ? சரி… ஏதாச்சும் யூஸ் புல்லா கிடைச்சுதா ? இல்லை இன்னொரு நயன் டிஜிட் நம்பர் தருவீங்களா ? கஸ்டமர் கம்ப்ளையிண்ட் நம்பர்ன்னு. ” 

“நோ சார்… உங்க பிராப்ளம் என்னன்னு கண்டு பிடிச்சாச்சு” 

“ஓ ரியலி… தேங்க் காட்…. கேக்கவே சந்தோசமா இருக்கு. ? என்ன பிராப்ளம் ? நெட்வர்க் இஷ்யூவா ? ” 

“நோ.. நோ சார். எங்க சைட் எந்த பிராப்ளமும் இல்லை. உங்க சைட்ல தான்” 

“என் சைட்ல என்னய்யா பிராப்ளம்” 

“நீங்க இந்த மாசம் பணமே கட்டலை சார். சோ, டிஸ்கணக்ட் பண்ணியிருக்காங்க. உங்களுக்கு இண்டிமேஷன் கூட அனுப்பியிருக்காங்களே” 

மறுமுனையில் அவன் சொல்லச் சொல்ல கிருபாவுக்கு பக் என்றானது. ஐயையோ…. எப்படி மறந்தேன் ? பணமே கட்டாமல் இண்டர்நெட்டை துண்டித்திருக்கிறார்கள். அந்த விஷயம் தெரியாமல் ஒருவாரமாக எல்லோரிடமும் எகிறிக் குதித்து களேபரம் பண்ணியிருக்கிறேன். நினைக்க நினைக்க கிருபாவிற்கு தன் மேலேயே கடுப்பாய் இருந்தது. 

லவ் மூடில் பணம் கட்டவே மறந்து போன சமாச்சாரம் அவனுக்கு ரொம்ப லேட்டாக உறைத்தது. 

“சார்… இருக்கீங்களா ?” 

“யா… ஐ…ஐ..யாம் சாரி… ஐ.. பர்காட்… நான் பணத்தைக் கட்டிடறேன்” கிருபாவின் குரலின் சுருதி ஏகத்துக்குக் குறைந்திருந்தது. 

“ஈஸ் தெயர் எனிதிங் எல்ஸ் ஐ கேன் டு பார் யூ சார்” மறுமுனையில் கேட்டவனுடைய குரலில் கொஞ்சம் நக்கல் இருந்தது போல தோன்றவே “நோ.. தேங்க்ஸ்” என்று சொல்லாமலேயே போனைக் கட் பண்ணினான் கிருபா. 

அவனுக்கு முன்னால் பளீர் பச்சை நிறத்தில் எரிந்து கொண்டிருந்த மோடம் விளக்குகள் அவனைப் பார்த்து கை கொட்டிச் சிரிப்பதாய் தோன்றியது அவனுக்கு. 

ஃ 

 
 

  

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே