From Paris with Love : எனது பார்வையில்

என்ன இருக்கு என்ன இல்லைன்னெல்லாம் கவலையில்லை ஜான் டிரவோல்டா இருந்தா படத்தைப் பாக்கலாம் என நினைப்பவர்கள் “மட்டும்” இந்தப் படத்தைப் பார்க்கலாம். கதை வேணும், லாஜிக் வேணும், இத்யாதிகள் வேணும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள் கொஞ்சமல்ல, ரொம்ப தூரமா ஓட வேண்டிய அதிரடி ஆக்ஷன்  படம் ஃப்ரம் பேரிஸ் வித் லவ்.

பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க அம்பாஸடருக்கு பர்சனல் அசிஸ்டெண்டாக இருப்பவர் ஜேம்ஸ் ரீஸி ( ஜோனதன் மேயர்ஸ்). ஒரு வசீகர அழகியைக் காதலியாகக் கொண்டு ரொமாண்டிக்கில் திரிகிறார். படத்தின் ஆறுதல் சமாச்சாரங்களில் இந்த அழகிக்கும் ஒரு இடம் உண்டு. அவருடைய ஆசையெல்லாம் ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்டாக வேண்டும் என்பது தான். அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. போனில் வரும் மர்ம உத்தரவுக்கு ஏற்ப நடக்கும் போது அவருடைய பார்ட்னர் ஆகிறார் டிரவோல்டா. மொட்டைத் தலை பிரஞ்ச் தாடி, அசத்தும் பாடிலேங்குவேஜுடன்.

இவரு நல்லவரா, கெட்டவரா என்று ஒவ்வொரு வினாடியிலும் குழப்பும் டிரவோல்டா பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். பிரான்சில் இருவருமாக இரண்டு நாட்கள் பண்ணும் களேபரம் தான் கதை. அப்படி என்ன தான் செய்கிறார்கள் ? ஹி..ஹி.. ஒட்டு மொத்த தீவிரவாத குழுவையே சுட்டுத் தீர்க்கிறார்கள். (விஜயகாந்த் ஸ்பெஷல் ஆச்சே ! )

போனில் வரும் உத்தரவு, டிராவோல்டாவின் அசால்ட் ஆறுமுக நடவடிக்கை என டிராவோல்டா மீதான சந்தேகங்களை அதிகரித்து, கடைசியில் ஒரு டுவிஸ்டுடன் ( ஆமா, இதெல்லாம் ஒரு டுவிஸ்ட் ) படம் முடிகிறது. டிராவோல்டா நல்லவர் தான்பா என நம்பவைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

டேக்கன் பட இயக்குனரின் ( பெர்ரி மாரெல் ) படம் இது. ஆனால் எதையும் வித்தியாசமாகச் சிந்திக்காமல் போதை, தீவிரவாதம், அது இது என ஹைதர் கால சாலைகளிலேயே ஓடியிருக்கிறார். அதிலும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. துப்பாக்கியை எடுக்க வேண்டியது, சுட வேண்டியது. வில்லன் சுடும்போது விஜயகாந்த் மாதிரி அங்கே இங்கே குதிக்க வேண்டியது அவ்ளோ தான்.

ஒரு பரபரப்பான படமாகவும் இல்லாமல், நல்ல படமாகவும் இல்லாமல், தரமான படமாகவும் இல்லாமல் “ஜஸ்ட் ஒரு ஆக்ஷன் படம்” எனும் ரேஞ்சில் இருக்கிறது இந்த படம். (விஜய் பார்த்தால் அடுத்து இப்படி ஒரு தோல்விப் படத்தைக் கொடுக்க வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றாலும் நிற்பார். )

இந்தப் படத்தைப் பார்க்கலாமா இல்லையா என யோசிப்பவர்களுக்கு இந்த விமர்சனத்தில் வரும் முதல் வாக்கியம் தான் பதில்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்