குசேலன் – உண்மையிலேயே நல்ல படம்

குசேலன் திரைப்படத்தை இத்தனை தாமதமாய் பார்த்ததற்குக் காரணம் நான் இணையத்தில் வாசித்த எதிர் விமர்சனங்கள் தான் காரணம். குசேலன் மகா குப்பை என்றும், இதை விட பத்து பத்து படத்தை பத்து வாட்டி பார்க்கலாம் என்றும் விமர்-ஜனங்கள் சொன்ன பின் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஓரமாய் ஒதுங்கிவிட்டேன்.

இந்த வார இறுதியில் தான் “பார்த்தேன் குசேலனை

சமீபகாலமாக எந்தத் தமிழ்ப் படத்தையும் பார்த்து அழுத ஞாபகம் இல்லை. கடைசியாக மனதை உலுக்கிய படம் சேரனின் “தவமாய் தவமிருந்து” என நினைக்கிறேன். அதற்குப் பிறகு அந்த அளவுக்கு மனதை உலுக்கி எடுத்த படம் குசேலன்.

பசுபதி எனும் அற்புதமான நடிகனும், ரஜினி எனும் சூப்பர்ஸ்டாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்வையாளர்களை உறைய வைத்த அந்த கடைசி பதினைந்து நிமிடங்களுக்காகவே குசேலன் படம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் பெரும்பாலான காட்சிகள் பசுபதியையும், அவருடைய நடிப்பையும் (வெயிலுக்கு அடுத்தபடியாக) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. யதார்த்தங்களை தனது அசைவுகளில் வெளிப்படுத்தும் பசுபதியை அவனுக்குள் உரம் போட்டுக் கிடந்த நடிப்பின் இன்னோர் பரிமாணத்தை குசேலன் வெளிக்கொணர்ந்தது எனலாம்.

குசேலனின் பலவீனங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டாலும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒன்றே ஒன்று தான். தமிழ்ப்படமெனில் குறைந்தது இரண்டரை மணி நேரம் ஓடியே ஆகவேண்டும் என நினைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் கூட்டு முட்டாள் தனம்.

அப்படி இரண்டரை மணி நேரம் இட்டு நிரப்புவதற்கு சரக்கில்லையெனில் என்ன செய்வது ? அருவருக்கத் தக்க அரைகுறை நகைச்சுவையையும், கவர்ச்சியையும் இட்டு நிரப்புவது. எது சிறந்தது ? அரை மணி நேரம் முன்னதாகவே படத்தை முடிப்பதா ? அல்லது அரை மணி நேரம் திரையில் ஏதேனும் கோணங்கித் தனத்தைக் காட்டி ரசிகனை வெறுப்பேற்றுவதா என்பதை மேற்கூறிய அந்த பெருந்தலைகள் நிர்ணயிக்கட்டும். அப்படி இருந்தால் தான் ரசிப்பார்கள் என அந்தப் பழியை தயவு செய்து ரசிகர்களின் தலையில் போடாதிருக்கக் கடவது.

காலேஜ் டே அன்று பிரின்சிபல் சேர்மேனைக் கூப்பிட்டுச் சொல்வார் “பாருங்கப்பா… இன்னிக்கு ஸ்டேஜ் உங்களுது. காலைல இருந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் நீங்க அதுல ஆட்டம் போடலாம்… ஏழு மணிக்கு மீட்டிங் இருக்கு அப்போ ஒதுங்கிடுங்க.”

மாணவர்களும் ஆட்டம் போடுவார்கள். எல்லா கோணங்கித் தனத்தையும், சில்மிஷங்களையும் மேடையில் போட்டு துவைப்பார்கள். முடிந்த அளவுக்கு டேபிள் செயரை உடைத்துப் போடுவார்கள். ஏழுமணிக்கு மீட்டிங் ஆரம்பமாகும், அமைதியாய் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ அழுத்தமாய் நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

இது தான் பெரும்பாலான வெற்றி பெற்ற மலையாள சினிமாவின் பார்முலா. முதல் எழுபத்தைந்து சதவீதம் ஆட்டம், பாட்டம், நகைச்சுவை. கடைசி கால்வாசி அழுத்தமான கதை. பெரும்பாலும் ஆனந்தமாய் ஆடிப்பாடும் கதாநாயகனின் மனசுக்குள் இருக்கும் இன்னோர் சோகக் கதை! மோகன்லாலின் வெற்றிபெற்ற பத்து படங்களைப் பட்டியலிடுங்கள் அதில் எட்டு இப்படித் தான் இருக்கும்.

அந்த பார்முலா அங்கே வெற்றி பெறக் காரணம், முதல் முக்கால் வாசியில் இருக்கும் எதார்த்தமான நகைச்சுவை மட்டுமே.

குசேலனில் இல்லாமல் போனதும் அது மட்டுமே. அவசர அவசரமாய் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் இட்டு நிரப்பப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளில் பயங்கர சலிப்பு.

எனினும், விமர்சனங்கள் சொன்னது போல குசேலன் மட்டமான படம் அல்ல. விமர்சனங்கள் பெரும்பாலும் ரஜினி எனும் தனிமனிதன் மீதான வெறுப்பாகவே வெளிப்பட்டிருக்கின்றனவோ எனும் ஐயம் எழுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அருகில் இருந்து படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே இறுக்கமாய் அமர்ந்திருந்ததையும், அவ்வப்போது கண்களைக் கசக்கியதையும் பார்க்க முடிந்தது.

தேவையற்ற சில பாடல்களையும் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளையும் வெட்டி விட்டுப் பார்த்தால் சமீபகாலமாக வந்த படங்களில் தரமான படங்களின் வரிசையில் வைக்கக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஒரு படம் குசேலன்.

குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.

1. பேரின்பப் பேச்சுக்காரா

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா” ஒரு காலத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடல். அதே போல எழுத முயன்ற யுகபாரதியின் பாடல் இது.

பேரின்பப் பேச்சுக்காரன் – எனும் வார்த்தைப் பிரயோகம் வசீகரித்த அளவுக்கு பாடல் வசீகரிக்கவில்லை. துதி பாடும் வளையத்துக்குள் விழுந்து விட்ட நண்பர் யுகபாரதியைக் கேட்டால் காலத்தின் கட்டாயம் என சொல்லக் கூடும். ஆங்காங்கே “ஆண்களின் அரசாங்கம்” என்றெல்லாம் சற்றே வசீகரிக்க முயன்று ஒரு பாடலாசிரியராகத் தோற்றிருக்கிறார் யுகபாரதி. ஒருவேளை ரசிகர் மன்ற கூட்டங்களுக்குப் பயன்படக் கூடும் இந்தப் பாடல்.

எனினும் “பேருந்தில் நீ எனக்குச் சன்னலோரம்” என வசீகரித்த யுகபாரதியின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் தலை கவிழ்கிறது இந்தப் பாடல்.
2. சினிமா சினிமா

வாலி எழுதியிருக்கிறாராம். ரஜினி மேலே ஏதோ கோபம் போல. கொருக்குப்ப்பேட்டை ரஜினி குமாரிடம் கொடுத்தால் இதை விடப் பிரமாதமாக ஒரு “போஸ்டர்” கவிதை எழுதுவார்.

என்னாச்சோ தெரியவில்லை. ரஜினிக்கு பாடல் எழுதும்போது மட்டும் அனுபவக் கவிஞர்கள் கூட அகல பாதாளத்தில் விழுந்து விடுகிறார்கள்.

கவித்துவமும், கவனிப்புகளும் இல்லாமல் வெறுமனே தினத்தந்தியில் ரஜினிக்கு எழுதப்பட்ட  வாழ்த்துச் செய்தியை வாசிப்பது போல இருக்கிறது பாடலும் இசையும்.

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி

3. ஓம் சாரரா…

இதுவும் வாலியில் கற்பனைக் குழந்தையே. இதுவும் குறைப் பிரசவ கேஸ் தான். இந்தப் பாடலுக்கு வரிகள் ரஜினிகாந்த் என்று சொல்லலாம். அப்புறம் என்ன எல்லா ரஜினி படத்தையும் வரிசைப்படுத்திய பணி மட்டுமே வாலியுடையது. செங்கல் அடுக்கியபின் ஆங்காங்கே சாந்து பூசும் வேலை போல.

சில காதல் வரிகள் எழுதியிருக்கிறார். லோ – பட்ஜெட் என்றால் பாடலின் தரமும் லோ – வாக இருக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ. போகிற போக்கில் அவசர கோலத்தில் ஏதோ வரைந்து விட்டு போயிருக்கிறார்.

என்னவோ மாயம் செய்து என்னைக் கவிழ்த்தாயே” என்பன போன்ற வரிகளைத் தானா ரஜினிக்காய் வைத்திருக்கிறீர் !!! வாலி நியாயமா ?
4. சாரல்..

நயந்தாரா ஆடிப்பாடும் பாடல் என நினைக்கிறேன். “சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமா ?” என அசத்திக் காட்டிய வைரமுத்துவும், “செல்ல மழையே …” என மழையில் ரசிக்க வைத்த நா.முத்து வும் போல தானும் ஒரு அழியாத பாடல் எழுதவேண்டும் என ஆசைப்பட்ட கவிஞர் கிரித்தயாவின் கனவு இந்தப் பாடல்.

வெள்ளி மழை, கிள்ளி விட்டது – என்றெல்லாம் பாடல் எழுதினால் அந்தப் பட்டியலில் சேர முடியாது என்பதை கவிஞர் உணர்ந்து கொள்தல் நலம். மழையைப் பற்றி எழுதும் போது காகிதக் கப்பல், நனைதல், சாரல், தூறல், மயில், தவளை இவற்றைத் தவிர வேறு எதையும் கற்பனை செய்ய முடியாத பாடல் எப்படி நிலைக்க முடியும் ?

இசையிலும் பாடல் வரிகளிலும் எதிலுமே நிறைவு தராத பாடல். ஒருவேளை காட்சிப் படுத்தல் நன்றாக இருக்கலாம்.

5 சொல்லம்மா

பா.விக்கும் ஒரு வாய்ப்பு இந்த படத்தில் பாடல் எழுத. இசையையும் பாடல் வரிகளையும் பொறுத்தவரையும் கொஞ்சமேனும் நிறைவு தரும் பாடல் இது ஒன்றே. “இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்றோ “மூக்கில்லா ராஜ்யத்து முறி மூக்கன் ராஜாவு” என்றோ உங்களுக்குப் பிரியமான மொழியில் இதை புரிந்து கொள்ளலாம்.

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

இசை

ரஜினியின் திரைப்படத்துக்குச் சற்றும் தகுதியில்லாத இசை. இரைச்சலையும், தெளிவின்மையையும், முரட்டுக்காளை காலத்து ராகங்களையும் வைத்துக் கொண்டு தேவையற்ற பில்டப்களைக் கொடுத்த இசையமைப்பாளரை ரசிகர்கள் “கவனித்துக்” கொள்ளட்டும்.

மொத்தத்தில்

சன் தொலைக்காட்சியில் சொல்வது போல ஒரு வரியில் இசை விமர்சனம் சொல்ல வேண்டுமெனில்

குசேலன் – உண்மையிலேயே பரம ஏழை.

குசேலன் : பாடல் வரிகளும், விமர்சனமும்

பாடல் : சினிமா சினிமா சினிமா …

எம்ஜியாரு, சிவாஜிகாரு, என்.டி.யாரு ராஜ் குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இதுபோல் வருமா வருமா

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்துக் காட்டுவது சினிமா தான்
அதுக்கு யாரிங்கு சாட்சின்னா
அட வேறு யாரு நம்ம தலைவர் தான்.

மொத்த பூமியையும்
பத்து ரூபா தந்தா
சுத்திக் காட்டுதிந்த சினிமா தான்.

பாரு பாரு பட ஷூட்டிங் பாரு
பலர் வேர்வை சிந்தினாங்க
நூறு கைகள் ஒண்ணு சேரவேணும் ஒரு
சினிமா உருவாக

காபி டீயும் தரும் புரடக்ஷன் பாயும் இங்கே ரொம்ப முக்கியம் தான்
டிராலி தள்ள பவர் லைட்டும் போட வேண்டும் உழைக்கும் வர்க்கம் தான்

மேலும் கீழும் என பேதம் பார்க்க
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை
கோடம்பாக்கங்களை கோயிலாக்கும் இந்த சினிமா தொழில் தானே
ஏ குரூப் டான்ஸ் கோரஸ் பாட்டு என குடும்பம் வாழுதப்பா
வந்த பேரை இங்கு வாழ வைக்கும் இந்த சினிமா சினிமா தான்

சூப்பர் ஸ்டார் அதோ பார்
ராஜ யோகமடா சூப்பர் ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு
சிங்கம் நான் சிங்கம் தான்
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமை தானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன்
எங்கள் அண்ணன் மட்டும் தான்

ஜப்பானில் பார் சூப்பர் ஸ்டாரு
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு
அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
காய்கறி விற்கும் தாய்குலம் தூக்கும்
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டார்.

கடவுள்  யாருன்னு யார் பார்த்தா
அதைக் கண்ணில் காட்டுதிந்த சினிமா தான்

சூப்பர் ஸ்டார் பேரைத்தான்
திரைமீது மக்கள் பார்க்கும் போது விசில் வானைப் பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம் தான்
பாலை தேனை கூட்டி
பேனர் மீது கொட்டி வாழ்த்துப் பாடாதோ

அந்தப் படையப்பாவின் படை தான்
இந்த பூமியெங்கும் அணி வகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை ஆளும்
எங்கள் ஒரே மன்னன் தான்

 
எனக்குத் தோன்றியது :

ரொம்பவே சிலாகித்துப் பேசப்பட்ட இந்த சினிமா சினிமா பாடல் ஏதோ ரஜினியின் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு லோக்கல் ரசிகன் எழுதி ஒட்டிய போஸ்டர் போல இருக்கிறது.
( ரசிகர் மன்ற போஸ்டர் பல வேளைகள் இதைவிட நல்ல கவித்துவமாய் மிளிரும் என்பது வேறு விஷயம். உதா : எவரஸ்ட் யாருக்கு தெரியும் எவர் பெஸ்ட் பாருக்கே தெரியும் )
பல இடங்களில் பாடல் உரையாடல் போல ஊர்கிறது.

எனக்குப் பிடித்த வரி :

பாட்டாளிகளின் பனியனை கவனி
பள்ளிப் பிள்ளைகள் பையிலே கவனி
இந்தப் பாடலை வாலி எழுதியிருக்கிறார் என நம்ப முடியவில்லை. சுமாரான டியூன், ஒரு தடவைக்கு மேல் கேட்கத் தூண்டவில்லை என்பதே நிஜம்.